இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?அனுபவத் தொடர் - 16

சோறு தோன்றி, குழம்பு தோன்றாத காலம் தொட்டு, இன்று வரை வாழும் நமது கலாசார அடையாளங்களுள் ஒன்று விரதம் இருப்பது. ஆண்களைக் காட்டிலும் இந்த விஷயத்தில் பெண்கள் படு தீவிரவாதிகள். திங்களுக்கு ஒன்று, செவ்வாய்க்கு ஒன்று, வெள்ளிக்கு ஒன்று, சனிக்கு ஒன்று, புரட்டாசிக்கு ஒன்று, கார்த்திகைக்கு ஒன்று, சஷ்டிக்கு ஒன்று, நவராத்திரிக்கு ஒன்றென்று டிசைன் டிசைனாக விரதம் வகுப்பார்கள்.

விரதமோ வேறெதுவோ, கடைப்பிடிக்கும் ஒழுக்கத்துக்கு ஒரு பக்தி கோட்டிங் கொடுத்துவிடுவது. ‘நாயே பேயே’ என்று திட்டிக் கொண்டிராமல் ‘ராமா கிருஷ்ணா’ என்று சொல்லிக்கொண்டிருப்பதில் ஒன்றும் பிரச்னை இல்லையே? விரதம் இருப்பதன் காரணங்கள் இரண்டு. முதலாவது, உள் உறுப்புகளுக்கு ஓய்வு தருவது. குறிப்பாக கணையத்துக்கு. என்னத்தையாவது உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தால் இன்சுலின் சுரந்துகொண்டே இருக்க வேண்டும். உணவை சக்தியாக மாற்றுகிற செயல்பாடு நடந்துகொண்டே இருக்க வேண்டும்.

சட்டென்று ஒரு வேளை எதையுமே சாப்பிடாமல் இருந்தால் இன்சுலினுக்கு வேலை இராது. பதிலாக, ஏற்கெனவே சேர்த்து வைத்த கொழுப்புச் சொத்தில் கொஞ்சத்தை எடுத்து உடம்பு எரித்து சக்தியாக்கிவிடும். இரண்டாவது காரணம், மிக முக்கியமானது. வேளை தவறாமல், நேரம் தவறாமல் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் ஒருவர் சட்டென்று ஒரு பிரேக் எடுத்தால் உணவைப் பற்றிய ஞாபகம் அடிக்கடி அவருக்கு வரும்.

ருசி சார்ந்த இச்சைகள் எழும். அடுத்த வேளை சாப்பிட உட்காரும்போது வழக்கத்தைவிட ரசித்து ருசித்து உண்பார். உண்பது ஒரு கடமையல்ல. அது ஒரு கலை. போதிய அவகாசம் கொடுத்து, நிதானமாக அரைத்து உண்ணும் உணவு, திருப்தியின் முழுமையைக் காட்டித்தரும். இது அடுத்த வேளைப் பசியைச் சற்றுத் தள்ளிப்போடும். பேலியோ உணவு முறையில் இந்த விரதமானது முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் கையாளப்படுகிறது. இங்கே ஒருவேளை சாப்பிடாமல் இருப்பதால் ஒரு நாளில் நாம் உண்ணும் உணவின் அளவு குறையாது. உள்ளே போகும் கலோரி எண்ணிக்கை சரியாது. சாப்பிடாமல் இருக்கும் வேளையில் பசியும் இருக்காது.

அது எப்படி? எனக்கு நடந்ததையே சொல்கிறேன். ஒரு நாளைக்கு 1300 முதல் 1500 கலோரி அளவுக்கு நான் உணவு உட்கொள்ள வேண்டும் என்பது என் டயட் சார்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ஆயிரத்து ஐந்நூறு கலோரி உணவை பனீர், பாதாம், வெண்ணெய், நெய், தயிர், காய்கறிகள், தேங்காய், சீஸ் என்று பல்வேறு உணவுப் பொருள்களில் இருந்து எடுத்துக்கொண்டிருந்தேன்.

வாரியர் என்கிற விரத முறைக்கு நான் நகர்ந்தபோதும் இந்த ஆயிரத்து ஐந்நூறு கலோரி என்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதே பனீர், பாதாம் வகையறாக்கள்தாம். அதே அளவுதான். ஆனால் மூன்று வேளைக்குப் பிரித்து உண்டதை இரண்டு வேளைகளுக்குப் பிரித்துக்கொண்டேன். முடிந்தது விஷயம்! காலை உணவைத் தவிர்த்துவிட்டேன். ஒரு நாளில் என்னுடைய முதல் உணவானது மதியம் ஒரு மணிக்கு உண்பதாக இருந்தது. இந்த உணவில் இருநூறு கிராம் பனீர் இருக்கும். ஐம்பது கிராம் வெண்ணெய் இருக்கும். கால் கிலோவுக்குக் குறையாமல் என்னவாவது ஒரு காய், கீரை, நூறு மில்லி தயிர் எல்லாம் இருக்கும்.

காலை முதல் உண்ணாதிருப்பதால் இத்தனையையும் சேர்த்து உண்பது எளிதாகவும் இருந்தது. இந்த முதல் உணவை முடித்துவிட்டு இரவு எட்டு மணிக்கு அடுத்த உணவாக நெய்யில் வறுத்த நூறு பாதாம் பருப்புகள். தின்று தீர்த்தால் முடிந்தது ஒரு தினம். இதனால் என்ன ஆகிறது? இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் மதியம் ஒரு மணி வரை நான் எதையும் சாப்பிடுவதே இல்லை. மொத்தம் பதினாறு மணி நேரம் விரதம்! இந்த நேரத்தில் இன்சுலின் அதிகம் சுரக்கத் தேவை இருக்காது.

