ஒரு எஸ்பியின் டைரி... உறைய வைக்கும் நிஜ க்ரைம்கள்





                  ந்நேரமும் பர பரப்பாக இயங்கும் அங்காடித் தெருக்கள் நிறைந்த சென்னை தி.நகர். 2002ம் ஆண்டு. ஒரு வெயில் நாளின் முன்னிரவில், பிஸியான வீதியில், மனைவி, மகள் கண்ணெதிரிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கிருஷ்ணன். அவர் பெரும்பாலும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளின் வழக்குகளை எடுத்து நடத்துபவர்.

மக்கள் கண்ணெதிரே நடந்த இக்கொடூரம் கண்டு மாநகரே பரபரப்பானது. தி.நகரில் மட்டும் சில நிமிடங்களிலேயே மனித நடமாட்டம் மறைந்தது. காவல்துறை ஆணையர் உத்தரவுப்படி, துணை ஆணையர் மேற்பார்வையில், உதவி ஆணையராகிய நான், இரண்டு ஆய்வாளர்கள் துணையோடு விசாரணைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

சம்பவம் நடந்த உடனே அந்த இடத்திலிருந்த அத்தனை பேரும் ஓடிவிட்டனர். கடைகளும் மூடப்பட்டு விட்டன. இரவு முழுக்க விசாரணை செய்ததில், ‘சம்பவ இடத்துக்கு அருகிலிருந்து ஒரு பைக் மட்டும் வேகமாகக் கிளம்பிப்போனது’ என்ற ஒற்றைத் தகவல் கிடைத்தது. ஓட்டியவரோ, வண்டி நம்பரோ தெரியாது என்று பூ விற்கும் பெண் கூறினார்... அவ்வளவுதான்! தினமும் ஆயிரக்கணக்கான வண்டிகள் வந்துபோகும் தி.நகரில் இதைவைத்து என்ன செய்ய முடியும்?

2 நாட்களுக்குப் பிறகு... நானும் துணை ஆணையரும் இரவு 2 மணியளவில் பாண்டி பஜார் காவல் நிலையத்திலிருந்து நடந்து சென்றோம். ‘ஒரு பைக் 2 நாட்களாக இங்கேயே இருக்கிறது’ என்று எங்களைப் பார்த்த பனகல் பார்க் காவல்காரர் கூறினார். உடனே பொறி தட்டியது... பைக் 2 நாட்களாகக் கிடக்கிறது. சம்பவம் நடந்ததும் 2 நாட்களாகிறது. ஒரு பைக் வேகமாகப் போனதாக பூக்காரப் பெண் கூறினாரே... அது இதுதானோ?

விசாரணையைத் தொடங்கினோம். வண்டி உரிமையாளரிடம் கேட்டால், ஒரு வருடத்துக்கு முன்பே இதை விற்றுவிட்டதாகக் கூறினார். அவர் விற்ற இடத்துக்குப் போனபோது ஓரளவு உருப்படியான தகவல் கிடைத்தது. கொலை நடந்ததற்கு 8 நாட்களுக்கு முன், ஒரு வட இந்திய இளைஞனுக்கு அந்த வண்டியை விற்றிருக்கிறார்கள். ஆட்டோமொபைல் பதிவேட்டில் வண்டி வாங்கியவர் ‘ராம்குமார் & மன்சாவூர்’ என்று எழுதி கையொப்பமிட்டிருப்பது தெரிந்தது. கடை உரிமையாளர் மூர்த்தி வேறு எதுவும் கூற மறுத்துவிட்டார். ஆனால், அவர் எதற்கோ பயப்படுகிறார் என்பது மட்டும் புரிந்தது. அவரது மொபைல் போனுக்கு வண்டி விற்கப்பட்ட அன்று யார் யார் பேசியிருக்கிறார்கள் என அலசத் தொடங்கினேன்.

இரண்டே நாளில் எனக்கு ஒரு தபால் வந்தது. அதில் ‘*****89642 என்ற எண் யாருடையது எனப் பார்க்கவும்... இப்படிக்கு உங்கள் நண்பன்’ என்று இருந்தது. அந்த எண்ணிலிருந்து மூர்த்தி மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. இந்த விவரத்தை எங்களிடம் சொல்ல பயந்த மூர்த்திதான் கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார்! அவரைக் கேட்டவுடன் முதலில் மறுத்தாலும் பிறகு ஒப்புக்கொண்டார். ‘உண்மையைச் சொன்னால் நீதிமன்றம், சாட்சி என்று அழைப்பீர்கள். அதனால் பெயர் குறிப்பிடாமல் கடிதம் போட்டேன். அவன் இந்த நம்பரிலிருந்து பேசிவிட்டு, வந்து பைக் வாங்கினான். போரூரிலிருந்து வருவதாகக் கூறினான். இரண்டு மாதம் முன் வேறொரு பைக் வாங்கி, திரும்பவும் என்னிடமே குறைந்த விலைக்கு விற்றான்’ என்று ஏராளமான விவரங்களைக் கொட்டினார் மூர்த்தி.

