கும்ப லக்னம் - சனி - புதன் சேர்க்கை தரும் யோகங்கள்கிரகங்கள் தரும் யோகங்கள் - 106

- ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

புத்தி வீர்யத்தையும், உடல் உழைப்பையும் சமமாக தரக் கூடிய அமைப்பாகும். எது வந்தாலும் தன் முறைக்கு காத்திருப்பார்கள். அவசரம் இருக்காது. ஸ்லோ அண்ட் ஸ்டெடி போன்ற வாக்கியத்தை அடிக்கடி உபயோகிப்பார்கள். ஆனாலும் திடீரென்று உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். ஏனெனில் சனிபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர் நீங்கள். மனதில் தோன்றும் சிறு சலனத்தைக்கூட புறத்தோற்றத்தில் வெளிப்படுத்துவார்கள்.

இவர்களின் திறமையை மற்றவர்கள் காசாக்கிக் கொள்வார்கள். தான் எங்கேயோ ஏமாற்றப்படுகிறோம் என்ற நினைப்பு இருந்து கொண்டேயிருக்கும். மேலே சொன்னவை பொதுவான பலன்கள். இனி, ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான சனியும் புதனும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? கும்ப லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும் புதனும் சேர்ந்திருந்தால் இவ்வுடலையும் மீறி ஒரு உன்னத சக்தி எல்லோரையும் ஊடுருவியிருப்பதை உணர்வார்கள்.

கிடைக்கும் பணத்தை பகிர்ந்தளிக்கும் பாதச் சனியைப் போன்றவர்கள் நீங்கள். காரணம், அறியாத வயதிலேயே அனுபவ ஞானத்தால் புடம்போடப் பட்டிருப்பார்கள். உணர்ச்சிகளைக் கூட தவணை முறையில் வெளியிடுவார்கள். தன்னை யாரும் மறந்து போய்க்கூட இவனுக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிவிடக்கூடாது என்று சிறுவயதிலிருந்தே எல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வார்கள்.

இரண்டாம் இடமான மீனத்தில் சனியும் புதனும் சேர்ந்திருந்தால் காசு, பணம் பண்ணுவது ஒரு காலகட்டம் வரை கடினமாகத் தெரியும். எப்பொழுதுமே ஒரு கௌரவமான தோற்றத்தோடு இருப்பார்கள். பணம் என்பது அச்சடிக்கப்பட்ட காகிதம் என்று தத்துவம் பேசுவார்கள். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று படிக்கும் வாய்ப்புகள் உருவாகி வரும். ஐ.டி. துறை இவர்களுக்கு மிகுந்த சிறப்பைத் தரும்.

எனவே, பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., பி.இ., ஐ.டி. என்று தேர்ந்தெடுக்கும்போது சிறப்பான வாழ்க்கை அமையும். சட்டம், பொலிடிக்கல் சயின்ஸ் போன்றவையும் எளிதாக வரும். மூன்றாம் இடமான மேஷத்தில் சனியும் புதனும் இருந்தால் இவர்களை அடுத்துள்ள இளைய சகோதரர்கள் வாழ்க்கையில் சரியானபடி அமராமல் அலைச்சலை எதிர்கொள்ள நேரிடும். சமூகத்தைக் குறித்து அதிகமாக கவலைப்படுவார்கள்.

இவர்களில் மொழி பெயர்ப்பாளர்களும் உண்டு. அதேசமயம் மதம் சார்ந்த கல்வியையும் கற்பார்கள். வெளிப்படையாய் பேசுகிறேன் பேர்வழி என்று அச்சுபிச்சென்று உளறிக் கொண்டிருக்கக் கூடாது. எத்தகைய எண்ணம் உருவாகிறதோ, அந்த உணர்வே இவர்களை ஆட்கொள்ளும். அதை உடனடியாக வெளிக்காட்டவும் செய்வார்கள். எச்சரிக்கை தேவை.

நான்காம் இடமான ரிஷபத்தில் சனியும் புதனும் இணைந்திருந்தால் படிப்பு என்பது புத்தகத்தில் அல்ல, அது வாழ்க்கையின் அனுபவத்தில் என்பதை மிகச் சிறிய வயதிலேயே உணர்ந்து விடுவார்கள். அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் விஷயங்களில் மூக்கை நுழைப்பார்கள். புதன் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டுமென்கிற எண்ணத்தை தூண்டக் கூடியவர். வீடு வாங்கலாம் என்று நினைத்த நேரத்திலிருந்து அடுக்கடுக்கான குறுக்கீடுகள், அவஸ்தைகளைச் சந்திப்பார்கள்.

