ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 40

வண்ணங்களின் பின்னணியில்தான் இந்திய அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளைக்கு எதிராக காவியை முன்னிறுத்திய திலகருக்கோ, காவிக்கு எதிராக கறுப்பை முன்னிறுத்திய பெரியாருக்கோ அவை வெறும் வண்ணங்களல்ல. தாங்கள் கொண்டிருந்த அரசியலின் வெளிப்பாடுகள் அல்லது குறியீடுகள். கறுப்பு, சிவப்பு, வெள்ளை, பச்சை, காவி, நீலம் என்பவை வண்ணங்களின் பெயர்கள் என ஒருவர் சொல்வாரேயானால் அவருக்கு இந்திய சமூகத்தின் மத அரசியலோ, சாதி அரசியலோ தெரியவில்லை என்பதை எளிதாக யூகித்துவிடலாம்.

ஏனெனில், நிற அடிப்படையிலான வேறுபாடுகளிலிருந்து நம்முடைய சமூகம் இன்னும் வெளியேறவில்லை. ‘வெள்ளையாயிருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பதும் ‘கருப்பாயிருப்பவன் சகல பாவங்களையும் செய்யக்கூடியவன்’ என்பதும் நம்முடைய புத்திக்குள் யாராலோ திணிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திணிப்பை புரிந்துகொள்வதில்தான் இந்திய அரசியலுக்கான விமோசனம் இருக்கிறது.

இன்றைக்குக்கூட வெள்ளைப் புரட்சி, நீலப் புரட்சி, பச்சை புரட்சி என்று நம்முடைய ஆட்சியாளர்கள் தங்கள் ஊழல் திட்டங்களுக்கு வண்ணங்களின் பெயர்களையே வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றில்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அவர்கள் அடித்துக்கொண்டிருக்கும் சாயங்கள் வெளுக்கத்தான் போகிறது. மேலோட்டமாக அல்லாமல் மிக ஆழமாக வண்ணங்களுக்குப் பின்னேயுள்ள அரசியலை விளங்கிக்கொண்டு, அதையே தன் ஓவியங்களின் அடையாளமாக ஆக்கிக்காட்டியவர் அண்ணன் வீர.சந்தானம்.

ஒரு வண்ணம் இன்னொரு வண்ணத்தின்மீது ஆதிக்கம் செலுத்துவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடிந்ததில்லை. இந்தியா முழுக்க காவியைப் பரப்பும் வேலையில் ஆளும் மத்திய அரசு ஈடுபட்டுள்ள இந்த நேரத்தில், கறுப்பும், சிவப்பும் என்ன செய்ய காத்திருக்கின்றன என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அரசியலுக்கு வண்ணமுண்டு எனப் புரிந்துகொள்ள முடிந்த நம்மால் வண்ணங்களில் அரசியலை முன்வைத்த அண்ணன் வீர.சந்தானத்தை புரிந்தகொள்ள முடிந்தா?

ஓரளவு முடிந்தது எனலாம். திராவிட அரசியலின் அடுத்த பாய்ச்சலாக அவர் தமிழ் தேசிய அரசியலை நம்பினார். அவர் முன்வைத்த அரசியலை விமர்சிப்பவர்களும் ஆதரிப்பவர்களும்கூட அப்பழுக்கற்ற அவருடைய மாந்தநேயத்தை சந்தேகித்ததில்லை. ஓவியத்துறையில் தனித்து விளங்கிய அவர், தமிழக அரசியல் களத்திற்கு தன்னால் இயன்ற பங்களிப்புகளை இறுதிவரை செய்திருக்கிறார். மரபு ஓவியத்திலிருந்து நவீன ஓவியங்களைக் கண்டடைந்த அவர், ஓர் ஆளுமையாக வளர்ந்ததற்கு அவருடைய அரசியல் பார்வையே காரணமென்பதை ஓவிய விமர்சகர்களும் மறுக்கமாட்டார்கள்.

தனக்கு முன்னே இருந்த வழிகளையெல்லாம் உற்றுணர்ந்து, அவ்வழியே புதிய புதிய கிளை வழிகளை ஏற்படுத்தியவர். ஓவியமென்பதும் கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய முரசம்தான் என்பதை அவருக்கு முன்னால் வேறு யாரும் அறிவிக்கத் துணியவில்லை. கலையை பிரசாரமாக்கக் கூடாது என்னும் கருதுகோலை வைத்திருந்த தன் முன்னோர்களிடமிருந்து அவர் வேறுபட்டதாகச் சொல்ல முடியாது. அவர்களிடமிருந்து பெற்ற உரத்தினால்தான் புதிது செய்யும் எண்ணமே அவருக்கு உதித்திருக்கிறது. தம்முடைய வாழ்விலிருந்தே படைப்புகளை உருவாக்கும் பயிற்சியை அவர் மேற்கொண்டிருக்கிறார்.

