கம்பு சுத்தி கலக்குவது யாரு?



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                    ந்தியக் கலை, பண்பாடு மீது வெளிநாட்டினருக்கு எப்போதுமே ஈர்ப்பு உண்டு. இப்போது நமது பாரம்பரிய தற்காப்புக்கலைகள் மீதும் அவர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதோ... தமிழர் விளையாட்டான சிலம்பாட்டத்தின் மீது பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் சிலருக்கு மோகம்!

புதுவை பூரணாங்குப்பம் மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புறக்கலை வளர்ச்சிக்கழகத் தலைவர் பழனிவேல். இவரிடம் பிரான்சைச் சேர்ந்த பத்ரிக் டெலுனல், ஜேன் பாப்ஸ்டிக் ஸ்விபெல் ஆகியோர் சிலம்பம் கற்று வருகின்றனர்.

‘‘அடிப்படையில் நான் ஓவியர். 2 மாதங்களுக்கு முன் புதுச்சேரி வந்தபோது தமிழர்களின் பாரம்பரியக் கலையான சிலம்பாட்டம் பற்றி தெரிந்துகொண்டேன். சாதாரணமான ஒரு கம்பைக்கொண்டு இவ்வளவு சிறப்பான தற்காப்பு சண்டையைக் கண்டுபிடித்த தமிழர்களை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது. கத்தி, வாள், கல் என எத்தனை ஆயுதங்களால் தாக்கினாலும், ஒற்றைக்கழியால் தடுத்து எதிரிகளை விரட்ட முடிகிறதே! மீண்டும் ஒருமுறை இந்தியா வந்து மேலும் பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டு, எங்கள் நாட்டில் சிறப்பான பயிற்சி அளிக்கப் போகிறேன். சிலம்பாட்டத்துக்கு ராயல் சல்யூட்!’’ என்கிறார் ஆவேசமாக கம்பு சுற்றும் 22 வயது ஜேன் பாப்ஸ்டிக் ஸ்விபெல்.

பத்ரிக் டெலுனல் பிரான்ஸில் 2 ஆண்டுகள் தேக்வாண்டோ பயிற்சி பெற்றவர். ‘‘வயது 57 ஆகி விட்டதே... இனி அந்தரத்தில் ஜம்ப் பண்ணி நம்மால் சிலம்பாட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. சிலம்பாட்டத்தை நேரில் பார்த்தபோது தயக்கம் போயே போச்சு. 20 வயது இளைஞனாக மாறி கையில் கம்போடு களத்தில் இறங்கி விட்டேன். தமிழர்களின் வீர விளையாட்டை கற்றுக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்’’ என்கிறார் பத்ரிக்.

இவர்களோடு, போலந்தை சேர்ந்த கரோலினா என்ற 25 வயது பெண்ணும் பழனிவேலிடம் சிலம்பம் கற்றுக்கொள்கிறார்.

‘‘இதுவரை ஆயிரம் பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். சிலம்பத்தில் குறவஞ்சி, நாகம் பதினாறு, கள்ளப்பத்து, துலுக்காணம் உள்ளிட்ட பல வகை உண்டு. குத்து, சுருள், மான்கொம்பு, பொடிகுச்சி, தீப்பந்தம் என விளையாட்டுகளும் உண்டு. இதில் குறவஞ்சி வகை சிலம்பு மக்களை அதிகம் கவர்வதால், சினிமாவிலும் பயன்படுத்தப்படுகிறது.

வெளிநாட்டினரின் சிலம்ப ஆர்வம் ஆச்சரியப்பட வைக்கிறது. அவர்கள் ஆர்வம் காட்டுவதால் இலவசமாகவே கற்றுக்கொடுக்கிறேன்’’ என்கிறார் பழனிவேல்.
சி.பரமேஸ்வரன்
படங்கள்: குரூஸ்தனம்