சென்னையின் பிறந்தநாள் ஆகஸ்ட் 22, 1639 அல்ல!



- பேராச்சி கண்ணன்

உண்மையில் இந்தத் தேதிதான் சென்னை பிறந்த தினமா? சென்னையின் வரலாறு இதிலிருந்துதான் தொடங்குகிறதா? சென்னையின் ஆதி முதல் அந்தம் வரை அலசுகிறார் வரலாற்றாளர் வி.ஸ்ரீராம்.

ஆதி சென்னை
சென்னையின் வரலாறு வெறும் நானூறு ஆண்டுகளோடு நின்றுவிடக் கூடிய ஒன்றல்ல. அதற்கு முன்பான வரலாற்று ஆவணங்களும், தகவல்களும் நம்மிடம் நிறைய இருக்கின்றன. ஆறாம் நூற்றாண்டிலேயே மாமல்லபுரம் இருந்ததும், அங்கே ஒரு துறைமுகம் இருந்த விஷயமும் நாம் எல்லோரும் அறிந்ததுதான். அதேபோல் திருமயிலை எனப்படும் மயிலாப்பூரில் 8ம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் ‘பூம்பாவை பதிகம்’ எழுதியிருக்கிறார்.

தவிர, திருவொற்றியூருக்கு சுந்தரர் எழுதிய பதிகமும் இருக்கிறது. ஆழ்வார்களின் பாடல்களில் திருவல்லிக்கேணி, திருநீர்மலை, திருமழிசை என ஒவ்வொரு இடங்களைப் பற்றியும் அறிய முடிகிறது. அதேபோல், வேளச்சேரிக்கு சோழர் காலத்தில் ‘தீனச் சிந்தாமணி சதுர்வேதி மங்கலம்’ என்று பெயர். குலோத்துங்க சோழனின் மனைவி பெயர் தீனச் சிந்தாமணி. அவருடைய பெயரில் கிராமம். அங்குள்ள தண்டீஸ்வரர் கோயிலில் பணிபுரியும் அந்தணர்களுக்காக இக்கிராமம் உருவாக்கப்பட்டது.

பின்னர், அங்கே வேதங்கள் ஓதுகிறவர்கள் நிறைய பேர் வந்து சேர, ‘வேதஸ்ரீநி’ என்றானது. அதுதான் காலப்போக்கில் மருவி வேளச்சேரியாகிவிட்டது. அங்கிருக்கும் செல்லியம்மன் கோயிலும் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான். அம்மனின் விக்கிரக வடிவத்தை வைத்து இதை அறியலாம். செம்மஞ்சேரியில் உள்ள ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலும் சோழர் காலக் கோயிலே.

இவையெல்லாம் எழுத்து வடிவம் வந்தபிறகு நமக்குக் கிடைக்கும் ஆவணங்கள். ஆனால், பல்லாவரமும், எழும்பூரும் ஆசியாவிலேயே கற்காலத்து சுவடிகள் கிடைத்த இடங்களாக மிளிர்கின்றன. அதனால், இந்த ஏரியா பழமை வாய்ந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நவீன சென்னை...
17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருகின்றனர். அதற்கு முன்பே போர்த்துக்கீசியர்கள் சாந்தோமிற்கும், டச்சுக்காரர்கள் பழவேற்காட்டுக்கும் வந்துவிட்டனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரான்சிஸ் டே என்பவர் விஜயநகரப் பேரரசின் கீழிருந்த சந்திரகிரி அரசிடம் இங்கே கோட்டை அமைக்க அனுமதி கேட்டார். அதற்கு முன் சென்னை, மெட்ராஸ் என்கிற வார்த்தைகள் புழக்கத்தில் இல்லை.

அப்போது இந்த கோரமண்டல் கடற்கரைப் பகுதி முழுவதையும் தாமர்லா வேங்கடகிரி நாயக்கர் என்பவர் ஆளுகை செய்தார். இவரது சகோதரர் பூந்தமல்லி அய்யப்ப நாயக்கர் கடற்கரை விவகாரங்களைக் கவனித்து வந்தார். அவர் அனுமதி தந்த ஆவணத்தில், ‘மதராசப்பட்டிணத்தில் வடக்கே ஒரு கோட்டையைக் கட்டிக் கொள்ளலாம்’ என்று இருக்கிறது. அதாவது, அதில் ‘in madraspattinam’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து மதராசப்பட்டிணம் என்றொரு கிராமம் ஏற்கனவே இருந்தது தெரிய வருகிறது. அதனால், மதராஸ் என்பது ஆங்கிலேயர்கள் சூட்டிய பெயரல்ல.

