வீடு, சமூகம், சுற்றம் மூன்றிலும் பொறுப்புள்ளவனே இந்த வேலைக்காரன்!- மை.பாரதிராஜா

அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத குடிசைப்பகுதி செட் அது. அருகே வேஸ்ட் பாட்டில், பேப்பர்கள் குவியலிடையே கூரையில் மெலிதாக எட்டிப்பார்க்கிறது ‘துலுக்காணம் வேஸ்ட் பேப்பர் மார்ட்’ போர்டு. கடையருகே கூடியிருந்த மக்கள், ஏரியா ஹீரோ அறிவின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கட்டம் போட்ட லுங்கியும், அழுக்குச் சட்டையுமாக அறிவு வருவான் என எதிர்பார்த்தவர்களுக்கு ஆச்சரியம். ப்யூர் வொயிட் இன் ஷர்ட். கழுத்தில் காஸ்ட்லி டை.

செவியில் ப்ளூடூத். செம ஸ்மார்ட் சிவகார்த்திகேயன், அவரை விட செம ஸ்டைலீஷாக நயன்தாரா என கலர்ஃபுல்லாக ஸ்பாட் எடிட்டிங் மானிட்டரில் அதிர்கிறது ‘வேலைக்காரன்’. ‘‘முந்தைய படமான ‘தனி ஒருவன்’ல எல்லாரோட ஆசீர்வாதமும் எனக்கு கிடைச்சது. என் அடுத்த படத்துலயும் பங்கேற்கணும்னு நிறைய பேர் விரும்பினாங்க. அப்படி ஒரு அழகான டீம் இந்த படத்துல அமைஞ்சிருக்கு. இந்த அன்பும் ஈடுபாடும் பொறுப்பை அதிகரிச்சிருக்கு.

‘தனி ஒருவன்’ மொத்த ஒர்க்கும் முடிஞ்சபிறகுதான் ரிலீஸ் தேதியை அறிவிச்சோம். ஆனா, ‘வேலைக்காரன்’ அப்படியில்ல. இது வர்ற ஆயுதபூஜை ரிலீஸ். இதை சொல்லிட்டுதான் ஷூட்டிங் கிளம்பினோம். இப்படி ரிலீஸ் தேதியை அறிவிச்சுட்டு வேலையை தொடங்கறது எனக்கு புதுசு. அந்த சவால்ல ஜெயிச்சிருக்கேன்னு நினைக்கறேன். டீசருக்கு கிடைச்சிருக்கிற வரவேற்பு அதைத்தான் சொல்லுது...’’ எடிட் ஷூட் பிரேக் இடையே புன்னகையும் பூரிப்புமாக பேசுகிறார் ‘வேலைக்காரன்’ படத்தை எழுதி இயக்கும் மோகன்ராஜா.

யாருங்க இந்த ‘வேலைக்காரன்’?
சமூக அக்கறையுள்ள யதார்த்தமான இயல்பான இளைஞன். ‘தனி ஒருவன்’ல அவன் நல்லா படிச்சவன். வசதியானவன். திருப்தி அடைகிற அளவுக்கு அடிப்படை வசதிகளும், பொருளாதாரத்துல தன்னிறைவும் அடைஞ்சவன். ‘வேலைக்காரன்’ அப்படியில்ல. வீடு, சுற்றம், சமூகம்னு மூணு விஷயத்துலயும் பொறுப்புள்ளவன். பத்து பேர்கள்ல ஒருத்தனா இந்த சமூகத்துல வாழறது பெரிய விஷயமே இல்ல.

‘நான் சுயமரியாதை உள்ளவன்’னு நெஞ்சை நிமிர்த்தி வாழறதுலதான் அர்த்தமே இருக்கு. சூழலுக்கு ஏற்ப வளைஞ்சு கொடுக்காம, தான் விரும்பற சூழலை அமைக்க நினைக்கறவன்தான் ‘வேலைக்காரன்’னு சொல்லலாம். பொதுவா எந்தவொரு தப்பையும் யாரும் விரும்பிப் பண்ணறதில்ல. தப்பு பண்ணினா அது ஜெயிக்கும்னு நினைச்சுதான் அந்த தப்பை திரும்பத் திரும்ப பண்றாங்க.

