வாடகைத்தாய் கொடூரம்!
- ச.அன்பரசு
ஸ்லோமோஷனில் கொல்லும் போதைப் பொருட்கள், இன்ஸ்டன்டாக அழிக்கும் ஆயுதங்கள் இவற்றுக்கு அடுத்து உலகில் வளர்ந்து வரும் பெரிய பிஸினஸ் எது தெரியுமா? ஆள்கடத்தல்! மனிதர்களைக் கடத்தி விலைக்கு விற்பது ஆதியில் இருந்தே இருக்கும் தொழில்தான். ஆனால், இன்று இன்னும் ஹைடெக்காக ஆட்களைக் கடத்தி உறுப்புகள் திருடுவது, பாலியல் தொழிலில் தள்ளுவது என்பதை எல்லாம் கடந்து பெண்களைக் கட்டாய வாடகைத் தாயாக (ஏ)மாற்றி குழந்தைகளைப் பெற்றெடுத்து விற்பதுதான் ஏழாம் உலகில் ட்ரெண்டிங் தொழில். இந்த நிழல் உலகத் தொழில் இந்தியாவில் வேகமாக அதிகரித்துவருகிறது என்பதுதான் அதிர்ச்சி.
* நரகத்திலிருந்து வாழ்வுக்கு 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம். ஜார்க்கண்டின் சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான ரேஷ்மி, தன் அக்கா வீட்டில் தஞ்சமடைந்திருந்தார். அப்போதும் வெளிறிப்போன அவரது முகத்தில் டெல்லியில் வாடகைத் தாயாக வாழ்ந்த ஏழு ஆண்டு கால வாழ்வு குறித்த நடுக்கம் தீரவில்லை. ஆம். அவர் டெல்லியில் வேலை செய்யும் இடத்திலிருந்து உயிரைப் பணயம் வைத்து தப்பி பல நூறு கி.மீ.களைக் கடந்து தன் ஊருக்கு திரும்பி வந்திருந்தார்.
கும்லா நகரிலிருந்த அக்கா வீட்டிலிருந்து குழந்தைகள் நல கமிட்டி அலுவலகத்தில் புகார் அளிக்க கிளம்பிய ரேஷ்மிக்கு அதிகாரிகளை சந்திக்கும் அதிர்ஷ்டம் இல்லை. அதிகாரிகள் யுனிசெஃப் கருத்தரங்குக்குச் சென்றுவிட்டதால், வெளியே வந்தவருக்கு பழங்குடி பத்திரிகையாளரும், ஆள்கடத்தல் தடுப்புச் செயல்பாட்டாளரான சசிகாந்தின் அறிமுகம் கிடைத்தது முக்கிய நிகழ்வு. சசிகாந்திடம் ரேஷ்மி கூறிய வீடியோ வாக்குமூலம்தான் பழங்குடி பெண்களைச் சுரண்டி, அவர்களின் கருப்பையை கரன்சியாக்கும் இருள் உலகின் திரை மறைவு வேலைகளை வெளியுலகிற்கு வெளிச்சமிட்டு காட்டியது.
* குரூர பிஸினஸ் பிளான்! நவீன உலகில் உடலை எப்படி நுகர்வுப்பொருளாக்கலாம் என்பதற்குக் கட்டாய வாடகைத்தாய் தொழிலைவிட சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை. ஜார்க்கண்டில் காளான்களாகத் தொடங்கப்பட்டுள்ள டெல்லியில் வீட்டு வேலைக்கு ஆள் பிடிக்கும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஜன்சிகள்தான் வாடகைத்தாய் பிஸினஸின் பிரம்மாக்கள்.
பள்ளிப்படிப்பில் இடைநின்ற சிறுமிகளுக்கு டெல்லியில் வேலை, கைநிறைய சம்பளம் என ஏராளமான டிஸைனில் ஆசைகாட்டுவார்கள். உள்ளூர் ஆட்களை நம்பாமல் எப்படி... என உலகறியாத பெற்றோர்களும் தலையசைக்க, பழங்குடிச் சிறுமிகள் டெல்லிக்குக் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின் ஊசி மூலம் அல்லது ஏஜென்டுகளால் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு குழந்தை பெற்றுத்தரும் மெஷின்களாக்கப்படுவார்கள்.