பிறகு எப்படி சென்னை என வந்திருக்கும்? இதற்கொரு காரணம் சொல்லலாம். இந்த பூந்தமல்லி நாயக்கரின் அப்பா பெயர் சென்னப்ப நாயக்கர். அவரின் பெயரைச் சூட்டியுள்ளனர். ஆக, சென்னை என்பது தமிழ்ப் பெயர் அல்ல. தெலுங்குப் பெயர். ஆங்கிலேயர்கள் ஏன் கோட்டை கட்ட அந்த  இடத்தை தேர்ந்தெடுத்தார்கள்? முதல் காரணம் வணிகத்திற்கு கடற்கரைப் பகுதி தேவை. அடுத்ததாக, அன்றைக்கு கடற்கரையின் தென்பகுதியை நோக்கி அவர்களால் செல்ல முடியவில்லை. காரணம், சாந்தோம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகள் போர்த்துக்கீசியர்கள் வசம் இருந்தன.

இதற்கடுத்து, பாண்டிச்சேரியில் பிரஞ்சுக்காரர்கள் இருந்தனர். ஏற்கனவே, வடபகுதியான பழவேற்காடு டச்சுக்காரர்கள் வசம் இருந்ததால் ஆங்கிலேயர்களுக்கு அந்த இடம்தான் சிறந்ததாக இருந்தது. மேலும் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அருகில் கூவம் நதியும், வடக்கிலிருந்து வந்த ஒரு நதியும் பாதுகாப்பைத் தந்தன. அந்தக் காலத்தில் இன்றைய உயர்நீதிமன்றம் உள்ள என்.எஸ்.சி. போஸ் ரோடு ஒரு நதியாக இருந்திருக்கிறது. எழும்பூர் ரிவர் என படித்திருப்போம். அந்த நதியைக் கோட்டைக்குள் கொண்டு வந்து மேற்கே ஒரு பாதுகாப்பை உருவாக்கினார்கள். இன்றும் அகழியாகக் காட்சியளிக்கும் அந்த நதியை நாம் பார்க்கலாம். பிற்காலத்தில் இந்த நதி பக்கிங்ஹாம் கால்வாயாக மாறியது.

வருகையின் நோக்கம் என்ன?
ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல; இங்கே வந்த மற்ற நாட்டுக்காரர்களின் நோக்கமும் துணி வியாபாரம்தான். இதில், போர்த்துக்கீசியர்களுக்கு வணிக நோக்கமில்லை. அவர்கள் மதத்தை பரப்பும் பணியை மட்டும் செய்தனர். அப்போது சென்னை முழுவதும் நெசவாளர்கள் நிறைய இருந்தனர். மின்சாரமோ, மிஷினோ இல்லாத அந்தக் காலத்தில் கையால் உருவாக்கும் துணிகளுக்கு ஏக கிராக்கி.

ஆறு கஜம், எட்டு கஜம், பனிரெண்டு கஜம் எல்லாம் இந்தத் தொண்டை மண்டலத்தில் மட்டுமே கிடைத்திருக்கிறது. மாம்பலம் பகுதியில் நெசவுத் தொழிலை இன்னொரு படிக்கு உயர்த்தினார்கள். துணியில் பெயின்ட் பண்ணியிருக்கிறார்கள். இப்போது நாம் கலம்காரி எனச் சொல்கிறோமே அதுமாதிரி மர அச்சில் வண்ணமிட்டு துணியை உருவாக்கியிருக்கிறார்கள். அப்புறம், இவர்களின் காட்டன் ரொம்ப திக்காக இருந்துள்ளது. நிறைய காட்டனை வைத்து துணியை உற்பத்தி செய்திருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களின் நாடு குளிர்ப்பிரதேசம் என்பதால் கம்பளித் துணிகளை அதிகம் விரும்பி உள்ளனர். இந்தத் துணிகளை பெட்ஷீட், தலையணை உறை, ஷோபா கவர் என நிறைய பயன்பாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். அதோடு அவர்கள் நிற்கவில்ைல. இந்தோனேஷியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்தனர். இன்றும் நீங்கள் வெஸ்ட்இண்டீஸ் நாட்டுக்குப் போய், ‘மெட்ராஸ்’ எனக் கேட்டால் கட்டம் கட்டமாகப் போட்ட செக்டு துணியைத்தான் காட்டுவார்கள். அதைத் தலையில் டர்பன் போல் கட்டிக் கொள்வார்கள்.
அதேபோல், இந்தத் துணி சாயம் போய்விட்டால் இதைவிட கிராக்கி அதிகம். இதற்குப் பெயர் ‘bleeding madras’. இன்றும் இதே பெயருடனே வியாபாரம் நடக்கிறது அங்கே!

