ஐயமிட்டு உண்!பொது இடத்திலுள்ள ஃபிரிட்ஜ் அது. காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணிவரை திறந்திருக்கும். உங்களுக்குத் தேவையானதை அதிலிருந்து எடுத்துச் சாப்பிடலாம் என்றால் எப்படியிருக்கும்? இந்த சூப்பர் ஐடியாவை சென்னையில் சாதித்திருக்கிறார்கள். பெசன்ட்நகரின் டென்னிஸ் கிளப்புக்கு வெளியே உள்ளது இந்த ஃபிரிட்ஜ். உணவு மட்டுமல்ல, பயன்படுத்தும் நிலையிலுள்ள உடைகளும் கூட இதில் வைக்கலாம்.

‘ஐயமிட்டு உண்’ ஃபிரிட்ஜ் ஐடியாவின் பிரம்மா, பப்ளிக் பவுண்டேஷனின் தலைவரான டாக்டர் ஐஸா ஜாஸ்மின். ‘‘வீட்டுல தேவைக்குப்போக மிச்சமிருப்பதை வெளிய இருக்கிற வயசான அம்மாவுக்கு கொடுப்போம். இதுபோல நிறைய பேருக்கு கொடுக்க முடிஞ்சா நல்லா இருக்குமேனு நினைச்சோம். அதுதான் ஐயமிட்டு உண் ஃப்ரிட்ஜ்...’’ என புன்னகைக்கிறார். கொச்சியில் தொடங்கிய இம்முயற்சி பெங்களூரு, குர்கான், மும்பை, ஜெய்ப்பூர் என ஃபேமஸாகி வருகிறது.