திருமணத்திற்கு முன் சொந்த வீடு வாங்கக் கூடாது. அப்படி வாங்கினால் திருமணம் தள்ளிப் போகும். அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும்போது பொதுவான இடம் எவ்வளவு, வீட்டின் அளவு எவ்வளவு என்கிற விஷயத்தை சரியாகப் பார்த்து வாங்க வேண்டும். தரைத் தள வீடு கிடைத்தால் விட்டு விடுங்கள். ‘‘ஃபர்ஸ்ட் ப்ளோர் இருக்கு ஸார்’’ என்றால் உடனே வாங்குங்கள். ஐந்தாமிடமான மிதுனத்தில் சனியும் புதனும் சேர்ந்திருந்தால் தாயாரின் பூர்வீகத்தையே தங்களின் பூர்வீகமாகச் சொல்லிக் கொள்வார்கள்.

பிள்ளைகள் பொறுமைசாலிகளாகவும், அனைவரையும் அனுசரித்துப் போகும் குணம் உள்ளவர்களாகவும், நீதிமான்களாகவும் இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் புகழ் பெற்ற கட்டிட நிபுணர்களாகவும், ஆர்க்கிடெக்டாகவும் விளங்குவார்கள். திருமணப் பொருத்தத்தின்போது வாழ்க்கைத் துணையின் ஜாதகத்தில் 5ம் வீட்டில் பாதகாதிபதி சூரியன், செவ்வாய் இல்லாமல் இருப்பது நல்லது. பித்தக் கல் பிரச்னை இருக்கும். பூர்வீகச் சொத்துக்களை விற்று வேறு இடத்தில் சொத்து வாங்குவார்கள்.

ஆறாம் இடமான கடகத்தில் சனியும் புதனும் சேர்ந்திருந்தால் நரம்புத் தளர்ச்சி, கழுத்து வலி, தொண்டைப் புகைச்சல் போன்ற விஷயங்களிலெல்லாம் கவனமாக இருப்பது நல்லது. எள்ளுருண்டையை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள். பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்த பந்தங்களோடு தீராப்பகை இருந்து கொண்டேயிருக்கும். ஏனோ ரத்த பந்தங்களைவிட நண்பர்கள்தான் உங்களுக்கு அதிகமாக உதவுவார்கள். எதையுமே கொஞ்சம் மிகையாகத்தான் பார்ப்பார்கள்.

சிறிய தலைவலியாக இருந்தாலும் அதை அலட்சியமாக விடமாட்டார்கள். ஏதோ பெரிய தொந்தரவுபோல் பெரிதாக்கிப் பார்க்கும் குணம் இருக்கும்.
எதிரிகள் நியாயமானவர்களாக இருந்தால் சட்டென்று நண்பர்களாக மாற்றிக் கொள்ளவே முயற்சிப்பார்கள். நீதி நேர்மைக்குரிய கிரகமாக சனி வருவதால் நீங்கள் நேர்மையான வழியில் செல்லும்போது வெற்றி உங்கள் வசம் வரும். மாற்று வழிகளைக் கையாளும்போது சனி உங்களை சட்டச் சிக்கலில் சிக்க வைத்து விடுவார். ஏழாம் இடமான சிம்மத்தில் சனியும் புதனும் இருந்தால் காதலிப்பது வரை ஈர்ப்பு இருக்கும்.

திருமணத்திற்குப் பிறகு ‘எப்படி நாம காதலிச்சோம்’ என்று நொந்துகொள்வார்கள். வீட்டுக்கு கணவர் வந்து விட்டால் வெறுப்பாகப் பேசுவார்கள். அலுவலக விஷயமாக வெளியூர் சென்று விட்டால் ‘‘எங்க இருக்கீங்க, எப்போ வருவீங்க’’ என்று வினோதமாகப் பேசுவார்கள். இப்படி வாழ்க்கை சென்றால் சலிப்புதான் தட்டும். இந்த சலிப்பு தோன்றாமல் இருப்பதற்கு வசியப் பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து மணம் முடியுங்கள்.

எட்டாமிடமான கன்னியில் சனியும் புதனும் இணைந்திருந்தால் மாடுகளோடு இவர்கள் எப்போதும் விளையாடக்கூடாது. முக்கியமாக நான்கு கால் பிராணிகளிடத்தில் அலட்சியமாக இருத்தல் கூடாது. சவால்களை எதிர்கொண்டு ஜெயித்துக் காட்டும் வல்லமை இவர்களுக்கு உண்டு. எந்தச் செயலைச் செய்தாலும் அதில் தனிச்சிறப்பு மிளிரும்படி செய்வார்கள். நிலையற்ற தன்மையை வாழ்க்கை முழுவதும் இவர்கள் உணர்ந்தபடி இருப்பார்கள்.