உண்டு முடித்த பண்டங்களை சக்தியாக்குகிற செயல் மட்டும் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கும். கூடவே ஏற்கெனவே சேமிப்பில் உள்ள கொழுப்பும் வேறு வழியின்றி உண்ணாத நேரத்தில் கரைய ஆரம்பிக்கும். இதனால் எடைக் குறைப்பு வேகமாக நடக்கத் தொடங்கும். இந்த சூட்சுமம் புரிந்ததும் சட்டென்று மதியம் - இரவு என்றிருந்த உணவு நேரத்தைக் காலை - மதியம் என்று மாற்றிக்கொண்டேன். காலை ஒன்பது மணிக்கு பாதாம் சாப்பிட்டுவிடுவது.

மதியம் ஒரு மணிக்கு மற்ற உணவுகள். அதோடு சரி. ஒன்றரைக்கு சாப்பிட்டு முடித்து எழுந்துவிட்டால் அதோடு மறுநாள் காலை ஒன்பதுக்கு மறுபடியும் பாதாம். மதியம் சாப்பிட்டுவிட்டுக் கொஞ்ச நேரம் ஃபேஸ்புக் பார்த்துவிட்டுப் படுத்துவிடுவேன். மாலை வரை தூங்கி எழுந்து கலைச் சேவை செய்ய உட்கார்ந்தால், இப்போது இரவு நெடு நேரம் கண் விழிப்பது கஷ்டமாக இல்லாமல் போனது.

ஏனென்றால் இரவு உணவு என்ற ஒன்று இல்லாதபடியால் கண்ணை அழுத்தும் கன்னியைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளிவிட முடிந்தது! இதெல்லாம் அடாத செயல், மதியத் தூக்கம் உடம்புக்கு கெடுதல், அதுதான் குண்டடிக்க வைக்கும் என்றெல்லாம் யாராவது சொன்னால் நம்பாதீர்கள். பல்லாண்டு காலமாக ஒருநாள் தவறாமல் மதியம் இரண்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை அடித்துப் போட்டாற்போலத் தூங்குகிறேன். என் பொழுதே மாலை ஆறு மணிக்கு மேல்தான் விடிகிறது. இப்படி இயங்கித்தான் என்னால் இருபத்து எட்டு கிலோ எடை குறைக்க முடிந்திருக்கிறது!

மேற்படி இருவேளை உணவை பேலியோவில் 16:8 வாரியர் என்று சொல்லுவார்கள். அதாவது பதினாறு மணிநேர விரதம்; எட்டு மணி நேரங்களுக்குள் இரண்டு உணவுகள். இன்னொன்றும் இருக்கிறது. அது 20:4 வாரியர். இருபது மணி நேரம் உண்ணாமல் இருந்துவிட்டு நான்கு மணி நேரங்களுக்குள் இரண்டு உணவுகளை முடித்துக்கொள்வது. இது 16:8ஐ விட வீரியம் மிக்க விரத வழி. என்ன சாப்பிடுவதென்றாலும் நாலு மணி நேரத்தில் தின்று தீர்த்துவிடுவது. உடலுக்கு இருபது மணி நேர ஓய்வு அளிப்பதன்மூலம் கொழுப்பெரிப்பு நடவடிக்கை கனஜோராக நடக்கும்.

எனக்கு இந்த 20:4 சரிப்பட்டு வராது என்று தோன்றியது. ஏனென்றால் என்னுடைய மதிய உறக்கம் குறுக்கே விழுந்து கட்டையைப் போட்டுக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தேன். பேலியோ பழகிவிட்டிருந்ததில், பசியுணர்ச்சி கணிசமாகக் குறைந்திருந்தது. சரி, ஊரெல்லாம் 20:4 வாரியர் இருக்கட்டும், நாம் ஏன் 23:1 வாரியருக்கு மாறக்கூடாது என்று யோசித்தேன்.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உண்பது. மொத்த 1500 கலோரி உணவையும் ஒரே அமர்வில் முடித்துவிடுவது! முடியுமா இது? என்னவாவது பிரச்னையாகிவிட்டால் என்ன செய்வது? கொஞ்சம் தயங்கித்தான் ஆரம்பித்தேன். அது நானே எதிர்பாராத விஷயம். ஒரு பரீட்சையாகத் தொடங்கியது, வெகு விரைவில் என் வாழ்வாகிப் போனது.

(தொடரும்)

- பா.ராகவன்


கொய்யாக்காய் பொரியல்

பேலியோவில் அனுமதிக்கப்படும் ஸ்நாக்ஸ் மிகக் குறைவு. அதிலொன்று கொய்யாக்காய். சற்றும் பழுக்காத கட்டைக்காய். இதை உண்பது சிரமமாக இருக்கிறது என்பவர்களுக்கு இந்தக் குறிப்பு பயன்படலாம். கொய்யாக்காயைத் துண்டுகளாக நறுக்கி நாலு நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்தால் கொஞ்சம் வெந்துவிடும். பிறகு வாணலியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் தாளித்து, இக்காயைப் போடவும். உப்பு, மிளகாய்த் தூள், ருசிக்குக் கொஞ்சம் தனியாப் பொடி. சும்மா மூன்று நிமிடங்கள் வதக்கினால் போதும். அட்டகாசமான கொய்யாப் பொரியல் ரெடி! இதில் வெங்காயம் நறுக்கிப் போட்டால் இன்னுமே ருசிக்கும். என்ன கொஞ்சம் கார்ப் அளவு கூடும். மற்றபடி அருமையான பொரியல் இது.