மாதாமாதம் மகள் அனுப்பும் பணத்தைப் பெறும் அச்சிறுமியின் பழங்குடி பெற்றோர் இதுபற்றி என்றுமே அறியப்போவது இல்லை. சரி, தப்பித்து கர்ப்பிணியாக வரும் பெண்ணை ஊர் ஏற்குமா? நிச்சயமாக இல்லை. போலீஸ் புகார்? ரேஷ்மி கொடுத்த புகாரை அவரை வேலைக்குக் கூட்டிச்சென்ற ஏஜென்டுகளே வீட்டுக்கு வந்து அவரின் முகத்தில் கிழித்து எறிந்திருக்கின்றனர்.
‘‘ரேஷ்மியை பலமுறை அவரது கிராமத்துக்கு அழைத்து பார்த்துவிட்டோம். அவர் எதுவும் பேச மறுக்கிறார். உங்களுக்குப் பிரச்னை என்றால் அதை எங்களிடம் தெளிவாக கூறினால்தானே தீர்வு காண முடியும்? ரேஷ்மி 18 வயதான பெண்ணும்கூட. நாங்கள் வேறு என்ன செய்வது?’’ என தமது அமைப்பின் செயல்பாடுகளைக் குறித்து அக்கறையாக விவரிக்கிறார் குழந்தைகள் நல கமிட்டி அதிகாரியான டார்ஜென் பன்னா.
* மீதமிருக்கும் வாழ்வு! சோனியின் கதையும் இதேதான். டெல்லியில் ரிலாக்ஸாக வீட்டுவேலை செய்து கொண்டிருந்தவரை திடீரென அவரது ஏஜென்டுகள் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று ஏ டூ இஸட் பரிசோதனைகளைச் செய்ய வைத்து, ஆங்கிலத்திலிருந்த கத்தை கத்தையான தாள்களில் கையொப்பம் வாங்கிக் கொண்டனர்.
பின் அவரது உடலில் விதவிதமான ஊசிகள் போடப்பட்டன. 15 வயதான சோனிக்கு தன் உடம்பில் குழந்தை கருவாகி வளர்கிறது என உணரும்போது, அவர் நான்கு மாத கர்ப்பிணி! கருக்கலைப்பு செய்யமுடியாத, மணமாகாத நிலையில் வீட்டுக்கு வயிற்றைத் தள்ளிக்கொண்டு சென்றால் என்ன நினைப்பார்கள் என அவமானம் பிடுங்கித் தின்ன, தற்கொலை முயற்சிகளையும் செய்திருக்கிறார். ‘‘எனக்கு ஏன் இப்படி நடந்தது? நான் என்ன பாவம் செய்தேன்?’’ ஊராரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் அவர் அழும்போது எல்லாம் கேட்கும் நமக்கு வேதனை நெஞ்சைப் பிழிகிறது. இவரின் புகார்களின் மீதும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
* தகத்தகாய தரகர்கள்! பாபா பாம்தேவ், பன்னாலால் மாஹ்டோ, நைனாகுமாரி ஆகியோர்தான் டெல்லிக்கு சிறுமிகளை உள்ளூர் டூ வெளிமாநிலங்கள் வரை ஏற்றுமதி செய்யும் ஏஜன்சிகளில் டாப் 3 இடங்களில் வீற்றிருப்பவர்கள். ‘‘மூன்று சிறுமிகளோடு இணைந்து கொண்ட சில பத்திரிகையாளர்கள், எங்கள் மீது புகார் அளித்திருக்கின்றனர். ஆனால், எஸ்பியின் முன்னிலையில் இதனை அவர்கள் உறுதியாக சொல்லவில்லையே... ஏன்?’’ என அசராமல் பேசுகிறார் மேன்பவர் பிரியூ ஏஜென்சியின் நைனாகுமாரி.
கர்ப்பிணியாய் தப்பித்து வந்தாலும் குழந்தையை ஏஜென்டுகளிடம் ஒப்படைக்கும் வரை பழங்குடி பெண்களுக்கு வாழ்க்கை நரகம்தான். வல்லுறவு மிரட்டல், கிராமத்தினரின் சமூக புறக்கணிப்பு என இத்தனையும் கடந்து ஓரு பழங்குடிப்பெண் இந்திய நீதித்துறையின் ஆராய்ச்சி மணியை அடித்து நீதி பெறுவது சாத்தியமா என்ன?
