விஜய்யின் சக்சஸ் சீக்ரெட்!



மெர்சல் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி சொல்லும் ஆச்சரியங்கள்

நிஜமாகவே இந்த தீபாவளி விஜய்யின் ரசிகர்களுக்கு அதிரடி சரவெடி கொண்டாட்டம்தான். கிராமம், நகரம் என ஆக்‌ஷன் அள்ளும் விஜய்; காஜல், சமந்தா, நித்யாமேனன் என கலர்ஃபுல் ஹீரோயின்கள்; ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸின் 100வது படம்; ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் விஜய்க்கும் சினிமாவில் இது சில்வர் ஜூப்ளி ஆண்டு என செம கெத்து காட்டுகிறது ‘மெர்சல்’.

‘‘எங்க நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் சாரை வச்சு ஒரு படம் பண்ணிடணும்னு ரொம்ப நாளாகவே ஆசைப்பட்டோம். அந்த கனவு ‘மெர்சல்’ல நனவாகி இருக்கு. என் மாமனாரும், எஸ்.ஏ.சி. சாரும் நல்ல நண்பர்கள். அதனாலேயே அவங்க ஃபேமிலில உள்ள எல்லாருக்கும் எங்களை நல்லாத் தெரியும். அந்த நட்பில் என் கணவர் முரளி அவங்களை அப்பப்போ சந்திப்பார்.

அப்படித்தான் ஒருநாள் விஜய் சாரை பார்க்கப் போனார். முரளிகிட்ட பேசிட்டிருந்த விஜய் சார், ‘என் அடுத்த படம் தேனாண்டாளுக்குதான் பண்ணப் போறேன்’னு சொன்னது ஸ்வீட் சர்ப்ரைஸ். இப்படி அவர் சொன்ன அடுத்த செகண்ட்ல அட்லீ, ஏ.ஆர்.ரஹ்மான்னு பிரமாண்ட காம்பினேஷன் அமைஞ்சிடுச்சு. இதுக்கெலாம் காரணம் எங்க மாமனாரோட அன்பும் ஆசீர்வாதமும்தான்!’’ தீபாவளி பட்டாசாக உற்சாகத்தில் படபடக்கிறார் ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பாளரான ஹேமா ருக்மணி.

‘‘விஜய் சார் ‘பைரவா’ முடிச்சதுமே இதை தொடங்கிடணும்னு நினைச்சார். ஸோ, இதுக்கு யார் கரெக்ட்டான இயக்குநர்னு யோசிச்சோம். விஜய் சார்கிட்டயே ஐடியா கேட்க, ‘அட்லீகிட்ட ஒரு நல்ல கதை கேட்டேன். ஃபுல் ஸ்கிரிப்ட்டும் அவர்கிட்ட ரெடியா இருக்கு’னு சொன்னார். அநேகமா அது நல்ல நேரமா இருக்கணும். ஏன்னா, அடுத்தடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் சார் மியூசிக், சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா. மூணு ஹீரோயின்கள்னு ஒரு லவ்வபிள் காம்பினேஷன் அழகழகா கூடி வந்தது.

அட்லீயோட ஸ்பீடு ஒர்க்கில் நாலஞ்சு மாசத்துல மொத்த படப்பிடிப்பும் முடிஞ்சு... இப்ப ரிலீஸுக்கு ‘மெர்சல்’ ரெடி. ஆடியோ ஃபங்ஷன்ல எல்லாருமே ‘விஜய் சாருக்கு இதுல மூணு கெட்டப் இருக்காமே?’னு கேட்டாங்க. ‘தெறி’லயும் இதே மாதிரி பேச்சு வந்தது. இதுக்கான விடை அட்லீகிட்டதான் இருக்கு!’’ சஸ்பென்ஸுடன் புன்னகைக்கிறார் ஹேமா ருக்மணி.
 