சேமித்தல் என்கிற குணமே இவர்களிடம் இருக்காது. தபால் தலை சேர்த்து வைப்பது, பொருட்காட்சிகளில் பங்கு பெறுதல் போன்றவற்றில் ஆர்வத்தோடு பங்கெடுத்துக் கொள்வார்கள். இந்தச் சேர்க்கையின் மீது சுப கிரகத்தின் பார்வை விழவில்லையெனில் கபடமாகப் பேசும் குணமும் இருக்கும். ஒன்பதாம் இடமான துலா ராசியில் சனியும் புதனும் சேர்க்கை பெற்றிருந்தால் தந்தையை நேசித்தாலும் அவர் ஒட்டாமல்தான் இருப்பார்.

இந்த அமைப்பு கொஞ்சம் தகப்பனாரைப் பாதிக்கும். தந்தைக்கு கூடாப் பழக்க வழக்கங்கள் இருக்கும். அப்பாவின் சில அரசியல் பிரவேசங்களால் மகனின் வியாபாரம் பாதிக்கப்படுதலெல்லாம் நிகழும். அப்பாவைப்பற்றி அம்மாவிடமும், அம்மாவைப்பற்றி அப்பாவிடம் கோள் சொல்லக் கூடாது. திரைமறைவு சந்தோஷங்களை அனுபவித்தபடி இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுதல், சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் குழந்தைபோல கோபப்படுதலும் இருக்கும்.

பிரபலமாகவும் தந்தையைவிட திறமைமிக்கவராகவும் இருப்பார்கள். பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனியும் புதனும் இணைந்திருந்தால் மேலதிகாரிகள் சட்ட திட்டத்தை வளைத்து எதையாவது செய்யச் சொன்னால் உடனே மறுப்பார்கள். அதனாலேயே அடிக்கடி இடம் மாற்றப்படுவார்கள். அகிம்சை வழியில் போகிற உங்களை ஆணவம் மிக்கவர் என்று இந்த உலகம் பட்டம் கொடுக்கும். அணு உலை, நிலக்கரிச் சுரங்கப் பணி, இரும்பு உருக்காலை, கெமிக்கல் கம்பெனி, இதய அறுவை சிகிச்சை நிபுணர்,

பிசியோதெரபிஸ்ட், ஆம்புலன்ஸ் ஓட்டுபவர், மயானத்தில் வேலை, தோட்டக் கலை என்று சில வேலைகளில் ஈடுபடுவார்கள். பதினோராம் இடமான தனுசு ராசியில் சனியும் புதனும் இணைந்திருந்தால் வெளி மாநிலம், வெளிநாட்டில் இருக்கின்ற காலகட்டங்கள் மிகுந்த திருப்புமுனையாக அமையும். தோப்பு, தோட்டம், பண்ணை வீடு போன்றவையெல்லாம் வைத்துக் கொண்டிருப்பார்கள். முடிந்த வரைக்கும் கோர்ட், கேஸ் என்று போகாமல் இருப்பது நல்லது. தன்னுடைய ஜாதி, இனம்.

என்றெல்லாம் இல்லாமல் தன்னுடைய உறவினர்களிடையே வித்தியாசப்பட்டு நிற்பார்கள். பல நேரங்களில் பற்றற்ற மனநிலையோடு இருப்பார்கள். சமுதாயத்தை தன்பக்கம் திருப்பி ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனியும் புதனும் சேர்ந்திருந்தால் ஞானிகளின் மீது பக்தி கொண்டு அவர்களின் நூல்களைப் படித்து மனதில் தேக்கி வைத்திருப்பார்கள். தூக்கம்தான் வராது. கஷ்டப்பட்ட காலங்களையே எப்போதும் நினைத்தபடி இருப்பார்கள்.

சனி - செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் மாபெரும் எதிர்மறை பலன்களைத் தரமாட்டார்கள். இவை இரண்டுமே நட்புக் கிரகங்களாகும். ஆனால், நீச, பகை ஸ்தானங்களைப் பெறும்போது கொஞ்சம் எதிர்மறையான பலன்களைத் தருகின்றன. மன உளைச்சலும், மனச் சோர்வையும் அடையும்போது இவர்கள் மகான்களை தரிசிப்பது நிம்மதியைத் தரும். அதிலும் வைஷ்ணவ அம்சமுள்ள அந்த வழிபாட்டிலுள்ள மகான்களின் ஜீவசமாதிகளைச் சென்று வணங்குவது நன்மை பயக்கும்.

எனவே, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரின் திருவரசு என்றழைக்கப்படும் ஜீவசமாதியை தரிசித்து வணங்கி வாருங்கள். இத்தலம் மதுரை அழகர்கோவில்- கள்ளழகர் கோயிலுக்கு அருகேயே, எதிரிலேயே அமைந்துள்ளது. அழகர்கோவிலுக்குச் சென்று விவரமறிந்தவர்களிடம் கேட்டுச் செல்ல வேண்டும்.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்