காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 19

“ரெஸ்த்ரொபேவா? அவனை நான் பார்க்கணுமே!” என்றார் பாப்லோ. கார்டெல் ஆரம்பித்த பிறகு முதன்முறையாக மிகப்பெரிய அவமானத்தை சந்திக்கிறார். ரெஸ்த்ரோபேவும் கார்டெல்தான் நடத்துகிறான். கோகெயின் தவிர வேறெதையும் வாங்கி விற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவன். மிகக்குறைவான உழைப்பு, அபரிமிதமான லாபம் என்று கிரிமினல்களுக்கே உரிய மனோபாவம் கொண்டவன். கோடி கோடியாக சம்பாதித்தாலும் எச்சைக்கையால் காக்காய் கூட ஓட்ட மாட்டான்.

இப்படிப்பட்ட நிலையில் எட்டாம் வள்ளலாக பாப்லோ, மெதிலின் நகரில் புகழ் பெற்று வருவது அவனுக்கு எரிச்சலையே கொடுத்தது. ஒட்டுமொத்த கார்டெல்களின் தலைவரும், தன்னுடைய அடுத்த வாரிசு கணக்காக பாப்லோ மீது அன்பு செலுத்தியது மேலும் அவனைக் கடுப்பேற்றியது. அரசியல்வாதிகளின் ஆதரவோடு, போலீசுடன் கூட்டணி அமைத்து பாப்லோவை சிக்கவைக்க தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாப்லோவே சரக்கு ஊர்வலத்தை அணிவகுத்து நடத்திவருகிறான் என்று அதிகாரிகளுக்கு போட்டுக் கொடுத்தது அவன்தான். “பாப்லோ, ரெஸ்த்ரோபே ஒரு மண்ணுளிப் பாம்பு. அவன் கார்டெல் தலைவர் ஆனதுக்கு அப்புறமா அவனை நேர்லே பார்த்தவங்களை விரல் விட்டு எண்ணிடலாம். மறைவா இருந்துட்டு போனிலேயே எல்லா விஷயங்களையும் ஆபரேட் பண்ணுறான்...” “…” “அவன் கிட்டே வேலை செய்யுறவங்களிலேயே பலருக்கும் கூட தங்களோட பாஸ் கருப்பா சிவப்பான்னு தெரியாது...” குஸ்டாவோ சொன்னதை பாப்லோவால் நம்ப முடியவில்லை.

“ஒருத்தன் வெளியே முகமே காட்டாம வெற்றிகரமா கடத்தல் பிசினஸை எப்படி நடத்த முடியுது?” “அங்கேதான் சூட்சுமம் இருக்கு பாப்லோ. ரெஸ்த்ரோபேங்கிறது ஒரு பேரு. அந்த பேரை வெச்சுக்கிட்டு அதிகாரிகளே இந்த வேலையை செய்யுறாங்களோன்னு எனக்கு ஒரு டவுட்டு. ஆனா, ஒரு விஷயம் உறுதி. நம்மளை எப்படியாவது அழிக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியறது இந்த ரெஸ்த்ரோபே க்ரூப்தான்...” “நாம எவனுக்கும் துரோகம் பண்ணதில்லை. பண்ணவும் போறதில்லை.

அதே நேரம் நமக்கு துரோகம் நடந்தா, அதை பார்த்துக்கிட்டு அப்படியே சும்மாவும் இருக்க மாட்டோம்...” கர்ஜித்தார் பாப்லோ. தன்னுடைய சோர்ஸ்களை போனில் அழைத்தார். ரெஸ்த்ரோபே பற்றி தொடர்ச்சியாக விசாரிக்க ஆரம்பித்தார். உருப்படியான க்ளூ எதுவும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் பாப்லோவுக்கு ரூபின் அறிமுகமானான். துடிப்பான இளைஞன். வசதி யான குடும்பத்தைச் சார்ந்தவன். அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பு.

அங்கேயே விமானம் ஓட்டுவதற்கு பயிற்சியும் எடுத்தான். அனாயாசமாக ஆங்கிலம் பேசுவான். அவனுடைய தோற்றத்துக்கும், கவர்ச்சியான மொழி பிரயோகத்துக்கும் வீழாத கன்னிகளே இல்லை எனுமளவுக்கு மெதிலின் நகர மதுவிடுதிகளில் ரூபின் பிரபலமாக இருந்தான். கைநிறைய சம்பாதித்தாலும் அவனுக்கு அட்வெஞ்சரான வேலைகளின் மீது ஆர்வம் இருந்தது. மது விடுதிகளிலும், சூதாட்ட மையங்களிலும் கார்டெல்களில் பணியாற்றுபவர்களுக்கு அவனோடு பழக்கம் ஏற்பட்டது.

