இளைப்பது சுலபம் - வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?



பா.ராகவன் - 8

அனுபவத் தொடர்

சைவ பேலியோவின் சுக்லாம் பரதரம் என்பது பாதாம். பொதுவில் நமது சமூகம் இதனை அல்வாவாகவும் கீராகவும் உருமாற்றி உள்ளே தள்ளிப் பழக்கப்பட்டது. இப்படி உருமாற்றம் செய்வதன் நிகர லாபம் என்னவென்றால், எதற்காக நாம் பாதாம் சாப்பிடுகிறோமோ அதன் பலனை அப்படியே காலில் போட்டு மிதித்துத் தேய்த்துவிடுவதுதான். உண்மையில் பாதாம் ஒரு சிறந்த உணவு.

படு தீவிர சைவ உணவாளிகள் பேலியோவுக்கு வந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் முதல் உணவு நூறு கிராம் பாதாம்தான். அசைவர்களுக்கு பாதாம் அவசியமில்லை. அவர்கள் காலையில் மூன்று முதல் ஐந்து முட்டை சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்குப் போய்விடலாம். சைவத்துக்குத்தான் சாம தான பேத தண்டமெல்லாம். எனவே என்னுடைய டயட் சார்ட்டில் முதல் உணவாக இருந்த பாதாமை எதிர்கொள்ள முதல் நாள் தயாரானேன். ஏற்கெனவே இங்கே சொல்லியிருக்கிறேன். பாதாமை அப்படியே சாப்பிடக்கூடாது.

நன்கு அலசி, இரண்டு மூன்று முறை தண்ணீர் மாற்றி, இருபத்தி நான்கு மணி நேரம் ஊறவைத்து, அதன்பின் நிழலில் உலரப் போட்டுத்தான் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம், தோலுக்கு மேல் இருக்கிற அழுக்குப் போகவேண்டும் என்பதல்ல. பாதாம் உள்ளிட்ட எல்லா ரகக் கொட்டைகளிலும் (பருப்பு வகை, எண்ணெய் வித்துக்களிலும் கூட) பைட்டிக் ஆசிட் என்றொரு அமிலப்படலம் உண்டு.

இந்த பைட்டிக் ஆசிட் இயற்கையாகத் தாவர உணவுகளுடன் சேர்ந்து வருவது. வராதே என்று தடை போட முடியாது. வந்து சும்மா உட்கார்ந்திருக்குமா என்றால் அதுவும் செய்யாது. உணவுப் பொருள்களில் இருக்கும் கால்சியம், மக்னீசியம், ஸிங்க், இரும்புச் சத்துகளை இது உடம்புக்குள் சேர விடாமல் தடுக்கும். போதாதகுறைக்கு, தாவர உணவுகளில் இது பாஸ்பரஸைச் சேர்க்கும்.

உடம்பு என்ன வெடி மருந்தா தயாரிக்கப் போகிறது, பாஸ்பரஸ் சேர்மானத்துக்கு? அது நமக்குத் தேவையற்ற சமாசாரம். எனவே இம்மாதிரியான இம்சைகளைத் தவிர்க்கும் பொருட்டு பாதாம் உள்ளிட்ட கொட்டை இனங்களை உண்ணுவதற்கு முன்னால் அதிலுள்ள பைட்டிக் ஆசிடை நீக்க வேண்டியது அவசியம். பைட்டிக் ஆசிடை நீக்குவதற்கு எளிதாக இரண்டு வழிகள் இருக்கின்றன.

ஒன்று, நான் குறிப்பிட்ட நீரில் ஊற வைக்கிற வழி. இரண்டாவது முளை கட்ட வைக்கிற வழி. சிலபேர் பாதாமின் தோலை நீக்கிவிட்டால் பைட்டிக் ஆசிட் போய்விடும் என்று சொல்லுவார்கள். தோலைத் தாண்டி உள்ளே போகமாட்டேன் என்று பைட்டிக் ஆசிட் என்ன சத்தியம் செய்து கொடுத்துவிட்டா வந்து உட்கார்ந்திருக்கிறது? அதெல்லாம் சும்மா.

