மாப்பிள்ளை சினிமா விமர்சனம்





                     வில்லனுக்கு எதிரான சவாலில் ஹீரோ ஜெயிக்கும் கதைகள் பெரும்பாலும் வெற்றிப்படங்களாகவே இருக்கும். அதிலும் வில்லிக்கு எதிராக ஹீரோ சவால்விட்டு வென்றால் அந்தப்படம் ஹிட் லிஸ்ட்டில் இடம்பெறும். அந்த வில்லியும் ஹீரோவின் மாமியாராக இருந்து, ஹீரோ மாப்பிள்ளையாக இருந்துவிட்டால் அது சூப்பர் ஹிட் படத்துக்கான சூத்திரம். ஏற்கனவே சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துப் பெருவெற்றி பெற்ற படக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, தனுஷுக்கேற்ற இளமை ததும்பும் திரைக்கதை அமைத்து சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் சுராஜ்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineநெற்றியில் திருநீறு அணிந்த தனுஷின் அறிமுகம் சற்றே வியப்பைத் தந்தாலும் அவரது நிஜக்கேரக்டரைச் சொல்லும் ஃபிளாஷ்பேக் ஆரம்பித்ததும் படம் புல்லட் ரயிலாகிறது. அவரது அழும்புகள் தாளாமல் எம்.எல்.ஏ., போலீஸ் அதிகாரி உள்ளிட்ட ஊர்ப் பெரியமனிதர்கள் ஒன்றுசேர்ந்து அவரை வெளியூருக்கு அனுப்பும்படி அவரது பெற்றோரிடமே வேண்டும் காட்சி அமர்க்களம். வந்த இடத்தில் விவேக்கின் காதலுக்கு உதவப்போய் ஹன்சிகாவின் காதல் வலையில் அவர் சிக்குவது அட்டகாசம். ‘‘என்னை எந்த அளவுக்கு நல்லவன்னு நினைக்கறீங்களோ அந்த அளவுக்கு நான் கெட்டவன்; என்னை எந்த அளவுக்கு கெட்டவன்னு நினைக்கிறீங்களோ அந்த அளவுக்கு நான் நல்லவன்...’ என்று மாமியார் மனீஷாவிடம் அவர் பஞ்ச் வைத்துப் பேசும் காட்சியிலும், வருவது ஹன்சிகா என்று நினைத்து மனீஷாவை தனுஷ் ‘அலேக்’ செய்யும் காட்சியிலும் தியேட்டர் அதிர்கிறது.

தனுஷிடம் சவால் விடும் மாமியாராக வரும் மனீஷாவின் இறுக்கமும், தனுஷின் திட்டங்களை உடைத்த நிலையில் காட்டும் இறுமாப்பும் அசத்தல். விமானத்திலும், ஹம்மர் காரிலுமாக வரும் கோடீஸ்வரி மிடுக்கில் மிரட்டும் அவர், ‘‘சுகர் வந்தவன் ஸ்வீட்டுக்கு ஆசைப்படுறதும், வீட்டோட மாப்பிள்ளை மரியாதைக்கு ஆசைப்படுறதும் தப்பு...’’ என்று தனுஷுக்கு எதிராக பஞ்ச் வைப்பதிலும் ரசிக்க வைக்கிறார்.

ஆரம்ப காலத்துக் குஷ்புவையும், சிம்ரனையும் கலந்து உருவாக்கிய வெண்ணெய்ச் சிற்பம் போல் தெரிகிறார் ஹன்சிகா மோத்வானி. தனுஷிடம் விடாப்பிடியாகக் காதலைச்சொல்லி அவர் ஒத்துக்கொள்ளும் காட்சியில் காட்டும் துள்ளலிலும், காதலித்தபின் காட்டும் சின்னச்சின்ன சிணுங்கல்களிலும் அவரிடம் நடிப்பைத் தேடும் அவசியமே தோன்றாமல் ரசிக்க நேரிடுகிறது.

திரைக்கதையின் அடிநாதமான காமெடிக்கு விவேக்கின் பங்களிப்பு நூறு விழுக்காடு. முள்முடி ஹேர் ஸ்டைலுடன் நமீதா ரசிகர் மன்றத் தலைவர் ‘சைல்ட் சின்னா’வாக வரும் அவர், ‘‘உடல் மண்ணுக்கு, உயிர் நமீதாவுக்கு... சான்ஸ் கிடைச்சா உடலும் நமீதாவுக்கு...’’ என்று கண்ணடித்துப் பேசுவது அவருக்கே உரித்தான ‘உள்குத்து’ நையாண்டி. சைல்ட் சின்னா திடீரென்று கதையில் காணாமல் போய் மனீஷாவை மிஞ்சிய கோடீஸ்வரராக மீண்டும் அவர் அறிமுகமாகும்போது கைதட்டல்கள் நிறைகின்றன. அவரது சகாக்களான செல் முருகன், சத்யன், பாலாஜி கோஷ்டியும் தங்கள் பங்குக்கு ‘சைட் டிஷ்’ சேர்க்கிறார்கள்.

ஜோசியராக வரும் மனோபாலாவின் ஆசிரம பிளாஷ்பேக்குகளும், அவற்றை சி.டியில் பதிந்து தனுஷ் பிளாக்மெயில் செய்வதும் காமெடி சேனல்களை ஆக்கிரமிக்கப்போகும் காட்சிகள். மனீஷாவுக்கு உதவும் வில்லன் ஆசிஷ் வித்யார்த்தியும் கிளைமாக்ஸில் நகைச்சுவைக்குத் தப்பவில்லை என்பது இயக்குநர் சுராஜின் காமெடி ட்ரீட்மென்ட்டுக்குக் கிடைத்த வெற்றி.
பாடல்களில் துள்ள வைக்கும் மணிசர்மாவின் இசையில் ‘என்னோட ராசி நல்ல ராசி...’ ரீமிக்ஸ் பட்டையைக் கிளப்புகிறது. எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு திரையில் வண்ணக்கோலம் இட்டிருக்கிறது.

மாப்பிள்ளை - அனைவரையும் கவரும் ‘மாஸ்’ பிள்ளை..!
 குங்குமம் விமர்சனக்குழு