காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்யுவகிருஷ்ணா - 21

Honeymoon is over. தென்னமெரிக்காவின் வரைபடத்தை அட்லஸில் பார்த்தீர்கள் என்றால் தெரியும். கடத்தல் வேலைக்காகவே இயற்கை இந்த தேசத்தை அங்கே அமைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை உணரலாம். வட அமெரிக்காவையும், தென்னமெரிக்காவையும் இணைக்கும் பனாமா கால்வாய் கொலம்பியாவின் மூக்கு மாதிரி அமைந்திருக்கிறது.

ஈக்குவேடார், வெனிசுலா, பிரேஸில், பெரு உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளுக்கு சரக்கு சப்ளை செய்வதாக இருந்தாலோ... அல்லது இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு எதையோ கொண்டு செல்ல வேண்டுமென்றாலோ கொலம்பியாவை தவிர்க்கவே முடியாது. இதனால்தான் போதை மாஃபியாக்கள் கொலம்பியாவில் அமர்ந்துகொண்டு உலகளவில் பிசினஸ் செய்ய வேண்டியிருந்தது.

கல்யாண ஜோரில் சில மாதங்கள் ஜாலியாக இருந்துவிட்டதால், பிசினஸில் எஸ்கோபாருக்கு டச் விட்டுப் போயிருந்தது. திடீரென்று தேனிலவு முடிந்து, லெளகீக வாழ்க்கைக்கு திரும்பினால் நிறைய கார்டெல்கள், மெதிலின் கார்டெல்லை முந்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன. எனவே, தீவிரமாக வேலை பார்க்க ஆரம்பித்தார். சரக்கு கொள்முதலுக்கும் சப்ளைக்கும் அவரே நேரடியாகச் செல்ல ஆரம்பித்தார்.

சின்ன ஆர்டரோ, பெரிய ஆர்டரோ கார்டெல் ஓனரே வருகிறார் என்பதால் மீண்டும் மெதிலின் கார்டெல்லுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மவுசு ஏறத் தொடங்கியது. பக்கத்து நாடான ஈக்குவேடாரில் இருந்து கோகெய்ன் எடுத்து வர வேண்டும். ரொம்ப சின்ன ஆர்டர்தான். இருந்தாலும் எஸ்கோபார், குஸ்டாவோ இருவரும் தங்களின் மிக நெருக்கமான மூன்று சகாக்களோடு சென்று சாலை மார்க்கமாகவே ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

கொலம்பியா எல்லையில் செக்போஸ்ட். வழக்கமான சோதனைதான். காவலர்களுக்கு வழக்கமாகத் தரவேண்டிய மாமூலை எடுத்துக் கொண்டு அந்த சிறிய கேபினுக்குள் நுழைந்த குஸ்டாவோ திரும்பவேயில்லை. ஐந்து நிமிடங்கள் கழித்து குஸ்டாவோவைத் தேடிப் போன சகா ஒருவனும் திரும்பவில்லை. டென்ஷன் ஆன எஸ்கோபார் அவரே நேரடியாக உள்ளே போனார்.

அங்கே - குஸ்டாவோவும், தேடிப்போன சகாவும் மண்டியிட்டு அமர்ந்திருந்தார்கள். துப்பாக்கி முனையில் அவர்களை இரு இளம் அதிகாரிகள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த எஸ்கோபாரை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அயிரை மீனுக்கு தூண்டில் போட்டால் திமிங்கலமே வந்து மாட்டுமென்று யார்தான் நினைப்பார்கள்? இவரையும் மண்டியிடச் சொன்னார்கள்.

“நான் யாருன்னு தெரியுமில்லே?” கண்கள் சிவந்து கர்ஜித்தார் பாப்லோ. “தெரிஞ்சதுனாலேதான் அரெஸ்ட் பண்ணுறோம். நாங்க DAS ஏஜெண்டுகள்!” நம்மூரில் சிபிஐ மாதிரி கொலம்பியாவில் டாஸ். எஸ்கோபார் வந்த ஜீப் சோதனையிடப்பட்டது. ஸ்டெப்னி டயருக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் நாற்பது கிலோ கோகெய்ன் கைப்பற்றப்பட்டது. கையும் களவுமாக மாட்டுவது எஸ்கோபாரின் ஆட்களுக்கு புதிதல்ல.

கவனிக்க வேண்டியவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தோ, அல்லது மிரட்டியோ வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் - இம்முறை நேரடியாக டாஸ் ஏஜெண்டுகளிடமே மாட்டிக் கொண்டதால், உடனடியாக என்ன செய்வது என்று எஸ்கோபாருக்கே தெரியவில்லை. கேஸ் கோர்ட்டுக்கு போனால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கடைசியாக ஒரு கார் திருட்டில் ஜெயிலுக்கு போயிருக்கிறார்.

அதற்கு முன்பாக டீன் ஏஜில் சில்லறை பிரச்னைகளுக்காக சில நாட்கள் போயிருக்கிறார். கார்டெல் முதலாளியாக உயர்ந்த பிறகு ஜெயிலுக்குப் போவது என்பது கவுரவப் பிரச்னை. அந்த ஏஜெண்டுகளிடம் அவர்கள் கனவிலும் நினைக்காத தொகையை பேரமாக பேசினார். அவர்களோ நேர்மையை நிலை நாட்டுவதற்கென்றே பிறந்தவர்கள் மாதிரி பந்தா செய்து கொண்டிருந்தார்கள்.

