தனக்கு வீடு கட்டிக் கொடுத்தது எம்ஜிஆர்தான் என்பது ப.ஜீவானந்தத்துக்கு மட்டுமல்ல... உலகுக்கே தெரியாது!சென்ற இதழ் தொடர்ச்சி...

- மை.பாரதிராஜா

தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் இயக்குநர் ப.நீலகண்டனின் ஆஸ்தான உதவி இயக்குநரும், மகாத்மா காந்தியால் பெயர் சூட்டப்பட்டவரும், கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தத்தின் அண்ணன் மகனுமான மோகன் காந்திராமன். ‘‘நான் அசோசியேட் டைரக்டரா வரும் போது, அமிர்தம் சினிமாட்டோகிராபரா வர்றதுக்கான தகுதியோடு இருந்தார். அதனால ப.நீலகண்டன் சார் அப்படிச் சொன்னதும் கலைஞர் மகிழ்ச்சியோட சம்மதிச்சார்.

‘பூம்புகார்’ படத்துல வர்ற அந்த போட் ஸாங்கை அடையார் போட்கிளப்பில் ஷூட் பண்ணினோம். இப்படி ‘பூம்புகார்’ படத்துல நானும் இயக்குநராக வாய்ப்பு கிடைச்சது. இதோட இன்னொரு பெருமையும் சேர்ந்தது...’’ சின்னதொரு ரிலாக்ஸுக்குப் பின் தொடர்கிறார் மோகன் காந்திராமன். ‘‘படம் ரெடியாகறப்ப கலைஞருக்கு சின்னதா ஒரு ஐடியா தோணுச்சு. ‘பூம்புகார்’ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அதோட கதை, படம் பத்தி சின்னதா ஒரு முன்னோட்டம் மாதிரி பேசினா சிறப்பா இருக்குமேனு நினைச்சார்.

அதுக்காக இன்ட்ரோவை எழுதிட்டார். ஆனா, பொதுக்கூட்டம், கட்சி வேலைகள்ல அவர் பிசியா இருந்ததால நேரம் கிடைக்காம தவிச்சார். அப்ப அவர் ரெண்டாவது தடவையோ மூணாவது தடவையோ எம்.எல்.ஏ.வா இருந்தார். இந்நிலைல திடீர்னு ஒருநாள் என்னைக் கூப்பிட்டு ‘இன்னிக்கி ராயபுரத்துல மீட்டிங். ஒன்பதரை போல முடிஞ்சுடும். அதுக்கு அப்புறம் ‘பூம்புகார்’ அறிமுகத்தை ஷூட் செய்துடலாம்’னு சொன்னார்.

ஆனா, நீலகண்டன் சாரும், ஒளிப்பதிவாளர் துரையும் ஊர்ல இல்ல. ‘அதனால என்ன... நீயும், அமிர்தமும் இருக்கீங்களே... பாட்டே எடுத்துட்டீங்க... இதை எடுக்க மாட்டீங்களா..?’னு சொல்லி உற்சாகப்படுத்தினார். மீட்டிங் முடிஞ்ச களைப்பு துளியும் கலைஞர் முகத்துல தெரியலை. இத்தனைக்கும் அவருக்கு காய்ச்சல் வேற. அப்படியிருந்தும் நைட்டு 11 மணிக்கு கோல்டன் ஸ்டூடியோவுக்கு (இப்ப ஃபுட் கார்ப்பரேஷனா மாறிடுச்சு) வந்தார்.

