ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 38

“மாடு என்ற சொல், கால்நடையை மட்டுமல்ல, செல்வத்தையும் குறிக்கக்கூடிய சொல். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் மேய்ச்சல் நாகரிகம் பழக்கத்திலிருந்ததால் மாடும், உழவும் எத்தனை முக்கியம் என்பதை தமிழன் அறிந்திருக்கிறான். அதனால்தான் மாட்டை செல்வமாகக் குறித்திருக்கிறான்...” என்று கவிக்கோ விளக்கியிருக்கிறார்.

“ஆ” என்றால் பசு. ஆவின்பால் என்றால் பசுவின் பால் என்பதுதான் பொருள். தமிழர்கள் காளையையும், பசுவையும் மொழியின் முதலிரண்டு இடத்தில் வைத்திருக்கிறார்கள். கவிக்கோ அருவிபோல சிந்தனைகளைக் கொட்டக்கூடியவர். மொழியை அவர் அளவுக்கு நுட்பமாக வைத்துக்கொண்டு கருத்துகளை முன்வைக்க முடியாது. உரிய சொற்களை உரிய இடத்தில் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்.

பிறப்பினால் இஸ்லாமியராக இருந்தாலும் மற்ற மத நூல்களை வாசிப்பதிலோ அவற்றில் உள்ள நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதிலோ அவருக்குத் தயக்கம் இருந்ததில்லை. மொழியின் வழியே அத்தனை மதங்களையும் அவர் அணுகி, அணுக்கம் கொண்டிருக்கிறார். எம்மதத்தின் சாரங்களையும் தன்னுடைய கவிதைகள் பற்றிக்கொள்ள அவர் தடைபோட்டதில்லை.

இந்து மத பக்தியை வலியுறுத்திய இடைக்கால இலக்கியத்தை அவர் அளவுக்கு சொட்டச் சொட்ட ரசித்து நயம் சொன்னவர்கள் எவருமில்லை. இலக்கிய நுகர்வுக்கு அப்பாலுள்ளதே மதம் என்னும் தெளிவோடு அவரிருந்தார். விவிலிய வாசகங்களையும், பிரபந்த பனுவல்களையும் அவர் சொல்லக் கேட்கையில், அந்தந்த மதத்திலுள்ளவர்களே வியக்கத்தக்க விதத்தில் வெளிப்படுவார்.

ஐம்பெரும் காப்பியங்களில் சமணம் வேரூன்றி இருந்த காலத்தில் எழுதப்பட்டவை ‘மூன்று’ என்று சொல்லும் கவிக்கோ, “பள்ளி எனும் பெயருடைய ஊர்களெல்லாம் அப்போது பிறந்தவையே...” என்பார். திருச்சிராப்பள்ளி, திருக்காட்டுப்பள்ளி என்பவையெல்லாம் ஒருகாலத்தில் சமணர்களின் குடியிருப்புகளாக இருந்தன எனும் சரித்திரச் சான்றுகளை இலக்கியத்திலிருந்து எடுத்துக்காட்டுவார்.

நீதி இலக்கியத்தைக் கற்றிருந்த அவர் சமூக நீதியின் தேவைகளையும் அவசியத்தையும் உணர்ந்திருந்தார். திராவிட இயக்கத்தின் அத்தனை கொள்கைகளிலும் அவருக்கு ஈர்ப்பு இருந்ததாகச் சொல்வதற்கில்லை. கடவுள் மறுப்புக் கொள்கையைப் பொறுத்தவரை அவர் ஒரு சூஃபியின் மனநிலையைக் கொண்டிருந்தார். தமிழில் சித்தர்கள்போல உருதில் சூஃபிகளா? என்று கேட்டதற்கு, ‘‘ஏகத்துவத்திற்கு எதிராகவா சூஃபிகள் செயல்பட்டார்கள்? ஏகத்தை அடைய எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அவற்றில் ஒருவழியை சூஃபிகள் கொண்டிருக்கிறார்கள்.

இறை மறுப்பாளர்கள், சூஃபிகளும் சித்தர்களும் ஒன்று என்கிறார்கள். நான் அப்படி கருதுவதில்லை...” என்பார். அதேபோல “இசையை ஹராம் என்று இஸ்லாம் சொல்வதால் மதத்திலிருந்தோ, இசையிலிருந்தோ என்னால் விடுபடமுடியாது. இசையில்லாமல் இறைவனை அடையும் வழியிருக்கிறதா சொல்லுங்கள்?” எனவும் கேட்டிருக்கிறார். கவிக்கோ இந்தி திரைப்படப் பாடல்களை ரசித்து ரசித்துக் கேட்கக் கூடியவர் என முன்பே சொல்லியிருக்கிறேன்.

இசைக்காக மட்டுமல்ல, அப்பாடல்களை அவர் வரிகளுக்காகவும் இதயத்தில் வரித்துக்கொண்டவர். ‘தூல் கா பூல்’ எனும் திரைப்படத்தில் வரும் “தூ ஹிந்து பனேகா, நா முசல்மான் பனேகா...” என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. “நீ இந்துவும் இல்லை. நான் முஸ்லீமும் இல்லை. நீ மனிதனின் பிள்ளை, மனிதனாவாய்!” என்னும் பாடலை அவ்வப்போது நினைவிலிருந்து சிலாகிப்பார்.

“எங்கே குரான் இல்லையோ அது கோயில் இல்லை. எங்கே கீதை இல்லையோ அது பள்ளிவாசல் இல்லை...” என்று அவர் அப்பாடலை மொழிபெயர்த்த அழகை, கவிஞர் மீரா ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். மதம் கடந்து மொழி கடந்து மனிதர்களை நேசிக்கும் இலக்கியங்களை ரசிக்கவும் படைக்கவும் அவர் விரும்பினார். தன்னுடைய பாட்டனாரும் தந்தையாரும் மிகச் சிறந்த கவிஞர்களாக இருந்தபடியால் இளம் வயதிலேயே கவிதை அவருக்குப் பிடிபட்டுவிட்டது.

