கன்னிமாரா நூலகம்- பேராச்சி கண்ணன்

‘‘நம் மாணவர்கள் இலக்கியத்திலோ, கலை, அறிவியலிலோ உயர்கல்வி படிக்க முன்வருவதில்லை. காரணம், அவர்களிடம் தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கான வசதிகள் இல்லை. இந்த இலவச பொது நூலகத்தில் இலக்கியம் மற்றும் அறிவியல் தவிர்த்து, கிடைக்கப் பெறும் பல்வேறு வகையான புத்தகங்கள் அவர்களுக்கு நிச்சயம் உதவும்...’’  1890ம் வருடம் மெட்ராஸ் கவர்னராக இருந்த லார்டு கன்னிமாரா பொது நூலகத்துக்கு அடிக்கல் நாட்டி ஆற்றிய உரையின் சாராம்சம் இது.

ஆனால், 1896ல் இந்த நூலகம் திறக்கப்பட்ட போது அவர் லண்டன் திரும்பிவிட்டார். இருந்தும், அன்றைய கவர்னராக இருந்த சர் ஆர்தர் எலி பங்க், கன்னிமாராவின் எண்ணத்திற்கு மரியாதை செய்து அவரது பெயரையே நூலகத்திற்குச் சூட்டினார். எழும்பூர் பாந்தியன் சாலையில் சுற்றிலுமிருக்கும் பழமை வாய்ந்த மியூசிய கட்டிடங்களின் நடுவில் புதுப்பொலிவில் வீற்றிருக்கிறது கன்னிமாரா. ‘‘சார்... பேக்கை இங்க வச்சிட்டு டோக்கன் வாங்கிக்குங்க. நோட்டுல சைன் போட்டுட்டு உள்ள போங்க...’’ என்கிறார் பொருட்கள் பாதுகாப்பு அறையில் இருந்த பெண்மணி.

அவரைக் கடந்து நேராக தலைமை நூலகர் மீனாட்சி சுந்தரத்தைச் சந்தித்தோம். ‘‘முதல்ல பழைய கட்டிடத்தைப் பார்த்திட்டு வாங்க. அங்குள்ள தகவல் ரொம்ப பயனுள்ளதா இருக்கும்...’’ மெல்லிய குரலில் சொன்னவர், ‘‘முதல் தளத்தின் கடைசிக்குப் போங்க. அங்க பழைய கட்டிடத்திற்கான பாதை இருக்கு...’’ என வழிகாட்டினார். முதல் தளம் முழுவதும் நாளிதழ் பிரிவு. தினசரிகள் தவிர்த்து வாரம், வாரம் இருமுறை, மாதம், மாதம் இருமுறை என இந்தியாவிலிருந்து வெளியாகும் பருவ இதழ்கள் வரிசை கட்டுகின்றன.

Way to old building என எழுதப்பட்டிருக்கும் கதவைத் திறந்து நடக்கிறோம். புது பில்டிங்கை பழைய பில்டிங்கோடு இணைத்திருக்கும் புதிய பாதை. கடந்ததும் லார்டு கன்னிமாராவின் கனவு லைப்ரரி. வட்டவடிவிலான வெளி அறை. அதில், வட்டமாக மேஜைகள். உள்ளிருக்கும் நூற்றொகை உதவியாளர் (bibliography assistant) சிங்காரவேலிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். ‘‘பாதுகாப்புக்காக இந்த பில்டிங்ல வாசகர்களை அனுமதிக்கிறதில்ல. வெளி அறையோடு சரி.

ஆனா, இங்குள்ள புத்தகங்கள் எல்லாத்தையும் அவங்க படிக்கலாம். என்ன புத்தகம்னு சொன்னா நாங்களே எடுத்து வந்து தருவோம்...’’ என்றபடியே நம்மை உள்ளே அழைத்துச் சென்றார். இரண்டு பக்கமும் மரத்திலான ேரக்குகள். தவிர, இரும்பு ரேக்குகளும். ஒவ்வொன்றும் தலைப்புகள் வாரியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ளன. நடுவில் மார்பு அளவிலான மகாத்மா காந்தியின் ெவண்கலச் சிலை வரவேற்கிறது. இதன் எதிரே நூல்களை என்ட்ரி போடும் மேஜையும், அதன் இருபுறமும் இரண்டு வழிப் பாதைகளும் உள்ளன.