நானும் அமிர்தமும் அந்த இன்ட்ரோவை ஷூட் செய்தோம்...’’ பெருமையுடன் சொல்லும் மோகன் காந்திராமன், இதன் பிறகுதான் கலைஞர், தான் கதை வசனம் எழுதும் படங்களின் அறிமுகக் காட்சியில் தோன்றி பேசத் தொடங்கினார் என்கிறார். ‘பூம்புகார்’ வெற்றியைத் தொடர்ந்து இதே கூட்டணி ‘பூமாலை’, ‘அவன் பித்தனா’ படங்களை உருவாக்கியது. அதிலும், தான்தான் அசோசியேட் என்பதில் இவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

‘‘கலைஞர் பத்தி சொல்லிட்டு அறிஞர் அண்ணா பத்தி சொல்லாம இருந்தா எப்படி..? ‘ஓர் இரவு’ படம் வழியாதான் எங்க நீலகண்டன் சார் இயக்குநரானார்னு முன்னாடியே சொல்லியிருக்கேன் இல்லையா..? அதுலேந்தே அண்ணாவும் என் குருநாதரும் நண்பர்கள். தனக்கு நேரம் கிடைக்கிறப்ப எல்லாம் எங்க ஆபீசுக்கு அண்ணா வந்துடுவார். மணிக்கணக்குல நீலகண்டன் சாரோட பேசுவார்.

இந்த நேரத்துல தன்னோட சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ‘அரசு பிக்சர்ஸ்’ சார்புல அண்ணா கதை, வசனம் எழுத ஒரு படம் இயக்கணும்னு நீலகண்டன் சார் விரும்பினார். ‘நீங்களே நல்ல கதையா செலக்ட் பண்ணி கொடுங்க. திரைக்கதை, வசனம் எழுதித் தர்றேன். எல்லா வேலையும் சேர்த்து பண்ண டைம் இல்ல. கட்சி வேலைகள் இருக்கு...’னு அண்ணா சொல்லிட்டார்.

அண்ணா எழுத்துல சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். நடிச்சிருக்காங்க. ஆனா, எம்ஜிஆர் நடிச்சதில்ல. அதனால அண்ணா எழுத்துல எம்ஜிஆர் நடிச்சா புதுமையா இருக்கும்னு நீலகண்டன் சார் நினைச்சார். எம்ஜிஆரும் இதுக்கு சம்மதிச்சிட்டார். கதை தேடினோம். ‘சுமை தாங்கி’ நாடகத்தோட கதை பிடிச்சுப் போச்சு. அந்தப் படம்தான் ‘நல்லவன் வாழ்வான்’. ராஜசுலோசனா ஹீரோயின். ராதா அண்ணன் மெயின் ரோல். இந்தக் கூட்டணியும் பேசப்பட்டது...’’ என்ற மோகன் காந்திராமன், கவிஞர் வாலி பாடலாசிரியராக அறிமுகமான நிகழ்வை விவரிக்கத் தொடங்கினார்.

‘‘இந்தப் படத்துல, அதாவது ‘நல்லவன் வாழ்வான்’ல எம்ஜிஆரும், ராஜசுலோசனாவும் கனவுக் காட்சில பாடற மாதிரி சிச்சுவேஷன். யார் யாரோ எழுதிப் பார்த்தாங்க. நீலகண்டன் சாருக்கு திருப்தியில்ல. என் குருநாதரின் முதல் உதவி இயக்குநர் மா.லட்சுமணன், ‘வாலினு ஒரு பையனை அனுப்புறேன். நல்லா பாட்டெழுதுறான்’னு சொல்லி ஒருத்தரை என்கிட்ட அனுப்பி வச்சார்.

ஜம்முனு ஹீரோ மாதிரி வந்தார். ஒரு புத்தகம் நிறைய எழுதின பாடலோடு வந்தார். இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல நான் சிச்சுவேஷன் சொல்றேன்னு விளக்கினேன். அவர் ஏதோ ஒரு படத்துல பாடல் எழுதியிருந்தார். ஆனா, அது ரிலீஸ் ஆகலை. நான் நீலகண்டன் சார்கிட்ட வாலியை அறிமுகப்படுத்தி வச்சேன். ‘ரெங்கராஜ ஐயங்கார்... ஸ்ரீரங்கத்துல இருந்து வந்திருக்கேன்’னு சொன்னார். ‘மோகன் ஓகே சொல்லிட்டா, எனக்கும் ஓகேதான்’னார்.

