இப்ப நான் டைரக்டரும் கூட - ஏ.ஆர்.ரஹ்மான் open talk- மை.பாரதிராஜா

தன் திரையுலகப் பயணத்தில் சில்வர் ஜூப்ளியைக் கொண்டாடுகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இசையைத் தாண்டி, இப்போது படத் தயாரிப்பாளர், ஸ்கிரிப்ட் ரைட்டர், இயக்குநர் என அடுத்தடுத்த பரிமாணங்களில் மிளிர ரெடியாகிவிட்டார் ஆஸ்கர் நாயகன். அமெரிக்காவில் பதினெட்டு நகரங்களில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணத்தை இப்போது ‘One Heart’ என்ற பெயரில் படமாகக் கொண்டு வந்திருக்கிறார்.

கோடம்பாக்கத்தில் உள்ள அவரது ஸ்டூடியோவிற்கு சென்றால், இரவு பதினொரு மணி சந்திப்பிலும் படு ஃப்ரெஷ்ஷாக புன்னகைக்கிறார். ‘‘சினிமாவிற்கு வந்து 25 வருஷங்களாச்சு. இந்த டிராவல் சந்தோஷமா இருக்கு. ‘ஒன் ஹார்ட்’, ‘லீ மஸ்க்’ ‘99 சாங்ஸ்’ மாதிரி நிறைய புது முயற்சிகள் பண்ணிட்டே இருக்கணும். எல்லாமே இசை சார்ந்து இருக்கணும். இப்ப ஜனங்க மனசுல ரஹ்மானா, டாப் த்ரீ-க்குள்ள வந்துடறேன்.

ஆனா, மூவி மேக்கிங்ல எப்பவுமே இயக்குநர்களுக்குத்தான் முதலிடம். அடுத்து நடிகர், நடிகை, தயாரிப்பாளர்னு லிஸ்ட் நீண்டு, இசையமைப்பாளருக்கு ஆறாவது இடம் போயிடுது. அதே மாதிரி மக்களும் என்னோட சில பாடல்கள் கேட்டுட்டு, ‘ரஹ்மான் ஏன் இப்படி பண்ணுனாரு?’ என்று கமென்ட் பண்றதை கேட்க முடியுது. இயக்குநர்கள் கேட்டாங்க. நான் பண்ணிக் கொடுத்தேன்.

இது மாதிரியான தர்மசங்கடங்களை தவிர்க்கணும்னா நாமே சொந்தமா படங்கள் தயாரிக்கணும். இந்த ஆசை இருக்கு. குறிப்பா மியூசிகல் ஸ்கிரிப்ட் பண்ணணும். பட், டைரக்‌ஷன் பண்ற ஆசை இல்ல. அதுல கால் வச்சா படத்தை முடிச்சுக் கொண்டு வர குறைஞ்சது ரெண்டு வருஷமாவது ஆகிடும். ஸோ, அந்தப் பக்கம் போறது கொஞ்சம் ரிஸ்க். ‘அப்புறம் ஏன் ‘லீ மஸ்க்’ படத்தை டைரக்ட் பண்றீங்க?’னு கேட்டுடாதீங்க.

அது ஒரு ஆக்சிடெண்ட். ‘லீ மஸ்க்’கை இயக்க முதல்ல ஒப்புக்கொண்ட இயக்குநருக்கு வேற இடத்துல பணி வந்திருக்குனு இதை அப்படியே விட்டுட்டு போயிட்டார். இது ஒரு வெர்ச்சுவல் ரியாலிட்டி மூவி. புது டெக்னாலஜி. இன்னொரு டைரக்டரை தேடிப்பிடிச்சு, அவருக்கு இந்த டெக்னாலஜி மேக்கிங் கத்துக் கொடுத்து படத்தை முடிக்கணும்னா டைம் ரொம்ப ஆகும்.

அதனாலதான் நானே டைரக்ட் பண்ண ஆரம்பிச்சேன். நிச்சயமா ‘லீ மஸ்க்’ நமக்கெல்லாம் புது அனுபவத்தைக் கொடுக்கும். நார்மல் தியேட்டர்ல அதை ரிலீஸ் பண்ண முடியாது. ஏன்னா, அதுக்கான சீட் அரேன்ஜ்மென்ட்ஸ், எக்யூப்மென்ட் எல்லாமே வித்தியாசமா இருக்கணும். ஒரே வார்த்தைல சொல்லணும்னா, இது வேற லெவல் முயற்சி. 

‘ஒன் ஹார்ட்’ படம் என்ன கான்செப்ட்?
சின்ன வயசுலேந்து மியூசிகல் கன்சர்ட் தொடர்பான வெஸ்டர்ன் டாகுமென்ட்ரீஸை தொடர்ந்து பார்த்துட்டு வரேன். அதுல ‘டாமி’னு ஒரு படம். இன்னும் நினைவுல இருக்கு. மைக்கேல் ஜாக்சனோட ‘திஸ் இஸ் இட்’ கூட அப்படியான ஒரு படம்தான். பொதுவா மியூசிக் ஜர்னி படங்கள்ல லைவ் சவுண்ட்ஸ், ஃபார் கே குவாலிட்டியோட அசத்தும். அதே தரத்தோடு நாமும் முயற்சி செய்யலாமேனு ‘ஒன் ஹார்ட்’டை உருவாக்கி இருக்கோம்.

