இரும்புப் பெண்ணின் காதல் கதை!



- ஜி.மகேஷ்

கொடைக்கானலிலிருந்து 13 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு மலைக் கிராமம்தான் பெருமாள் மலை. கடந்த சில மாதங்களாக இங்குதான் வசித்து வருகிறார் இந்திய ராணுவ கருப்புச் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து போராடிய இரும்புப் பெண் இரோம் ஷர்மிளா. அண்மையில் அவர் கொடைக்கானல் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.

மணிப்பூரிலிருக்கும் அவருக்கு ஏன் கொடைக்கானலில் திருமணம்? அது ஒரு சுவாரஸ்யமான கதை. சீனாவின் தூண்டுதலுடன் வடகிழக்கு மாநிலங்களில்  அவ்வப்போது போராட்டங்கள் வெடித்து வந்ததால் மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் 1958ம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர். இந்தச் சட்டத்தின் மூலம், சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாதுகாப்புப் படையினர் சோதனையில் ஈடுபட முடியும். சந்தேகப்படும் நபர்களையும் கைது செய்ய முடியும். அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது.

பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதால் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்துததான் தனது 28 வயதிலிருந்து 16 ஆண்டுக்காலம் இரோம் ஷர்மிளா தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். உணவு, தண்ணீர் குடிக்க மறுத்த அவரை, தற்கொலைக்கு முயன்றதாக அரசு கைது செய்தது.

2006ம் ஆண்டு டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்; பின், விடுவிக்கப்பட்டார். மணிப்பூர் திரும்பிய அவர் மீண்டும் கைதானார். உணவருந்தாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர்மீது தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இரோம் ஷர்மிளா கைவிடவில்லை.

மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலில் உள்ள ஜவகர்லால் நேரு மருத்துவமனையில் கைதியாக இருந்த அவருக்கு, வலுக்கட்டாயமாக மூச்சுக் குழாய் வழியாக உணவு செலுத்தப்பட்டுவந்தது. தொடர்ந்து, 16 ஆண்டுகளாகப் போராடி வரும் இரும்புப் பெண் என வர்ணிக்கப்பட்ட இரோம் ஷர்மிளா கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் “எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது.

எனவே அரசியலில் இணைந்து அதன்மூலமாக எனது போராட்டத்தைத் தொடருவேன். சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேச்சையாகப் போட்டியிடுவேன். இதில் வெற்றி பெற்று முதல்வரானால் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வேன்...’’ என்று அறிவித்தார். எந்த ஓர் அரசியல்கட்சியின் பின்னணியும் இல்லாமல் மிக நீண்ட போரட்டத்தை நடத்திய இந்த இரும்புப் பெண் அரசியலுக்கு வந்ததை உள்ளூர் அரசியல்வாதிகள் விரும்பவில்லை.

2017 தேர்தலில் பதவியிலிருந்த முதலமைச்சரை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டார். வெறும் 90 ஓட்டுகள் மட்டுமே பெற்று பரிதாபமாகத் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து மணிப்பூரை விட்டு வெளியேறி, தென்னிந்தியாவில் ஒரு மலைக்கிராமத்தில் அமைதியாக வாழ்வது என முடிவெடுத்தார். கொடைக்கானல் வந்து சேர்ந்தார். இந்த முடிவுக்கு மற்றொரு காரணம், காதல்!

உலகின் பல பாகங்களில் இருந்தும் அவரது தொடர் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கொடுத்த பலரில் ஒருவர்தான் டெஸ்மோன்ட் கூட்டின்ஹோ. கோவாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், ஓர் எழுத்தாளர். பிரிட்டிஷ் குடிமகன். தாய்லாந்தில் பணிபுரியும் மனித உரிமை ஆர்வலர். சந்தித்துக் கொள்ளாமலேயே கடிதங்களில் தொடங்கிய நட்பு, காதலாக மலர்ந்தபோது இரோம் தனது போராட்டத்தின் வெற்றிக்குப் பின்னரே திருமணம் என அறிவித்தார்.

இதனை ஏற்று டெஸ்மோன்ட் கடந்த சில ஆண்டுகளாக இரோம் ஷர்மிளாவுக்கு உதவியாக அவருடன் இருந்தார். கொடைக்கானலுக்கு வந்த பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். பதிவுத் திருமண விதிகளின் படி 30 நாட்கள் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அப்படி இவர்கள் பதிவாளரிடம் விண்ணப்பம் செய்து காத்திருந்தார்கள். இருவரும் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் விதிகளின்படி எவருக்காவது ஆட்சேபணை இருந்தால் அறிவிக்க வேண்டும் என்ற நோட்டீஸ் தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

இது நடைமுறைச் சம்பிரதாயம். யார் எதிர்க்கப் போகிறார்கள் என்று இருவரும் நினைத்தனர். ஆனால், எதிர்பாராத இடத்திலிருந்து பிரச்னை எழுந்தது. மகேந்திரன் என்பவர், ‘இவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால் மலைவாழ் மக்களின் அமைதி கெடும்; சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே, திருமணத்தை நடத்த அனுமதிக்கக் கூடாது’ என வழக்குத் தொடர்ந்தார். இதற்குச் சில அரசியல்வாதிகளின் ஆசியும் இருந்தது. 

போராட்டங்களையே வாழ்க்கையாக ஏற்ற இரோம் இதுபற்றி கவலைப்படவில்லை. பத்திரிகையாளர்களையும் சந்திக்கவில்லை. ஒரு மாத சஸ்பென்ஸுக்குப் பின்னர், குறிக்கப்பட்ட திருமண நாளுக்கு ஒருவாரம் முன்னதாக, மனுதாரர் எழுப்பியிருக்கும் ஆட்சேபணைகளை ஏற்க சட்டவிதி களில் இடமில்லை என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, முடிவு செய்யப்பட்ட நாளான ஆக. 17ல் திருமணம் பதிவு செய்யப்பட்டது. உண்மையிலேயே மிக மிக எளிமையான திருமணம். விருந்தினர் யாரும் அழைக்கப்படவில்லை.

உறவினர்களும் உடன் இல்லை. பதிவு ஆவணங்களில் கையெழுத்திட்டவுடன் திருமணம் முடிந்தது. பாராட்டுரை, தேநீர் விருந்து எதுவும் கிடையாது. ஏன், ஒரு சாக்லேட் கூட விநியோகிக்கப்படவில்லை. பேன்ட், குர்தா, கழுத்தில் ஓர் அங்கி, டிரிம் செய்யப்படாத தாடி முகத்துடன் மாப்பிள்ளையும்;
பாரம்பரிய மணிப்பூர் ஆடையுடன் மணப்பெண்கள் கையில் அணியும் ஓர் அகலமான உலோக வளையுடன் மணமகளும், தாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து பதிவாளர் அலுவலகத்துக்கு நடந்தே வந்தார்கள்.

மணமகன் தன் அடையாளச் சான்றான பாஸ்போர்ட்டை மறந்துவிட்டார். அதைப்போய் எடுத்துவரும் வரை ஷர்மிளா பதிவாளர் அலுவலகத்தில் தனியே காத்திருந்தார். மாலை மாற்றி இருவரும் கையெழுத்திட்டதும் திருமணம் முடிந்தது. அணிந்த மாலையுடன் கைகளைக் கோர்த்துக் கொண்டு தம்பதியினர் நடந்தே சென்றதை சாலையில் இருந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.