பட்டிமன்றமும் இந்த பாப்பையாவும்






                 புராணம், இலக்கியங்கள்ல இருந்து விலகி, சமூகப் பிரச்னையை தலைப்பாக்கி நடத்தப்பட்ட முதல் பட்டிமன்றம், மதுரை மேலப் பொன்னகரத்தில நடந்தது. ‘குடும்பத்துக்கு பெருமை சேர்க்கிறது கணவனா? மனைவியா?’ங்கிற அந்த தலைப்பை ஏத்துக்க முதல்ல எங்க பேச்சாளர்களே தயாரா இல்லே. அவுகளைச் சமாதானப்படுத்தவே தனியா ஒரு பட்டிமன்றம் நடத்த வேண்டியிருந்துச்சு!

எங்க வீட்டில இருந்து ரெண்டு தெரு தள்ளித்தான் மேலப் பொன்னகரம். நடந்தே கிளம்பிட்டோம். மேடையை நெருங்கினோம் பாருங்க... இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு. தெருவையே அடைச்சு உக்காந்திருக்கு கூட்டம். அதிலயும் பாதிக்கு மேல பெண்கள்.

அந்தக் காலகட்டத்தில, பட்டிமன்றம் பாக்க பெண்கள் அதிகமா வரமாட்டாங்க. குன்றக்குடி சாமி பேசுனார்னா ஓரளவுக்கு பெண்கள் கூட்டம் வரும். வந்தாலும், அவரோட தொடக்க உரையை மட்டும் கேட்டுட்டு அங்கேயே படுத்துத் தூங்கிருங்க. முதன்முறையா, இப்பத்தான் ஆர்வத்தோட இவ்வளவு பெண்களை கூடியிருக்கறதை பாக்குறேன். என்னோட வந்த பேச்சாளர்களுக்கும் அது புது அனுபவம்தான். பெண்கள் கூட்டத்தைப் பாத்துட்டு எங்க பெண் பேச்சாளர்களே மிரண்டு போனாங்க!

முதல்ல ஒரு முன்னுரையை மட்டும் குடுத்துட்டு, பேச்சாளர்களை எழுப்பி விட்டு பட்டிமன்றம் போற போக்கை கவனிச்சேன். எல்லாப் புள்ளைகளும் இலக்கியத்தில இருந்து எடுத்து வீராவேசமா பேசுதுக. ஆனா, ‘மனைவியே’ன்னு ஆண்கள் பேசுறதையும், ‘கணவனே’ன்னு பெண்கள் பேசுறதையும் மக்கள் ஏத்துக்கலே. அப்பவே முடிவுக்கு வந்துட்டேன். இனிமே ‘கணவனே’ன்னு ஆண்கள்தான் பேசணும். ‘மனைவியே’ன்னு பெண்கள்தான் பேசணும்.

நல்லவேளையா, கூட்டம் கலையலே. தீர்ப்புலதான் பட்டிமன்றத்தைத் தூக்கி நிறுத்தணும்னு முடிவு பண்ணி தயாராகிட்டேன். அடித்தட்டு குடும்பத்தில வாக்கப்பட்ட என் அம்மா, என் அக்காக்கள் பட்ட கஷ்டங்கள், நான் கேள்விப்பட்ட, பக்கத்தில பார்த்தறிஞ்ச குடும்பங்களோட அனுபவங்கள் எல்லாத்தையும் ஒண்ணு திரட்டுனேன். குடும்பத்தில ஆண்கள் பண்ற சேட்டைகளையும், அதை சமாளிச்சு குடும்பத்தை தூக்கி நிறுத்த பெண்கள் படுற பாட்டையும் இயல்பான மொழியில பேசுனேன். பேச்சோட பேச்சா சில சம்பவங்களையும் சொன்னேன்.

புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த ஒரு தம்பதி. அந்த கணவன் குடிகாரப்பய. மனைவிகிட்ட வருமானத்தை முழுசா தர்றதில்லே. மனைவி கேட்டாலும், ‘அப்பிடிக் கேக்குறதே தப்பு’ன்னு அடிக்கிறான். ‘மரியாதையா விடியிறத்துக்குள்ள உன் அப்பன் வீட்டுக்கு ஓடிப்போயிரு... விடியக்காலம் வரைக்கும் இருந்தின்னா கொன்னேபுடுவேன்’னு மிரட்டுறான். அடியைப் பொறுத்துக்கிட்டு அழுதுகிட்டே அவ பாட்டு பாடுறா.

‘அறியாத ஊருலயும்
தெரியாம வாக்கப்பட்டேன்
அடியாதீய, புடியாதீய
விடியக்காலம் ஓடிப்போறேன்...’

காலைப்பொழுது புலர்ந்திருச்சு... அவ சேலை, துணிய எடுத்துக்கிட்டு பொறப்புட்டுப் போறா. வழியில விவசாயிகள் உழவு செஞ்சிக்கிட்டு இருக்காக. அவுகளைப் பாத்துட்டு,

‘ஒத்தைப் பனையோரம்
உழுகிற ஞாயமாரே...
கத்திக்கிட்டே போறான்னு
என் கணவன்கிட்ட
சொல்லிருங்க’ன்னு பாடி அழுவுறா...

நான் இந்தப் பாட்டை ராகம் போட்டுச் சொல்றபோது, பட்டிமன்றத்தை கேட்டுக்கிட்டிருந்த பொம்பளைகளும் ‘ஹோ’ன்னு கத்தி அழுவுதுக. இந்தப் பக்கம் பாக்குறேன். பேச்சாளர்கள் கண்களும் குளம் கட்டிக் கிடக்கு. எந்த ஆட்கள் இந்த தலைப்பே வேணான்னு சொன்னாகளோ, அந்த ஆட்களோட கண்களும் கசிஞ்சு உருகுது.

கடைசியா, ‘மனைவிதான்யா வீட்டுல நடக்கிற சகலத்துக்கும் பொறுப்பு, அவளாலதான் குடும்பத்துக்குப் பெருமை’ன்னு தீர்ப்பைச் சொல்லி தூக்கி நிறுத்தின உடனே, கீழே உக்காந்திருந்த பெண்களுக்கு ஏற்பட்ட ஆனந்தத்தைப் பாக்கணுமே... எல்லாப் புள்ளைகளும் என்னைக் கையெடுத்துக் கும்பிடுதுக. ஒரு தகப்பனுக்கும் சகோதரனுக்கும் காட்டுற நன்றி அந்த கும்பிடல்ல தெரிஞ்சுச்சு.

இதுதான் பட்டிமன்றம், குடும்பங்களுக்குள்ள நுழைஞ்ச கதை. பல முன்முயற்சிகளுக்கு காரணமா இருந்தது, மேலப் பொன்னகரம் காளியம்மா கோயில் மேடைதான். அதுக்குப்பிறகு கிராமம் கிராமமா இந்த தலைப்பைப் போட்டோம். பெண்கள் நிறைய வரத்தொடங்கினாங்க. அதே மாதிரி திருவிழாவுக்கு நன்கொடை குடுக்குறவங்க, ‘அந்த ஐயா வர்றாரா, அந்த தலைப்புல பட்டிமன்றம் போடுவீங்களா’ன்னு கேட்டுட்டு பணம் குடுக்கிற நிலைமையும் ஏற்பட்டுச்சு. மதுரையில மட்டும் இந்தத் தலைப்பை வார்டு வார்டா பேசியிருக்கோம். பலபேரு, ‘எங்க வீட்டு விஷயம் உங்களுக்கு எப்பிடிய்யா தெரியும்? அப்படியே பேசினீகளே...’ன்னு ஆச்சரியமா கேப்பாக. சிலபேரு, ‘நீங்க எங்க குடும்பக் கதையைத்தான் பேசுனீங்க’ன்னு கடிதம் எழுதுவாங்க. பேசி முடிச்சிட்டு இறங்கி வரும்போது, ‘நீ என்னையத்தான்யா பேசுனே’ன்னு சிலபேரு சண்டைக்கே வருவாக!

