டெங்கு காய்ச்சலுக்கு ஸ்பெஷல் இன்ஷூரன்ஸ்!- த.சக்திவேல்

தமிழகத்தின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் காட்டுத் தீ போல் பரவி வருகிறது. வெவ்வேறு பெயர்களை வைத்து டெங்கினை மறைக்க அரசு ஒரு பக்கம் முயற்சித்தாலும், இன்னொரு பக்கம் அதன் பாதிப்புகள் நின்றபாடில்லை. நோய் ஒரு பக்கம் பிரச்னை என்றால், இன்னொரு பக்கம் சிகிச்சைக்கான செலவுகள் இடியாக நடுத்தர, ஏழை மக்களை அழுத்திக் கொண்டிருக்கிறது.

டெங்கு மாதிரியான கிரிட்டிக்கல் நோய்களுக்கென்று ஏதாவது பிரத்யேகமான இன்ஷூரன்ஸ் பாலிசிகள் இருக்கிறதா? வெல்த் லேடர் நிறுவனத்தின் தலைமை நிதி ஆலோசகர் தரனிடம் கேட்டோம்.‘பொதுவாக ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி வைத்திருப்பவர்கள் அதே இன்ஷூரன்ஸ் திட்டத்தில் டெங்கிற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். இருந்தபோதிலும் டெங்கு காய்ச்சலுக்கென்று பிரத்யேகமான சிறப்பு பாலிசி ஒன்று உள்ளது.

இப்போது அப்போலோ முனிச் நிறுவனம் மட்டும்தான் அந்த பாலிசியை வழங்குகிறது. மற்ற மெடிக்கல் பாலிசிகளுடன் ஒப்பிடும்போது இதன் பிரீமியம் மிகவும் குறைவு. ஒரு லட்ச ரூபாய்க்கு கவரேஜ் எடுத்திருந்தால் கூட வருடத்துக்கு ரூ. 682தான் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ரூ.524தான் பிரீமியம். மூன்று மாதக் குழந்தையிலிருந்து 65 வயது முதியவர் வரை ஒரே பிரீமியம்தான்.

டெங்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள செய்யப்பட்ட ரத்த பரிசோதனை மற்றும் டெங்கு தொடர்பான மற்ற அனைத்து டெஸ்ட்டுகளுக்கும் உண்டான செலவுகள், மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்நோயாளியாக சிகிச்சை பெற்றபோது ஆன செலவு கள், இடையில் இந்த நோய் சம்பந்தமாக மருத்துவமனை சார்ந்த வேறு ஏதாவது செலவுகள்... என அனைத்தையும் இந்த பாலிசி மூலம் கிளெய்ம் செய்து கொள்ள முடியும்.

அதற்கு நீங்கள் குறைந்தபட்சம் ஒருநாள் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மட்டுமல்ல, டெங்கு காய்ச்சலுக்கு வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றிருந்தால் ரூபாய் பத்தாயிரம் வரைதான் கிளெய்ம் செய்து கொள்ள முடியும். இருபது வயதுக்கு உட்பட்டவர்கள், குறிப்பாக குழந்தைகளுக்குத்தான் டெங்கு காய்ச்சல் சுலபமாகப் பரவும். ஃபேமிலி ஃப்ளோட்டர் பாலிசி இல்லாதவர்கள் இந்த பாலிசியை எடுத்துக் கொள்வது நல்லது. நோயைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை. செலவையாவது இன்ஷூரன்ஸ் எடுப்பதன் மூலம் கட்டுப்படுத்துவோம்...’’ என்கிறார் ஸ்ரீதரன்.