முழுதாக ஒரு நாள் பாதாம் ஊறித்தான் தீரவேண்டும். இடையே இரண்டு மூன்று முறை தண்ணீரை மாற்றித்தான் ஆகவேண்டும். அதன்பிறகு உலர்த்தி எடுத்து வாணலியில் போட்டு வறுத்தால் முடிந்தது. முதல் நாள் (மறக்க முடியுமா! ஜூலை 23, 2016) பாதாமை வறுக்கத் தொடங்கியபோது எனக்குப் பெரும் குழப்பம். எவ்வளவு நேரம் வறுக்க வேண்டும்? அடுப்பில் தீ எந்த அளவில் இருக்க வேண்டும்? இரண்டுமே எனக்குத் தெரியாது.

சும்மா வாணலியில் போட்டு வறுக்க ஆரம்பித்தேன். பதினைந்து நிமிடங்கள் இடைவிடாமல் வறுத்தபோது மெலிதாக ஒரு மணம் வந்தது. அடடே இது பிரமாதமாக இருக்கும் போலிருக்கிறதே என்று மேலும் பதினைந்து நிமிடங்களுக்கு வறுத்தேன். இப்போது பாதாம் மெல்ல கருகத் தொடங்கியது. ஆனால், முன்னைக் காட்டிலும் வாசனை தூக்கியடித்தது. நன்கு வறுபட்டால் கரகரவென்று மெல்வதற்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து சுமார் நாற்பது நிமிடங்களுக்கு அதை வறுத்துத் தீர்த்தேன்.

இந்த வறுத்த பாதாமின் தலையில் ஒரு ஸ்பூன் நெய்யைக் கொட்டி, மேலுக்கு உப்பு, மிளகுத் தூளையும் போட்டுக் கலந்து படு ஆர்வமாகச் சாப்பிட உட்கார்ந்தேன். வாசனையெல்லாம் நிகரே சொல்ல முடியாத ரகம்தான். ஆனால், ஒன்றை வாயில் போட்டுக் கடித்தால் வலி உயிரே போய்விடும் போலிருந்தது. உண்மையிலேயே ஒரு கூழாங்கல்லைக் கடிக்கிற உணர்வு ஏற்பட, எனக்கு திகிலாகிவிட்டது.

என்னடா இந்த பாதாம் சாப்பிடுவது ஒரு பெரிய துவந்த யுத்தமாக இருக்கும் போலிருக்கிறதே என்று கலங்கி நின்றேன். மறுநாள் நாற்பது நிமிடங்கள் அல்லாமல் முப்பது நிமிடங்கள் மட்டும் வறுத்தேன். அதே பதம்தான் வந்தது. என்ன முயற்சி செய்தாலும் ரசித்துச் சாப்பிட முடியவில்லை. கடித்துக் கூழாக்கிவிட்டால் ருசிக்கத்தான் செய்தது. ஆனால், கடிப்பது கண்ணராவியாக இருந்தது.

இரு வார இடைவெளியில் ஐந்து நிமிடம், பத்து நிமிடம், பதினைந்து நிமிடம், இருபது நிமிடம் என்று வறுபடும் நேரத்தை மாற்றி மாற்றி அமைத்துப் பார்த்த பிறகு குத்துமதிப்பாக அதன் சூட்சுமம் புரிந்தது. அடுப்பை முழு சிம்மில் வைத்து, வாணலியைத் தனியே காயவிடாமல், அடுப்பில் ஏற்றிய உடனேயே பாதாமையும் போட்டு, பன்னிரண்டு நிமிடங்கள் வறுத்தால் போதும். ரசித்து ருசித்துச் சாப்பிடுகிற பதத்துக்கு பாதாம் தயாராகிவிடும். நடுவே கொஞ்சம் கூடத் தீயை அதிகரிக்கக்கூடாது. வறுப்பதையும் நிறுத்தக் கூடாது.

