கல்யாண போட்டோகிராபியில் கலையழகு



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


        வாழ்வின் மிக முக்கியமான தருணம், திருமணம். கும்பலாக உறவுகள் வரிசைகட்டி நிற்க, ‘ரெடி’ என்று போட்டோகிராபர் சொன்னதும் விறைப்பாக நின்று, முறைப்போடு போஸ் கொடுத்த படங்களைத் தொகுத்து ‘திருமண ஆல்பம்’ என்று பாதுகாத்த காலம் மலையேறிப் போச்சு. திரைப்படங்களின் போட்டோ ஷூட் போல ஆல்பங்களை உருவாக்கும் கலையழகான கல்யாண போட்டோகிராபியில் ஸ்பெஷலிஸ்ட் புதுவை இளவேனில்.

அன்புச்சிறைப்பட்ட தம்பதிகளின் அன்யோன்ய தருணங்களை கேமராவில் ‘ஆயுள் சிறை’யாக்கும் இந்த போட்டோகிராபிக்கு ஏக வரவேற்பு!

‘‘கேமராதான் எனக்கு முதல் கண்’’ என கண்களில் புன்னகை மிளிரப் பேசுகிறார் இளவேனில். ‘‘சினிமா போஸ்டர் பார்த்து எனக்கு சின்ன வயசுலயே போட்டோகிராபி மேல ஆர்வம் வந்தது. கூடவே இலக்கிய ஆர்வமும். போட்டோகிராபி கத்துக்கிட்டு இருக்கும்போதே, எந்தக் காலத்துலயும் கல்யாணத்துக்கு போட்டோ எடுக்கக்கூடாதுன்னு முடிவு செஞ்சேன். ஆனா, இப்போ நான் கல்யாண போட்டோகிராபர்!

‘‘ஒரு எழுத்தாளருக்கான வலிமை, எழுத்து மட்டும் கிடையாது. பிம்பமும் முக்கியம்’’ என்கிற இளவேனில், சுந்தரராமசாமி, கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களை புகைப்படங்கள் எடுத்தவர். இந்தியாவில் எழுத்தாளர்களுக்கு புகைப்படக் கண்காட்சி நடத்திய பெருமைக்குரியவர். கி.ரா-வின் படங்களை ‘ராஜபவனம்’ என்னும் பேரில் புகைப்படப் புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறார்.

‘‘இலக்கியம் சோறு போடாது இல்லையா? பிழைப்புக்காக புதுவையில் ஒரு ஸ்டுடியோ ஆரம்பித்தேன். எந்த இடத்துக்கு வரக்கூடாதுன்னு நினைத்தேனோ, அதே இடத்துக்கு வந்தேன். கல்யாண போட்டோ எடுக்கிறது ஒரு இயல்பான விஷயம். நம்மகிட்ட வர்றவங்களோட திருமண ஆல்பத்தை புதுமையா செய்யலாம்னு முடிவு செய்தேன். தம்பதியின் சின்ன வயது புகைப்படங்களிலிருந்து இப்போதைய புகைப்படங்கள் வரை கம்போஸ் பண்ணி ஆல்பம் தயாரிக்கிறேன்.

கல்யாண விழாக்களின் எல்லா கணங்களையும் பதிவு செய்ய வேண்டும். சந்தோஷம், துக்கம், பிரிவு என எல்லாம் கலந்ததுதான் திருமணம். மணப்பெண்கள் சிலர் அழுவாங்க. பெரும்பாலும் அவங்க அழுவதை யாரும் படம் எடுக்க மாட்டாங்க. அது பிரிவினுடைய உச்சம். முக்கியமாகப் பதிவு செய்ய வேண்டியது அதைத்தான். திருமணத்துக்குப் பிறகு தம்பதியை பிக்னிக் கூட்டிப்போய், அவங்களோட அன்யோன்யத்தை பதிவு செய்வேன். அந்த ஆல்பத்தில் புதுக்கவிதைகளையும் இணைப்பேன்.

இந்தப் புகைப்படங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்க்க வைப்பவை. அதனால், திருமண புகைப்படக்கலைஞனுக்கு ஒவ்வொருத்தங்க வாழ்க்கையிலும் ரொம்ப முக்கியமான ரோல் இருக்கு. பிற்காலங்களில் எப்போதாவது அந்த தம்பதிகளுக்குள் பிரச்னை வந்து மனசு வலிக்கக்கூடும். அப்போது இந்த புகைப்படங்களைப் புரட்டிப் பார்த்தால் வலி காணாமல் போக வேண்டும்... அதில்தான் ஒரு திருமண ஆல்பத்தின் வெற்றி இருக்கிறது. 

போட்டோகிராபி என்பது சந்தோஷத்துக்கான வெளிப்பாடோ, ஆவணமோ மட்டுமல்ல. அது வரலாறு. திருமணத்தின்போது பரிமாறப்பட்ட உணவுகளோ, மண்டபங்களோ எதுவும் இறுதிவரை கணக்கில் வராது. வாழ்க்கை முழுவதும் நம்மோடு இருப்பது புகைப்படங்கள் மட்டும்தான். காஸ்ட்லியா இருந்தாலும் தேங்கிக் கிடக்கிற நம்மைத் தாங்கி நிற்கிற ஒரு முக்கிய விஷயமா அதைப் பார்க்கணும். சிலர் சாப்பாடு, மண்டபம் எல்லாத்துக்கும் தாராளமா செலவழிப்பாங்க. ஆனா போட்டோகிராபர்கிட்ட பேரம் பேசுவாங்க. அந்த நிலைமையை என் போட்டோகிராபி மாத்திட்டு இருக்கு. Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

இலக்கியம் தெரிஞ்சதாலதான் கலைப்பூர்வமா படங்களை எடுக்க முடியுது. நம்ம தாத்தா காலத்து கல்யாண போட்டோங்கிறது, ஸ்டுடியோவுல போய் தாத்தாவும் பாட்டியும் கொஞ்சம் நெருக்கமா நின்னு எடுத்துக்கிட்ட பிளாக் அண்டு ஒயிட் புகைப்படம்தான். அப்பா காலத்துல, புகைக்கு நடுவே களைப்பான முகங்களோட விறைப்பான உறவுகள் எடுத்துக்கிட்ட போட்டோக்கள் ஆல்பம் ஆச்சு. காலம் மாறிக்கிட்டு இருக்கு. கல்யாண ஆல்பம் சந்தோஷம் தர்றதா இருக்கணும். அந்த சந்தோஷம் அவங்க வாழ்க்கை முழுவதும் பயணிக்க எனது புகைப்படங்கள் எப்போதும் உதவியா இருக்கும்’’ என்கிற இளவேனில் செல்போனில் ரிங்டோனாக ஒலிக்கிறது இந்தப்பாடல்...

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துகள்!  
 ஆர்.எம்.திரவியராஜ்