ஆறு... பாறை... அணைக்கட்டு!



 Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

இயற்கையும் மனிதனும் வேறு வேறல்ல... இப்பேருண்மையை உணர வேண்டும் என்றால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இயற்கையில் கலக்க வேண்டும். வனத்தில், மலையில், மழையில் மனதைப் பறிகொடுத்து, இயற்கையின் மடியில் தலைவைத்துக் கிடப்பதென்பது இன்பத்தின் உச்சம். அந்த உன்னத அனுபவம் பேச்சிப்பாறையிலும் கோதையாறிலும் முழுமையாகக் கிடைக்கிறது!

நகர்ப்புற மாசுகளற்ற, சுத்தமான காற்றை சுவாசித்து, நீண்டு நிமிர்ந்து நிற்கும் மரங்களையும், குவிந்து கிடக்கும் மலைகளையும் திகட்டத் திகட்ட தரிசித்து இயற்கையோடு இயற்கையாக உறைந்து போகிற அனுபவம் இப்பகுதிகளில் வாய்க்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலையும் மரமும். எங்கெங்கு காணினும் பசுமை. சாலையின் இருபுறமும் அடர்வனம். முகடுகளுக்கு நடுவே வெள்ளியால் கோடு வார்த்தது போல படர்ந்து கிடக்கிறது நீர். கோதையாறும் பேச்சிப்பாறையும் இயற்கை வரைந்த நவீன ஓவியங்கள்!

நாகர்கோவிலில் இருந்து 60&வது கிலோமீட்டரில் இருக்கிறது கோதையாறு. நெல்லைக்கும் குமரிக்குமாக படர்ந்து கிடக்கும் இந்த மலையில் இருந்தே தாமிரபரணி உற்பத்தியாகிறது. தமிழகத்தின் முக்கிய புனல்மின் நிலையம் இங்குதான் இயங்குகிறது. நாகர்கோவிலில் இருந்து கோதையாறுக்கு நேரடி பஸ்வசதி உண்டு. இயற்கை ததும்பி நிற்கும் இப்பகுதியில் கால் வைத்ததுமே உடலுக்குள் ரசாயன மாற்றம் நிகழ்வதை உணரமுடியும்.

கோதையாறில் சுற்றுலாப் பகுதிகள் என்று சுட்டிக்காட்ட எதுவுமில்லை. மார்த்தாண்டத்தை தாண்டிவிட்டாலே இருபுறமும் மரங்கள் அடர்ந்த காடு. அவற்றுக்கு நடுவில் ஒத்தையடிப்பாதை போல நீளும் சாலையில் பயணிப்பதே வித்தியாசமான அனுபவம். ஜன்னலோர இருக்கை வாய்த்துவிட்டால் பஸ் பயணத்திலேயே சுற்றுலா நிறைவு பெற்றுவிடும்.

 காலை 7 மணிக்கு நாகர்கோவிலில் பஸ் ஏறினால் 10 மணிக்கு கோதையாறு. மூன்று மணிநேரம் இங்கே செலவிடலாம். நதியின் போக்கில் கொஞ்சதூரம் நடக்கலாம். வனத்துக்குள் நீண்டதூரம் செல்ல அனுமதியில்லை. மின்வாரியம், பொதுப்பணித்துறை, வனத்துறை கெஸ்ட் ஹவுஸ்கள் இருக்கின்றன. முன்அனுமதி பெற்றிருந்தால் அங்கே தங்கி பசுமையையும் குளுமையையும் அனுபவிக்கலாம்.

கண்களைப் பசுமையால் நிரப்பிக்கொண்டு, மதிய சாப்பாட்டுக்கு பேச்சிப்பாறை வந்துவிடலாம். கோதையாறுக்குக் குறுக்கே திருவிதாங்கூர் மன்னர் மூலம்திருநாள் காலத்தில் கட்டப்பட்டது இந்த அணை. சுமார் 100 சதுர கி.மீ. பரப்பளவுள்ள இந்த அணையின் உள்ளே முளைத்து நிற்கும் செங்குத்தான பாறைகளும் குட்டிகுட்டித் தீவுகளும் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து. 

மூன்று புறமும் மலைகள் சூழ விரிந்து கிடக்கும் இந்த நீர்க்காட்டை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ‘ஒட்டிகள்’ எனப்படும் மரவீடுகளில் ஏறி அமர்ந்து கொண்டு ரசிப்பது கூடுதல் உற்சாகம்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineபேச்சிப் பாறையில் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடத்தகுந்த இடங்கள் நிறைய. இன்னும் வித்தியாசமான அனுபவம் விரும்புவோர், உணவை தீவுகளுக்குக் கொண்டுசென்று அங்கே அமர்ந்து சாப்பிடலாம். மரங்களடர்ந்து காணப்படும் இத்தீவுகளில் காலாற நடக்கலாம்.

அணைக்கட்டை ஒட்டி நடந்தால் கடம்பமூடு பகுதி வரும். அங்கிருந்து தீவுகளுக்கும் பழங்குடி மக்களின் கிராமங்களுக்கும் படகுகள் இயக்கப்படுகின்றன. குறைந்த கட்டணம்தான். அப்படகுகளில் ஏறி தீவில் இறங்கிக்கொள்ளலாம். வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்ட காணிக்காரர்களின் வாழ்க்கையில் கலந்து, அந்த வனப்பகுதியில் உலா வரலாம்.

பேச்சிப்பாறையில் சிறு உணவகங்கள் நிறைய உண்டு. பாக்கெட்டை பதம் பார்க்காத விலைதான். சமையலில் கேரள பாரம்பரியம்.

பேச்சிப்பாறையில் இருந்து கிளம்பவே மனது வராதுதான். ஆனால், 4 மணிக்கு முன்னதாகக் கிளம்பிவிட்டால் இன்னும் ஓர் இனிய அனுபவத்தைப் பெறலாம். பேச்சிப்பாறையில் பஸ் ஏறினால் அடுத்த அரைமணி நேரத்தில் திற்பரப்பு. கோதையாறில் உதித்து, பேச்சிப்பாறையில் சங்கமித்து, திற்பரப்பில் ஆர்ப்பரித்து விழும் நீரில் தலை நனைத்து நிற்பது பேரானந்தம். 7 மணிக்கு திற்பரப்பில் இருந்து கிளம்பினால் ஒன்பதரை மணிக்கு நாகர்கோவில். இந்த ஒருநாள் பயணம் ஓராண்டுப் பசுமையை மனதில் நிறுத்திவிடுகிறது!   
வெ.நீலகண்டன், தா.டென்சன்
படங்கள்: ராஜேஷ்குமார்