விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 42

சுண்டி விட்டதுபோல் கிருஷ்ணனின் உடலுக்குள் அதிர்ந்தது. அது வெளியிலும் எதிரொலித்தது. கார்க்கோடகரின் உடலிலும் பிரதிபலித்தது. விளைவு, அவரது நாக உடல் மீண்டும் ஒருமுறை வளைந்து விரிந்து நெளிந்து இயல்புக்கு வந்தது. போதாதா? திரும்பவும் அந்த தரிசனத்தை கிருஷ்ணன் கண்டான். அதுவும் முழுமையாக. பூரணமாக. அவனுக்குள் இருந்த கொஞ்சநஞ்ச சந்தேகமும் தீர்ந்தது.

சந்தேகமே இல்லை. கைரேகைக்கு மேல்தான் ‘KVQJUFS’ எழுதப்பட்டிருக்கிறது. என்ன... யாருக்கும் சந்தேகம் வராதபடி... எவரது கருத்தையும், சிந்தனையையும் கவராதபடி மறைந்திருக்கிறது. மறைக்கப்பட்டிருக்கிறது. எதனால் இப்படி ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்ற வினாவுடன் கூடவே எதனால் அர்ஜுனனின் வில் இருக்கும் இடத்தை திறப்பதற்கான சாவியாக இந்த கைரேகை இருக்குமோ என்ற எண்ணம் தனக்குள் ஏற்பட்டது என்ற கேள்வியும் பூத்தது.

கிரிப்டாலஜி சார்ந்தே இயங்குவதாலும் புழங்குவதாலும் பணிபுரிவதாலும் ரகசியங்களை மறைக்க code எழுதுவதுபோல் இது இருக்கலாம் என்ற சந்தேகம் தனக்குள் விஸ்வரூபம் எடுத்திருக்க வேண்டும். போலவே பயோமெட்ரிக்கை பயன்படுத்தி அனைத்து அறைகளுக்குள்ளும் செல்ல தனது கட்டை அல்லது ஆட்காட்டி விரல் ரேகை அல்லது முழு உள்ளங்கையைப் பதித்துப் பதித்து இந்த எண்ணம் உதித்திருக்க வேண்டும்.

எது எப்படியோ... ஊகித்தபடி விஜயனின் வில் இருக்கும் இடத்துக்குள் நுழைவதற்கான சாவியாக இந்த கைரேகை இருக்கலாம். அல்லது வேறு ரகசியத்தை வெளிப்படுத்தும் வாசலாக இந்த ரேகைகள் இருக்கலாம். இரண்டில் ஒன்று அல்லது ஊகிக்கவே முடியாத வேறு ஏதோ ஒன்று. எதற்கு இந்த ரேகைகள் பயன்படப் போகின்றன என்பதை அதைப் பயன்படுத்தும்போது அல்லது பயன்படுத்திய பிறகே அறிய முடியும்.

அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் - தன் சிந்தனைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டு ஆதியைப் பார்த்தான். சரியாக அந்தக் கணத்தில் ஆதியும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் பார்வைகளும் உராய்ந்தன. மோதின. கட்டிப் புரண்டன. தன் மனதில் ஊற்றெடுப்பதை எந்தளவுக்கு ஆதி சேகரித்திருப்பான் என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ, தான் சந்தேகப்படுகிறோம் என்ற அளவில் இவன் கண்டு கொண்டிருக்கிறான்.

இந்திய பொக்கிஷங்களைப் பாதுகாத்து வரும் அமைப்புக்கு ஏற்ற அடியாள்தான். எந்த கணத்தையும் தவற விடாதவனே கணத்தை ஆளத் தகுதியானவன்! ‘பார்வைச் சண்டை’யை நிறுத்திவிட்டு கண்களால் சிரித்தான். பதிலுக்கு கருவிழியால் புன்னகைப்பதா வேண்டாமா என்ற குழப்பம் ஆதியின் இமைகளில் வேர் விட்டது. கிருஷ்ணன் அதன்பிறகு ஆதியின் பக்கம் தன் கவனத்தை குவிக்கவில்லை. உடனடியாக வேறொரு பணி இருந்தது.அதைத் தான் முதலில் முடித்தாக வேண்டும். அர்ஜுனனின் வில்லை எடுப்பதுதான் கார்க்கோடகரின் லட்சியமும்.

அதற்காகவே ஸ்லீப்பர் செல் ஆக ‘Intelligent Design’ அமைப்புக்குள் நுழைந்திருக்கிறார். வேற்று கிரக வாசிகளையும் தனித்தனியாக வரவழைத்து தனி ஆவர்த்தனம் செய்திருக்கிறார். வாசுகி பாம்பின் அன்பைப் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்டவர் காரணமில்லாமல் தன் உடலில் கைரேகையை மறைத்து வைத்திருக்க மாட்டார். அது ரகசியம் என்பதால்தான் ஒளித்து வைத்திருக்கிறார்.

