கற்றிலாடிய பாச தீபம்...



 Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

கடந்த வாரம் மாரடைப்பால் இயற்கை எய்திய நடிகை சுஜாதா தமிழில் நடித்த முதல் படம் ‘அவள் ஒரு தொடர்கதை’. கடைசியாக நடித்த படம் ‘வரலாறு’. இளம் வயதில் அவர் மேடையில் நடிக்க ஆரம்பித்தது சினிமாவில் ஒரு தொடர்கதையாகி தென்னிந்தியத் திரையுலகில் முப்பது வருடங்களுக்குக் குறையாத வரலாறு படைத்ததைச் சொல்வது போலிருக்கின்றன அவரது முதலும், கடைசியுமான படங்கள்.

தென்னிந்திய மொழிப்படங்களில் மூன்று செஞ்சுரிகள் போட்ட சுஜாதா நடித்துப் பெரு வெற்றி பெற்ற ‘அன்னக்கிளி’யின் நாயகன் சிவகுமார். சுஜாதாவுடன் மட்டும் 12 படங்களில் ஜோடி சேர்ந்தவர். சுஜாதாவுடனான நினைவுகளை அவர் பகிர்ந்து கொண்டபோது அதுவே ஒரு அழுத்தமான திரைக்காவியம் போலிருந்தது...

‘‘எந்த ஒரு நடிகையும் தான் நடிச்ச படங்கள் பெரிய வெற்றியடைஞ்சு தனக்குப் புகழும் செல்வமும் குவியணும்னுதான் நினைப்பாங்க. ஆனா தன் ஒவ்வொரு படத்தையும், அதுவே தன் கடைசிப்படமா இருக்கணும்னு எதிர்பார்த்த அபூர்வ நடிகை சுஜாதா. அதுக்குக் காரணம், திருமணத்துக்கு முன்னால் இருந்த அவங்க சொந்த வாழ்க்கை சோகங்கள். ஏதாவது ஒரு சாமானியனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சினிமாவை விட்டு ஒதுங்கிடணும்னு நினைச்ச சுஜாதாவை திரையுலகம் ரொம்பவே நேசிச்சது. தோல்வியை எதிர்பார்த்த அந்த நடிகையை வெற்றியும், புகழும், செல்வமும் போட்டி போட்டுத் துரத்திச்சு. இதோடு போதும்னு உச்சமா சுஜாதா நினைச்ச படம் ‘அன்னக்கிளி’ன்னு சொன்னா நம்பறதுக்குக் கஷ்டமா இருக்கும். ஆனா அந்த ‘அன்னக்கிளி’தான் கறுப்பு வெள்ளை சினிமா வரலாற்றிலேயே வசூலை அள்ளிக் குவிச்சது.

கோயம்புத்தூர்ல ஒரே தியேட்டர்ல 204 நாள் தொடர்ச்சியா ஓடிய படம் ‘அன்னக்கிளி’. திருப்பூர்ல ரிலீஸ் ஆன தியேட்டர்ல 90 நாள் ஓடி, அங்கேர்ந்து மாற்றிப்போட்ட தியேட்டர்ல 120 நாள் தொட்டு புது சரித்திரம் படைச்சது. முதல் முதல்ல முழுக்க அவுட்டோர் ஷூட்டிங்ல எடுத்தது, இளையராஜாவோட இசைன்னு வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தது வேறு விஷயம்.

ஆனா சுஜாதாவைப் பொறுத்த அளவில, ‘வாழ்க்கைல இனி சினிமா வேண்டாம்’னு முடிவெடுக்க நினைச்ச படம் அப்படி ஒரு வெற்றியையும், புகழையும் வேண்டி விரும்பித் தந்தது. வேண்டிய எளிமையான வாழ்க்கை கைகூடாம, வேண்டாத பெரிய வாழ்க்கை விரட்டிக்கிட்டு வந்து சேர்ந்தது. அதுதான் விதியோட விபரீதமான விளையாட்டு. இளையராஜாவும், சுஜாதாவும் அந்தக் காலகட்டத்துப் படங்கள்ல அசைக்க முடியாத வியாபார ஆதாரங்களா இருந்தாங்க.

