விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 48

கிருஷ்ணன் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான். ஆதி அவனை நெருங்கினான். ‘‘கார்க்கோடகர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் க்ருஷ்..?’’ இருவரையும் மாறி மாறிப் பார்த்த கிருஷ்ணன், மைக்ரோ செகண்ட் கூட ஐஸ்வர்யா பக்கம் திரும்பவில்லை. இதை அவளும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் தன்னை ஏறிட்டால் ஏதேனும் ஜாடை காட்ட வேண்டி வரும்... கார்க்கோடகரோ அல்லது ஆதியோ அதைக் கண்டு கொண்டால் ஆபத்து...

நினைக்கும்போதே அவளது உடல் அதிர்ந்தது. ஆபத்து என்றால் என்ன மாதிரி..? எதற்காக இப்போது கொரிய விஞ்ஞானி ஹ்யுன்ஹ்யுப் கோ குறித்து லெக்சர் அடிக்கிறான்..? கிருஷ்ணனின் திட்டம்தான் என்ன..? ஆதியின் குரல் ஐஸ்வர்யாவின் சிந்தனையை அறுத்தது. ‘‘ஏன் அமைதியா இருக்கேன்னு கேட்டேன்...’’ சொற்களில் அழுத்தத்தைக் கொண்டு வந்தான்.

‘‘கார்க்கோடகர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்றதுனு தெரியாம தடுமாறுறேன்... லுக் ஆதி... முழுமையா சொன்னாதான் உங்களுக்குப் புரியும். மனிதத் தோலோட கட்டமைப்பைப் பயன்படுத்திதான் ஹ்யுன் ஹ்யுப் கோ சோதனைச் சாலைல இந்த மின்னணு செயற்கைத் தோலை தயாரிச்சிருக்கார். அதாவது காப்பி அடிச்சு...’’ ‘‘ம்...’’ கார்க்கோடகர் கர்ஜித்தார். ‘‘இந்த செயற்கைத் தோலால ஒரு செயற்கை விரலை செய்ய முடியும்!’’
‘‘...’’
‘‘இரு. உன் அறிவை காண்பிக்கறதுக்கு முன்னாடி இதுக்கு பதில் சொல்லு... அப்படி உருவாக்கப்படற செயற்கை விரலை... செயற்கைத் தோலை... கண்டுபிடிக்க முடியுமா..?’’ கார்க்கோடகர் நேராக கிருஷ்ணனின் முகத்துக்கு அருகில் வந்து கேட்டார். ‘‘இதைத்தான் ‘அது மட்டுமில்ல’னு சொல்ல வந்தேன். ரொம்ப ரொம்ப கஷ்டம். ஏன்னா, இந்த செயற்கைத் தோல் பொருத்தப்பட்ட செயற்கை விரலைப் பிடிச்சு நாடியும் பார்க்கலாம்... மிருதுத் தன்மையையும் உணரலாம்...’’ நிறுத்திவிட்டு மூவரையும் பார்வையால் அளந்தான். மற்ற இருவருக்கும் சந்தேகம் வரக் கூடாது என்பதற்காகவே இம்முறை ஐஸ்வர்யாவின் பார்வையையும் நேருக்கு நேர் சந்தித்தான்.

மூவரின் முகத்திலும் மாறுபட்ட உணர்வுகள் தாண்டவமாடின. அதை உள்வாங்கியபடியே தொடர்ந்தான். ‘‘உடலோட தட்பவெப்ப நிலையை... குளிர்ச்சியா, வெப்பமா, உலர்ந்து போயிருக்கா, ஈரப்பதமா... இதையெல்லாம் கூட இயற்கையான தோல், விரல் மாதிரியே இதுவும் டிகிரி சுத்தமா காண்பிக்கும்!’’ ‘‘நீ சொல்றது சயின்ஸ் ஃபிக்‌ஷன் சினிமா பார்க்கிற மாதிரி இருக்கு...’’ இடைவெட்டிய ஆதி அவனைக் கூர்ந்து நோக்கினான்.

‘‘கரெக்ட். இது சயின்ஸ்தான். ஆனா, ஃபிக்‌ஷன் இல்ல...’’ ‘‘எப்படி இது சாத்தியம்? செயற்கை விரலை, செயற்கைத் தோலை உருவாக்கலாம். ஆனா, ரேகைகள்..?’’ கிருஷ்ணனை உலுக்கியபடி கார்க்கோடகர் படபடத்தார். ‘‘இதையும் கச்சிதமா கொண்டு வந்ததுனாலதான் ஹ்யுன்ஹ்யுப் கோ உலகம் முழுக்க கொண்டாடப்படறார்...’’ ‘‘அந்தாளோட பெருமையை நிறுத்து. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு...’’