பெண்கள் பட்டிமன்றத்துக்கு பார்வையாளர்களா கூட வர விரும்பாத காலகட்டத்தில பேச்சாளர்களா வந்த பெண்களைப் பத்தியும் சொல்லியாகணும். குன்றக்குடி சாமிதான் அந்தப் புரட்சியையும் செஞ்சார். அந்தக் காலகட்டத்தில அரசியல் கூட்டங்கள், சமயக்கூட்டங்களுக்கு சில பெண்கள் போனாங்க. ஆனா, பட்டிமன்றத்துக்கு யாரும் வரலே. பெண்கள் பேச வந்தாலாவது, பாக்க பெண்கள் கூட்டம் வராதாங்கிற எதிர்பார்ப்புலதான், சாமி பெண் பேச்சாளர்களைத் தேடித்தேடி கண்டுபிடிச்சார். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட பெண்கள்தான் சக்திபெருமாள், கோ.பா.தாமரை, ராஜம் மரகதம்.

தாமரையும் ராஜம் மரகதமும் பள்ளிக்கூட ஆசிரியர்கள். சக்திபெருமாள் கல்லூரிப் பேராசிரியை. இவுகளுக்குப் பின்னாடி வந்த பட்டிமன்ற பெரும்சொத்து புலவர் காந்திமதியம்மா. பட்டிமன்றத்தோட வளர்ச்சியில, என்னோட சேத்து இவங்க அத்தனை பேருக்கும் பெரிய பங்களிப்பு இருக்கு.

இப்பத்தான் இருக்கிற இடத்துக்கே வந்து கார்ல அழைச்சுக்கிட்டுப் போயிட்டு, கொண்டுவந்து விடுறாங்க. அப்போ பஸ்ஸுதான். அதுவும் சில கிராமங்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குத்தான் பஸ் இருக்கும். அதுக்காக இரவுப் பட்டிமன்றத்துக்கு மதியமே கிளம்பிப்போய் ஏதாவது மரத்தடி, பள்ளிக்கூடத்தில தங்கியிருந்துட்டு பேசிட்டு வந்த அனுபவமும் நிறைய இருக்கு.

சில ஊர்கள்ல சாப்பாடு கிடைக்காது. வரும்போதே சாப்பிட்டு வந்துருங்கன்னு சொல்லுவாங்க. ஆறரை மணிக்கு சாப்பிட்டுப் போயி இரவு முழுவதும் எப்படி பசி தாங்குறது? சில ஊருகள்ல டீயும் பன்னும் வாங்கித் தருவாங்க. அப்போ இளமையான வயசு. பேசுறதுல இருந்த மோகம், உற்சாகம் எல்லாம் சேந்து தாக்குப் புடிச்சுச்சு!

சில ஊருகளுக்கு பஸ்ஸே போகாது. சோழவந்தான் பக்கத்தில ஒரு கிராமத்துக்கு 8 கிலோமீட்டர் ஒத்தையடிப் பாதையில நடந்தே போயி பேசிட்டு வந்திருக்கோம். எங்ககூட பெண்களும் வந்தாங்க. சில ஊருகள்ல சைக்கிள்ல வச்சு கூட்டிக்கிட்டுப் போவாங்க. நாகலாபுரம் பக்கத்தில ஒரு பட்டிமன்றத்துக்கு மாட்டு வண்டியில கூட்டிக்கிட்டுப் போனாங்க. டிராக்டர்ல கூட போயிருக்கோம்.   

பெரும்பாலும் பள்ளிக்கூடத்திலதான் தங்க வைப்பாங்க. கரன்ட் கூட இருக்காது. காடாவிளக்கு, பெட்ரோமாக்ஸ் விளக்குதான் வைப்பாங்க. எங்களைவிட பெண்பிள்ளைகள்தான் ரொம்ப சிரமப்படுவாங்க. உடை மாத்தக்கூட சங்கடமா இருக்கும். பாத்ரூம் வசதியிருக்காது.