துபாசிகள்
நம் ஆட்களுக்கு ஆரம்பத்தில் ஆங்கிலம் தெரியாது. போர்த்துக்கீசியத்தில்தான் ஆவணங்கள் எல்லாம் தயாரித்துள்ளனர். 13ம் நூற்றாண்டிலேயே போர்த்துக்கீசியர்கள் வந்ததால் நம்மவர்கள் அவர்கள் மொழியைக் கற்றிருந்தனர். ஆங்கிலேயர்கள் வந்ததும் இங்கே மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்ல டிமாண்ட் ஏற்படுகிறது. இரண்டு மொழிகள் தெரிந்தவர்கள் என்பதால் மொழிபெயர்ப்பாளர்கள் ‘துபாசி’ என அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களிடம் ஒரு விலையும், நெசவாளர்களிடம் ஒரு விலையும் சொல்லி காரியத்தை முடிப்பார்கள். அதனாலோ என்னவோ சிலர் டுபாக்கூர் என்கிற வார்த்தை துபாசியிலிருந்து வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இன்றும் இந்த  துபாசிகளின் பெயர்களில் தெருக்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆதியப்ப நாயக்கன், அங்கப்ப நாயக்கன், கோவிந்தப்ப நாயக்கன், லிங்குசெட்டி, தம்பு செட்டி எல்லோருமே மொழிபெயர்ப்பாளர்கள்தான். இதில், காசி வீரண்ணச் செட்டி என்கிற ஒருத்தருக்கு மட்டும் தெருப் பெயர் இல்லை. ஆனால், அவர் இறக்கிற நேரம் தெருத் தெருவாக சொத்துகள் இருந்திருக்கிறது.

துபாசிகள் இங்கே கம்பெனிகள் தொடங்கி தங்களது பணத்தைக் கொண்டு நெசவாளர்களுக்கு ஆர்டர் கொடுத்தனர். இதைவிட அதிகம் பணம் தரும் துபாசியிடம் நெசவாளர்கள் போய்விடுவார்களோ என பயந்து சில துபாசிகள் ஆட்களை நியமித்து மிரட்டி பணிய வைத்துள்ளனர். பிறகு, இந்தத் துணிகளை ஸ்டாக் வைத்து ஆங்கிலேயர்களிடம் பேரம் பேசி விற்றிருக்கிறார்கள்.

கருப்பர் நகரம்
ஊருக்குள் வந்து கோட்டை கட்டித் தொழிலை விரிவுபடுத்திய பின் ஏதாவது செய்ய வேண்டுமே? அப்போது, கருப்பர் நகரத்தை உருவாக்குகிறார்கள் ஆங்கிலேயர்கள். இன்று உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி இருக்கும் இடத்தில் இந்த நகரத்தை அமைத்தார்கள். கோட்டைக்குள் வெள்ளையர்களும் அவர்களுக்குப் பணி புரியும் இந்தியர்கள் கருப்பர் நகரத்திலும் வாழ்ந்தார்கள். அப்போது ஆங்கிலேயர்களின் வாழ்நாள் குறைவாக இருந்திருக்கிறது. காரணம், இங்குள்ள சீதோஷ்ண நிலை. அதனால், சிறு வயதில் நிறைய பேர் இறந்திருக்கிறார்கள். அவர்களை இன்றைய சட்டக்கல்லூரி இருக்கும் பகுதியிலேயே புதைத்திருக்கிறார்கள். இதற்கு கொய்யாத் தோட்டம் என்று பெயர்.

1717ம் வருடம் - சரியாக முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு- திருவொற்றியூர் பக்கத்தில் ஒரு கிராமத்தை உருவாக்கி நெசவாளர்களை அங்கே குடியமர்த்துகிறார்கள். அப்போது கவர்னராக இருந்தவர் ஜோசப் காலட். அதனால் ‘Colletpet’ என இந்தக் குடியிருப்புக்குப் பெயர் வைத்தனர். அங்கே, கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலை இவர்களுக்காகக் கட்டித் தருகிறார்கள். அந்த கிராமமே இன்று காலடிப்பேட்டை எனப்படுகிறது.