இந்த சூட்சுமத்தைக் கண்டறிந்தபோது எனக்குப் பரவசமாகிவிட்டது. என்னைப் போலவே பாதாமால் பல்லடி பட்ட உத்த மர்களுக்கு இந்நற்செய்தியை உடனே அறிவித்தேன். பேலியோவுக்கு வரும் என்னைப் போன்ற வீர வெஜிடேரியன்கள் பாதாம் கடிக்கிற பயத்திலேயே பின்னங்கால் பிடரியில் பட, அலறியோடிக் கொண்டிருந்த சங்கதியெல்லாம் அப்போதுதான் எனக்குத் தெரிய ஆரம்பித்தது.

சிலபேர் கர்ம சிரத்தையாக பாதாமில் என்னவெல்லாம் சத்து இருக்கிறது என்று பார்த்துவிட்டு, அதற்குச் சற்றேறக்குறைய நிகராக இருந்தால் என்ன தப்பு என்று வேர்க்கடலை சாப்பிட ஆரம்பித்ததையும் கவனித்தேன். ஆனால், பேலியோவில் வேர்க்கடலை கிடையாது. ரொம்ப பெரிய வியாக்கியானமெல்லாம் வேண்டாம். எதை நாம் பச்சையாக உண்டால் உடம்புக்கு ஒன்றும் செய்யாதோ, அதை மட்டும்தான் பேலியோ அனுமதிக்கும்.

ஓ, அதற்கென்ன, நான் வேர்க்கடலையைப் பச்சையாக உண்பேனே என்பீரானால் காலக்கிரமத்தில் உடம்புக்கு வேண்டாத வியாதி வெக்கைகள் வந்து சேர வாய்ப்புண்டு. வேர்க்கடலை என்பது நிலத்துக்கு அடியில் விளைவது. இம்மாதிரிப் பயிர்களுக்குத்தான் நோய்த் தாக்குதல் அதிகம். தவிர, வேர்க்கடலை என்பது கொட்டையல்ல. அது லெகூம்வகையைச் சேர்ந்தது. இதெல்லாம் போக, கணக்கு வழக்கில்லாமல் கடலை போட்டால் ஈரல் கெடும் அபாயமும் உண்டு.

வேர்க்கடலையிலும் சத்துகள் அதிகம்தான். பேலியோ எதிர்க்கும் கார்போஹைடிரேட்டும் அதில் குறைவுதான் (100 கிராமுக்கு 16 கிராம்). நமக்கு சாப்பிடுவது சுலபம், ருசிக்கு ருசி - ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் வேண்டாத வியாதிகளை விலை கொடுத்து வாங்குவது தவறல்லவா? எப்போதோ ஒரு சமயம் வேர்க்கடலை சாப்பிட்டால் ஒன்றும் உயிர் போய்விடாது. ஆனால், தினசரி ஒருவேளை உணவாக நூறு கிராம் வேர்க்கடலை சாப்பிடுவது கண்டிப்பாக பேஜார்.

(தொடரும்)

பேலியோ கிச்சன்

பாதாம் பட்டர்

பாதாம் வறுத்துச் சாப்பிட போரடிக்கிறது என்பவர்கள் பாதாம் பட்டரை முயற்சி செய்யலாம். செய்வது எளிது. ஊறவைத்து, உலரவைத்த பாதாமை சும்மா ஒரு ஐந்து நிமிடங்கள் வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதை அப்படியே மிக்சியில் போட்டு ஓடவிட்டால் இரு நிமிடங்களில் பொடியாகிவிடும். மூடியைத் திறந்து ஸ்பூனால் தள்ளிவிட்டு மீண்டும் ஓட்டவும்.

இரண்டு மூன்று முறை இப்படி ஸ்பூனால் தள்ளிவிட்டு சுமார் ஆறேழு நிமிடங்களுக்கு மிக்சியை ஓடவிட்டுக்கொண்டே இருந்தால் பாதாம் தானே எண்ணெய் விட்டுக்கொண்டு பேஸ்ட் போலத் திரண்டு வரும் (தண்ணீரெல்லாம் வேண்டாம். வெறும் பாதாம்). இது அல்வா பதத்துக்கு வரும்போது எடுத்துவிடுங்கள். இதுதான் பாதாம் பட்டர். மணத்துக்கு ஒரு ஏலக்காய் பொடி செய்து போட்டால் போதும். உண்பதும் சுலபம், ருசி, உலகத்தரம்.