மாமனார் மெச்சிய மருமகன்!- நா.கதிர்வேலன்

‘‘இன்னிக்கு மதியம் ஒரு  மணிக்கு வர்றீங்களா... ரெண்டு மணி நேரம் பேசலாம்...’’ என்றார் விஷ்ணு விஷால். தயாரிப்பாளர்களின் மனதில் இருக்கிற நம்பிக்கை நட்சத்திரம். ‘கதாநாயகன்’ ரெடியாகி திரையைத் தொடக் காத்திருக்கிறது. ‘‘அனுபவம் கிடைச்சிருக்கு. யோசிக்கிற யுக்தி கூடி வந்திருக்கு. ரசிகர்களுக்கான அம்சங்கள் என்னென்னன்னு ஒரு பார்வை பிடிபட்டிருக்கு.

போராடிப் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதின் காரணமாகவே இந்தக் ‘கதாநாயகன்’ படத்தை எடுத்திருக்கோம்...’’ தெளிவாகப் பேசுகிறார் விஷ்ணு விஷால். ‘‘ஆரம்பத்தில் சினிமா எண்ணத்திலே இல்லை. கிரிக்கெட்தான் உயிர். பல கட்டங்களாக கிரிக்கெட்டில் முன்னேறியிருந்தேன். காலில் பட்ட காயம் அந்தக் கனவிலிருந்து தள்ளி வைத்தது.

அப்புறம்தான் சினிமாவின் மீது நாட்டம். எத்தனையோ பேரை சந்திச்சிருக்கேன். சிலர் ஸ்கோப் கொடுத்திட்டு, கை நழுவிப் போனதெல்லாம் நடந்திருக்கு. அப்புறமா எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு கிடைச்சதுதான் ‘வெண்ணிலா கபடிக்குழு.’ நான் அதுல பொருந்தி வருவேன்னு சுசீந்திரன் சார் நினைக்கலை. நான் ஸ்போர்ட்ஸ்மேன். அதனால் அந்த கபடி படத்தில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

சுசீந்தரன்கிட்ட போயி ‘கதை நல்லாயிருக்கு சார். கண்டிப்பா சக்ஸஸ் ஆகும்’னு சொல்லிட்டு வேலைக்குச் சேர்ந்துட்டேன். எம்பிஏ படிச்சது ரொம்ப நல்லதாகப் போயிருந்தது. கடைசியா ‘வெண்ணிலா கபடிக்குழு’ டீமிலிருந்து அழைப்பு வர, நான் ரொம்பவும் இஷ்டப்பட்டு நடிச்ச படம். அந்த வெற்றியை தக்க வைக்க முடியல. ‘பலே பாண்டியா’ அப்படி தப்பா செய்த படம். உள்ளே இருந்த அரசியலில், நல்ல இயக்குநர் இருந்தும் ‘துரோகி’ சரியாகப் போகலை. ஒரு கட்டத்தில் என்ன செய்றதுன்னு தெரியாம திகைச்சு நின்னேன்.

நமக்கு திறமை இல்லையோன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன். அப்படிப்பட்ட இடம் வந்தபிறகுதான் நின்னு நிதானிச்சு, முதல் தடவையிலேயே யோசிக்காமல் ஓகே சொல்ல வைக்கிற படங்களை தேர்ந்தெடுத்தேன். அப்புறம்தான் ‘குள்ளநரிக்கூட்டம்,’ ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை,’ ‘நீர்ப்பறவை,’ ‘ஜீவா,’ ‘மாவீரன் கிட்டு’, ‘இடம் பொருள் ஏவல்’னு செய்தது. அதிலும் சில படங்கள் மழை, வர்தா புயல்னு சிரமம் கொடுத்தது. இதற்குப் பிறகு என்னை ஒரு கட்டத்திற்கு வந்து நிலை நிறுத்திக்க வேண்டிய அவசியம் வந்தது. அதற்கான முயற்சியே இந்த ‘கதாநாயகன்’’’ என புன்னகைக்கிறார் விஷ்ணு விஷால்.

இதுவும் சொந்தத் தயாரிப்பு...
என்கிட்டே ரொம்பப் பணமில்லை. கொஞ்சம் சேமிச்ச பணத்தையும், நடிச்சு வந்த பணத்தையும் செய்கிற முதலீடுதான். பணம் கைவிட்டுப் போகாமல் இருந்தால் அடுத்தடுத்து படம் தயாரிக்கலாம். நிறைய புதியவர்களுக்கு இடம் தரலாம். சினிமாவைத் தெரிஞ்சுக்கிட்டது, புரிஞ்சுகிட்டது எல்லாமே இதற்குள்ளே வந்து சேர்ந்தபிறகுதான். என்னுடைய சில படங்கள் மக்களுக்கு சேராமல் போயிருக்கலாம்.

அது தோற்றுப் போனதா அர்த்தம் இல்லை. படத்திற்காக செலவழித்த நேரங்கள் அர்த்தமுள்ளதாக ஆகியிருக்கு. அதற்கான அனுபவங்கள், கிடைச்ச அடி, பிறகு கிடைத்த பாராட்டுக்கள் எல்லாமே என்கிட்டே இருக்கு. எனக்கு டைரக்டர் முருகானந்தம் வொர்க் மேல எப்பவும் ஒரு ஈடுபாடு.