இது மாதிரியான சூழல்ல நல்லது பண்ணினாலும் அது ஜெயிக்கும்னு நிரூபிக்க வேண்டியதிருக்கு. ஒரு நல்ல விஷயத்துல இறங்கி, அது வெற்றியானா அடுத்தடுத்தும் நாம நல்ல விஷயங்களைப் பண்ண ரெடியா இருப்போமில்லையா... அப்படி நல்ல விஷயம் பண்ண நினைக்கற ஒரு யதார்த்த இளைஞன் சந்திக்கற சவால்கள், சாதனைகள்தான் படம்.

சிவகார்த்திகேயனோட இணைஞ்சது எப்படி?
‘தனி ஒருவன்’ வெளியான பிறகு அடுத்து யாரை வைச்சு படம் பண்ணலாம்னு முடிவு செய்யாம கதை எழுதறதுல மட்டும் கவனம் செலுத்திட்டு இருந்தேன். அந்த சமயத்துல சிவகார்த்தி கேயன் என்னை சந்திச்சார். பேசினோம். இரண்டு பேரோட ரசனையும் கனவும் ஒண்ணா இருந்தது. இது பர்சனலா எனக்கே ஆச்சர்யம் அளிச்ச விஷயம். தவிர என் கதைக்கும் அவ்வளவு பொருத்தமா அவர் இருந்தார்.

இன்னொரு சர்ப்ரைஸ் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. ரொம்ப நல்ல தயாரிப்பாளர் கிடைக்கிறது எல்லா இயக்குநருக்குமே வரம். கதைக்கு, டைரக்டரோட கனவுக்கு உயிர் கொடுக்க தண்ணீரா செலவழிக்கிற தயாரிப்பாளர் கிடைச்சிட்டா எல்லா படங்களுமே நிச்சயம் வெற்றி பெறும். இந்த வரத்தை நான் வாங்கி வந்திருக்கேன்! அதனாலதான் இதுவரை நான் பண்ணின எல்லா படங்களோட ப்ரொடியூசர்ஸும் அருமையா எனக்கு அமைஞ்சாங்க. இதுல ஆர்.டி.ராஜா ஸ்பெஷல்னு சொல்லலாம். முதல்ல கதையை இவர்கிட்டதான் சொன்னேன்.

பஹத் ஃபாசில் இந்தப் படத்துல வில்லனா..?
அப்படி சொல்ல முடியாது. அவருக்கு பவர்ஃபுல்லான ரோல். கதை எழுதறப்பவே அந்த கேரக்டருக்கு பஹத் பொருத்தமா இருப்பார்னு தோணிச்சு. ஆர்.டி.ராஜாவும் அதையே நினைச்சார். பஹத்தை சந்திச்சு கதை சொன்னோம். அடுத்த செகண்டே ‘ஷூட்டிங் எப்ப’னு கேட்டார்! ‘தனி ஒருவன்’ அவருக்கு பிடிச்ச படம். மத்தவங்க பண்ணத் தயங்கும் ஏரியாவை, கேரக்டரை, தேடிப் போய் பண்றதுல பஹத்  கில்லாடி. ரொம்ப நல்லா தமிழ் பேசறார். அவருக்கு நடிகவேள்  எம்.ஆர்.ராதா காமெடினா ரொம்ப பிடிக்கும்.

அவரை மாதிரியே ஒரு சீனாவது  பண்ணிடணும்னு நினைச்சிட்டிருக்கார். பஹத்தின் தமிழ் பேசும் அழகைப் பார்த்து, அவரையே டப்பிங்கும் பேச வைக்கப் போறேன். பொதுவா என் படங்கள்ல ஸ்டார் காஸ்ட் அதிகம் இருக்கும். இதிலும் அப்படித்தான். சிவகார்த்திகேயன், நயன்தாரா, பஹத் தவிர தம்பிராமையா, பிரகாஷ்ராஜ் சார், மன்சூரலிகான், சினேகா, ரோகிணி, விஜய் வசந்த், சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், காளிவெங்கட், முனீஸ்காந்த், மைம் கோபினு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிற நட்சத்திரங்கள் இருக்காங்க.

