திருச்சின்னம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

இசையின் பிறப்பு பற்றி சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் கொடுக்கும் பதிவு வெகுநுட்பமானது. ‘ஒவ்வொரு மனிதனின் உடம்பும் அவனவன் கையளவுக்கு 96 அங்குலம். இதில் மேலும், கீழும் நாற்பத்தேழரை அங்குலம் விட்டு, இடைப்படும் ஒரு அங்குலமே மூலாதாரம். இதன் மேல் நான்கு விரல் விட்டால் அது பின்னாதாரம். இந்த பின்னாதாரத்தில்தான் காற்று நின்று இயங்குகிறது. அந்த காற்றதிர்வில்தான் ஒலி தோன்றுகிறது. இதுவே இசையின் பிறப்பாக அமைகிறது.’

நமது தமிழ் உண்மையான அறிவியல் மொழி என்பதை நிரூபிக்கும் இரண்டாயிரம் வருடத்திற்கு முற்பட்ட ஆதாரம் இது. இன்று உலகம் அறிவியலைக் கொண்டு அடைய முயற்சிக்கும் எல்லைகளை, போகிற போக்கில் தொட்டுக்காட்டிவிட்டுச் சென்றவன் தொல்தமிழன். தற்காத்துக் கொள்ளவும், தகவல் பரிமாறவும் உருவாக்கிய சத்தக் கருவிகளை, சற்று வளைத்து நீட்டினால் ஒலியை ரசிக்கமுடியும் என்று கண்டறிந்தவன்.

அதன் உன்னதத்தை உணர்ந்த தருணத்தில், அந்த இசையை இறைவனுக்குச் சமர்ப்பித்தான். அவன் கண்டறிந்த ஒவ்வொரு கருவியின் ஒலியிலும் இறைவனின் நாமமே வெளிப்படுகிறது. கொஞ்சம் நுணுக்கமாகக் கேட்டால், ‘வாங்கா’விலிருந்து ‘ஹரஹரா...’ என்ற சத்தமும், ‘கர்ணா’விலிருந்து ‘த்யாகா...’ என்ற சத்தமும் வெளிப்படுவதை உணரலாம்.

அதைப் போலவே, ‘ஓம்...’ என்று ஒலி தரும் இசைக்கருவிதான் திருச்சின்னம். இது மிக நுட்பமான ஊதுகருவி. அனசு, உலவுடன் கூடிய இரண்டு நீளமான பித்தளைக் குழல்கள். குவிந்து கூர்ந்து நிற்கும் முகப்பு இரண்டையும் ஒருசேர வாயில் வைத்து ஊதவேண்டும். மிகுந்த பயிற்சியும், வலுவும் உள்ளவர்கள் மட்டுமே வாசிக்கத் தகுந்தது இது. திருச்சீரணம், திருச்சூரணம் என்றும் அழைக்கப்படும் இது, சிவ வழிபாட்டில் பூதகண வாத்தியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது ஒரு சில கோயில்கள், மடங்கள், சிவவாத்தியக் குழுக்கள் மத்தியில் மட்டும் புழக்கத்தில் இருக்கிறது.

வழிபாட்டுச் சடங்கோடு தொடர்புடைய இந்த இசைக்கருவி, இறைவன் வீதியுலாப் புறப்பாடு, மங்கள ஆரத்தியை அறிவிப்பதற்காக இசைக்கப்படுவது மரபு. கோயில்களில் வாசிக்கப்படும் 18 இசைக்கருவிகளில் இதுவும் ஒன்று. தாரை, தப்பட்டையுடன் கூடிய கிராமிய பஞ்ச இசைக் கருவிகளிலும் இது இடம்பெற்றுள்ளது. மது எடுப்பு, குதிரை எடுப்பு ஊர்வலங்களிலும் இக்கருவி வாசிக்கப்படும்.  
Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine
குடமுழுக்கு நிகழ்வுகளில் பூர்ணா ஹுதி தட்டு சுமந்து வரும்போது திருச் சின்னம் வாசிக்கப்பட வேண்டும். தேர் உற்சவத்தில் தேர்த்தட்டில் அமர்ந்து இக் கருவியை வாசிப்பார்கள்.