நட்புரீதியில் இவர்கள் கொடுக்கும் சிறிய அளவிலான சரக்கு பார்சல்களை, தான் விமானம் ஓட்டிச் செல்லும் நாடுகளுக்கு கடத்த ஆரம்பித்தான். இதிலும் கணிசமாக சம்பாதிக்க முடிகிறது என்று தெரிந்ததுமே, இதையே மெயின் பிசினஸாக ஆக்கிக் கொண்டான். ரூபின் மூலமாக மற்ற பைலட்டுகளுக்கும் கார்டெல் ஆட்களின் தொடர்பு கிடைத்தது. பாப்லோ எஸ்கோபாருக்கும் ஓரிரு முறை ரூபின் உதவியிருக்கிறான்.

எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும் இந்த பாக்கெட் மணியை மொத்தமாக உல்லாசங்களுக்கு செலவழித்தான் ரூபின். அடிக்கடி அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களுக்கு பறப்பான். எல்லாவகையான சுகத்தையும் அனுபவிக்க வேண்டும். வாழ்வதே உல்லாசங்களை சுவைக்கத்தான் என்பது அவனது பாலிசி. ஒருமுறை மியாமிக்கு அவசரமாக சரக்கு அனுப்ப வேண்டியிருந்தது. ரூபினிடம் போனில் பேசினார் பாப்லோ.“மன்னிக்கணும் பாப்லோ. முக்கியமான ஆளு ஒருத்தரோட பார்சலை எடுத்துட்டேன்.

வேணும்னா உங்க சரக்கை அடுத்த வாரம் டெலிவரி செய்யவா?” “டபுள் பேமென்ட் கொடுக்கறேன் ரூபின். ரொம்ப அர்ஜென்ட். என்னைவிட முக்கியமான ஆளா உனக்கு சரக்கு கொடுத்தவன்?” “ஆமாம். ரெஸ்த்ரோபே, என்னோட நெருங்கிய நண்பன்!” சட்டென்று பாப்லோவின் குரலில் பரபரப்பு ஏறியது. ரெஸ்த்ரோபே என்று நிஜமாகவே ஒருவன் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். எனினும், தனக்கும் ரெஸ்ரோபே வுக்குமான பிரச்னையைக் காட்டிக் கொள்ளாமல் ரூபினின் வாயைப் பிடுங்கினார்.

“அவரு பெரிய கார்டெல் டான் ஆச்சே? ரூபின், எனக்கு ஒரு சின்ன ஹெல்ப். ரெஸ்த்ரோபேவோட நான் பிசினஸ் பண்ண விரும்பறேன். அவரை நேருக்கு நேரா சந்திச்சி பேசணும். ஏற்பாடு பண்ண முடியுமா?” “அது கொஞ்சம் கஷ்டம் பாப்லோ. ரெஸ்த்ரோபே, தன்னை வெளிப்படுத்திக்க விரும்ப மாட்டார்...” “இல்லை ரூபின். கொலம்பியாவில் கிட்டத்தட்ட எல்லா கார்டெல் ஓனருங்களுக்கும் என்னை தெரியும்.

ஆனா, ரெஸ்த்ரோபேவை மட்டும் பிடிக்கவே முடியலை. நீதான் ஹெல்ப் பண்ணணும்...” “கேட்டுப் பார்க்கிறேன்...” பாப்லோவின் விருப்பத்தை ரெஸ்த்ரோபேவிடம் ரூபின் சொன்னபோது, அவருக்கும் ஆச்சரியம்தான். “அவனை ஒழிச்சிக் கட்டணும்னு வேலை பார்க்குற என்னையே பார்க்கணும்னு விரும்பறானா? ஆச்சரியமா இருக்கு. சந்திக்கறேன்...” பாப்லோவிடம் விஷயம் சொல்லப்பட்டது. மட்டமான ஒரு சூதாட்ட விடுதியில் மிகவும் ரகசியமாக அந்த சந்திப்பு  நடந்தது.

ஜம்மென்று டிரெஸ் செய்து கொண்டு கம்பீரமாக போனார் பாப்லோ. அவர் எதிர்பார்த்த தோற்றம் கொண்டவனாக ரெஸ்த்ரோபே இல்லை. குள்ளமாக, ஒல்லியாக, மிக எளிமையான ஆளாகத் தெரிந்தார். கீச்சுக்குரலில் பேசினார். இவரைப் பார்த்தா அத்தனை பேரும் அஞ்சுகிறார்கள் என்று பாப்லோவுக்கு ஆச்சரியம். நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “நான் இங்கே சண்டை போடறதுக்காக கார்டெல் நடத்தலை. ஆக்சுவலா, எனக்கு வன்முறை பிடிக்காது. ரத்தம்னாலே அலர்ஜி...”

