பிளாஸ்டிக் எமன்!



- இளங்கோ கிருஷ்ணன்

பிளாஸ்டிக்… கடந்த நூற்றாண்டில் இந்த பூமிக்கு மனிதனால் கொண்டுவரப்பட்ட சாபம். ஆமாம். அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. முதன் முதலில் பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டபோது விஞ்ஞானிகள் உற்சாகம்கொண்டனர். தயாரிப்பது சுலபம், பயன்படுத்த எளிது, நீண்ட காலம் உழைக்கும். இந்தக் காரணங்களால் பொருட்களின் உலகில் தனிப்பெரும் அரசனாக உருவாகப்போகிறது பிளாஸ்டிக் என்றார்கள். அது நடக்கவும் செய்தது.

இரும்பு, கண்ணாடி, மரம், துணி என்று மனிதன் அதற்கு முன்பு பயன்படுத்திய எல்லா பொருட்களையும் வேகமாக அப்புறப்படுத்திக்கொண்டு ஆக்ரமிக்கத் தொடங்கியது பிளாஸ்டிக். இன்று பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை. காலையில் எழுந்ததும் பல் துலக்கப் பயன்படும் பிரஷ் முதல் இரவு படுக்கும்போது பயன்படுத்தும் பாய் வரை சகலத்திலும் நுழைந்துவிட்டது பிளாஸ்டிக்.

அரிசியை பிளாஸ்டிக் பையில் வாங்கிவந்த காலம் போய் அரிசியே பிளாஸ்டிக்காக வரத் தொடங்கிவிட்டது இப்போது. விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும், ‘இனியும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நாம் கட்டுப்படுத்தாவிட்டால் நமக்கு மட்டும் அல்ல, பூமிக்கே நல்லது இல்லை’ என்று எச்சரிக்கிறார்கள். பெருகும் பிளாஸ்டிக் குப்பைகள் உலகம் எங்கும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பெட் பாட்டில்கள் விற்பனையாகின்றன என்று பகீரடிக்கிறது ஒரு புள்ளிவிவரம்.

சரி, விற்றால் என்ன என்கிறீர்களா? இப்படி விற்பனையாகும் பிளாஸ்டிக்களில் வெறும் 30 - 40% மட்டுமே மறுசுழற்சிக்குச் செல்கின்றனவாம். அப்படியானால் மீதி? அவை தெருக்களிலும், வயல்வெளிகளிலும், காடுகளிலும், மலைகளிலும், கடற்கரைகளிலும், கடலிலும், சாக்கடையிலும், ஆற்றிலும், குளத்திலும், இன்னும் மனிதன் எங்கெங்கு எல்லாம் செல்கிறானோ அங்கு எல்லாம் அப்படியே கைவிடப்படுகின்றன. சராசரியாக ஒரு பிளாஸ்டிக் மண்ணோடு மண்ணாக மட்குவதற்கு சுமார் 450 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள்!

மேலும், அந்தப் பிளாஸ்டிக்கிலிருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் மண்ணையே மலடாக்கும் இயல்பு கொண்டவை. 60 - 70 வருடங்கள் வாழப்போகும் மனிதர்களாகிய நாம் வெறும் இரண்டு மணி நேரம் நம் உடலில் தங்கும் ஒரு லிட்டர் தண்ணீரைப் பருகுவதற்காக இவ்வளவு ஆண்டுகாலம் மட்காத, மண்ணின் வளத்தைக் கெடுக்கும் ஒரு பொருளை எந்தத் தயக்கமும் இன்றி பயன்படுத்துகிறோம் என்பது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம் அல்லவா?

நல்ல பிளாஸ்டிக்... கெட்ட பிளாஸ்டிக்! தரமான பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் பிரச்னைகள் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். இது ஒரு மூடநம்பிக்கை. பிளாஸ்டிக் என்பதே மனித உடலுக்கும் பூமிக்கும் கெடுதலானதுதான். இதில் நல்ல பிளாஸ்டிக், கெட்ட பிளாஸ்டிக் என்றெல்லாம் பேதங்கள் இல்லை. அதிலும் இப்போது உணவகங்களில் உணவுத் தட்டின் மேல் பாலித்தீன் ஷீட்டை விரித்துப் பரிமாறுகிறார்கள். பிளாஸ்டிக் கப்களில் தண்ணீர் பரிமாறுகிறார்கள்.

