அப்பாகிட்ட பிடிச்சதே Will Powerதான்!ஸ்ருதிஹாசன் Exclusive talk

காலேஜ்மேட் போல் எப்போதும் ஃப்ரெண்ட்லியானவர் ஸ்ருதிஹாசன். கமலின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் உள்ள அவரது அறைக்குச் சென்றால்... ‘she leads’ என வரவேற்கிறது ஒரு பவர்ஃபுல் வாசகம். ‘‘சென்னை எனக்கு எப்பவுமே வீடுதான். நான் இங்கதான் ஸ்கூல் படிச்சேன். வளர்ந்தேன். இங்க இருந்த என் ஃப்ரெண்ட்ஸ் பலரும் வேற வேற ஸ்டேட்ஸ் போயிட்டாங்க. ஒருசிலர் மட்டும்தான் சென்னைல இருக்காங்க.

ஆனா, மும்பைல நிறைய ஃப்ரெண்ட்ஸ். அதுவும் என் வீடு மாதிரிதான். எங்கம்மா அங்கதானே இருக்காங்க! இங்க உள்ள ஃப்ரெண்ட்ஸ், ‘நீ எப்பவும் மும்பை போயிடறே’னு செல்லமா கோவிச்சுக்கறாங்க. அங்கே உள்ளவங்க. ‘நீ எப்பவும் சென்னை போயிடறே’னு சொல்றாங்க! நீங்களோ மும்பைலதான் நான் ஹேப்பியா இருக்கேன்னு சொல்றீங்க. இப்ப நான் என்ன செய்ய?!’’ மத்தாப்பூச் சிரிப்பும் செல்லச் சிணுங்கலுமாக கேட்கிறார் ஸ்ருதிஹாசன்.

‘‘சின்ன வயசுல இருந்தே சினிமாலதான் இருக்கேன். இந்தி ‘லக்‘ல இருந்து சேர்த்தா எனக்கு இது சில்வர் ஜூப்ளி இயர்! ஒரு ஹீரோயினா பத்து வருஷங்கள் ட்ராவல் ஆகறது சின்ன விஷயமில்ல. எத்தனையோ பேர் அதிரடியா வந்து, சில வருடங்கள்லயே காணாமப் போயிருக்காங்க. அதுக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். நான் இவ்வளவு வருஷங்கள் இருந்ததுக்குப் பெருமைப்படறேன்.

இன்னிக்கு உள்ள சூழல்ல நடிகையாகி அஞ்சு வருஷம் கடந்தாலே பெரிய சாதனைதான். இங்க வந்து நிறைய கத்துகிட்டிருக்கேன். என் பர்சனாலிட்டி, ஆக்ட்டிங் அப்ரோச்னு எல்லாத்திலும் இம்ப்ரூவ் ஆகியிருக்கேன். நிஜமாவே கிரேட் எக்ஸ்பீரியன்ஸ். நான் கத்துக்காமல் விட்ட ஒரே ஒரு விஷயம், பொய் சொல்றது மட்டும்தான்!’’ உற்சாகமாக பேசுகிறார் ஸ்ருதி.

‘சபாஷ் நாயுடு’ல நீங்க வந்தது எப்படி?
‘என் படத்துல நீ நடிக்கிறீயா?’னு திடீர்னு ஒரு நாள் அப்பா கேட்டார். அப்படித்தான் ‘சபாஷ் நாயுடு’ல வந்தேன். இது அமெரிக்காவில் நடக்கற கதை. அதனால பெரும்பகுதி லாஸ் ஏஞ்சல்ஸ்லதான் ஷூட். அக்‌ஷரா அதுல அசிஸ்டெண்ட்டா ஒர்க் பண்றா. படத்திலும் நான் அப்பாவோட பொண்ணாதான் நடிக்கறேன்.

ரொம்ப தைரியமான, க்யூட்டான கேரக்டர். ஃபேமிலி என்டர்டெயினர். ஸோ, படம் எல்லாருக்குமே பிடிக்கும். ஸ்பாட்டுல எனக்கும் சரி, அக்‌ஷராவுக்கும் சரி, ஒர்க் விஷயத்தில் அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். எந்த சலுகையும் எதிர்பார்க்க முடியாது. ‘Work is worth’னு சொல்லுவார். 19 வயசுல ஒரு மாணவியா லாஸ் ஏஞ்சல்ஸ்ல சுத்தி திரிஞ்சிருக்கேன். அதே ஊர்ல அதே இடங்கள்ல நான் நடிக்கற படத்தோட ஷூட்டும் நடக்குதுனு நினைக்கிறப்ப ஹேப்பியா இருக்கு.