அமெரிக்க  டூர்ல பார்த்த விஷயங்கள் சகலரது எனர்ஜியையும் பிரமிக்க வைச்சது. இசை ரசிகர்களின் அன்பும், இளைஞர்களின் ஈடுபாடும் இன்னும் அஞ்சு வருஷங்கள் கழிச்சு எப்படி இருக்கும்னு யோசிச்சேன். அப்ப ரசனை மாறியிருக்கலாம். வேற வேற ரசனைகள் பூத்திருக்கலாம். திரும்பி வராத இந்த கணத்தை ஆவணப்படுத்தணும்னு தோணுச்சு. அமெரிக்காவில் 18 நகரங்கள்ல கன்சர்ட் நடந்தது.

பத்தாவது கான்சர்ட் நடக்கும் போதே என் ஷோ டைரக்டர்கிட்ட ‘கேமராக்கள் அரேன்ஜ் பண்ணிடுங்க. இதை டாகுமென்ட்ரியா எடுக்கலாம்’னு சொன்னேன். அப்ப நாங்க டெக்சாஸ்ல இருந்தோம். ‘ஒன் ஹார்ட்’ பயணம் அங்கிருந்தே தொடங்கிடுச்சு. அந்த ஷோ தயாரிப்பாளர் கரன்குரோ எனக்கு ஒரு ஐடியா சொன்னார். ‘நலிந்த இசைக்கலைஞர்கள் பவுண்டேஷனுக்கு உதவணும்னு சொல்லியிருந்தீங்களே... இதை டாகுமென்ட்ரியா பண்ணாம படமா எடுத்தா, பவுண்டேஷனுக்கு உதவ முடியுமே’னு சொன்னார்.

எனக்கும் அது சரியா பட்டுச்சு. கன்சர்ட் எல்லாம் மொத்தமா ஷூட் பண்ணி முடிச்சுட்டு, எடிட் ஷூட்ல பார்த்தா, அது மூணு மணிநேர படமா விரிஞ்சது. அதுல சில இடங்கள்ல எனக்கு திருப்தியில்லை. மறுபடியும் அந்த இடங்களுக்குப் போய் ரீ ஷூட் பண்ணினோம். சமீபத்துல பர்சனல் ட்ரிப்பா செஷல்ஸ் தீவுகளுக்கு போயிருந்தேன். அந்த ஃபுட்டேஜையும் படத்துல சேர்த்திருக்கோம். இப்ப ‘ஒன் ஹார்ட்’ அழகான இசைப் படமா வந்திருக்கு. மொத்தம் பதினாறு பாடல்கள்.

நம்ம சிங்கர்ஸும் பாடியிருக்காங்க. சில பாடல்கள் முழுசா இருக்காது. ஆனா, அந்த பாட்டோட இன்ட்ரஸ்ட்டிங் போர்ஷன்ஸ் கண்டிப்பா இருக்கும். நீங்க ஒரு மியூசிக் கன்சர்ட் ஷோவுக்கு வந்தா, உங்களுக்கு முன்னாடி நடக்கறதை மட்டும் ஒரே ஆங்கிள்லதான் பார்ப்பீங்க. ஆனா, இந்தப்படம் concertக்கு பின்னாடி இருக்கற behind the scenes-ஐ, நீங்களே கூட இருந்து கவனிக்கிற ஒரு ஃபீலை கொடுக்கும்.

‘சங்கமித்ரா’ அறிமுக விழா கேன்ஸ்ல நடந்தது...
‘சங்கமித்ரா’ இன்ட்ரஸ்ட்டிங் சப்ஜெக்ட். ஒரு போர்ஷன் ஸ்கிரிப்ட்தான் கேட்டிருக்கேன். நிச்சயம் அந்தப் படம் தமிழ் சினிமாவை வேற லெவலுக்கு கொண்டு போகும்.

இப்ப அதிகளவு இளம் இசையமைப்பாளர்கள் வந்திருக்காங்க.  எல்லாருக்குமே உங்க இடத்து மேல ஒரு கண் இருக்கு. இதை கவனிக்கறீங்களா?
இது நல்ல விஷயம்தான். தரம் குறையாம, இசைக்கு மேலும் கான்ட்ரிபியூட் பண்றவங்கதான் அதிகம் தேவைப்படறாங்க. புதுசா வர்றவங்ககிட்ட ஆளுமையும், தேடல்களும் ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னு எதிர்பார்க்கறேன்.

நாங்க ரிலாக்ஸ் பண்ணிக்க மியூசிக் கேட்கறோம். உங்க ரிலாக்ஸ் என்ன?
முன்னாடி அப்பப்ப ட்ரைவ் போவேன். கார்ல ஸ்பீடா போகப் பிடிக்கும். இப்ப அதுக்கு டைம் இல்ல. புரொடக்‌ஷன், கன்சர்ட், ஸ்கிரிப்ட் ஒர்க்னு மும்முரமா இருக்கேன். ஒரு வகைல இதுவும் ரிலாக்ஸ் பண்ற மாதிரிதான்.

அடிக்கடி ஃபாரீன் ட்ரிப், ஹாலிவுட் ஒர்க், பாலிவுட் படங்கள்னு பறந்துகிட்டே இருக்கீங்க. மாறிக்கிட்டே இருக்கற நம்ம தமிழ் ட்ரெண்டை அப்டேட் செய்துக்கறீங்களா?
அப்படி செய்யலைனா இந்தத் துறைல இருக்க முடியாதே! பொதுவா மக்களுக்கு மெலடி ரொம்ப பிடிக்கும். இது எவர் க்ரீன். ஒரு நல்ல மெலடி சிறந்த பாடல் வரிகளோட வந்தா... எந்த ட்ரெண்டா இருந்தாலும் அது நிற்கும்!