இதெல்லாம் உடலுக்குத் தீங்கான பழக்கங்கள். சூடான உணவுப்பொருளை பாலித்தீன் பையில் வைக்கும்போதும், குளிர்ச்சியான அல்லது சூடான நீரை பிளாஸ்டிக் பாட்டில் அல்லது டம்ளரில் ஊற்றும்போதும் அதிலிருந்து டையாக்ஸின் என்ற வேதிப்பொருள் வெளிப்பட்டு உணவில் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது. செரிமானக் கோளாறுகள் முதல் ஹார்மோன் பிரச்னைகள், புற்றுநோய் வரை உருவாக்கும் மோசமான பொருள் இது. இட்லி சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு கேன்சரையும் சேர்த்துப் பரிமாறாதீர்கள் என்றுதான் வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது. 

இது குறித்து நாவலாசிரியரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான நக்கீரனிடம் பேசினோம். ‘‘உலகம் முழுக்கவே பிளாஸ்டிக் பயன்பாடு வருடந்தோறும் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் மட்டும் தினந்தோறும் 15,300 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்கின்றன. பிளாஸ்டிக்கில் பிஸ்பீனால் ஏ (Bisphenol- (BPA), தாலேட்ஸ் (Phthalates) போன்ற மோசமான வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோய் வரை உருவாக்கும் கடுமையான விஷங்கள். மினரல் வாட்டர் அடைக்கப்பட்ட பெட் பாட்டில்கள் ஒரே ஒருமுறை மட்டுமே பயன்படுத்த ஏற்றவை.

இவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போதோ, சூடான, குளிர்ச்சியான பானங்களை ஊற்றுப்போதோ, பெட் பாட்டிலில் இருந்து வெளிப்படும் வேதிப்பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் தயாரிக்க ஆறு லிட்டர் மறைநீர் (Virtual water) செலவாகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, ஒரு லிட்டர் தண்ணீரைப் பருகுவதற்காக நாம் மீதம் உள்ள ஐந்து லிட்டர் தண்ணீரை வீணாக்குகிறோம்.

மட்டுமல்ல, அந்த ஒரு லிட்டர் பெட் பாட்டிலை வாடிக்கையாளர் கையில் சேர்ப்பதற்கு சுமார் கால் லிட்டர் வரை பெட்ரோல் போன்ற அத்தியாவசிய எரிபொருளையும் செலவழிக்க வேண்டியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்துவது, மறுசுழற்சிக்கு அனுப்புவது என்பது ஒரு பெரிய வேலை. இதற்காக மட்டுமே ஒவ்வொரு அரசும் ஆண்டுதோறும் கோடிக் கணக்கில் செலவழிக்க வேண்டும். இந்தத் தொகையை வரிகள் என்ற பெயரில் மக்களின் தலையில்தான் அரசுகள் சுமத்துகின்றன. 

இவை எல்லாவற்றையும்விட பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் கொட்டப்படும் பெரிய குப்பைக் கிடங்காக கடலோரப் பகுதிகள் உள்ளன என்பது அபாயகரமான விஷயம். சில நாடுகள் கடலிலும் கொட்டுகின்றன. கடந்த ஆண்டு வரை எட்டு மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலந்துள்ளதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