மொபைல் நிறுவனத்தில் அடுத்த விசாரணை. அது ஒரு ப்ரீபெய்ட் கார்டு. பொய் முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியிருக்கிறான். சிம்கார்டு விண்ணப்பத்திலும் அதே பெயர்... அதே கையெழுத்து. இந்த எண்ணுக்கு வந்த இன்கமிங் அழைப்புகள்: அவுட்கோயிங் அழைப்புகள் அத்தனை விவரங்களையும் எடுத்தோம்.

அத்தனை எண்களிலும் அடுத்தகட்ட விசாரணை. ஆனால் பாருங்கள்... அனைத்துமே ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் பிசிஓ-க்கள்! ‘நூற்றுக்கணக்கானோர் பேசுகிறார்கள் சார்... எங்களுக்கு எப்படி அடையாளம் தெரியும்’ என்று அங்கிருந்தவர்கள் கைவிரித்துவிட்டார்கள். இந்த மொபைலில் இருந்து போரூரில் ஒரு எண்ணுக்கு மட்டும் கொலை நடந்த அன்று அவுட்கோயிங் அழைப்பு போயிருந்தது. அது ஒரு லாட்ஜ் பிசிஓ. விசாரித்தால், ‘இங்கு ரூம் எடுத்து தங்கியிருந்த ஒரு வடநாட்டுக்காரன் ரூம் காலி செய்துவிட்டதாக மேனேஜரிடம் சொல்லும்படியும், மீதிப்பணம் வேண்டாம்’ என்றும் கூறியதாகத் தெரிய வந்தது. லாட்ஜ் பதிவேட்டைப் பார்த்ததில் அதே பெயர்... அதே கையெழுத்து!

கடந்த ஒரு மாதத்தில் அந்த ஆசாமி மொபைலில் தொடர்புகொண்ட எண்களை இரவு முழுக்க ஆய்வு செய்தேன். சந்தேக மொபைலுக்கு மத்தியப்பிரதேச மாநிலம் மன்சாவூருக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமத்து லேண்ட்லைனில் இருந்து 41 இன்கம்மிங் அழைப்புகள் வந்திருந்தன. சம்பவ தினத்தன்று மட்டுமே 4 அவுட்கோயிங் அழைப்புகள் பேசப்பட்டிருந்தன. கொலை நடந்த பத்தே நிமிடங்களில் மொபைலிலிருந்து மன்சாவூருக்கு பேசப்பட்ட பிறகு, அந்த எண் உபயோகப்படுத்தப் படவில்லை. இந்த மொபைல் எண் குறிப்பிட்ட கொலை சம்பந்தப்பட்ட தொடர்புகளுக்காக மட்டும் கொலைகாரனால் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது. உபயோகப்படுத்தியது யார்? அது மட்டும் தெரியவில்லை!

பைக், மொபைல், லாட்ஜ் ஆகியவற்றில் தொடர்புடைய பதிவுகளை ஆராய்ந்ததில் ஒரு விஷயம் உறுதியானது. கொலைகார ஆசாமி மன்சாவூர்காரனாக இருக்கவேண்டும்... அவனை இயக்குபவர்களும் மன்சாவூரில் இருக்கவேண்டும். சரி இருக்கட்டும்... அவன் யார்? ஏன் வக்கீலை கொலை செய்யவேண்டும்?

(சில காரணங்களுக்காக பெயர்களும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன!)

முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் அ.கலியமூர்த்தி

முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளரான அ.கலியமூர்த்தி, தஞ்சை மாவட்டம் பூதலூரைச் சேர்ந்தவர். தமிழக காவல் துறையில் 35 ஆண்டுகள் திருச்சி, கோவை, சென்னை போன்ற இடங்களில் பணியாற்றியவர்.

அகில இந்திய காவல்துறை புலனாய்வு மற்றும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் மூன்று முறை தங்கப்பதக்கம் பெற்றவர். 2001ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உயிரைப் பணயம் வைத்துப் பிடித்ததற்காக, தமிழக முதல்வரின் வீரதீரச் செயலுக்கான தங்கப்பதக்கம் பெற்றவர். சென்னையில் தீவிரவாதிகளுடனான மோதலில் கையில் குண்டடிபட்டும், இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றதற்காக தமிழக அரசு இவருக்கு சிறப்பு பதவி உயர்வு அளித்து கௌரவித்தது. இப்போது கிராமப்புற மக்களுக்கு உதவும் நோக்கில் சொந்த ஊரில் மருத்துவமனை நிறுவி, தனது குடும்பத்தினர் மூலம் சேவை செய்து வருகிறார். மாணவர் மத்தியில் விழிப்புணர்வு உரைகளும் நிகழ்த்தி வருகிறார்.

‘‘150 ஆண்டுகால அனுபவம் பெற்ற தமிழகக் காவல்துறையில் மாபெரும் சவாலாக அமைந்த சிக்கலான வழக்குகள் ஏராளம். அவற்றின் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து தமிழக காவல்துறையின் திறமையை உலகுக்கு உணர்த்திய சில வழக்குகளில் நானும் பங்கேற்றதில் பெருமிதம். அப்படிப்பட்ட சில விசித்திர வழக்குகளை வாசகர்களோடு பகிர்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!’’ என்கிறார் கலியமூர்த்தி.
(துப்பறிவோம்!)
  அ.கலியமூர்த்தி