COFFEE TABLE
- குங்குமம் டீம்
கேரளா முதலிடம்
இந்தியாவில் கல்வியில் மட்டுமல்ல, கிராமப்புற கழிப்பிட வசதியிலும் நம்பர் ஒன் இடத்தை கேரளா பிடித்திருக்கிறது. கேரளாஉடன் ஹரியானாவும் கழிப்பிட வசதியில் முதன்மையான இடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அடுத்த இடங்களில் சிக்கிம், மணிப்பூர், நாகலாந்து, தமிழ்நாடு இருப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் கழிப்பிட வசதியில் மிகவும் பின் தங்கியுள்ளது. ‘‘கழிப்பிட வசதி குறைவாக இருப்பது மக்கள் மத்தியில் சுகாதாரத்தைப் பற்றிய விழிப்புணர்வு சரியாக சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது...’’ என்கிறார்கள் நிபுணர்கள்.
வொயர்லெஸ் ஹெட்போன்
இசைப் பிரியர்களுக்காக பிரத்யேகமான வொயர்லெஸ் ஹெட்போனை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ளூடுத் மூலம் ஸ்மார்ட்போன் மற்றும் மியூசிக் சிஸ்டத்துடன் இந்த ஹெட்போனை இணைத்துக் கொள்ள முடியும். தண்ணீர் புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஹெட்போனை சார்ஜ் செய்ய வேண்டும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்து விட்டால் தொடர்ந்து ஆறு மணி நேரத்துக்கும் பாடல் கேட்கலாம்; நண்பர்களுடன் பேசலாம். இந்த ஹெட்போனை வைக்க அழகான கேஸ் ஒன்றையும் இதனுடன் தருகிறார்கள். விலை ரூ.6,650.
ஜுனியர் மிதாலி ராஜ்!
இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் உலகக் கோப்பையை இழந்திருந்தாலும், கோடிக்கணக்கான இதயங்களை வென்றிருக்கின்றனர் என்பதற்கு சான்று இந்த நிகழ்வு. சுதந்திர தின கொண்டாட்டத்துக்காக ஒரு பள்ளியில் குழந்தைகளிடம், அவர்களுக்குப் பிடித்த தலைவர்களைப் போல வேடமிட்டு வரச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு குட்டிப் பெண் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜைப் போல ஜெர்ஸி அணிந்து கிரிக்கெட் மட்டையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்குச் சென்றிருக்கிறார்.
பள்ளி தலைமையாசிரியர் உட்பட அனைவரும் ஆச்சர்யத்தில் மூழ்கிவிட்டனர். ‘ஜுனியர் மிதாலி’ என்று அந்தப் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வெளியாக, சில நிமிடங்களிலேயே மூன்று லட்சம் பேர் பகிர்ந்து விட்டனர். பகிர்ந்தவர்களில் மிதாலி ராஜும் ஒருவர்!
அனுஷ்காவின் பக்தி
‘பாகுபலி 2’ சக்கைப்போடு போட்டதில், தெலுங்கில் அனுஷ்கா நடித்த படங்களை தமிழுக்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம். ‘அருந்ததி’, ‘ருத்ரமாதேவி’, ‘தேவசேனா’ வரிசையில் கிருஷ்ணமாவாக அங்கே பெயர் வாங்கிய அனுஷ்காவின் ‘ஓம் நமோ வெங்கடேசயா’ இப்போது தமிழில் ‘பிரமாண்ட நாயகன்’ என்ற பெயரில் வருகிறது. கீரவாணி இசையமைத்திருக்கும் இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலியின் குரு கே.ராகவேந்திரராவ் இயக்கியிருக்கிறார். ‘ஸ்வீட்டியின் ஸ்வீட்ஃபுல் அவதாரம்’ என அனுஷ்காவிற்கு குட்நேம் குவித்த படமிது.
டவலுக்கு மறுவாழ்வு
பொதுவாக வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் துண்டுகளை வீடு துடைக்க பயன்படுத்துவோம் அல்லது அடுப்படி பயன்பாட்டிற்கு அது சென்றுவிடும். ஒரு காஸ்ட்லியான டர்க்கி டவல்களின் மறுபயன் இவ்வளவுதானா... என அலுத்துக் கொள்பவர்களை தெம்பூட்ட வந்திருக்கிறது ஒரு வீடியோ. பயன்படுத்தாத டர்க்கி டவல்களை கைப்பையாக, மேலாடையாக, கால்துடைக்கும் மேட்டாக மாற்றுகின்ற செய்முறைகளை விளக்குகிறது இந்த வீடியோ. ஃபேஸ்புக்கின் ‘bride side’ பக்கத்தில் ‘6 ways to reuse old towels’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை 40 லட்சம் பேர் பார்த்து வைரலாக்கியுள்ளனர்.
|