கும்பகோணத்தை அடுத்த உப்பிலியப்பன்கோயில் ஊர் சந்நிதானத்தில் தன் இளமைக்காலத்தை வறுமையோடு கழித்த அவர், அக்கோயிலிலிருந்த தெய்வத்திடம் பிரார்த்தனைகளுக்குப் பதிலாக ஓவியங்களை வைத்திருக்கிறார். வாலிப வயதுவரை அவருடைய வயிறு, கோயிலில் வழங்கப்படும் பிரசாதங்களை உண்டே நிறைந்திருக்கிறது. தெய்வத்திடம் முறையிட்டால் வறுமை நீங்கிவிடுமென்றோ வசந்தகாலம் பூத்து விடுமென்றோ அவர் ஏனோ நம்பாதவராய் இருந்திருக்கிறார்.

அதைவிட, கோயில் பணியில் ஈடுபட்டிருந்த தன் தாயும், தந்தையும் கர்ம சிரத்தையோடு செய்து வந்த தெய்வ காரியங்களால்தான் தனக்கு ஓவிய சக்தி கிடைத்ததென்றும் அவர் எங்கேயும் சொல்லியதில்லை. மாறாக, தெய்வங்களையே கேள்வி கேட்கும் குரலைத்தான் அவருடைய ஓவியங்கள் கொண்டிருந்தன. ஆனாலும்கூட, அவர் ஓவியங்கள் நம்முடைய புராதன கோடுகளையும், சிற்பங்களையும் அடிப்படையாகக் கொண்டவையே.

காமதேனு, செங்கோட்டு யாழ், சிறுதெய்வ சிலைகள், கற்பக விருட்சம் என அவர் திரும்பத் திரும்ப நம்முடைய தொன்மங்களிலிருந்தே ஓவியங்களை மீட்டுக்கொண்டிருந்தார். புராண இதிகாசக் குறியீடுகளை மறுப்பவராயிருந்தாலும் அவருக்குள்ளே பதிந்திருந்த அக்குறியீடுகளைக் கொண்டே அவற்றுக்கு எதிரான திசையில் பயணித்திருக்கிறார். கும்பகோணத்தில் எந்தத் திசையில் நடந்தாலும் நாலைந்து கோயில்களை கண்ணில் கண்டுவிடலாம்.

உலாத்தவும், உறங்கவும், ஓய்வெடுக்கவும் கோயில்களைத் தேர்ந்தெடுத்த அண்ணன் வீர.சந்தானத்திற்கு அக்கோயில்களிலிருந்த சிலைகளை ஓவியப் பிரதியெடுக்கும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் எம்ஜிஆராக ஆகவேண்டும் எனவும் தோன்றியிருக்கிறது. ஏதோ ஒரு திரைப்படத்தில் எம்ஜிஆர் பேருந்து நடத்துனராயிருந்து டிக்கெட் பரிசோதக ராக பதவி உயர்வு பெறுவார். எனவே, தாமும் நடத்துனராக வேலையில் சேர்ந்து எம்ஜிஆர் ஆகவிடலாம் என எண்ணியிருக்கிறார்.

நடத்துனர் பணி கிடைக்காமல் போகவே தன்னால் எம்ஜிஆராக முடியாது என்று புரிந்துகொண்டு, ஓவியனாக மாற உத்தேசித்திருக்கிறார். அவர் எண்ணம் ஈடேறுவதற்கு வாய்ப்பாக அமைந்தது கும்பகோணம் ஓவியக் கல்லூரி. உப்பிலியப்பன்கோயில் கிராமத்திலிருந்து நடந்துபோகும் தூரமே கல்லூரி அமைந்திருந்ததால் பொருளாதாரத் தேவைகளால் தடைபடாமல் அவருடைய கல்லூரிப் படிப்பு தொடர்ந்திருக்கிறது.

இந்தியா சுதந்திரமடைவதற்கு ஐந்துநாள் முன் பிறந்த அவர், சுதந்திர இந்தியாவின் கொடுமைகளுக்கு எதிராக தன் தூரிகையைத் தூக்கிப்பிடித்த களப்போராளியாக அறியப்படுகிறார். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் படித்த அவர், மேற்படிப்புக்காக சென்னை ஓவியக் கல்லூரிக்கு வருகிறார். அங்கேதான் அவருக்குள் புதைந்திருந்த தனித்த ஆற்றல்கள் வெளிப்படுகின்றன.

புகழ்பெற்ற ஓவியர் தனபாலின் மாணவராக ஆகிறார். கலைகளின் சகல நுணுக்கங்களையும் கற்றுத்தேர ஆசிரியர் தனபால் எல்லாவிதத்திலும் அவருக்கு உதவுகிறார். ஓவியத்தில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்த அவரை புடைப்புச் சிற்பத்திற்கு மடைமாற்றிய பெருமை ஆசிரியர் தனபாலுக்குரியது. அவரே, வறிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வீர.சந்தானத்தை மகனாகப் பாவித்து, தன் வீட்டிலேயே தங்கவைத்து வளர்த்
தெடுத்திருக்கிறார்.