சிவகார்த்திகேயனும் நயன்தாராவும் என்ன சொல்றாங்க..?
சிவாவின் உழைப்பு பிரமிக்க வைக்குது. சினிமா பத்தி அவருக்கு ஏதோ கொஞ்சம் தெரிஞ்சிருக்கும்... புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். ஆனா, ஒரு படத்தோட திட்டமிடல்ல இருந்து டிஸ்ட்ரிபியூஷன், பிசினஸ் வரை எல்லாமும் தெரிஞ்சு வைச்சிருக்கார். டயலாக்கை ஒரு தடவை சொன்னா போதும். அவ்வளவு மெமரி பவர். சிவா படங்கள்னா காமெடி, கலாய்ப்பு அதிகம் இருக்கும்.

இது சோஷியல் த்ரில்லர். சிவாவுக்கு புதுசு. சும்மா வெளுத்து வாங்கியிருக்கார். ‘அறிவு’ கதாபாத்திரமாவே வாழ்ந்திருக்கார். சிவாவுக்கு ஜோடியா இதுவரை அவரோட நடிக்காதவங்களா இருக்கணும்னு நினைச்சேன். அப்படித்தான் புது காம்பினேஷன் அமைஞ்சது. ‘தனி ஒருவனு’க்கு அப்புறம் நயன்தாரா எனக்கு நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க. கதையை கேட்காமயே ‘ஷூட்டிங் எப்பனு மட்டும் சொல்லுங்க... வந்துடுறேன்’னு சொன்னாங்க.

அதே மாதிரி இதுல சினேகாவுக்கும் நல்ல ரோல். நான் டைரக்ட் செய்த முதல் படம் ‘அனுமான் ஜங்ஷன்’. அதுல சினேகாதான் ஹீரோயின். அப்ப அவங்களுக்கு அது இரண்டாவது படம். அதுக்கு அப்புறம் தமிழ்ல அவங்களுக்குனு ஓர் இடம் கிடைச்சது. கல்யாணம், குழந்தைனு நடுவுல நடிக்க பிரேக் விட்டிருந்தாங்க. இப்ப திரும்ப நடிக்க வந்திருக்காங்க. அந்த ரீஎன்ட்ரி படமும் என் படமா அமைஞ்சதுல அவங்களுக்கும் சந்தோஷம். 

முதல் முறையா அனிருத்துடன் கூட்டணி... எப்படி வந்திருக்கு பாடல்கள்?
சிவாவும் அனிருத்தும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். அனிருத்கிட்ட பேசிப் பழகின பிறகுதான் அவர்கிட்ட யார் பேசினாலும் க்ளோஸாகிடுவாங்கனு புரிஞ்சது. தனக்கு முழு திருப்தி அடைஞ்சாதான் அந்த ட்யூனையே நமக்கு போட்டுக் காட்டுவார். ‘தனி ஒருவனு’க்குப் பிறகு ராம்ஜி ஒளிப்பதிவு பண்றார். கிட்டத்தட்ட அவர் எனக்கு ஒரு பிரதர் மாதிரி. ஒரு படம் இயக்கும் போது அடுத்த படம் பத்தி நான் யோசிக்க மாட்டேன். அதே மாதிரிதான் அவரும். கதை பிடிச்சிருந்தா மட்டுமே அந்த படத்துல ஒர்க் பண்ணுவார். இயக்குநர்கள் அமீர், செல்வராகவன் எல்லாம் ஏன் அவரோட வேலை பார்க்க விரும்பறாங்கனு இப்ப புரியுது.

சிவாவுடன் கூட்டணி வைச்சது பத்தி உங்க தம்பி ஜெயம் ரவி என்ன நினைக்கறார்?
ரவியோட நான் எப்ப வேணா படம் பண்ண முடியும். அதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. ‘வேலைக்காரன்’ கதை அவனுக்கு முதல்லயே தெரியும். இந்த கதைக்கு சிவா செட் ஆவார்னு சொன்னதே ரவிதான்!