ஆனா, அன்னிக்கு வாலி எழுதின பாடல் செட் ஆகல. இப்படி ஒரு மாசம் தொடர்ந்து காலையில எங்க அரசு பிலிம்ஸ் அலுவலகம் வந்திடுவார். ரெண்டு பாடலாவது எழுதுவார். ஆனா, சிச்சுவேஷனுக்கு பொருந்துற பாடலா அமையாம இருந்தது. இந்த ஒரு மாசத்துல நானும் வாலியும் நண்பர்களாகிட்டோம். பனகல் பார்க்குக்கு அழைச்சிட்டு போய், சாப்பாடு வாங்கிக் கொடுத்து அவரை எழுதச் சொல்லுவேன்.

ஒரு மாசத்துக்குப் பிறகு ஒரு பாடல் அமைஞ்சிடுச்சு. ‘ சிரிக்கின்றாள்... இன்று சிரிக்கின்றாள்...’ பல்லவியோடு எழுதிய பாடல் இடையே... ‘காலப் புயலில் அணையாமல்... நெஞ்சில் காதல் விளக்கை ஏந்தி வந்தேன்... உதயசூரியன் எதிரில் இருக்கையில்... உள்ளத்தாமரை மலராதோ..?’ என எழுதியிருந்தார். இந்த வரிகளைப் பார்த்ததும் நீலகண்டன் சாருக்கு ரொம்பவே சந்தோஷம். டி.ஆர்.பாப்பா பாடி, அதை ரெக்கார்டும் பண்ணிட்டோம். எம்ஜிஆரை சந்திக்க மெஜஸ்டிக் ஸ்டூடியோவுக்கு கிளம்பினேன்.

அப்போ நீலகண்டன் சார் என்னிடம், ‘மோகன், பாட்டு நல்லா இருக்கு. ஆனா, இது என் சொந்தப்படம். நான் எம்ஜிஆரை நம்பித்தான் படமெடுக்கறேன். உன் நண்பர் நல்லா எழுதியிருக்கார். எம்ஜிஆருக்கும் இந்த பாட்டு பிடிக்கும். ஆனா, அவர் ஓகே சொன்னதும் அவர்கிட்ட இந்த பாட்டை எழுதினது ஸ்ரீரங்கத்து ஐயங்கார் பையன் ஒருத்தர்னு உண்மையைச் சொல்லிடு. அண்ணாவும், எம்ஜிஆரும் திராவிட இயக்கத்தை சேர்ந்தவங்க. அவங்களோட படத்துக்கு ஐயங்கார் பாட்டெழுத சம்மதிப்பாங்களானு சந்தேகமா இருக்கு.

பாட்டை யார் எழுதியிருந்தாலும் பரவாயில்லைனு அவங்க ரெண்டு பேரும் சொல்லணும். அவங்ககிட்ட சம்மதம் வாங்குறது உன் பொறுப்பு...’னு நீலகண்டன் சார் சொன்னதும் வாலி வெடவெடக்க ஆரம்பிச்சிட்டார். அவர் பயந்துகிட்டே ‘நானும் உங்களோட வரேன்’னு வந்தார். நான் வாலியை கார்ல இருக்கச் சொல்லிட்டு, எம்ஜிஆர்கிட்ட பாடலைப் போட்டுக் காட்டினேன்.

கண்மூடிக் கேட்டவர், ‘இதை எழுதினது மருதகாசியா’னு கேட்டார். ‘இல்லண்ணே... ரங்கராஜன்னு ஒருத்தர். ஸ்ரீரங்கத்து ஐயங்கார். ஆல் இந்தியா ரேடியோவுல வாலி என்கிற புனைபெயர்ல எழுதிட்டிருக்கார். என்கூடத்தான் வந்திருக்கார். ‘எங்க ஐயங்கார்ங்கறதால அவர் பாடலை நிராகரிச்சிடுவீங்களோன்னு பயப்படுறார்’னு சொன்னேன்.

