தலைக்கு வந்தது..!- ரோனி

கிரண்பேடி காவல்துறையில் பணிபுரிந்தது முதலே அதிரடிக்கு புகழ்பெற்றவர். அப்படிப்பட்டவரை புதுச்சேரி ஆளுநராக்கி உட்கார வைத்தால் அக்கடா என அமர்வாரா? ஒருசில மாஸ் அட்டெம்ப்டுகளை முயற்சித்தார். ஆனால், அவரது சின்சியர் முயற்சியை இடியாப்ப சிக்கலாக்கி விட்டது ஹெல்மெட். அண்மையில் கிரண்பேடி, தன் அலுவலக ஊழியரோடு ஸ்கூட்டரில் நகர்வலம் வந்து பலருக்கும் பீதியைக் கிளப்பினார்.

அந்த போட்டோவைப் போட்டு நகரம் ‘பாதுகாப்பாக இருக்கிறது. ஏதாவது பிரச்னை என்றால் தகவல் கொடுங்கள்’ என ட்விட் செய்தார். அதுவே வினையாகிவிட்டது. ஏனெனில், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிய அவர் மறந்துவிட்டார். விடுவார்களா நெட்டிசன்கள்? ‘‘நீங்கள் செய்வது நல்ல விஷயம்தான்.

ஆனால், ஹெல்மெட் அணிந்து வண்டியில் செல்வதுதானே கவர்னருக்கு அழகு? சட்டம் எல்லாம் மக்களுக்குத்தானா?!’’ என தாளிக்க, கவர்னர் கிரண்பேடி தடுமாறிவிட்டார். பிறகு, ‘‘பெண்கள் வண்டி ஓட்டுவதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளவே ஹெல்மெட் இல்லாத ட்ரிப்...’’ என சமாளித்தார்.