வழிகள் சிறிய மரத்தடுப்புகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. ‘‘காந்தி சிலையை சென்னை அரசு கவின் கல்லூரி முதல்வரா இருந்த டி.பி.ராய் சவுத்ரி உருவாக்கியிருக்கிறார். இந்தச் சிலைக்கு எதிர்ல இருக்குற பாதைதான் ஆரம்பத்துல வழியா இருந்துச்சு. இந்த வழியில உள்ளே நுழைஞ்சு அந்த வழியா போகணும். யாராவது நூல்கள எடுத்துட்டு என்ட்ரி போடாம போனா அதுக்கு மேஜைக்கு அடியில ஒரு லாக் இருக்கு பாருங்க. அதை மிதிச்சதும் மரத்தடுப்பு லாக் ஆயிடும். அந்தக் கால செட்அப்...’’ என புன்னகைக்கிறார் சிங்காரவேல்.

ஸ்கூட்டரில் இருக்கும் பிரேக் போல இரும்பிலான பெரிய சைஸில் இருக்கிறது அந்த லாக். ‘‘இந்தக் கட்டிடத்திற்கு கன்னிமாரா அடிக்கல் நாட்டி யதும் இதுக்கான டிசைனை அன்னைக்கு ஆர்க்கிடெக்டா இருந்த இர்வின் பண்ணினார். இந்த இர்வினும் ‘ஜங்கிள் புக்’ எழுதின கிப்ளிங்கும் நண்பர்கள். அதனால, இந்த பில்டிங்கின் மர டிசைன்ல எல்லாம் ‘ஜங்கிள் புக்’ கதாபாத்திரங்களைச் செதுக்கியிருப்பார். கட்டிடம் சாரா செனிக் பாணில இருக்கும். நம்பெருமாள் செட்டி கட்டினார். இங்குள்ள சேர்கள் எல்லாம் ஒரிஜினல் தேக்கு. பக்கிங்ஹாம் பேலஸ்ல இருந்து வந்தது...’’ என்றவர், மாடிப் பக்கமாக அழைத்துச் சென்றார்.

‘‘இங்க லோக்சபா, ராஜ்யசபா, தமிழ்நாடு சட்டசபையில நடந்த விவாதங்கள் 1937ல் இருந்து இருக்கு. தவிர, 1871ல் இருந்து இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும், அரிதான புத்தகங்களும் வச்சிருக்கோம்...’’ என்றவர் வட்ட மேஜையிலிருந்த நூல்களைக் காண்பித்தார். அதில், 1689ல் சார்லஸ் என்பவரால் எழுதப்பட்ட ‘Voyage of Surat’, 1919ல் ரங்காச்சாரி எழுதிய ‘A Topographical list of inscriptions of the Madras Presidency’, வில்சன் எழுதிய ‘History of The Madras Army’ என பல அரிய நூல்களைப் பார்வையிட்டோம்.

அங்கிருந்து கீழிறங்கியதும் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்ட மிக மிக அரிய நூல்களான 1578ல் ஹென்றிக்ஸ் அடிகளார் எழுதி அச்சில் ஏறிய முதல் தமிழ் நூலான, ‘தம்பிரான் வணக்கம்’, 1560ல் வெளியான பைபிள் போன்றவை அழகூட்டின. ‘‘இந்தப் பொது நூலகச் சிந்தனை 1890ல் ரெடியாக இருந்தாலும் அதற்கு முன்பே மியூசியத்தின் உள்ளே ஒரு சின்ன லைப்ரரியை அமைத்திருந்தார் மியூசிய காப்பாள ராக இருந்த கேப்டன் ஜீன் மிட்செல். 1861ல் லண்டன் ஹெய்லிபெர்ரி யுனிவர்சிட்டியில இருந்து கொண்டு வந்த புத்தகங்களை வைச்சுத்தான் இந்த குட்டி நூலகம் உருவாச்சு.

அதன் தொடர்ச்சியா உருவானதுதான் கன்னிமாரா நூலகம்...’’ என்ற சிங்காரவேலிடம் விடைபெற்று புதிய கட்டிடத்தை நோக்கிப் பயணித்தோம். நமக்கு வழிகாட்ட இணைந்து கொண்டார் சிறுவர் நூலகத்தின் நூலகர் ஈஸ்வரன். ‘‘இங்குள்ள ஸ்கேனிங் ரூமை பார்த்திடலாம். முக்கியமான பகுதி...’’ என்றவர், நாளிதழ் பிரிவின் உள்ளே அடைக்கப்பட்ட ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். ‘‘2006ல் இந்த சர்வீஸ் தொடங்கப்பட்டுச்சு. ஆரம்பத்துல நாளிதழ்கள் எல்லாம் ஸ்கேன் பண்ணினோம்.