நடிகையா பார்த்தா சினிமாவில ஒரு கண்ணாம்பா அளவில உணர்ச்சிமயமான நடிகை சுஜாதா. நானும், அவங்களும் நடிச்ச கடைசிப்படம் ‘வாட்ச்மேன் வடிவேலு’. அதில நான் வாட்ச்மேனாவும், என் மனைவியா நடிச்ச சுஜாதா ரோடு போடற பெண்ணாவும் வருவோம். அப்படி இருந்தும் ஒரு மகனை பாடுபட்டுப் படிக்க வைப்போம். அவன் வளர்ந்து சீமானாகி, பெரிய வீட்டு மாப்பிள்ளையாகி அதே வீட்டுக்கு என்னை வாட்ச்மேனாவும், சுஜாதாவை வேலைக்காரியாவும் வைப்பான். ஒரு சீன்ல அவன் என்னைப் பார்த்து, ‘கேவலம் நீ ஒரு வாட்ச்மேன்தானே..?’ன்னு இழிவா பேச, சுஜாதா பொங்கியெழுந்து, ‘அவரைப் பார்த்தா இப்படிச் சொன்னே..? உன்னைப் பெத்த என் கருப்பை எரிஞ்சு போகணும்...’னு அவனை அறைஞ்சபடி பேசணும்.

எங்க மகனா நடிச்சது நாகேஷ் மகன் ஆனந்தபாபு. அந்த சீன்ல உண்மையிலேயே உணர்ச்சிமயமாகிட்ட சுஜாதா அடிச்ச அடியிலயும், நெருப்பை வீசிய கோபத்திலும் சீன் பிரமாதமா வந்து ஓகே ஆச்சு. ஆனா ஆனந்த்பாபு அந்த அதிர்ச்சி தாளாம மயக்கமாயிட்டான். அதுக்குப்பிறகு அவனைத் தேற்ற சுஜாதா கண்ணீர்விட்டு அழுதது திரையில வராத உணர்ச்சிமயமான காட்சி.
நிஜ வாழ்க்கையிலும் சுஜாதா ஒரு நெருப்புதான். கற்புக்கரசி கண்ணகி கூட மாதவிக்குக் கோவலனை விட்டுக்கொடுத்துட்டு, அவனை இழந்ததும்தான் மதுரையை எரிச்சா.

 ஆனா சுஜாதாவோட கோபம் மாதவி வீட்டுக்குப் போகும்போதே கோவலனை எரிச்சுடும். அந்த விஷயத்தில சுஜாதாவும் ஒரு கண்ணகிதான். பல நடிகர்கள் கூட சேர்ந்து நடிக்கிற நடிகை, ஒரே கணவன்கூட சேர்ந்து வாழமாட்டாள்னு பொதுவா நடிகைகள் மேல சமுதாயத்துக்கு இருந்த தவறான நம்பிக்கை சுஜாதாவை நிறைய ஆதங்கப்பட வச்சது. அதுக்காகத்தான் ஒரு சாமானிய மனிதனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சிறந்த வாழ்க்கை வாழணும்னு ஆசைப்பட்டாங்க. அப்படியே அவங்க வாழ்க்கையில ஜெயகர் வந்தார். நினைச்சதைப் போலவே அவர் கூட கடைசிவரை வாழ்ந்தாங்க சுஜாதா. அதுக்கான சாட்சிதான் அவரோட மகனும், மகளும்.

முன்பாதியில விரும்பிய எளிமையான வாழ்க்கை சுஜாதாவுக்கு விலகிப்போனாலும், இரண்டாவது பாதியில விலகிப்போயிருந்த வாழ்க்கையை விரும்பி ஏத்துக்கிட்டு எளிமையா வாழ்ந்து முடிச்ச சுஜாதா, நல்ல நடிகைக்கு ஒரு உதாரணம்...’’
தொகுப்பு: வேணுஜி
படங்கள் உதவி: ஞானம்