அடுத்ததாக, 1734ம் வருடம் கோட்டைக்கு பக்கத்தில் கூவம் நதி அருகில் இன்னொரு கிராமத்தை உருவாக்குகிறார்கள். அதற்கு சின்னதறிப்பேட்டை எனப் பெயர். இன்று சிந்தாதரிப்பேட்டையாக மாறிவிட்டது. இந்தக் கிராமத்தில் எல்லா சாதியினரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஆங்கிலேயர்களின் உத்தரவு. காரணம், சாதிக் கலவரங்கள் அன்றைக்கு அதிகரித்து இருந்தது. வலங்கை, இடங்கை என அனைத்து சாதியினரும் பிரிந்திருந்து கலவரங்களை அரங்கேற்றினர். அதை ஒடுக்கவே இப்படியொரு சிஸ்டத்தை கொண்டு வந்தனர். இந்தியாவிலேயே முதல் ‘Non-Caste based’ காலனி இதுதான்.

இந்தக் காலனிைய அழகாக திட்டமிட்டு கட்டினார்கள். மீன் எலும்பு போல நடுவில் ஒரு நீண்ட தெரு. அதைச்சுற்றி வரிசையாக தெருக்கள். மழை பெய்தால் இரண்டு பக்கமும் உள்ள தெருக்கள் வழியாக தண்ணீர் கூவம் நதியில் கலக்கும். இங்கே மரங்கள் நிறைய இருந்திருக்கிறது. நெசவாளர்கள் தங்கள் தொழிலை தெருவில்தான் செய்வார்கள் என்பதும் சின்னதறிப்பேட்டை அமைய இன்னொரு காரணம்.

பிரஞ்சுப் போர்
1746ல் ஐரோப்பாவில் பிரிட்டிஷுக்கும், பிரஞ்சுக்கும் போர் நடக்கிறது. அப்போது, பாண்டிச்சேரியிலிருந்த பிரஞ்சுக்காரர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை மீது குண்டுகளை வீசினர். இதனால், ஆங்கிலேயர்கள் அனைவரும் கடலூரில் பதுங்கினார்கள். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் மெட்ராஸ் பிரஞ்சுக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிறகு, தங்கள் வசமுள்ள... கனடா பக்கமுள்ள குபேக் தீவை பிரஞ்சுக்குக் கொடுப்பதாக பிரிட்டிஷார் ஒப்பந்தம் போட... இங்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை ஆக்கிரமித்திருந்த பாண்டிச்சேரி பிரெஞ்சுக்காரர்கள் மெட்ராஸை விட்டு நகர்ந்தனர்.

இதற்குப் பிறகு கல்லறைகளாக இருந்த கொய்யாத் தோட்டத்தையும் கருப்பர் நகரத்தையும் ஆங்கிலேயர்கள் காலி செய்தார்கள். அங்கிருந்தவர்களைக் கோட்டையின் பின் இருந்த பெத்தநாயக்கன்பேட்டை மற்றும் முத்தயால்பேட்டை பகுதிகளுக்கு இடம் மாற்றினார்கள். காரணம் கருப்பர் நகரம் பக்கமாக வந்து யாரும் கோட்டையைப் பிடித்துவிடக் கூடாதே... அதனால்தான் இந்த இடப்பெயர்ச்சி.

அத்துடன் கொய்யாத் தோட்டம், கருப்பர் நகரம் இருந்த பகுதிகளில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது என தடையுத்தரவு போட்டு அந்த இடங்களை காலியாகவே வைத்தனர். எதிரிகளை கண்காணித்தனர். இதற்காகவே 13 தூண்களை அங்கு நிறுவினர். இதில் ஒரு தூணை இன்றும் டேர்ஹவுஸ் பக்கம் பார்க்கலாம். இதனால்தான் நூறாண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்றமும், சட்டக்கல்லூரியும் கட்ட இங்கே இடம் கிடைத்தது.

1639ல் மெட்ராஸ் உருவான போது ஆங்கிலேயர்களுக்குத் துபாசியாக இருந்தவர் பெர்ரி திம்மப்பா என்கிற தெலுங்கர். இவர், அன்றைய கருப்பர் நகரத்தில் சென்ன கேசவ பெருமாள் கோயிலைக் கட்டியிருந்தார். ‘சென்ன’ என்றால் ெதலுங்கில் ‘அழகு’ என்று அர்த்தம். அந்தக் கோயிலும் இடிக்கப்பட்டது. அதற்காக ஜார்ஜ் டவுன் பக்கமாக இடமும், கோயில் கட்ட பணமும் ஆங்கிலேயர்கள் கொடுத்தார்கள். அப்போது மணலி முத்துகிருஷ்ணன் என்கிற துபாசி ஆங்கிலேயர்கள் கொடுத்த பணத்திற்கு இணையாக பணம் கொடுத்திருக்கிறார். அதை வைத்து கோயில் கட்டியிருக்கிறார்கள். இப்போதும் தேவராஜ முதலித் தெருவில் அந்தக் கோயில் இருக்கிறது.