ஆனா, ஆன்லைன் வந்தபிறகு அதைவிட்டுட்டு பழைய நூல்கள், அரிதான புத்தகங்கள் எல்லாத்தையும் டிஜிட்டல் ஆக்கறோம். தேவைன்னா ஒரு பிரின்ட் எடுத்துடுவோம். பிறகு, ஒரிஜினல் புக் ரெஃபரென்ஸ் ஆகிடும். இப்ப, 1950க்குப் பிறகான நூல்களை ஸ்கேன் பண்ற வேலை நடக்குது...’’ என்றார் ஈஸ்வரன். அடுத்து மூன்றாவது தளம் நோக்கி நடந்தோம். இங்கு பள்ளி, கல்லூரிகளுக்கான பாடநூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

முன்வரிசையில் பெண்கள் அமர தனி இருக்கைகள். அதன்பின்னே நிறைய சேர்கள். சிலர் லேப்டாப்பில் மும்முரமாக இருந்தனர். ‘‘இங்க வர்ற எல்லாருமே ஸ்டூடண்ட்ஸ்தான். சிலர் லேப்டாப் கொண்டுவந்து பாடநூல்ல உள்ளதை குறிப்பு எடுத்திட்டுப் போவாங்க. சிலரால வீட்டுல படிக்க முடியாத சூழல் இருக்கும். அவங்க இங்கேயே படிச்சிட்டு போவாங்க...’’ என்கிறார் அங்கிருந்த பெண் நூலகர்.

இங்கிருந்து இறங்கும் வழியிலேயே ஆங்கில இலக்கியத்திற்கென்று தனிப்பிரிவு ஓர் அறையில் செயல்படுகிறது. இரண்டாவது தளம் இந்திய மொழிகளால் நிரம்பி வழிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி போன்ற மொழிகளில் வெளியான நாவல்கள், இலக்கியங்கள், கவிதைகள் எனப் பல்வேறு நூல்களை இங்கே வைத்துள்ளனர். ரெஃபரென்ஸ் பிரிவும் தனியாக இயங்குகிறது. தொடர்ந்து கீழ்த்தளத்திற்குள் நுழைந்தோம்.

இந்தத் தளம் பொதுவான ஸ்டாக் நூல்கள் தவிர்த்து சிவில் சர்வீஸ் படிப்பு மையமாகவும் விளங்குகிறது. ஐஏஎஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புத்தகங்கள் ரேக்குகளில் நிரம்பிக் கிடக்கின்றன. அதற்குத் தயாராகும் மாணவ - மாணவிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். வெளியே வந்ததும் வலது பக்கத்திலுள்ள சிறுவர் நூலகத்தைக் காட்டினார் ஈஸ்வரன். சிறிய அறைதான். அதற்குள் நிறைய சிறுவர் நூல்கள். இதனருகே கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட Kindle அறை. கிண்டிலில் படிப்பவர்களின் வசதிக்காக இந்த டிஜிட்டல் லைப்ரரி.

தவிர, உள்ளிருக்கும் இரண்டு கம்ப்யூட்டரில் ‘மேக்ஸ்டார்’, ‘டெல்நெட்’ போன்ற இணைய சேவைகளின் வழியாக 4 ஆயிரம் இதழ்கள் வரை படிக்க முடியுமாம். இதற்கடுத்த அறையில் ஜெராக்ஸ், இன்ட்ர்நெட் வசதியை வைத்துள்ளனர். நிறைவில், மீனாட்சிசுந்தரத்திடம் பேசினோம். ‘‘இந்தியாவுல பொது மக்கள் பயன்பாட்டுக்குனு ஆரம்பிச்ச முதல் பொது நூலகம் இதுதான். 1930ம் ஆண்டு வரை குறிப்புகள் மட்டும் எடுக்குற ரெஃபரென்ஸ் நூலகமாத்தான் கன்னிமாரா இருந்திருக்கு.