பாப்லோவின் கடந்தகாலம் மொத்தமும் ரெஸ்த்ரோபேவுக்கு தெரியும். எனவே புன்முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்தார். “நாம ஒத்துப் போயிடலாம். உங்க வழியில நான் இதுவரை குறுக்கிட்டதில்லை. ஆனா, நீங்க யாரோ எதுவோ சொன்னதை நம்பி என்னோட வேலையை தடுக்க முயற்சிக்கறீங்க. இனிமே அது வேணாம்...” “பாப்லோ, நீ சின்னப் பையன். தொழில்னா இப்படித்தான். எனக்கு உன் மேலே தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. ஆனா, உன்னைப் பார்த்து நிறைய பேர் பயப்படுறாங்க.

உன்னை ஒழிக்கணும்னு விரும்பறாங்க. துரதிருஷ்டவசமா அவங்களில் பெரும்பாலானவங்க எனக்கு வேண்டப்பட்டவங்க...” “நீங்க சொல்லுறது புரியுது. உங்க இடத்துலே நானா இருந்தாலும் அதைத்தான் செய்வேன். ஆனா, இப்போ நானும் உங்களுக்கு வேண்டப்பட்டவன்னு நீங்க நம்பணும்...” “எனக்கு வேண்டப்பட்டவங்கன்னா, அவங்களாலே கணிசமா லாபம் கிடைக்குதுன்னு அர்த்தம். உன்னாலே…” ரெஸ்த்ரோபே முடிப்பதற்கு முன்னாலேயே தன்னுடைய டீலை முன்வைத்தார் பாப்லோ.

மாதாமாதம் கணிசமான அளவு உயர்தரமான கஞ்சா, ரெஸ்த்ரோபே சுட்டிக்காட்டும் இடத்துக்கு பாப்லோவின் மெதிலின் கார்டெல்லால் டெலிவரி செய்யப்படும். வழக்கமான மார்க்கெட் விலையில் பாதியைத்தான் இதற்கு ரெஸ்த்ரோபே தருவார். பதிலுக்கு வேறு சில கமிஷன் வேலைகளை பாப்லோவுக்கு அவர் பிடித்துத் தருவார்.

“இது போதும் ரெஸ்த்ரோபே. எனக்கு தொழில் செய்யுறது, அதில் லாபம் பார்க்கிறதையெல்லாம் விட உன்னை மாதிரி ஒருத்தரோட நட்புதான் முக்கியம். அதுக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன்...” இந்தளவுக்கு பாப்லோ, இதுவரை யாரிடமும் குழைந்து பேசியதில்லை. மார்க்கெட் முழுக்க ரெஸ்த்ரோபேவும், பாப்லோவும் ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டார்கள் என்கிற தகவல் தந்தி வேகத்தில் பரவியது. பாப்லோவை எதிர்த்தவர்கள் வேறு வழியின்றி பம்மத் தொடங்கினார்கள்.

பாப்லோவுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ரெஸ்த்ரோபேவின் போன் கால் வரும். போனில் அடங்கிவிட்டால் பிரச்னையில்லை. இல்லையேல், சம்பந்தப்பட்டவர் ஆறடி மண்ணுக்குள் அடங்கிவிட வேண்டியதுதான். மிகக்குறுகிய காலத்திலேயே பாப்லோவின் மெதிலின் கார்டெல்லும், ரெஸ்த்ரோபேவின் கார்டெல்லும் இரட்டைக்குழல் துப்பாக்கி களாக மெதிலின் நகரின் நிழல் தொழிலை ஆளத் தொடங்கின. அப்படியே ஆறு மாதம் அமைதியாகத்தான் போனது.

ஒருநாள் - பாப்லோவை முதன்முதலாக ரெஸ்த்ரோபே சந்தித்த அந்த பாடாவதி சூதாட்ட விடுதியின் வாசலில்... ரெஸ்த்ரோபே பிணமாகக் கிடந்தான்! அவனுடைய உடல் சின்னாபின்னமாகிக் கிடந்தது. பெரும் சித்திரவதையை அனுபவித்து செத்திருக்கிறான் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னது. போலீசுக்கு தெரியும், இது பாப்லோவின் பிரத்யேக ஸ்டைல் கொலை.

மற்ற கார்டெல் ஓனர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பாப்லோ, நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிந்து விட்டது. ஆனால் - அதை தட்டிக் கேட்கும் தைரியம் யாருக்குமே இல்லை. பாப்லோ, இவர்களைத் தாண்டி வளர்ந்து விட்டார். தன் பாதையில் குறுக்கிடுபவர்களுக்கு இதுதான் கதியென்று நேரடியாகச் சொல்லாமலே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்!

(தொடரும்)

ஓவியம்: அரஸ்