இந்த மர்மம் நமக்குத் தெரியாது என்ற நம்பிக்கையில்தான் இப்போது நம்மைக் காப்பாற்றுவதில் ஈடுபட்டிருக்கிறார். ஆக, கார்க்கோடகர் சுதாரிப்பதற்குள் அந்த கைரேகைகளின் மாதிரியை எடுத்தாக வேண்டும்.  எப்படி..? த்ரீ சிக்ஸ்டி டிகிரியில் கிருஷ்ணன் யோசித்தான். மின்னல் வெட்டவில்லை. பல்பு எரியவில்லை. உதட்டைப் பிதுக்கினான். அவனையே பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா தன் முழங்கையால் இடித்தாள். நிமிர்ந்தவனிடம் ‘என்ன’ என்று ஜாடையில் கேட்டாள்.

வாயைத் திறந்து எப்படி சொல்வது... நெருக்கமாக ஆதி நிற்கிறானே... ‘ஒன்றுமில்லை’ என தலையை அசைத்தான். இதனால் மூவரையும் சுமந்திருந்த கார்க்கோடகரின் உடல் மீண்டும் நெளிந்து வளைந்து விரிந்து... திரும்பவும் கைரேகையின் தரிசனம். கிருஷ்ணனின் பார்வை படர்ந்த, பதிந்த இடங்களுக்கு எல்லாம் ஆரம்பம் முதலே தன் கருவிழியால் ஐஸ்வர்யாவும் பின்தொடரத்தானே செய்கிறாள்? முழுமையாகப் புரியாவிட்டாலும் எதையோ கண்டுபிடித்திருக்கிறான் என்பது புத்தியில் உறைத்தது. அறிந்ததை என்ன செய்வோம்? நோட்டில் பதிய வைப்போம்.

இப்போது நோட்டுக்கு வழியில்லை. வேறென்ன ஆப்ஷன்? தீவிரமாக யோசித்தாள். பொதுவாக நாம், என்ன செய்வோம்? நூலகத்தில் எதிர்பாராதவிதமாக அபூர்வமான புத்தகம் கிடைத்தால் மடமடவென்று குறிப்பு எடுப்போம். அல்லது குறிப்பிட்ட சில பக்கங்களை ஜெராக்ஸ் எடுப்போம். அல்லது செல்போன் காமிராவால் பக்கங்களும் எழுத்துக்களும் தெரியும் விதமாக போட்டோ எடுப்போம்...
சட்டென்று துள்ளினாள்.

பேலன்ஸ் தவறி மூவரும் ஆடினார்கள். விழுந்து விடாமல் இருப்பதற்காக ஐஸ்வர்யாவின் தோள்களை கிருஷ்ணனும் அவனது இடுப்பை ஆதியும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். ‘‘அசையாம இருங்க...’’ கார்க்கோடகர் குரல் கொடுத்தார். ‘‘உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...’’ மூச்சு வாங்க கிருஷ்ணன் சீறினான். ‘‘ஆமா. போட்டோ பைத்தியம்!’’ ‘‘என்னது..?’’ ‘‘தத்தி.

இப்ப நாம இருக்கிற நிலையை அப்படியே செல்ஃபி எடுத்தா எப்படியிருக்கும்...’’ கண்களை விரித்து பரவசப்படுவது போல் கிருஷ்ணனுக்கு சமிக்ஞை அனுப்பினாள். மைக்ரோ நொடியில் அவனது இமைகள் விரிந்தன. ஐடியா! மேக்னடிக் வேவ்ஸ் இருப்பதால் செல்போன் வேலை செய்யவில்லை என பாக்கெட்டில் வைத்திருக்கிறோமே... அதை எடுத்து கைரேகையை படம் பிடித்தால்... துளியும் தாமதிக்காமல், கார்க்கோடகரின் உடலையும் அசைக்காமல் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கைப்பேசியை எடுத்தான்.

பார்த்துக் கொண்டே இருந்த ஆதிக்கு அடுத்து அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரிந்தது. தடுக்க முற்பட்டான். ‘‘உனக்கும் ஃபார்வர்ட் பண்றேன்...’’ கிருஷ்ணன் கிசுகிசுத்தான். ஆதிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அந்த கைரேகை அவனுக்கும் தேவை. மாஸ்டர் இதற்காகத்தானே காத்திருக்கிறார்..? மவுனமாக ஒத்துழைத்தான். கிருஷ்ணன் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டான்.

மூவரின் அலைவரிசையும் இப்போது ஒன்றாக இருந்ததால் கார்க்கோடகரின் உடல் அசையும் விதத்தில் நகர்ந்தார்கள். ‘KVQJUFS’ எழுத்துகள் விரிந்தன. சட். சட். சட். ஃப்ளாஷ் மின்ன, தென்பட்ட கைரேகையை தன் கைப்பேசியில் கிருஷ்ணன் சிறைப்பிடித்தான். பின்பக்கம் என்ன நடக்கிறது என்பது கார்க்கோடகருக்கு புரிவதற்குள் - முடிந்த கோணங்களில் எல்லாம் ரேகையை படம் எடுத்து முடித்திருந்தான்.

‘‘முட்டாள்களா... கேட்டிருந்தா நானே சொல்லியிருப்பேனே... இப்படி ஃப்ளாஷ் அடிச்சு நாம தப்பிக்கறதை காட்டிக் கொடுத்திட்டீங்களே...’’ ‘‘யாருக்கு? உலூபி தாயாரோட ஆட்களுக்கா..?’’ கேள்வி கேட்டு கிருஷ்ணன் முடித்திருக்க மாட்டான்... அதற்குள் ஏராளமான கருடன்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டன.

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்