நாம் சுவாசிக்க அத்தியாவசியமான ஆக்சிஜன், மரங்களில் இருந்து மட்டும் நம் வளி மண்டலத்துக்குக் கிடைப்பதில்லை. கடலில் உள்ள பைட்டோபிளாண்ட் என்ற நுண்ணுயிரும் ஆக்சிஜன் பங்களிப்பில் பெரிய பங்களிப்பைச் செய்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் இந்த நுண்ணுயிர் பெருக்கத்தை அழிக்கும் வேலையைச் செய்கின்றன. இதுவரை சுமார் எட்டில் ஒரு பங்கு நுண்ணுயிர்கள் அழிந்துவிட்டதாக வருத்தத்துடன் தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த நுண்ணுயிர்கள் முற்றிலுமாக அழியும் பட்சத்தில் நமக்கு சுவாசிப்பதற்கான ஆக்சிஜனுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, வீசும் காற்றில் விஷம் பரவும் என்று எச்சரிக்கிறார்கள். தவிர, இந்த நுண்ணுயிர்களை கடலில் உள்ள சிறுசிறு மீன்கள் சாப்பிடுகின்றன. இந்த சிறுசிறு மீன்களை பெரிய மீன்கள் சாப்பிடுகின்றன. இந்த உயிரியல் சார்பு வளையம் உடையும்போது கடலின் பெளதீகச் சூழல் மாற்றமடையும். இது, பூமியை நிச்சயம் பாதிக்கும். பிளாஸ்டிக் பயன்பாட்டில் நமக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருப்பவை சாஷே பாக்கெட்டுகளே.

இப்போது ஒரு ரூபாய் ஷாம்பு முதல் 500 ரூபாய் சாக்லேட் வரை அனைத்தும் சாஷே பாக்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. இந்த சாஷே பாக்கெட்டுகள்தான் ஆபத்தானவை. இவற்றை எந்த வகையிலும் மீண்டும் பயன்படுத்த இயலாது என்பதால் அப்படியே கண்ட இடத்திலும் எறிந்துவிடுகிறோம். அது அப்படியே கிடந்து மண்ணையும் சூழலையும் கெடுத்துக் கொண்டிருக்கிறது.

மக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டும் போதாது. அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து பிளாஸ்டிக் உற்பத்தியை முறைப்படுத்தி, கட்டுப்படுத்த வேண்டும். மிகவும் அத்தியாவசியமான துறைகளில் மட்டும் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவது என்ற மாற்றம்தான் நம் உடனடித் தேவை. இது அரசு, மக்கள், உற்பத்தியாளர்கள் என அனைவரும் கைகோர்த்துச் செய்ய வேண்டிய உடனடி வேலை...’’ என்று ஆதங்கத்துடன் முடித்துக் கொண்டார் நக்கீரன். 

பார்த்து வாங்குங்க!

* பிளாஸ்டிக் பாட்டில் மற்றும் பொருட்களின் கீழ்ப்புறமோ பின்புறமோ ஒரு முக்கோண வடிவ சீல் இருக்கும். இதில் ஒன்று முதல் ஏழு வரை எண்கள் அச்சிடப்பட்டிருக்கும். இந்த எண்கள் பிளாஸ்டிக்கின் தரத்தைக் குறிப்பன. எனவே, இந்த எண்களைப் பார்த்து வாங்குவது நல்லது. அடிப்புற முக்கோணத்திற்குள்
 
எண் 1 இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) என்ற வேதிப் பொருளால் ஆனது. இதில், பானங்கள், குளிரூட்டப்பட்ட உணவுகள் இருக்கும்.

எண் 2 ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) என்ற வேதிப்பொருளால் ஆனதைக் குறிப்பது. இதில், பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.

எண் 3 உள்ள பிளாஸ்டிக்குகள், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதிப் பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் போன்றவை இருக்கும்.

எண் 4 எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதிப் பொருளால் உருவானது. இது பேக்கிங் மெட்டீரியலாகப் பயன்படுகிறது.

எண் 5 பிபி (பாலி புரொபிலின்) என்ற வேதிப்பொருளால் ஆனது. மைக்ரோவேவ் அவனில் வைப்பதற்கான உணவுப் பாத்திர பயன்பாட்டில் இது பயன்படுகிறது.

எண் 6 பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளால் ஆனது. முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இவை பயன்படுகின்றன.

எண் 7 பிளாஸ்டிக் மற்றவை. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல்வேறு வேதிப்பொருட்களால் உருவாக்கப்படுகிறது. இதை, பிளாஸ்டிக் குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாகப் பயன்படுத்துகிறோம். இந்த 7 பிளாஸ்டிக் வகைகளின் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பிளாஸ்டிக்குகள் உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. எனவே, இவற்றை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.