வந்த ஸ்ரேயா... வராத சமீரா!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

 
    28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை மீட்ட இந்திய கிரிக்கெட் அணி மீது பொழியும் வாழ்த்து, பரிசு மழை நின்றபாடில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆனந்தத்தாண்டவம் ஆடுகிறார்கள் ரசிகர்கள். அதற்குள் அடுத்த கிரிக்கெட் திருவிழா, ஐ.பி.எல் சீசன் 4. போன வாரம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒன்றாக நின்று பார்ட்னர்ஷிப் தந்தார்கள் டோனியும், கம்பீரும். ஐ.பி.எல் முதல் போட்டியில் இரண்டு பேரும் எதிர் எதிர் அணி கேப்டன்களாக முட்டிக் கொள்கிறார்கள்.

 களங்கள் வேறு; கணக்குகளும் வேறு! போனமுறை வென்ற கோப்பையை இப்போதும் தக்கவைத்துக் கொள்ள விறுவிறுப்பாக களம் இறங்குகிறது சூப்பர் கிங்ஸ் படை...

லலித் மோடி உட்பட பல தலைகள் இந்த ஆண்டு மிஸ்ஸிங். கொல்கத்தா ரசிகர்கள் எவ்வளவோ போராடியும் கங்குலிக்கு இடமில்லை. நைட் ரைடர்ஸ் அணிக்கு கம்பீர் தலைமையேற்கிறார்.

74 போட்டிகளாக 12 இடங்களில் 51 நாட்கள் நடக்கும் சீசன்&4ல் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. இந்த வருட வரவுகள் புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ். இந்த வருடம் அதிக விலைக்கு வாங்கப்பட்டதும் புனே வாரியர்ஸ்தான். 1702 கோடி கொடுத்து இந்த அணியை வாங்கியிருக்கிறது சகாரா குழுமம்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஏலம் எடுக்கும் முறையிலும் போட்டி முறையிலும் சிலச்சில மாற்றங்கள் செய்யப்பட்டதால் சில வீரர்கள் அணி மாறியிருக்கிறார்கள். சிலருக்கு வாய்ப்பு பறிபோயிருக்கிறது.
துவக்க விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னை வந்து இறங்கிய டோனிக்கு உலகக் கோப்பைக்கும் சேர்த்துக் கிடைத்தது உற்சாக வரவேற்பு.

 தோளில் தூக்கி வைத்து ஏர்போர்ட்டை வலம்வராத குறைதான். மற்றபடி அந்த இரவுப் பொழுதிலும் திரண்டு வந்து வரவேற்றார்கள் ரசிகர்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர்கள் சார்பிலும் பெரிய பரிசுகள் வழங்கப்பட்டன. புதிய ஸ்பான்சரான கல்ஃப் ஆயில் நிறுவனம் கார் ஒன்றை அளித்து கவுரவித்தது. ஒரு வி.வி.ஐ.பி. இல்லத்தில் விருந்துக்கும் டோனி தம்பதிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாம்.

ஆரம்பமும் ஃபைனலும் நடக்கும் இடம் என்பதால் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் ஏகப்பட்ட விஸ்தரிப்புகள். ஆனாலும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்த தொடக்க விழாவில் ரசிகர் தலைகளால் திணறியது மைதானம்.

 200 பேர் கொண்ட டீம் ஒன்று ஒருவாரத்துக்கு முன்பே சென்னை வந்து இறங்கிவிட்டது. வீரர்கள் ஒரு புறம் நெட் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்க, மைதானத்தின் இன்னொருபுறம் இவர்கள் டான்ஸ் பயிற்சி.

தொடக்க விழாவின் ஹைலைட்டே ஷாருக் கானும் ஸ்ரேயாவும் இந்தி, தமிழ் பாடல்களுக்கு ஆட்டம் போட்டதுதான். ‘அப்படி போடு’, ‘நாக்கமுக்க’ பாடல்களுக்கு அவர்களின் ஆட்டம் ரசிகர்களுக்கு செம விருந்து!