வாசகர்கள் வந்து சீட்டெழுதிக் கொடுத்து புத்தகத்தை வாங்கணும். அதை அங்கேயே படிச்சு முடிச்சு கொடுத்திட்டு போகணும். இப்படி இருந்தப்போ வீட்டுக்கு எடுத்திட்டு போகணும்னு கோரிக்கை எழுந்தது. அப்படி எடுத்திட்டு போறதா இருந்தா உறுப்பினராகணும். ஸோ, உறுப்பினர் கான்செப்ட் வருது. தொடர்ச்சியா, பொது மக்கள் எல்லாரையும் நூல்கள் இருக்குற பகுதிக்குள்ள அனுமதிக்கிற ஓபன் அக்சஸ் கான்செப்ட் அமலாச்சு.

அப்புறம் ஹோம் டெலிவரி. வர முடியாதவங்களுக்காக வீடுகளுக்கே போய் கொடுத்திருக்காங்க. இந்த இடத்துல இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடணும். பிரிட்டிஷ்காரர்கள்தான் மியூசியத்துடன் சேர்த்து லைப்ரரி பொறுப்பையும் பார்த்துக்கிட்டாங்க. முதல் முதலா ஜனார்த்தனம் நாயுடு என்கிற இந்தியர் ஒருவர் கன்னிமாரா நூலகத்தின் நூலகரா 1929ல் பொறுப்பேற்றார். அவருக்குப் பிறகுதான் பல்வேறு மாற்றங்கள் நடந்தது...’’ என்றார் மீனாட்சிசுந்தரம்.          

பொதுத்தகவல்கள்

* பழைய நூலகக் கட்டிட தளத்தின் மார்பிள்கள் அனைத்தும் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியே படகில் கொண்டு வரப்பட்டுள்ளன.
* அப்போது நூலகத்தை கட்ட ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் செலவாகியிருக்கிறது.
* ‘Castes and Tribes of Southern India’ நூல் எழுதிய எட்கர் தர்ஸ்டன்தான் முதல் முதன்மை நூலகர்.
* 1948ல் தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் கொண்டு வந்தார்கள். இந்தியாவிலேயே பொது நூலகச் சட்டம் முதன் முதலாகக் கொண்டு வந்தது தமிழகம்தான்.
* 1954ல் கன்னிமாரா தேசிய வைப்பு நூலகமாக மாறியது. மாநில மைய நூலகமாகவும் செயல்படுகிறது.
* இந்தியாவிலுள்ள நான்கு தேசிய வைப்பு நூலகங்களில் ஒன்று என்பதால் இந்தியாவில் வெளியிடப்படும் அனைத்து நூல்கள், தினசரிகள், வார, மாத பத்திரிகைகளின் ஒரு பிரதி இங்கு தவறாமல் வந்துவிடும்.
* 1955ல் ஐ.நா.வின் தேசிய வைப்பு நூலகமானது. அதாவது ஐ.நா. வெளியிடும் நூல்கள் எல்லாம் இங்கே இருக்கும்.
* நூல்கள் அதிகரிக்க 1973ல் புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
* 1984 முதல் மாணவர்களின் தேவை கருதி பாடநூல் பிரிவு தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டே ஜெராக்ஸ் வசதி.
* 1994ம் ஆண்டு சிவில் சர்வீஸ் படிப்பவர்களுக்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டது.
* ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 பேர் வருகிறார்கள். இதில் மூன்றில் ஒருவர் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளுக்குப் படிப்பவர்கள்.
* இப்போது, 8 லட்சத்து 21 ஆயிரத்து 784 நூல்கள் இங்கே இருக்கின்றன. 3500 பருவ இதழ்கள், 160 தினசரிகள் வாங்கப்படுகின்றன.
* சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அரிதான நூல்கள் மற்றும்
* பருவ இதழ்களை இங்கு வைத்திருக்கிறார்கள்.
* 2010ம் ஆண்டு ஆன்லைனில் நூல்களின் அட்டவணையை பார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
* தினமும் காலை 9 மணியிலிருந்து இரவு 7.30 வரையும், ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் மாலை 6 வரையும் நூலகம் செயல்படும்.
* சென்னையைச் சேர்ந்த, 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இங்கு உறுப்பினராகலாம். டெபாசிட் தொைக ரூ.300. வருட சந்தா ரூ.50. இதில், ஆறு நூல்கள் எடுக்க முடியும்.
* இப்போது, ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 549 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.