தி.நகர்...
1917 வரை மவுண்ட் ரோட்டின் (இன்றைய அண்ணாசாலை) மேற்குப் பக்கம் எதுவும் கிடையாது. கோடம்பாக்கம் ஒரு சின்ன கிராமம். அங்கே 70 ஏக்கரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதற்கு Long Tank Mylapore என்று பெயர். அப்போது தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை எல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள். மயிலாப்பூர் பெரிய ஊராக இருந்ததால் அந்த ஏரிக்கு இந்தப் பெயர். இந்த ஏரியை மூடிவிட்டு ஒரு நகர் அமைக்கலாம் என அப்போதைய அரசு திட்டம் தீட்டியது. அன்று நீதிக்கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்கிறது. பனகல் ராஜா முதல்வராக இருக்கிறார். நீதிக்கட்சியின் தலைவராக சர்.பிட்டி தியாகராயர் இருக்கிறார். அவர் பெயரில் ஒரு நகர் உருவானது. அதுதான் இன்றைய தி.நகர்.

இதனை தில்லி மாதிரி திட்டம் தீட்டி கட்டினார்கள். ராஷ்டிரபதி பவனை நோக்கிச் செல்லும் பாதைகள் போன்று நடுவில் பனகல் பார்க் அமைத்தார்கள். ஒரு பக்கம் நடேசன் பார்க்கும், இன்னொரு பக்கம் ஜீவா பார்க்கும் கொண்டு வருகிறார்கள். அதில், ெவங்கடநாராயணா சாலை, ஜி.என்.செட்டி சாலை, பாண்டிபஜார் போகிற சாலையும் அமைத்து இந்த மூன்றும் மவுண்ட் ரோட்டில் இணைகிற மாதிரி வடிவமைத்தார்கள்.

இன்றும் மாம்பலம் லேக் வியூ ரோடு, கோடம்பாக்கத்தில் இருக்கும் ஏரிகாத்த மாரியம்மன் கோயில், ஏரிக்கரை ரோடு ஆகியவற்றின் மூலம் இந்த ஏரியைப் பற்றி அறியலாம். முதலில், கிழக்கு மாம்பலம் என்றுதான் பெயர் வைத்தார்கள். பிறகு, நியூ மாம்பலம் டவுன் என்றார்கள். நிறைவாக, தி.நகர் என மாற்றினார்கள்.

ஆனால், ஏரியில் நகர் உருவாக்கியதால் குடிநீர் பிரச்னை ஆரம்பித்தது. அப்போது லாங் டேங்க் மயிலாப்பூர் ஏரி நிரம்பினால் அதன் ஊற்று தேனாம்பேட்டை வழியாக ஆறாத குட்டை என்கிற ஏரிக்கு வரும். பிறகு, அங்கிருந்து மயிலாப்பூர் ெதப்பக்குளத்திற்கு வந்து சேரும். சுற்றிலும் இருக்கும் நீர்நிலைகள் மட்டுமின்றி நிலத்தடி நீரும் ஊறும். தி.நகர் உருவானதால் ஆறாத குட்டை 1948ல் நாகேஸ்வர ராவ் பூங்காவாக மாறியது.

ஐஸ் ஹவுஸ்
இன்று விவேகானந்தர் இல்லம் எனப்படும் கட்டிடம் ஒரு காலத்தில் ஐஸ் கட்டிகள் சேமிக்கும் இடமாக இருந்தது. அதனாலயே அதனை ஐஸ் ஹவுஸ் என அழைத்தார்கள். இங்குள்ள சீதோஷ்ண நிலையை தாக்குப்பிடிக்க அமெரிக்காவிலிருந்து ஐஸ் கட்டிகளை ஆங்கிலேயர்கள் இறக்குமதி செய்தார்கள். பெடரிக் டியூடர் என்கிற அமெரிக்கர் 1842ல் தன்னுடைய ஐஸ் வியாபாரத்திற்காக இந்தக் கட்டிடத்தை கட்டினார்.

