கூட்டத்தில் ஒருத்தன்
-குங்குமம் விமர்சனக்குழு
ஆவரேஜ் இளைஞன் அகிலம் புகழுபவனாக மாறுவதே ‘கூட்டத்தில் ஒருத்தன்.’ மொத்த குடும்பத்திலும் உபயோகம் இல்லாதவராக மதிப்பிடப்படுகிறார் அசோக் செல்வன். எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தாலும் பெரிய அளவிற்கு எட்ட முடியவில்லை. அதற்கான சூட்சுமம் அறியாமல் இருக்கும் அவரை, அப்பா முதற்கொண்டு கரித்துக் கொட்டுகிறார்கள்.
இடையில் ஸ்டேட் டாப்பராக வெற்றி பெறும் பெண் மேல் காதல் வர அசோக் செல்வனிடம் அதிரடியாக சில மாற்றங்கள். பிரியா ஆனந்தின் கேள்விகள் அவரை மாற்றிப் போடுகின்றன. தாழ்வுமனப்பான்மை கொண்ட அசோக் அதிலிருந்து மீண்டாரா, சாதித்தாரா என்பதே மீதிக்கதை. சினிமா அதிகம் கண்டுகொள்ளாத மிடில் பென்ச் மாணவர்களைச் சொன்னதிலும், அவர்கள் முன்னுக்கு வர கொஞ்சம் தங்களைச் சரிப்படுத்திக் கொண்டால் போதும் என்ற வகையில் நேர்மையாக பதிவு செய்ததிலும் அறிமுக இயக்குநர் த.செ.ஞானவேல் கவனம் பெறுகிறார்.
 குடும்பத்திலிருந்து அசோக் செல்வன் தனிப்பட்டுத் தெரிகிற சுவாரஸ்யங்களுடன் ஆரம்பிக்கிறது படம். தாழ்வு மனப்பான்மையில் மறுகும் அவரது முகத்தில் எப்போதும் ஒரு கூச்சம். மென்மையான, இரக்கமேற்படுத்தும் முகம் அவருக்கு இருக்கிறது. அடுத்த நிலைக்கு மாறுகிற வரையில் அதை அவர் திரையில் கொண்டு வருவது அருமை. அதற்காக உடம்பைக் குறுக்கிக் கொண்டு நடப்பது தேவைதானா! மிடில் கிளாஸ் ஊழியரின் மகனாக நடந்து கொள்வதில் ஆரம்பித்து அடுத்தடுத்த வகையில் அசோக்கிடம் நமக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.
முன் எப்பொழுதையும்விட பிரியா ஆனந்த் கூடுதல் வசீகரம். பெரிய கரிய விழிகளில் மொத்தக் கவர்ச்சியும் குடிகொண்டிருக்கிறது. அசோக்கிடம் ஆரம்ப வெறுப்பு காட்டும் அவர், படிப்படியாக அவர் மீது விருப்பம் கொள்வது இயல்பான பரிமாற்றம். யாருமில்லாத வீட்டில் ரொமான்ஸுக்கு தயாராகும் இயல்பிலும், அசோக் செல்வன் சொன்ன பொய்யை செரிக்க முடியாமல் தவிக்கும் சங்கடத்திலும், இறுதியில் அசோக் செல்வனைப் புரிந்துகொள்ளும்போது அவரிடம் வெளிப்படும் பெருமிதமும் கச்சிதம்.
 காலேஜ் காமெடியைக் கையில் எடுத்து கரை சேர்கிறார் பாலசரவணன். நம்பகமான வளர்ச்சி. நன்றியறிதலுக்காக அசோக்செல்வனுக்கு உதவும் சமுத்திரக்கனி கச்சிதம். உடல்மொழியில் கம்பீரம், அளவான பேச்சு, வெறும் கண்களில் மிரட்டுவது, என செமஃபிட். நிவாஸ் கே. பிரசன்னா இசையில் பாடல்கள் சுகம். அதிலும் ‘நீயின்றி நானுமில்லையே’ இதம். ஈர இசையுடன் இதயக்கரை சேர்கிறது.
பின்னணியிலும் பரபரப்பாகத் தொடர்கிறது. பி.கே.வர்மாவின் கேமரா கண்ணில் ஒற்றிக்கொள்கிற, கதையோடு அடங்கி வித்தை காண்பிக்கிற அழகு. ஆவரேஜ் குழந்தையை இதமாக மாற்றாமல், புரிந்து கொள்ளாமல், கடுஞ்சொல்லில் திருத்த முயலும் போக்கு என இன்றைய இளைஞர்களின் கலவர நிலவரத்தை காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. சில இடங்களில் கொஞ்சம் நாடகத்தனம் தென்படுவதைத் தவிர்த்திருக்கலாம். இறுதிக்காட்சியில் சமூகத்திற்கு முக்கிய பணியாற்றியவர்களின் பட்டியல் அருமை. ஆவரேஜ் மாணவர்களை பெற்றோர் அறிந்து புரிந்து கொண்டாலே போதும் என்பதே ‘கூட்டத்தில் ஒருத்தனு’க்கு வெற்றிதான்!
|