அல்லது கவிதை அவரை தன் பிடிக்குள் வைத்துக்கொண்டது. மரபுக்கவிதைகளே கவிதைகள் என்றிருந்த காலத்தில் அவர் புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவருடைய முதல் கவிதையை கல்லூரி நிர்வாகம் இலக்கணப்படி எழுதவில்லையென மலரில் பிரசுரிக்க மறுத்தது. ஆனாலும், கவிக்கோ அசராமல் அக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதே மலரில் வெளிவரச் செய்தார்.

எழுத்தின் சகல நுணுக்கங்களையும் அறிந்திருந்த அவர், இலக்கணங்களை அறியாதவரல்ல. யாப்பை முறைப்படி எழுதக்கூடியவர்தான். என்றாலும், புதுக்கவிதையே காலத்தின் தேவை என்பதை அவர் அறிவுறுத்தினார். அவருடைய முதல் கவிதைத் தொகுப்பான ‘பால்வீதி’க்குப் பிறகுதான் சர்ரியலிஸ கவிதைகள் தொகுப்பாக வெளிவரத் தொடங்கின. அதுவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே தங்களுடைய மீமெய்ம்மையியல் கவிதைகளை சிற்றிதழ்களில் எழுதியிருந்தார்கள்.

தமிழுக்குப் புதிதான மீமெய்ம்மை இயல் கவிதைகளை முழுத்தொகுப்பாக வெளியிட்டு பரிசோதனைக் கவிதைகளுக்கான வெளியை ஏற்படுத்திய கவிக்கோ, அக்கவிதைகளுக்கு எழுந்த எதிர் விமர்சனங்களை எளிதாகக் கடந்துவிடவில்லை. ‘பால்வீதி’ கவிதை நூலில் இடம்பெற்ற கவிதைகளை அது வெளிவந்த சமயத்தில் பலரும் புரியவில்லையென்றுதான் சொன்னார்கள். கவிதை என்றால் புரியவேண்டும் என்னும் ரீதியில் விமர்சனம் வைத்தவர்கள், ஒருகட்டத்தில் அக்கவிதைகளில் மனிதாபிமானம் வெளிப்படவில்லை என்றார்கள்.

வழக்கமான கவிதைகளைப் போல அல்லாமல் மீமெய்ம்மையியலில் என்னென்ன சித்தாந்தங்கள் உண்டோ அத்தனையையும் அக்கவிதைகள் மூலம் கவிக்கோ பரிசோதித்திருப்பார். இன்றுவரைகூட சர்ரியலிஸ கவிதைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றும் நிலைக்கு தமிழ்க்கவிதை வாசகர்கள் வரவில்லை என்பது வேறு விஷயம். படிமத்தையும், குறியீட்டையும் பிரதானமாகக் கொண்ட அக்கவிதைகள், மேலை நாட்டு இஸங்களின் பாதிப்பால் எழுதப்பட்டதாக சிலர் கருதக்கூடும்.

ஆனால், கவிக்கோவோ அதையும் நம்முடைய தொன்ம இலக்கியத்திலிருந்தே எழுதியதாக சொல்லியிருக்கிறார். நம்முடைய சங்கப் பாடல்களில் கையாளப்பட்டுள்ள உள்ளுறை இறைச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதியதை விளக்கினார். அதன் பிறகும் அக்கவிதைகளை விளங்கிக்கொள்வதில் ஏற்பட்ட சிரமத்தை நீக்க, அவரே அக்கவிதைகளை விளக்கி உரையெழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய கவிதைகளுக்கு தானே உரையெழுத நேர்ந்த சூழலை ஒரு புன்சிரிப்போடு கடந்து செல்வார்.

‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’ என்னும் தலைப்பில் வெளிவந்த கட்டுரை நூல் அப்படி வந்ததுதான். அந்நூலை அவர் கவிதைகளுக்கு அவரே எழுதிய உரைநூல் என்பதிலும் பார்க்க, அடர்த்தியான கவிதைகளை விளங்கிக்கொள்ள அவர் தயாரித்த பயிற்சி ஏடு என்பதே என் புரிதல். சங்க இலக்கியத்தில், ‘ஒரு பூவில் தேன் குடித்து பிறகு பறந்துவிட்ட வண்டு வசிக்கும் நாட்டின் தலைவனே’ என்று வரும் பாடலையும், ‘அருவிகள் விடாமல் கொட்டும் நாட்டுக்காரன், கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லையே’ என்று வரும் இன்னொரு பாடலையும் குறிப்பிட்டு, உள்ளுறை இறைச்சியை விளக்கியிருப்பார்.

அதாவது, வண்டு போல் என்னிடமிருந்து பறந்துவிடாதே என்பதிலுள்ள குறியீட்டையும் வாக்குப் பொய்த்தவன் நாட்டில் விடாமல் மழைபெய்து, அருவி எப்படி பெருக்கெடுக்கிறது என்பதிலுள்ள படிமத்தையும் மிக நேர்த்தியாக புரிய வைத்திருப்பார். வாழ்நாளின் இறுதிக்கணம்வரை கவிதைகள் எழுதிய கவிக்கோ, நேயர்களின் விருப்பமாகவே இருந்தது நெகிழத்தக்கது. அவர், காத்திரமான விமர்சனங்களையும் கனிவோடு எதிர்கொள்ளப் பழகியிருந்தார்.

(பேசலாம்...)

ஓவியங்கள்: மனோகர்