என்ன சொல்றார் விஜய்?
‘இந்தப் படம் டி20 கிரிக்கெட் மேட்ச் மாதிரி செம விறுவிறுப்பா இருக்கும்’னு அட்லீ உறுதி கொடுத்திருக்கார். அது உண்மைதான். படம் நல்லா வந்திருக்கு. இந்தக் கதைக்கு பொருத்தமான லொகேஷன்ஸை தேடித் தேடிப் பிடிச்சோம். ஐரோப்பிய நாடுகள், ராஜஸ்தான், சென்னைனு நிறைய இடங்கள்ல ஷூட் நடந்திருக்கு. வெளிநாட்டு படப்பிடிப்புக்கு நானும் கூட போயிருந்தேன். ஐரோப்பாவுக்கு விஜய் சார் மிட் நைட்லதான் வந்து சேர்ந்தார். அப்புறம் யூனிட் ஆட்களோடு கார்ல அவர் ஹோட்டல் வந்து சேர ரொம்பவே லேட்டாகிடுச்சு. மறுநாள் காலைல ஆறு மணிக்கு ஷூட்டிங். ரெஸ்ட் எடுத்துட்டு ரிலாக்ஸா விஜய் சார் வருவார்னு எல்லாரும் நினைச்சோம்.

ஆனா, அவர் ஷார்ப்பா ஆறு மணிக்கு ரெடியா வந்து நின்னார். அந்த கடின உழைப்பும், டெடிகேஷனும்தான் இந்த அளவுக்கு அவரை உயர்த்தியிருக்கு. வெளிநாட்டுல சில வாரங்கள் படப்பிடிப்பு இருந்ததால, அங்கே நம்ம ஊர் சாப்பாடு கிடைக்காதுனு சமையலுக்கு அங்கயே ஓர் இந்திய சமையல்காரரை ரெடி பண்ணியிருந்தோம். விஜய் சாருக்கு மட்டும் வெளிய ரெஸ்ட்டாரண்ட்ல இருந்து வரவழைக்கலாம்னு ப்ளான்.

ஆனா, அவர் ‘எல்லோர் கூடயும் சேர்ந்து சாப்பிடறேன். எனக்கு சப்பாத்தி மட்டும் இருந்தா போதும்’னார். உடனே நான் எங்க சமையல்காரர்கிட்ட ‘சப்பாத்தி சாஃப்ட்டா இருக்கட்டும்’னு சொன்னேன். முதல் நாள் அந்த சப்பாத்திக்கு தொட்டுக்க பருப்பு கூட்டு எதுவும் இல்லை. ஏதோ ரெடிமேட் சூப் மாதிரி ஒண்ணு வச்சிருந்தாங்க. அதையே விஜய் சார்கிட்டயும் கொடுத்தாங்க.

மறுநாளும் சப்பாத்தி ரெடி பண்ணினாங்க. அதை சாப்பிட்ட யூனிட் ஆள், ‘சப்பாத்தியை பிய்க்கக் கூட முடியல... கார்ட்போர்டு அட்டை மாதிரி இருக்கு. இன்னிக்காவது சாஃப்ட்டா இருக்கும்னு நினைச்சேன்’னு சவுண்ட் விட்டார்.உடனே அந்த சப்பாத்தியை பிய்த்துப் பார்த்தேன். உடைக்கவே முடியலை. இதைத்தான் ரெண்டு நாளா எங்ககிட்ட எந்த குறையும் சொல்லாம அட்ஜட்ஸ் பண்ணி விஜய் சார் சாப்பிட்டிருக்கார்னு தெரிஞ்சதும் ஷாக் ஆகிட்டேன். ‘ஃபாரீன்ல இதெல்லாம் சகஜம். நீங்க கூலா இருங்க...’னு அவர் எங்களுக்கு ஆறுதல் சொன்னதும் நெகிழ்ந்துட்டேன். அந்த ஊர் சாப்பாடு வடிவேல் சாருக்கு ஒத்துக்கவே இல்ல. ரொம்ப சிரமப்பட்டார்.