ஒரு படத்தை சொந்தமாக தாங்கிப் போகக்கூட அவரால் முடியும். இந்தக் கதையைச் சொன்னபோது செய்ய முடியுமான்னு தயக்கம் இருந்தது. அதை அழகாக உடைச்சு, என்னை வெளியே கொண்டு வந்தார். இப்ப படமாக பார்க்கும்போது அவரோட இயல்பான இயக்குதலும், வித்தியாசமான ட்ரீட்மென்ட்டும் பார்க்க நல்லாயிருக்கு.

எப்படியிருக்கும் ‘கதாநாயகன்’?
நமக்கு இருக்கும் கஷ்டம், துக்கம், வறுமை, ஏழ்மை, சோகம்னு எதுவும் எனக்குப் பிடிக்கலை. ஆனால், அத்தனைக்கும் நடுவில் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கு. அது எனக்குப் பிடிச்சிருக்கு. அப்படி எல்லா துயரத்தையும் மறந்து சிரிச்சு, சந்தோஷமாக பொழுது போக்க ஒரு படம்தான் இது. உலகத்திலேயே யாரும் காணாத கதைன்னு சொல்லமாட்டேன்.

ஆனால், டைரக்டர் முருகானந்தம் ட்ரீட்மென்ட் அப்படி புதுசா இருக்கிற மாதிரி பார்க்க வைக்கும். இனிமேலும் சினிமாவில் மெசேஜ் சொன்னா தாங்குமான்னு தெரியலை. தினமும் டன் டன்னா புத்திமதிகளும், நாட்டுக்கே தேவையான மெசேஜ் அத்தனையும் செல்போனில் ஃபார்வேர்டு ஆகி வந்து கொட்டுது. அது முழு வாழ்க்கைக்கு போதுமே!

அதனால் கொடுத்த காசுக்கு சந்தோஷமாக சிரிக்க வைச்சு, கொண்டாட்டமா மக்களை அனுப்பி வைப்போம்னு முடிவு பண்ணிட்டோம். ஹீரோ ரெவின்யூ இன்ஸ்பெக்டர். காதலிக்கிறார். மாமனாருக்கு மருமகன் ஹீரோ மாதிரி தவறுகளை தட்டிக் கேட்கணும்னு ஆசை. மாமனாராக நம்ம சொந்த மாமனார் நடராஜ் நடிக்கிறார். நானோ, தான் உண்டு, தன் வேலையுண்டுன்னு இருக்குற ஆள்.

அப்புறம் நான் எப்படி அவருக்குப் பிடிச்ச மாதிரி மாறுகிறேன் என்பதுதான் கதை. கேத்தரின் தெரசா ரொம்ப டாமினேட் பண்ற ரோல். எங்க ஆட்டம், பாட்டம் அருமையா வந்திருக்கு. மக்களுக்கு இப்ப என்ன பிடிக்குதுன்னு பார்த்துப் பார்த்து செஞ்ச படம். நம்ம முந்தின படத்தில்தான் நண்பர் சூரி புஷ்பா புருஷனா புரமோஷன் ஆனார். இப்ப ரெண்டு பேரும் திட்டம்போட்டு சீனுக்கு சீன் சிரிக்க வைக்க களமிறங்கியிருக்கோம்.

என்னங்க... விஜய் சேதுபதி நடிச்சிருக்கிறாரே..?
அவர் என்னோட நண்பர். ‘வெண்ணிலா கபடிக்குழு,’ ‘பலே பாண்டியா,’ ‘இடம் பொருள் ஏவல்’னு சேர்ந்து நடிச்சிருக்கோம். அவருக்கு ஓர் இடம் இந்தப் படத்தில் இருக்கு. அதி முக்கியமான சீன். சாகறேன்னு சொல்லிட்டு சிரிக்கணும் ஒரு ஹீரோ. இந்த மாதிரி ஒரு சீனை இங்கே இப்போதைக்கு ஒரே ஒருத்தர்தான் பண்ண முடியும். அது அவரைத் தவிர வேறு யாருமில்லை.

சேதுவை அலைபேசியில் கூப்பிட்டேன். விபரம் சொன்னால் ‘தலைவா, நிறையப்பேர் கேட்கிறாங்க. ப்ளீஸ் சாரி. தலைவா’னு சொன்னார். ‘கதையை கேட்டுட்டு அப்படிச் சொல்லுங்க போதும்’னு சொல்லி டைரக்டரை அனுப்பினேன். ஷூட்டிங்க்கு வந்துட்டார். ‘நீங்களே ஒண்ணு ஸ்பெஷலாக செய்வீங்களே, அப்படி பண்ணுங்க பிரதர்’னு சொன்னேன். அவரது ஸ்டைலுக்கு பண்ணினார். அதுதான் அழகு. பின்னிட்டார்.

இங்கே எல்லோரும் என் நண்பர்கள். விஷால் முதற்கொண்டு உதயநிதி வரைக்கும் எனக்கு உதவியிருக்காங்க. அந்த வகையில் எல்லோருடைய அன்பினாலும் இந்த ‘கதாநாயகன்’ எல்லோருக்கும் பிடித்தமானவனாக மாறியிருக்கான். இந்த இடம்தான் நான் எதிர்பார்த்துக் காத்திருந்த இடம். இந்தப் படம் வெற்றி அடையும்போது அதை என் நம்பிக்கைக்கு கிடைத்த பரிசா கருதுவேன்.