விளாத்திகுளம் பக்கத்தில ஒரு கிராமத்தில பட்டிமன்றம். பட்டிமன்றம் முடிஞ்சதும் பள்ளிக்கூடத்தில தங்க வச்சிட்டாங்க. லைட் வசதிகூட இல்லே. பயங்கர இருட்டு. காந்திமதியம்மா உயரமான தாழ்வாரத்தில இருந்து தவறி கீழே விழுந்திட்டாங்க. கால்ல பயங்கரமான அடி. அந்த வலியைத் தாங்கிக்கிட்டுத்தான் மதுரை வந்து சேந்தாங்க.

சில ஊருகள்ல மரத்தடியில கயித்துக்கட்டிலைப் போட்டு, உக்காருங்கப்பான்னு சொல்லிருவாங்க. தென்காசிக்குப் பக்கத்தில ஒரு கிராமத்தில ஏற்பட்ட அனுபவம் வித்தியாசமானது. எங்களை அழைச்சிருந்த ஊர் பெரியவர் வீட்டுக்குப் போனோம். எங்களை வரவேற்று உபசரிச்ச முறையே சரியில்லை. வெளிப்புற மாடியில உக்கார வச்சிருந்தாங்க.

பக்கத்தில இருந்த ஒரு சின்னக் குடிசைக்கு கூட்டிக்கிட்டுப் போய் சாப்பாடு போட்டாங்க. உள்ளே போய் பாத்தா அது மாட்டுத் தொழுவம். அப்பவே ஓரளவுக்கு நான் புரிஞ்சுக்கிட்டேன். ‘நம்மை ரொம்ப கீழா நினைக்கிறாங்க’. கொஞ்சம் யோசனைதான் எனக்கு! ஆனா, வேற வழியில்லே...

சாப்பாடு முடிஞ்சுச்சு. கொஞ்ச நேரம் படுக்கலாம்னு யோசிச்சோம். எனக்கு அந்த பெரியவர்கிட்ட பேச விருப்பமில்லை. தமிழ்க்குடிமகன் எங்களோட வந்திருந்தார். அவர் போயி, ‘அய்யா... ரெண்டு பாய் குடுத்தா போட்டு படுத்துக்குவோம்’னு சொன்னாரு. அப்ப அந்த ஆளு, எங்களை ஒருமாதிரி ஏற இறக்கப் பாத்தாரு. ‘இப்பிடியே நேரா நடந்து போனீங்கன்னா, அகலமான குளக்கரை இருக்கு. கரைக்குப் பக்கத்தில நிறைய மரம் இருக்கு. அந்த மரநிழல்ல துண்டை விரிச்சுப் படுத்தீங்கன்னா நல்லா காத்தும் வரும்... தூக்கமும் வரும். அப்பறம் காலாற வெளியே போயிட்டு முகத்தைக் கழுவிட்டு, துண்டால தொடச்சிட்டு வந்தீங்கன்னா பட்டிமன்றத்தைத் தொடங்கிடலாம்’னாரு. என்ன செய்ய? விதியை நொந்துக்கிட்டு, குளக்கரை மரத்தடியில படுத்து, சிரிச்சுச் சிரிச்சு எங்க மனசை ஆத்திக்கிட்டோம்.

இப்படி என்னோட 50 வருட பட்டிமன்ற வாழ்க்கையில இதுமாதிரி ஏகப்பட்ட கசப்புகளும் இருக்கு; அவமானங்களும் இருக்கு. அதையும் தாண்டி இந்த தமிழுக்காக அலைஞ்ச அலைச்சல்ல, பெருமையா பேசிப் பகிர்ந்துக்க வேண்டிய செய்திகளும் நிறைய இருக்கு...

அடுத்த வாரம் சந்திப்போமா!
சாலமன் பாப்பையா