இப்பல்லாம் சின்னதா ஷார்ட் ஃபிலிம் பண்ணிட்டு, இயக்குநராகிடறாங்க. நீங்க எப்ப அடுத்த கட்டத்துக்கு போகப் போறீங்க?
எனக்கு ஆர்வமான துறைகள்ல நான் ஒர்க் பண்ணிட்டுத்தான் இருக்கேன். மியூசிக், லிரிக்ஸ், கவிதைகள்லதான் ஆர்வம். மத்த எதிலும் இன்னும் என் கவனம் போகல. ஒரு படத்துக்கு இசையமைக்கற வேலைல இறங்கினா கூட அதுக்கு நிறைய டைம் ஆகிடும். நடிச்சுக்கிட்டே, மியூசிக் டைரக்டராகவும் இருந்தா ரெண்டு வேலைலயும் ஃபோக்கஸ் பண்ண முடியாது. ஸோ, இப்ப எனக்கு பிடிச்சதை பண்றேன். டைரக்‌ஷன் மேல நிறைய மரியாதை இருக்கு. அது மிகப்பெரிய வேலை. அதனாலயே அந்தப்பக்கம் போகமாட்டேன்!

நயன்தாரா, அனுஷ்கா மாதிரி நீங்க எப்ப வெயிட்டான ரோல்கள் பண்ணப்போறீங்க?
அவங்க அமேஸிங்! நயன்தாரா, அனுஷ்கா இவங்களோட ஆக்ட்டிங், ரோல் எல்லாம் ரொம்ப பிடிக்கும். அவங்க ரெண்டு பேருமே ரொம்ப பியூட்டிஃபுல். ரொம்ப டேலன்டட் பர்சன்ஸ். அவங்க பர்சனாலிட்டி வேற, என் பர்சனாலிட்டி வேற. அவங்களுக்கு பிடிச்சதை அவங்க பண்றாங்க. எனக்கேத்த மாதிரி நல்ல சப்ஜெக்ட்ஸ் வரும் போது நானும் பண்ண ரெடியாகிடுவேன்.

மும்பை ஹீரோயின்கள் அவங்களோட பேட்டிகள்ல டேட்டிங்ல இருந்து பாய் ஃப்ரெண்ட்ஸ் வரை வெளிப்படையா பேசறாங்க. ஆனா, நம்ம ஊர்ல மட்டும் ஏன் மத்த டாபிக்ஸ் பத்தி நடிகைகள் பேச மாட்டேங்கறாங்க?
இப்ப நான் கோலிவுட், டோலிவுட், பாலிவுட்ல படங்கள் பண்ணிட்டிருக்கேன். வெறுமனே இந்தியில் மட்டும் படங்கள் பண்ணினா கூட உங்ககிட்ட எப்படி பேசறனோ அப்படித்தான் பேசுவேன். இங்க என் ஹிஸ்ட்ரி அத்தனையும் உங்களுக்கு தெரியும். நான் எங்க படிச்சேன்... எப்படி வளர்ந்தேன்னு அத்தனையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. நேர்மையா சொல்லணும்னா, எனக்கு பிரைவசி கிடைச்சதே இல்ல. என்னோட பர்சனல் விஷயங்களை நான் வேணும்னே மறைக்கறதில்லை. சில விஷயங்களை பொக்கிஷமா நினைக்கறதால, அதுக்கான முக்கியத்துவம் கொடுத்து எனக்குள்ளயே செலிபரேட் பண்ணிக்கறேன். அவ்வளவுதான்.

அப்பாகிட்ட லேட்டஸ்ட்டா கத்துக்கிட்டது என்ன?
Will power. என்ன நடந்தாலும் எழுந்து நிற்கணும் என்பதை அவர்கிட்ட பார்த்திருக்கேன். எப்பவும் பாஸிட்டிவ்வா இருப்பார். அது அவர்கிட்ட எனக்கு பிடிச்ச விஷயங்கள்ல ஒண்ணு!

- மை.பாரதிராஜா

டிராவல் & ஷாப்பிங்
புதுப்புது இடங்களுக்கு டிராவல் பண்ண ரொம்ப பிடிக்கும். ஐ லவ் ஷாப்பிங். எந்த நாட்டுக்கு டூர் போனாலும் அங்க உள்ள லேட்டஸ்ட் ஃபேஷன் டிரெஸ்களை உடனே வாங்கிடுவேன்.

புத்தகப் புழு
கமலின் மகள் என்பதாலோ என்னவோ... ஸ்ருதிக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உண்டு. ஆங்கில நாவல்கள் விரும்பிப் படிப்பார். சமீபத்தில் படித்தது, Maggie Nelson எழுதிய ‘Bluets’.

பிடித்த பிற மொழிப் படங்கள்

1. Godfather
2. Requiem for a dream
3. Eternal sunshine of the spotless mind
4. Akira Kurosawa - Dreams
5. Dancer in the dark

வீடியோ கேம்ஸ்

சின்ன வயசில இருந்து வீடியோ கேம்ஸ்ல ஆர்வம் அதிகம். இப்பவும் வீடியோ கேம்ஸ் உண்டு. ஆனா, அட்வான்ஸ்டு டைப் விளையாட மாட்டேன். ரொம்பவே பழைய டெக்னாலஜி கேம்ஸ்தான் என் சாய்ஸ்.