‘‘பெண்களின் குடும்ப வறுமை மீண்டும் அவர்களை நகரங்களை நோக்கித் துரத்துகிறது. நிலையாக ஓரிடத்தில் வசிக்கமுடியாத குடும்பம் ஒருபுறம். கர்ப்பிணியான பெண் மறுபுறம். ஏஜென்டுகளிடம் சமரசமாகச் செல்வதைத்தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை...’’ என சூழலின் நிதர்சனத்தை உடைக்கிறார் சக்திவாஹினி என்ஜிஓவின் செயல்பாட்டாளர்களான சசிகாந்த்தும் பைட்நாத்தும்.
‘‘பாலியல் வல்லுறவு மிரட்டல் என்பது, உளவியல்ரீதியாக பெண்ணையும், சமூகரீதியில் அவரின் குடும்பத்தினரையும் தம் வழிக்குக் கொண்டுவர ஏஜென்டுகள் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம்...’’ என ஆய்வுப்பூர்வமாக பேசுகிறார் டாடா இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர் அஸ்வினி குமார்.
* நீர்த்துப்போன சட்டம் ஜார்க்கண்ட் அரசு கட்டாய வாடகைத் தாய்முறை என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்து, பழங்குடி பெண்கள் மீதான சுரண்டலை குறைக்க முயற்சித்தாலும் பலன் ஜீரோதான். போலீசாருக்கு அடிமைமுறை, வாடகைத்தாய் சுரண்டல் உள்ளிட்டவற்றுக்கான வித்தியாசங்களை விளக்கவே ட்யூஷன் வைக்கும் நிலை. சுரண்டலுக்குள்ளாகும் பல லட்சம் பழங்குடிப் பெண்களில் தமக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொன்னவர்களில் ரேஷ்மி, சோனி போன்ற மிகச் சிலர்தான்.
சக்திவாஹினி தன்னார்வ அமைப்பு, ஜார்க்கண்ட் காவல்துறையின் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவான AHTC ஆகியோரின் உதவியால் டெல்லியிலிருந்து மீண்ட பெண்களுக்கு வாழ்வு மீதான சிறிய நம்பிக்கை பிறந்துள்ளதை மறுக்க முடியாது. நுகர்வு வெறியில் உடலும் ஒரு பொருளானது காலத்தின் விசித்திரம்தான். அடிமைத் தலைநகரம்!
ஜார்கண்ட்டில் கடத்தப்பட்ட சிறுமிகள்- 5 லட்சம். கடத்தலில் முன்னணி வகிக்கும் மாநிலங்கள் - ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், அசாம், மேற்கு வங்கம்.
கடத்தலுக்கு சாதக சட்டம்!
ஜார்க்கண்ட் அரசு, 2016ம் ஆண்டு உருவாக்கிய வேலைவாய்ப்பு மற்றும் வீட்டுப் பணியாளர் சட்டம், பழங்குடி சிறுமிகள் கடத்தப்படுவதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கிறது எனப் பல்வேறு அமைப்புகள் சர்ச்சை கிளப்பி வருகின்றன. (Child Rights and You(CRY) Indian Social Institute, ISI தகவல்படி)
பழங்குடிகளே பலி!
பலியாகும் சிறுமிகள்
பிற்படுத்தப்பட்டவர்கள் 8% பழங்குடிகள் 77% தலித் 12% பிறர் 3%
* பழங்குடி இனங்கள் - ஆரோன், முண்டா, சந்தால், காரியா, கோண்ட்.
* வாடகைத் தாயாக மாறும் சிறுமிகளின் சராசரி வயது - 18க்கும் குறைவு.
* ஒரு குழந்தை பெற்றுத்தர சிறுமிக்குத் தரும் தொகை ரூ. 50 ஆயிரம்.
* குழந்தையின் விலை (1வயது) - ரூ.1 முதல் 4 லட்சம் வரை.
* விற்கப்படும் சிறுமியின் தோராய விலை ரூ. 50 ஆயிரம்.
* படிப்பை கைவிடும் தோராய வயது 10
* பள்ளி இடை நின்ற சிறுமிகள் விகிதம் 80%
* மணமாகாத பெண்களின் விகிதம் 72.1%
|