திராவிட இயக்க அரசியல் சார்பு கொண்டிருந்த ஓவியரும், சிற்பியுமான தனபாலைத் தவிர்த்துவிட்டு தமிழக ஓவிய வரலாற்றை எழுத முடியாது. 1958ம் ஆண்டிலேயே பெரியாரை சிற்பமாக்கி ஓவியப் பதிவை ஏற்படுத்தியவராக தனபால் அறியப்படுகிறர். பெரியாருடன் மட்டுமல்ல, பாரதிதாசன், ஜீவானந்தம், கலைவாணர் எனப் பலருடனும் நெருங்கிப் பழகிய தனபால், ஜீவாவின் தலைமறைவு வாழ்க்கைக்கு உதவிபுரிந்தவர். கலைவாணரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜீவா தலைமறைவாக இருந்ததே தனபாலின் வீட்டில்தான்.

அந்த வீட்டில் இருந்துதான் வீர.சந்தானமும் தன் மேற்படிப்பு வாழ்க்கையை மேற்கொள்கிறார். மாணவர்களையும் மகன்களாக, மகள்களாகக் கருதும் தன்பாலின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக வீர.சந்தானம் வாழ்ந்திருக்கிறார். ஆசிரியர் தனபாலின் மனைவியான மீனாட்சியம்மா உருட்டி உருட்டி உள்ளங்கையில் வைத்த கவளத்திலிருந்து உருவானதே இந்த உடம்பு என எத்தனையோ சந்தர்ப்பங்களில் அண்ணன் வீர.சந்தானம் நெக்குருகியிருக்கிறார். அங்கேதான் ஓவியர் ஆதி மூலத்தின் அறிமுகமும் ஓவியத்தின் அத்தனை பரிமாணங்களும் அவருக்குப் பிடிபடுகிறது.

வழக்கமான ஓவியர்களிடமிருந்து வித்தியாசப்படவும் தனித்த அடையாளத்தை உருவாக்கவும் உதவிய அந்தக் காலங்களை, ‘‘மயக்கமே மகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியே மயக்கமாகவும் ஒன்று கலந்த உற்சாகமான பொழுதுகள்அவை’’ என்று சொல்லியிருக்கிறார். “அண்ணன் ஆதிமூலமும், தனபால் சாரும் இல்லையென்றால் என் காதல் மனைவியை நான் கைப்பிடித்திருக்க முடியாது” என்றிருக்கிறார். “என் வீட்டு சார்பாக அவர்கள் வீட்டில் போய் பெண் கேட்டதும், அவர்கள் ஆரம்பத்தில் மறுத்து பின் ஒப்புக்கொள்ள ஜவாப்தாரி போட்டதும் அவர்கள்தான்.

திருமணம் முடித்து சொந்த ஊரான உப்பிலியப்பன் கோயிலுக்கு மனைவியைக் கூட்டிக்கொண்டு போனேன். அங்கே என்னைப் பெற்ற அம்மா, தன் மருமகளிடம் ‘எம் மவன் எவ்வளவு பவுனு போட்டான்’ என்றார். நானோ ‘அரைப் பவுன் தாலி மட்டுமே வாங்கிக் கொடுத்திருந்தேன்.’ அதைச் சொன்னதும் என்னுடைய அம்மா தன் கழுத்தில் கிடந்த சங்கிலியைக் கழற்றிப் போட்டார்.”

இயலாமையிலும் வறுமையிலும் நம்முடைய குடும்பங்கள் பரிமாறிக் கொள்ளும் அன்புக்கு இணையே இல்லை என்று அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களைக்கூட பகடியோடும் பாசத்தோடும் பகிர்ந்து கொள்வார். என்னுடைய முதல் மூன்று கவிதைத் தொகுப்புகளுக்கான முகப்பை அவர்தான் வரைந்துகொடுத்தார். அய்யனார், நிசும்பசூதனி, வீரனார் என அவர் வரைந்து கொடுத்த ஓவியங்களைத் தாங்கிய என்னுடைய மூன்று கவிதைத் தொகுப்புகளும் தஞ்சை மாவட்டத்து அரசியலையும் எதார்த்த வாழ்வையும் பேசின.

காவிரிப் பாசனம் பொய்த்துப்போன சோகங்களை நானறிந்த மொழியில் வலியோடு அந்நூல்களில் எழுதியிருந்தேன். “விட்டுடாத, இந்த நெருப்ப அணைக்காம வச்சிக்கிட்டா பொழச்சிக்கிடலாம். பஞ்சம் பொழக்க எதை எதையோ செய்றாங்க. நீ எழுத வந்திருக்க. ஒன்ன எழுத்தும் எழுத்த நீயும் காப்பாத்திக்கணும்” என்றார். முதல் அறிமுகத்திலேயே அவர் எனக்கு அண்ணனாகிவிட்டார். கோணலான கோடுகளை சமூக நிமிர்வுக்காக வரைந்து வந்த அவர், தட்டிக்கொடுத்ததில் என் முதுகுத் தண்டும் முறுக்கேறியது.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்