டீ கடை ரைட்டர்!



- ச.அன்பரசு

புது டெல்லியின் விஷூ திகம்பர் மார்க் ரோட்டில் உள்ள இந்தி பவன் பிளாட் ஃபார்ம் கடைக்குச் சென்றால் லக்ஷ்மண்ராவிடம் ஒரு டீ வாங்கி அருந்துங்கள். டீ குடிக்கும்போது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் பற்றி பேசத் தோன்றுகிறதா? யோசிக்கவே வேண்டாம். பேசுங்கள். லக்ஷ்மண்ராவ் டீக் கடைக்காரர் மட்டுமல்ல, எழுத்தாளரும்கூட! மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் பிறந்த லக்ஷ்மணுக்கு மூன்று சகோதரர்கள்.

கிராமத்தில் உள்ள டாக்டரின் வீட்டில் வேலை செய்து வந்த லக்ஷ்மண், பின்னர் 1970ம் ஆண்டு மில்லில் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், ஒருசில ஆண்டுகளிலேயே மில் திடீரென மூடப்பட, மீண்டும் கிராமத்துக்கே திரும்பினார். ‘‘என் அப்பாவிடம் 40 ரூபாய் வாங்கிக்கொண்டு போபாலில் வேலை தேடிக் கிளம்பினேன். அப்போது என் மனதில் இரண்டு ஆசைகள் இருந்தன. ஒன்று, இவ்வுலகம் முழுதையும் பார்க்க வேண்டும்.

இரண்டு, நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும்...’’ என்று சொல்லும்  லக்ஷ்மண், வேலை பார்த்துக்கொண்டே மெட்ரிகுலேசன் படிப்பை முடித்திருக்கிறார். கையில் கொஞ்சம் காசு தேறியதும் 1975ம் ஆண்டு டெல்லி மண்ணை மிதித்தார். அப்போது அவருக்குக் கிடைத்தது எல்லாம் கட்டட வேலை, சர்வர் வேலை போன்றவைதான். அங்கும் இங்குமாக அல்லாடிய வாழ்க்கை டீக்கடைக்காரராக நிலைபெற்றது 1980ல்தான்.

அப்போது முதல் இப்போது வரை இந்த பிளாட்ஃபார்ம்தான் அவரது களம். விடுமுறை நாட்களில் தாராகஞ்ச் மார்க்கெட்டில் அலைந்து பல தரப்பட்ட புத்தகங்களையும் தேடித் தேடி படித்தார் லக்ஷ்மண். டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்ற ஆளுமைகளின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பில் படித்தவருக்கு எழுதும் ஆசை நெஞ்சில் கனல, உடனே பேனா எடுத்து ‘Ramdas’, ‘Nayi Duniya Ki Nayi Kahani’ ஆகிய நூல்களை விறுவிறுவென எழுதினார்.

ஆனால், எப்படி பதிப்பிப்பது என்று புரியவில்லை. பதிப்பாளர்களிடம் சென்றபோது யாருமே அவரைப் பொருட்படுத்தவில்லை. மனம் தளராமல் ‘பாரதீய சாகித்திய கலா பிரகாஷன்’ என சொந்த பதிப்பகத்தைத் தொடங்கி புத்தகத்தை அச்சிட்டார். பள்ளிகள், கல்லூரிகள் என அலைந்து திரிந்து புத்தகங்களை விற்றார். 2003ம் ஆண்டு ‘ராம்தாஸ்’ நாவலுக்காக ‘இந்திரபிரஸ்த சாகித்திய பாரதி’ விருதை வென்றுள்ளார். 1981ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியே இவரைச் சந்தித்து வாழ்த்தியது இவர் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்.

இதுவரை மொத்தம் 25 நூல்களை எழுதியுள்ள லக்ஷ்மணுடைய படைப்புகள் மின்நூலாகவும் (e books) விற்பனைக்கு உள்ளன. ‘‘என் வாழ்க்கைக்குப் போதுமான அளவைக் கடந்து பணம் சம்பாதிப்பதில் எப்போதுமே ஆர்வம் இல்லை. புத்தகங்களை விரும்பாத பணக்காரராக வாழ்வதை விட, புத்தகங்களை விரும்பும் ஏழை எழுத்தாளராக இருப்பதில்தான் மகிழ்ச்சி...’’ என்று திட்டவட்டமாகப் பேசுகிறார் லக்‌ஷ்மண்ராவ்.

இந்தி பவன் பிளாட்ஃபார்மில் லக்ஷ்மணுக்கு வாசகர்கள் அதிகம். பல வருடங்களுக்கு முன் கைவிட்ட கல்வியைத் தொடர்ந்து, 63 வயதில் இந்தியில் முதுகலை முடித்துள்ளார். இப்போது தனது டீக்கடையில் உள்ள நூல்கள் விற்பனை மூலமும், இணையதளங்களில் விற்பனையாகும் நூல்கள் மூலமாகவும் உபரியாகப் பணம் கிடைக்கிறது. அடுத்து என்ன? ‘Patiyon Ki Sarsarahat’ என்ற புத்தகம் ரிலீஸுக்கு ரெடி.

லக்ஷ்மணின் நூலுக்கு உள்ளூரில் பதிப்பிக்க சிக்கல் இருந்தாலும் வெளிநாட்டு வாசகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.‘‘உலகப் பல்கலைக் கழகங்கள் என்னுடைய வாழ்பனுபவங்களைப் பதிப்பிக்க அனுமதி கேட்டு ராயல்டியுடன் அணுகி வருகின்றன. விரைவில் வெளிநாட்டுக்காரர்கள் வாசிக்கும்படி என்னுடைய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் போகிறேன்!’’ என அசத்துகிறார் லக்ஷ்மண்ராவ்.