சிவாலயங்களில் தாளம், உடலோடு சேர்த்து திருச்சின்னம் வாசிக்கப்படும். திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஒரு திருச்சின்னத்தை மட்டும் தனியாக வாசிக்கும் வழக்கம் முன்பு இருந்தது. கடந்த சில வருடங்களாக அதுவும¢ மறைந்துவிட்டது. எப்போதேனும் சிவகான குழுவினர் வந்து வாசிப்பதுண்டு.

பெருமாள் கோயில்களில் வீதியுலா புறப்பாட்டில் இக்கருவி இசைப்பது ஆகம விதி. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தற்போதும் திருச்சின்னம் வாசிக்கப்படுகிறது. மங்கள ஆரத்தி தொடங்குவதற்கு முன் திருச்சின்னம் இசைக்கப்படும். கும்பகோணத்து பெருமாள் கோயில்களிலும் திருச்சின்னம் வாசிக்கப்பட்டது. தற்போது முற்றிலும் வழக்கொழிந்து விட்டது.

திருமடங்கள், ஆதீனங்களில், சன்னிதானங்கள் ஒடுக்கத்தில் இருந்து பூஜைக்கு கிளம்பும் சமயம் திருச்சின்னம் வாசித்து அறிவிக்கும் வழக்கம் உண்டு. ‘‘அகோபில மடத்தின் ஜீயர் அழகியசிங்கர் திருநட்சத்திர நாளின்போது பட்டினப் பிரவேசம் செய்வது வழக்கம். அப்போது அவருக்கு முன்பாக திருச்சின்னம் இசைத்தபடி கலைஞர்கள் செல்வார்கள்...’’ என்கிறார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருச்சின்னம் வாசிக்கும் நாராயணசாமி.

காஞ்சி சங்கர மடத்தில் தற்போதும் இக்கருவி பயன்பாட்டில் உள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஒருசில ஆதீனங்களில் சன்னிதானங்கள் பூஜைக்கு செல்லும்போது திருச்சின்னம் வாசிக்கப்படுவதுண்டு. மடங்களில் இதற்கென தனியாக கலைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தொழில் ரீதியாக திருச்சின்னம் இசைக்கும் கலைஞர்கள் தஞ்சாவூருக்கு அருகில் உள்ள சுந்தரப்பெருமாள் கோவிலிலும், திருச்சியை ஒட்டியுள்ள சில கிராமங்களிலும் உள்ளார்கள். இவர்கள் தாரை, நமரி, எக்காளத்தோடு திருச்சின்னமும் வாசிக்கிறார்கள். அரசியல்கட்சியின் வரவேற்பு, திருமண ஊர்வலங்களில் எப்போதேனும் இக்கலைஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும்போது, சுந்தரப்பெருமாள் கோவில் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் முருகனுக்கு ஆதரவாகவும், தியாகசமுத்திரம் பகுதி மக்கள் சூரனுக்கு ஆதரவாகவும் செயல்படும் மரபு நெடுங்காலமாக உண்டு. சுந்தரப்பெருமாள் கோவில் மக்கள் சிவன், பார்வதி, முருகன், கணபதி, போர்வீரர்கள் வேடமிட்டு, திருச்சின்னம், தாரை, எக்காளம் இசைத்தபடியே சுவாமிமலைக்கு ஊர்வலமாக வருவார்கள். முருகன் கோயிலுக்கு எதிரில், தங்கள் நெற்றியைக் கத்தியால் கீறி, ரத்தத்திலகமேற்று முருகனுக்குத் துணையாக போருக்குப் புறப்படுவார்கள்.

தியாகசமுத்திரம் மக்களும் சூரனுக்கு ஆதரவாக அணிவகுத்து வந்து முருகனின் தாக்குதலில் இருந்து சூரனை மீட்பார்கள். நெடுநேரம் நீளும் இந்த வேடிக்கையின் இறுதியில் நடுநிலையாளர்கள் தியாகசமுத்திரம் மக்களை சமாதானப்படுத்தி, சூர வதை நிகழ்த்துவார்கள். இந்நிகழ்வின் வீரியத்தை அதிகரிப்பதற்காக கிராமிய வாத்தியங்களோடு சேர்த்து திருச்சின்னமும் இசைக்கப்படுவதுண்டு.
 வெ.நீலகண்டன்
படங்கள்: கே.எம்.சந்திரசேகரன்