 சமீரா ரெட்டி துவக்க விழாவில் ஆடுவதாக இருந்தது. ஆனால் தொடர்ச்சியான ஷூட்டிங் காரணமாக அவரால் ஆடமுடியவில்லை. தன்னை வாழ வைக்கும் தமிழக ரசிகர்கள் முன்னால் ஆட முடியாத கவலையை வருத்தத்தோடு பலரிடமும் பகிர்ந்துகொண்டார் அவர்.  

கடந்த ஐ.பி.எல் முடிந்ததும் சென்னை போலீசில் கிரிக்கெட் வாரியமே லலித் மோடி மீது புகார் கொடுத்தது. அவர்களும் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பினார்கள். ‘இவர்கள் என்னை விசாரிக்க முடியாது’ என்று கிர்ர்ரடிக்க வைத்து ஸ்டேட்மென்ட் விட்டார் மோடி. சம்மன் சம்மனாகவே இருக்கிற நிலையில், இந்த ஆண்டு போட்டிக்கு போலீஸ் சப்போர்ட் எப்படியிருக்கும் என்கிற கவலை வாரியத்துக்கு. ஒருசில இடங்களில் (ஜெய்ப்பூர்) போலீசார், ‘இவர்களின் வணிக நோக்கத்துக்கு நாங்கள் ராப்பகலாக கிடக்க வேண்டியிருக்கு’ என்று அலுத்துக் கொண்டதோடு, பாதுகாப்புக்காக கட்ட வேண்டிய தொகையையும் அதிகப்படுத்தி விட்ட நிலையில் சென்னை போலீஸ் என்ன சொல்லுமோ என்றிருந்தார்கள்.

 ஆனாலும் பாதுகாப்பை பக்காவாக பார்த்துக் கொள்வதாக சொல்லியிருக்கிறது சென்னை போலீஸ். ‘சென்னையில் இரண்டாவது போட்டி நடப்பதற்கு முன்பே தேர்தல் முடிந்து விடுவதால் நோ ப்ராப்ளம்’ என்கிறார் கமிஷனர் ராஜேந்திரன்.

 ஃபோர், சிக்ஸரின்போது சியர்ஸ் சொல்கிற கேர்ள்ஸ்களுக்கு எந்த அணியும் பஞ்சம் வைக்கவில்லை. அழகின் ரசிகரான விஜய் மல்லய்யா தனது பெங்களூரு டீமுக்கு புது அழகிகளை இறக்குமதி செய்திருக்கிறார்.

கோப்பையை வென்றதும், காணிக்கை தருவதற்காக முடியைக் கத்தரித்த டோனி, சென்னையில் இறங்கியதும் வெயிலை அனுபவித்துவிட்டு சொன்ன கமென்ட்: ‘முடியை வெட்டிக்கிட்டது நல்ல முடிவுதான்... எவ்ளோ வெயில்!’  

 போட்டிக்கு இடையில் கிடைக்கும் கேப்பில் மனைவி சாக்ஷியைக் கூட்டிக்கொண்டு காஞ்சி புரம் சென்று பட்டுப்புடவை எடுத்துத் தரும் பிளானில் இருக்கிறார் டோனி. கடந்த காலங்களில் பைக்கில் ராத்திரி ரவுண்ட் அப் வந்து சென்னையைச் சுற்றிப் பார்த்தவருக்கு இந்த ஆண்டு மனைவியுடன் சுற்றும் ஐடியாவும் இருக்கிறதாம். போலீஸ் ரூட் கிளியர் பண்ணித் தந்தால் நடக்கலாம்.

 கிரிக்கெட் தொடர்பான சுமார் 20 வகையான பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளது ஐ.பி.எல் நிர்வாகம். போட்டி நடக்கும் இடங்களில் ரசிகர்களுக்குக் கிடைக்கின்றன இவை.
அய்யனார் ராஜன்
படங்கள்: புதூர் சரவணன், கிஷோர்ராஜ், சுந்தர்