நீதியை விலை கொடுத்து வாங்கினால் மட்டுமே வெளியே வருவது சாத்தியம். துரதிருஷ்டவசமாக இவர்களது வழக்கை விசாரித்த நீதிபதியோ ஹமாம் போட்டு குளிப்பவர். அத்தனை பேருமே திடீரென்று நேர்மையாகி விட்டால் நம்முடைய பொழைப்பு எப்படி ஓடுமென்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் எஸ்கோபார் புலம்பத் தொடங்கினார். பிரச்னை கார்டெல்களின் பெரிய தலைவரிடம் போனது.

‘என்ன விலை கொடுத்தாவது எஸ்கோபாரை காப்பாற்றுங்கள்’ என்று அவர் கட்டளையிட்டு விட, பாப்லோவின் கார்டெல் மட்டுமின்றி கொலம்பியாவின் அத்தனை கார்டெல்களும் களமிறங்கி தங்கள் தொடர்புகளை பயன்படுத்தத் தொடங்கின. அரசியல்வாதிகளோ இப்பிரச்னையில் தலையைக் கொடுக்க அஞ்சினார்கள். எஸ்கோபாரை உள்ளே வைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டியதுதான் பின்னணி காரணம். ரூபின்தான் உருப்படியான ஒரு ஐடியாவைக் கொடுத்தான்.

இரண்டு அத்தியாயங்களுக்கு முன்பு ரெஸ்த்ரோபேவின் நண்பனாக நமக்கு அறிமுகமானானே ஒரு பைலட்...? அவனை நினைவிருக்கிறதுதானே?
அதாவது பாப்லோவின் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு ஒரு தம்பி உண்டு. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆகவே ஆகாது. அவர்களுக்குள் சொத்து தொடர்பான பிரச்னைகள் இருந்து வந்தன. அண்ணனை தர்மசங்கடப்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அந்தத் தம்பியை, ரூபினின் ஆலோசனைப்படி இந்த கிரிமினல்கள் வளைத்துப் போட்டார்கள்.

அவருக்கு பீஸாக மிகப்பெரிய தொகை பேசப்பட்டது. பாப்லோவுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் தன்னுடைய சொந்தத் தம்பி. ஒருவேளை உறுதியான சாட்சிகளின் அடிப்படையில் தீர்ப்பு பாப்லோவுக்கு எதிராக வந்தால், தம்பியுடைய தனிப்பட்ட விரோதம் காரணமாகவே அப்படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக கருதப்படும். ஒருவேளை பாப்லோவை விடுவிடுத்து விட்டால் தம்பிக்காக நீதிபதி, நீதியை சமரசம் செய்துகொண்டதாக விமர்சனம் எழும்.

ரைட்டில் போனாலும் ஆப்பு, லெஃப்டில் போனாலும் காப்பு என்கிற நிலையில் இந்த வழக்கை, தான் விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி வேறு வழியே இல்லாத நிலையில் விலகிவிட்டார். இது போதாதா? கார்டெல்கள் தங்களுடைய முழு செல்வாக்கை பயன்படுத்தி தங்களுக்கு வாகாக தீர்ப்பு வழங்கக்கூடிய ஒரு நீதிபதியை இந்த வழக்கை விசாரிக்க வைக்கும் வகையில் வேலை செய்தார்கள். இன்றுவரை உலக அளவிலேயே நீதியை வளைக்கும் முயற்சிகளுக்கு முன்னுதாரணமாக அந்த வழக்குதான் விளங்குகிறது!

சாட்சிகள் அத்தனையும் உறுதியாக இருந்தும், சாட்சிகளில் இருக்கும் சப்பை ஓட்டைகளை பூதாகரமாக்கி அந்த தில்லாலங்கடி தீர்ப்பை வெளியிட்டார் நீதிபதி. “பாப்லோ போன்ற சமூகத்தின் உயர்தட்டு அடுக்கில் இருப்பவர் போதை மருந்து கடத்துவார் என்று எண்ணுவதே பாவம்...” என்கிற அளவுக்கு அராஜகமான தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக (?) சிறையிலிருந்து பாப்லோவும், அவரது சகாக்களும் வெளிவந்தார்கள். அவரை ஊர்வலமாக மெதிலின் நகர் சாலைகளில் அழைத்துச் சென்றார்கள் கார்டெல் பணியாளர்கள்.

உலகத் தலைவர் கணக்காக சாலையின் இருமங்கிலும் வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த பொதுமக்களுக்கு கையசைத்துக் கொண்டே பாப்லோ வந்தார். புன்சிரிப்போடு இருந்த அவரது முகம், ஒரே ஒரு கணம் மட்டும் சட்டென்று சீரியஸானது. குஸ்டாவோவைக் கூர்ந்து பார்த்தார். குஸ்டாவோவுக்கு அந்தப் பார்வையின் பொருள் புரிந்தது. ஊர்வலம் முடிவதற்குள்ளாகவே பாப்லோவை கைது செய்த டாஸ் இளம் ஏஜெண்டுகள் லூயிஸ், கில்பர்ட்டோ இருவரையும் வெறிகொண்ட ரவுடிகள் விரட்டி விரட்டி வெட்டினார்கள். அன்று படுகொலை செய்யப்பட்டவர்கள் அவர்கள் இருவர் மட்டுமல்ல. கொலம்பியாவில் கொஞ்சமே மிஞ்சியிருந்த நீதியும் நேர்மையும் கூடத்தான்!

(மிரட்டுவோம்)

ஓவியங்கள்: அரஸ்