‘அவரை அழைச்சிட்டு வா’னு உத்தரவிட்டார் எம்ஜிஆர். தயங்கித் தயங்கி  வந்தார் வாலி. ‘என்னப்பா... என்னைப் பார்த்து பயந்தியாமே..? உனக்கு ஒரு விஷயம் சொல்றேன். என் வக்கீல், டாக்டர், ஆடிட்டர், கேஷியர்னு எல்லாருமே ஐயர்கள்தான். அவ்வளவு ஏன்... என் மனைவி வி.என்.ஜானகியும் ஐயர்தான். ஏன் பயப்படறே? உன் எழுத்து நிற்குதுய்யா...’னு அவர் சொன்னதும் வாலி அழுதுட்டார்.

‘நீ நல்லா வருவே’னு எம்ஜிஆர் ஆசீர்வதிச்சதும் கையோட காஞ்சிபுரத்துக்கு வாலியை அழைச்சிட்டு போனேன். அண்ணாவைப் பார்த்தோம். ‘ராமச்சந்திரனுக்கு ஓகே. நீலகண்டனுக்கு ஓகே. போதுமே... என்கிட்ட கேட்கணும்னு அவசியமில்லையே’ன்னார். எங்களுக்கு நிம்மதி. ஆனா, பிரச்னை அத்தோடு முடியலை. சாரதா ஸ்டூடியோல சீர்காழி, சுசீலா பாட ரிக்கார்டிங். அப்ப ஃபெப்சி ஸ்டிரைக் ஒரு வாரமா நடந்திட்டிருந்ததால எந்த ஸ்டூடியோலயும் ஷூட்டிங்கும் இல்ல ரிக்கார்டிங்கும் இல்ல.

இதையும் தாண்டி ரிக்கார்டிங் தியேட்டர் ரெடி பண்ணினா... சுசீலாவுக்கு ஜலதோஷம். ‘இன்னொரு நாள் ரிக்கார்டிங் வச்சுக்கலாமா’னு சுசீலா கேட்கறாங்க. தன்னோட முதல் பாடல் ரிக்கார்டிங் இப்படி ஆகுதேனு வாலிக்கு கவலை. நான்கு நாட்களுக்குப் பிறகு சுசீலா வந்தார். பாடல் ரிக்கார்டு ஆச்சு. அப்புறம் கீழ்பாக்கம் நியூட்டோன் ஸ்டூடியோல பாடல் ஷூட்டிங். வாட்டர் ஃபால்ஸ் செட் போட்டிருந்தோம். அன்னிக்கு ஸ்பாட்டுல வாட்டர் டேங்க் செட் உடைஞ்சு செட் தூள் தூளாகிடுச்சு.

வாலிக்கு எப்படி இருந்திருக்கும்... நடுங்கி ஒடுங்கி உட்கார்ந்திட்டார். நான் பொறுப்பெடுத்து அதே மாதிரி செட்டை போட்டுக் கொடுத்தேன். அந்த பாடல் பெரிய ஹிட். அப்புறம் வாலி பிசியானதும் எம்ஜிஆருக்கு நெருக்கமானதும் ஊருக்கே தெரியுமே...’’ முகத்தில் மகிழ்ச்சி பொங்க நினைவுகூர்ந்த மோகன் காந்திராமனின் பேச்சு, அவரது சித்தப்பாவான கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம் பக்கம் திரும்பியது.

‘‘எம்ஜிஆர் கூட எனக்கிருந்த நட்பை ஒருநாளும் நான் கேஷ் பண்ணினதில்லை. ஆனா, என்னால பலர் அவர்கிட்ட உதவி பெற்றிருக்காங்க. ஒரு விஷயம் சொல்றேன். கம்யூனிஸ்ட் தலைவர் ப.ஜீவானந்தம், தாம்பரம் கஸ்தூரிபாய் நகர் குடிசைப் பகுதில இருந்தார். அவர் குடிசைக்கு முன்னாடி ‘ப.ஜீவானந்தம்’னு ஒரு போர்டு தொங்கும். வீடு முழுக்க கம்யூனிச புத்தகங்கள். மழைல அதெல்லாம் சேதமாகுது. பழைய ஓலையை மாத்தணும்னு என்கிட்ட சொன்னார்.