‘‘சொல்றேன் பெரியவரே... இதோ பார்த்தீங்களா நம்ம விரல் நுனிகள்... இதுக்கு கூர்மையான தொடு உணர்ச்சி உண்டு. ஸோ, தான் உருவாக்கின செயற்கைத் தோல், செயற்கை விரலோட நுனியிலயும் அதே தொடு உணர்ச்சியை ஹ்யுன்ஹ்யுப் கோ கொண்டு வந்திருக்கார்...’’ ‘‘...’’ ‘‘அப்புறம் விரல் நுனில இருக்கிற தோல்லதான் கைரேகை இருக்கு. இதுக்கு மேடுபள்ளம் கொண்ட மடிப்புச் சுருக்க அமைப்பு உண்டு...’’ ‘‘...’’ ‘‘அதே மாதிரி செயற்கைத் தோல் மேலடுக்குலயும் ஹ்யுன்ஹ்யுப் கோ உருவாக்கியிருக்கார்.

சுருக்கமா சொல்லணும்னா பல கிராபீன் மென்படலங்களை ஒண்ணு மேல ஒண்ணு வைச்சு அடுக்கப்பட்ட நுணுக்கமான அடுக்குகள்தான் ஹ்யுன்ஹ்யுப் கோ உருவாக்கின மின்னணுச் செயற்கைத் தோல். ரெண்டு கிராபீன் அடுக்குகளுக்கு இடைல வலைப்பின்னலாலான சக்தி வாய்ந்த உணர்விகள் பொருத்தப்பட்டிருக்கும். இதனாலதான் வெப்பம், தொடு உணர்ச்சி அழுத்தம், பொருளோட நயத்தன்மை... எல்லாத்தையும் அறிய முடியுது...’’

கிருஷ்ணன் பேசப் பேச ஐஸ்வர்யாவைத் தவிர மற்ற இருவரின் முகங்களும் பேயறைந்தது போல் மாறின. அதை அதிகரிக்கும் வகையில் அவனே தொடர்ந்தான். ‘‘குளிர் நிலைல இந்த மின்னணு தோல் விறைப்பா இருக்கும். ஆனா, வெப்பமான நிலைல நெகிழும். இதுக்குத் தகுந்த மாதிரி செயற்கைத் தோல்ல உருவாகற மின்னோட்டம் வேறுபடும். இதை தொட்டா மடிப்புச் சுருக்கத்துக்கு உள்ள இருக்கிற Electro அழுத்தம் பெறும். மின்சாரச் சுற்று ஏற்படும்...’’ ‘‘...’’ ‘‘இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி எழும்.

ஒலியை இந்த செயற்கைத் தோலால உணர முடியும்னு சொன்னேன். இது எப்படி மூளைக்குப் போகும்..?’’ ‘‘...’’ ‘‘நல்ல கேள்வி இல்லையா..? இதுக்கும் நல்லதாவே பதில் இருக்கு. பொதுவா நம்ம உணர்வுகள் எப்படி மூளைக்கு தெரியுது..? தோல்ல உள்ள செல்கள் நேரடியா நரம்பு மண்டலத்துக்கு தெரியப்படுத்தி அதன் வழியா மூளைக்கு தகவல் சொல்லுது. இந்த ப்ராசஸை செயற்கைத் தோலும் பின்பற்றினாதானே தொடு உணர்வும், ஒலியை உணரும் திறனும் மூளைக்குப் போகும்..?’’

‘‘...’’ ‘‘இந்த சவாலை அப்டோஜெனெடிக்ஸ் (Optogenetics) அப்படீங்கிற தொழில்நுட்பம் வழியா தீர்த்து வைச்சிருக்கார் கலிபோர்னியாவுல இருக்கிற ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வாளரான அலெக்ஸ் சொர்டோஸ் (Alex Chortos)...’’ ‘‘...’’ ‘‘ஆக,  ஹ்யுன்ஹ்யுப் கோ ப்ளஸ் அலெக்ஸ் சொர்டோஸ் கண்டுபிடிப்பை ஒண்ணு சேர்த்து இந்த செயற்கைத் தோலை உருவாக்கியிருக்காங்க. மருத்துவத்துறைக்கு இது பயன்படுது. கை - கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இது வரப்பிரசாதம்...’’ ‘‘...’’ ‘‘இப்ப உங்க வினாவுக்கு விடை சொல்றேன் கார்க்கோடகரே... ஆமா.

உங்க உடம்புலேந்து எடுக்கப்பட்ட கைரேகை செயற்கையானதுதான். ஆனா...’’ இடைவெளிவிட்டு மூவரையும் சில விநாடிகள் தனித்தனியே அளந்துவிட்டு கிருஷ்ணன் தன் மூச்சை இழுத்துப் பிடித்து சொன்னான். ‘‘மாதிரியை வைச்சுதான் செயற்கையை உருவாக்க முடியும். அப்படீன்னா யாரோட ஒரிஜினல் ரேகையைப் பார்த்து இந்த செயற்கை ரேகையை கொஞ்சம் கொஞ்சம் மாத்தி உருவாக்கி இருக்காங்க?’’ ‘‘...’’ ‘‘இதுக்கான பதில் உங்ககிட்டதான் இருக்கு கார்க்கோடகரே... இந்த கைரேகை உங்களுக்கு எங்க கிடைச்சது? அது தெரிஞ்சாதான் மேற்கொண்டு நாம நகர முடியும்!’’

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்