பிறகு, ஐஸ் பிசினஸ் முடிவுக்கு வர பிலிகிரி ஐயங்கார் இந்தக் கட்டிடத்தை வாங்கினார். 1897ல் இங்கே விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது, அவரின் சென்னை சீடர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிகாகோ மாநாட்டிற்கு சென்றார். பிறகு, அங்கிருந்து நேரடியாக சென்னை வந்து தங்கினார். அவர் நினைவாலே இந்தக் கட்டிடம் இப்போது விவேகானந்தர் இல்லமாக மாறியது. ஆனாலும் ஐஸ் ஹவுஸ் பெயர் இன்றும் மாறாமல் அந்தப் பகுதியில் நிலைத்து நிற்கிறது.

பக்கிங்ஹாம் கால்வாய்...
ஆந்திராவில் இருந்து பொருட்கள் எடுத்துவர ஒரு கால்வாயை ஆங்கிலேயர்கள் வெட்டினார்கள். இதன் பெயர் Cochrane கால்வாய். இது வடபகுதியோடு நின்றுவிடுகிறது. இதேபோல் தெற்கில் அடையாற்றிலிருந்து மரக்காணம் வரை ஒரு கால்வாய் இயற்கையாகவே இருந்துள்ளது. 1875ம் ஆண்டு தாது பஞ்சம் இங்கே தலைவிரித்தாடியது. மக்கள் பசியால் ஊருக்குள் வர ஆரம்பித்தார்கள். அப்போது, சென்னையின் கவர்னராக பக்கிங்ஹாம் இருந்தார். அவர்தான் இந்த இரண்டு கால்வாயையும் இணைக்க உத்தரவிட்டு, இதில் வேலை பார்ப்பவர்களுக்கு உணவு வழங்கப்படும் என்றார். ஆக, பஞ்சத்தில் உருவானதுதான் பக்கிங்ஹாம் கால்வாய்.

ஆந்திராவில் இருந்து அரிசி, புளி, சணல், உப்பு என நிறைய பொருட்களை இதன் வழியாக எடுத்து வந்துள்ளனர். இந்தக் கால்வாய் அதிக ஆழம் கிடையாது. அதனால், ஆங்காங்கே ஒரு லாக் போட்டு படகு விட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் தண்ணீர் நிறைந்து ஆழமானதும் அந்த லாக் எடுக்கப்பட்டு படகு விடப்படும். இப்போதும் இந்த லாக்கை சுவாமி சிவானந்தா சாலையில் பார்க்கலாம். இந்த லாக் இருக்கிற இடங்கள் லாக் நகர் என அழைக்கப்பட்டிருக்கின்றன.

எனது நண்பரும் ஓவியருமான எஸ்.ராஜம் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் இந்த பக்கிங்ஹாமில் படகு சவாரி செய்து மகாபலிபுரம் போய் ஓவியங்கள் வரைந்திருக்கிறார். மயிலாப்பூரில் தண்ணீர்துறை மார்க்கெட் என்ற பகுதி இருந்திருக்கிறது. இப்போது, அந்த இடம் ஆஞ்சநேயர் கோயில் தாண்டி உள்ளது. அந்த மார்க்கெட்டிற்கு காய்கறிகள் இந்தக் கால்வாய் மூலமாகத்தான் கொண்டு வந்திருக்கிறார்கள். அங்கிருந்து மாலை ஆறு மணிக்கு அவர் படகில் ஏறினால் ஒவ்வொரு பகுதியாக நின்று மறுநாள் காலை ஆறு மணிக்கு மகாபலிபுரம் போய்ச் சேருமாம். 1950கள் வரை கூட படகு சவாரி நடந்ததாகக் குறிப்பிடுகிறார். யோசித்துப் பாருங்கள். எப்படி இருந்திருக்கிறது நம்ம சென்னை?! 

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

வி.ஸ்ரீராம்... சென்னையின் வரலாற்றை 18 ஆண்டுகளாகப் படித்து வருபவர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள பத்தை என்கிற கிராமம். அப்பா வேங்கடகிருஷ்ணன். அம்மா சரஸ்வதி. அப்பா யூகோ வங்கியில் பணியாற்றியதால் கல்கத்தாவில் வளர்ந்திருக்கிறார். அங்கே பி.இ. முடித்துவிட்டு, தில்லியில் எம்.பி.ஏ. பயின்றிருக்கிறார். இப்போது சென்னையில் குடும்ப பிசினஸை கவனித்து வருகிறார்.