எதேச்சையா ‘மன்னாதி மன்னன்’ ஷூட்டிங்ல எம்ஜிஆரைப் பார்த்தேன். ‘தலைவர் எப்படி இருக்கார் மோகன்?’னு ஜீவா பத்தி விசாரிச்சார். ‘ஓலை மாத்திக் கொடுக்கச் சொல்லி கேட்டிருக்கார்’னு சொன்னேன். ‘என்னது குடிசைல இருக்காரா?’னு ஷாக்கானார். ‘நாளை காலைல ஏழு மணிக்கு லாயிட்ஸ் ரோடு வீட்டுக்கு வா. நாம தாம்பரம் போகலாம். யாருக்கும் தெரிய வேண்டாம்’னு சொன்னார்.

அதே மாதிரி மறுநாள் ஜீவானந்தம் வீட்டு முன்னாடி போய் இறங்கினோம். அவர் குடிசைக்கு முன்னால கயித்துக் கட்டில்ல உட்கார்ந்து புக் படிச்சிட்டிருந்தார். வீட்ல யாரும் இல்ல. சித்தப்பாவுக்கு காது சரியா கேட்காது. கார்ல இருந்து நானும் எம்ஜிஆரும் இறங்கினதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அப்ப திமுகவுக்கும் கம்யூனிஸ்ட்டுக்கும் பிரச்னை எதுவும் இல்ல. ‘இந்தப்பக்கம் ஷூட்டிங் வந்தேன். அப்படியே உங்கள பார்க்கலாம்னு வந்தோம்’னு எம்ஜிஆர் சொன்னார்.

அவர்கிட்ட உலக அரசியல், காரல் மார்க்ஸ்னு சித்தப்பா பிரசங்கம் பண்ணினார். எம்ஜிஆர் பார்வை வீட்டை அளவெடுத்தது. அப்ப பிராட்வேல இருந்த ‘ஜனசக்தி’ ஆபீசுக்கு தினமும் சித்தப்பா போயிட்டு வருவார். அதனால ‘என்னை தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன்ல இறக்கி விட்டுடுங்க’னு சித்தப்பா கேட்டார். அப்படியே இறக்கிவிட்டோம். அவர் போனதும், ‘சித்தப்பாவுக்கு தெரிய வேணாம். ஒரு சின்ன ஸ்கீம்ல அவருக்கு வீடு கட்டிக் கொடுக்கறேன். என்ன செலவு ஆகும்னு கணக்குப் போடு.

பணம் தரேன். நானா கொடுத்தா அவர் வாங்கிக்க மாட்டார். இந்த விஷயம் நம்ம ரெண்டு பேரைத் தவிர யாருக்கும் தெரிய வேண்டாம்’னு எம்ஜிஆர் சொன்னதும் நெகிழ்ந்துட்டேன். சொன்ன மாதிரியே மின் வசதியோட, புத்தகங்கள் வைக்க அலமாரியோட அதே ஏரியாவுல சித்தப்பாவுக்கு, எம்ஜிஆர் ஒரு வீடு கட்டிக் கொடுத்தார். அவர் குடிபோற அன்னிக்கி எம்ஜிஆரைக் கூப்பிட்டேன். ‘வேண்டாம். நான் கட்டிக் கொடுத்தது தெரிஞ்சா அவருக்கு கட்சில கெட்ட பேரு கிடைக்கும். நீ கட்டிக் கொடுத்ததாவே இருக்கட்டும்’னு சொல்லிட்டார்.

இந்த விஷயத்தை பின்னாடிதான் சித்தப்பாகிட்ட சொன்னேன்...’’ என்று புன்னகைக்கும் மோகன் காந்திராமன் தமிழிலும் மலையாளத்திலும் சில படங்களை இயக்கியிருக்கிறார். 10 வருடங்கள் ஃபெப்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். ஃபெப்சி திரைப்படப் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். திரைப்படத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினராகவும் உள்ளார். அத்துடன் இயக்குநர் சங்கம், எழுத்தாளர் சங்கத்திலும் இன்றும் உறுப்பினராக துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்.

படங்கள் உதவி: ஞானம்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்