கவிதை வனம்



கைவிடுதல்

உன்னைக் கைவிட வேண்டுமென்றால்
உன்னைப் பற்றிய இல்லாத ஓர் அவதூறை
நம்பியாக வேண்டும்
உன் தரப்பு நியாயத்தை சகட்டுமேனிக்கு
ஏளனப்படுத்த வேண்டும்
இன்னும் கீழ்த்தரமாய் இறங்கி
சில அத்தியாயங்கள் படைக்க வேண்டும்
என் மீதான நம்பகத்தன்மையை
உன்னிடமிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்
உன்னைக் கைவிடுதல் என்பது
அத்தனை எளிதான ஒன்றல்ல
ஆயினும் நான் உன்னிடமும்
நீ என்னிடமும்
மாயையைப் போலாகும் வரை விடுவதாயில்லை
கைவிடுதல் எனும் ஓர் அத்தியாயத்தை.
 

- கோ.பகவான்

வேண்டும்

இன்று இந்தியா கிரிக்கெட்
விளையாடுவதால்
மழை வரக்கூடாது என
வேண்டிக்கொண்டிருக்கிறான்.
பட்டணத்தில் படிக்கும்
தன் மகனின் பீஸ் கட்டவாவது
மழை வராதா?
நட்டு வச்ச மிளகாய் செடி காய்கிறதென
வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் விவசாயி.

- எஸ்.சேக் சிக்கந்தர்