விஜய் சார் ரசிகர்களை மதிக்கற பண்பை போலந்துல நேர்ல பார்த்தேன். அங்க ஷூட்டிங் முடிச்சிட்டு அவர் கார் ஏறப் போகும்போது வேடிக்கை பார்க்க நின்றிருந்த ரெண்டு பேர் நம்ம ஊர் ஆட்கள் மாதிரி இருந்தாங்க. விஜய் சாரை அவங்களுக்கு தெரிஞ்சிருந்தது. ஆனா, அவர் பக்கத்துல வந்து பேச சின்னத் தயக்கதோட இருந்தாங்க. உடனே அவரே அவங்களைத் தேடிப்போய் பேசினார். ‘இங்க நீங்க என்ன ஒர்க் பண்றீங்க? எப்படி இருக்கீங்க... எப்படி இந்த ஊர் சாப்பாட்டை சமாளிக்கறீங்க’னு கேஷுவலா பேச ஆரம்பிச்சதும் அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். ‘மெர்சல்’ல ஒரு கிராமத்து கேரக்டர் இருக்கு. அது அவருக்கே புது அனுபவத்தை கொடுத்திருக்கு. ‘இதுவரை இப்படி பண்ணதில்லை’னு அவரே அட்லீகிட்ட சொல்லியிருக்கார்.

காஜல், சமந்தா, நித்யாமேனன்னு குளுகுளுனு இருக்கே..?
காஜலும் நானும் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். எனக்கு தியேட்டர் ஷோவுல ஆர்வம் அதிகம். கார்த்திக் ராஜா சாரை வைச்சு ‘பட்டணத்தில் பூதம்’ மாதிரி நிறைய தியேட்டர் ஷோ பண்ணியிருக்கேன்னு அவங்களுக்கு தெரிஞ்சதும் ரொம்ப நெருங்கிட்டாங்க. ‘அடுத்த முறை தியேட்டர் ஷோ இருந்தா சொல்லுங்க... நானும் நடிக்கறேன்’னு சொல்லியிருக்காங்க. சமந்தாவும் அட்லீயும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்.

சமந்தாவுக்கு கல்யாணம் நெருங்கிட்டு இருந்ததால அவங்களோட போர்ஷன்ஸை விஜய் சார் கோ ஆப்பரேஷனோட அட்லீ வேகமா முடிச்சுக் கொடுத்து அவங்களை ஃப்ரீ பண்ணினார். நித்யாமேனன் ஆன்மீகத்துல ரொம்பவும் ஆர்வம் உள்ளவங்க. ஸ்பாட்டுல எங்களோட கலகலன்னு பேசிட்டிருப்பாங்க. ஆனா, கேமரா முன்னாடி நின்னதும் பின்னி பெடல் எடுத்துடுவாங்க.

இதிலும் வில்லனா நடிக்கறாராமே எஸ்.ஜே.சூர்யா?
எங்க தயாரிப்பு ‘இறவாக்காலம்’லயும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கறார். ‘மெர்சல்’ல அவரை வில்லன் கேரக்டர்ல நடிக்க கேட்டதும், தயங்கினார். ‘இப்பதான் ‘ஸ்பைடர்’ல வில்லனா பண்ணினேன். மறுபடியும் நெகடிவ் ரோல் பண்ணினா அப்படியே கேப்பாங்களே’னு தயங்கினார். ஆனா, கதையைக் கேட்டதும் ஓகே சொல்லிட்டார்.

உங்க தயாரிப்பான ‘சங்கமித்ரா’வை கேன்ஸ் விழாவில் அறிமுகப்படுத்தினது ஏன்?
நானும் முரளியும் கேன்ஸ் ஃபெஸ்டிவலுக்கு ரெகுலரா போவோம். அந்த ஊர்ல எந்த சினிமா ஸ்டூடியோவும் இல்ல. ஆனா, அங்க சினிமாவை கொண்டாடறாங்க. சர்வதேசப் படங்கள் எல்லாம் அங்க வருது. நம்ம ஊர் படமும் அங்க திரையிடணும்னு ஒவ்வொரு தடவையும் முரளி சொல்லிட்டே இருப்பார். அவங்க அப்பா ஆரம்பிச்ச ‘தேனாண்டாள் ஃபிலிம்ஸை’ சர்வதேச அளவில் எடுத்துட்டு போகணும்னு கனவு கண்டார். அதுக்கான முதல் படிதான் ‘சங்கமித்ரா’. ‘பாகுபலி’ மாதிரி இந்திய சினிமாவா கொண்டு வர்றோம். நவம்பர்ல இருந்து இதோட ஷூட்டிங் தொடங்குது!       

- மை.பாரதிராஜா