விவேகம்



- குங்குமம் விமர்சனக்குழு

இந்தியாவில் பூமிக்கு அடியில் வெடிப்பொருள்களை வெடிக்கச் செய்யும் பயங்கரவாதிகளின் முயற்சியைத் தடுப்பதே ‘விவேகம்!’ மிகவும் ரகசியமாக இங்கே நாச வேலைகளை செய்கிறது ஒரு கூட்டம். இதை சரியான நேரத்தில் தடுக்க வேண்டியிருக்கிறது. அஜித் களமிறங்குகிறார். அவரின் நண்பரான விவேக் ஓபராயின் தலைமையிலான கூட்டம் அஜித்தின் கதையை முடித்து ஆயுதங்களை விற்று லாபத்தைப் பங்கு போட நினைக்கிறது.

அதோடு பழியையும் அவர் மீது போடுகிறார்கள். பீனிக்ஸ் போல திரும்பி வரும் அஜித் எப்படி பழிவாங்குகிறார்... தன் மீதான பழியை எப்படி துடைக்கிறார் என்பதே கதை! இந்தத் தடவை அஜித்தை ஜேம்ஸ் பாண்ட் ஆக்கியிருக்கிறார் டைரக்டர் சிவா. பயங்கரவாத தடுப்பு அதிகாரியாக அஜித் பெர்ஃபெக்ட் ஃபிட். மிகவும் தீவிரமாக, கோபத்தை, குரோதத்தை உடல்மொழியில் வெளிப்படுத்தும்போதும்,

காதல் மனைவியிடம் கொஞ்சும் போதும் ஒரு சீஸன்டு பெர்ஃபார்மர் என்பதை நிலைநிறுத்துகிறார். அவரது ஸ்டைலும் சண்டைக்காட்சிகளில் காட்டும் வீரதீரமும் நிச்சயம் இதற்குமுன் பார்க்காதது. பதட்டமடைய வைக்கும் பனிக்காட்சிகளில் அவரது பத்திரம் திகிலூட்டுகிறது. ஹாலிவுட்டின் சண்டைகளுக்கு சற்றும் குறையாத மிடுக்கு, கோபமடைந்து பேசும் கம்பீரக் குரல் என அதிகாரியின் பாத்திரத்திற்கு நச்.

‘இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ ேதாத்துட்ட, நீ ேதாத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும், நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது’ என அஜித் பேசும் முழு பன்ச்சை விசில் சப்தம் கிழியும், கைதட்டல்ளுக்கு நடுவில் கேட்டவர்கள் சிலரே.

‘கண்டிப்பாக ஏ.கே. வருவார். எப்படியும் வருவார்’ என சொல்லிக் கொண்டே இருக்கும் காஜல் சுட வந்த எதிராளிகளிடம் கோபப்படுவதும், வந்துவிட்ட ஏ.கே.யின் இடம் அறிந்து நகர்ந்து எதிரிகள் சுருண்டு விழுவதை ரசிப்பதுமாக அலட்டிக் கொள்ளாமல் மனசை அள்ளுகிறார். கொஞ்ச நேரம் வந்தாலும் அக்‌ஷரா ஹாசன், ‘சரிகா கண்ணில்’ மிரட்டுகிறார். ஆரம்பத்திலிருந்து உயிர்விடுவது வரை அர்ப்பணிப்பு நடிப்பு.

விவேக் ஓபராய், நண்பனுக்கு துரோகம் செய்து புன்னகை பூத்தே வஞ்சகம் செய்கிறார். ஐரோப்பிய நாடுகளின் மூலை முடுக்கெல்லாம், பனிமலைகளின் முழுச்சரிவில் வெற்றியின் கேமரா ஓட்டமும் நடையும், பதட்டமுமாக விரைகிறது. அனிருத் பின்னணியில் மட்டும் ஸ்கோர் செய்கிறார். குறைகள்..? நிறைய. அத்தனை படை வீரர்கள் சூழ்ந்திருக்க பல ஆயிரம் அடி நீர்வீழ்ச்சியில் தப்பிப்பது ஓவர்.

ஆனால், யூகிக்க முடியாமல் வேகம் எடுப்பதால், ஆக்‌ஷன் மேஜிக்கில் எதையும் நினைவில் வைக்க முடியவில்லை. முழு நீள ஜேம்ஸ்பாண்டுக்கு முயற்சித்த வகையில் இது புதுவகை. என்ன... ஆளாளுக்கு பன்ச் பேசுகிறார்கள். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக இரண்டாம் பாதியில். என்றாலும் அதிரடி ஆக்‌ஷனில் ராக்கெட் வேகத்தில் சீறுகிறது ‘விவேகம்’.