Must Watch



குண்டூர் காரம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான தெலுங்குப்படம், ‘குண்டூர் காரம்’. இப்போது தமிழ் டப்பிங்கில் ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது.தொண்ணூறுகளில் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. மார்க்ஸும், லெனினும் குண்டூரின் இரண்டு பிரபல ரவுடிகள். 

சத்யமின் மிளகாய் தொழிற்சாலையை வெடி வைத்து தகர்க்கின்றனர். அந்த ரவுடிகளுடன் சத்யமும், அவரது மச்சான் ரங்கமும் சண்டையிடுகின்றனர். எதிர்பாராத விதமாக ரங்கம் லெனினைக் கொன்று விடுகிறார். அந்தக் கொலையை நான்தான் செய்தேன் என்று சிறைக்குச் செல்கிறார் சத்யம்.  

அதிர்ச்சியடையும் சத்யமின் மனைவி வசுந்த்ரா, மகன் ரமணாவைக் கைவிட்டுவிட்டு தனது அப்பாவின் வீட்டுக்குச் செல்கிறார். வருடங்கள் ஓடுகின்றன.  ரமணா வளர்ந்து பெரியவனாகிறான். அவனது அம்மா வசுந்த்ரா அரசியலில்  முக்கியப் புள்ளியாகிறார்.

ரமணா நெருங்க முடியாத இடத்தில் அவனது அம்மா இருக்கிறார். ரமணா எப்படி மீண்டும் அம்மாவுடன் சேர்கிறார் என்பதே திரைக்கதை. தெலுங்கு மசாலாப் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டுமே உரித்தான படம் இது. ரமணாவாக மகேஷ் பாபு நடித்திருக்கிறார். படத்தின் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.

பிலிப்’ஸ்

‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கும் மலையாளப்படம், ‘பிலிப்’ஸ்’. மனைவியை இழந்த பிலிப்பிற்கு பேசில் என்ற மகனும், பிளஸ்ஸி, பெட்டி என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். பெங்களூரில் வசித்து வரும் பிலிப், ஒரு  ஸ்போர்ட்ஸ் கடையில் வேலை செய்து வருகிறார். கண்டிப்பான தந்தையாக இருக்கிறார். பேசில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறான். அவனுக்கு டோனா என்ற காதலி இருக்கிறாள். நியூசிலாந்து செல்லும் திட்டத்தில் இருக்கிறான்.  

இந்த விஷயத்தைப் பற்றி அப்பாவிடம் சொல்ல பயப்படுகிறான். பன்னி ரண்டாம் வகுப்பு படித்து வருகிறாள் பிளஸ்ஸி. படிப்பைவிட ஸ்கேட்டிங் விளையாட்டில்தான் அவளுக்கு ஆர்வம் அதிகம். கடைசி மகளான பெட்டி செஸ் விளையாட்டில் கெட்டிக்காரியாக இருக்கிறாள். அப்பா கண்டிப்பாக இருந்தாலுமே கூட, எல்லோரும் மகிழ்ச்சியாக , ஜாலியாக இருக்கின்றனர். 

எதிர்பாராமல் நிகழும் ஒரு சம்பவம் குடும்பத்தின் மகிழ்ச்சியை அடியோடு பிடுங்கி எடுக்கிறது. அந்தச் சம்பவம் என்ன? அதிலிருந்து பிலிப்பின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதே திரைக்கதை. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆல்பிரட் குரியன் ஜோசப்.

பக்சக்

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘பக்சக்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. ரொம்பவே சுதந்திரமான பெண், வைசாலி. பெரிய நிறுவனங்களில் அடிமை போல வேலை செய்வது பிடிக்காமல், தனியாக ஒரு செய்திச் சேனலை நடத்தி வருகிறாள். சேனல் ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆன போதும் பெரிதாக மக்களிடம் சென்றடையவில்லை. அப்படியொரு சேனல் இருப்பதும் கூட யாருக்கும் தெரியாது.

இந்நிலையில் பீகாரில் உள்ள ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் வன்கொடுமை நடப்பதாக ஒரு தகவல் வைசாலிக்குக் கிடைக்கிறது. அந்த காப்பகத்துக்குப் பின்னணியில் பெரிய தலைகள் இருக்கின்றன. அந்த காப்பகத்தில் நடக்கும் உண்மைகளை வெளியில் கொண்டுவர தைரியமுடன் இறங்குகிறாள் வைசாலி. 

அவளுக்கும், குடும்பத்தினருக்கும் மிரட்டல்கள் வருகின்றன. காப்பக பிரச்னையைக் கைவிடுமாறு வைசாலியின் கணவர் சொல்கிறார். பெரிதாக பண பலமோ, அதிகார பலமோ எதுவும் இல்லாதவள். 

அவள் எப்படி பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்த்து, நீதியை நிலைநாட்டுகிறாள் என்பதே திரைக்கதை. உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ இப்படத்தை தயாரித்திருக்கிறது. இதன் இயக்குநர் புல்கிட்.

அப்கிரேடட்

ஒரு ஜாலியான ரொமாண்டிக் காமெடி படம் பார்க்க விரும்புகிறீர்களா? உங்களுக்கான நல்ல சாய்ஸ், ‘அப்கிரேடட்’. ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப்படம்.  அமெரிக்காவில் விலையுயர்ந்த் கலைப் பொருட்களை ஏலம் விடும் ஒரு நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை செய்கிறாள் அனா. கையில் பெரிதாக பணம் இல்லாததால் அக்காவின் வீட்டில் தங்கியிருக்கிறாள் அனா.

தங்களின் பிரைவசி பாதிக்கப்படுவதாக அனாவை அவமதிக்கிறார் அக்காவின் கணவர். அவமானங்களைத் தாங்கிக்கொண்டு அக்காவின் வீட்டிலேயே தொடர்ந்து இருக்கிறாள் அனா.
இன்னொரு பக்கம் வேலை செய்யும் இடத்தில் சீனியர்களால் அவமதிப்புக்குள்ளாகிறாள். இந்நிலையில் சிறப்பான ஒரு வேலையைச் செய்து பாஸிடமிருந்து நற்பெயரை வாங்குகிறாள். வேலை விஷயமாக லண்டன் செல்லும் வாய்ப்பு அனாவிற்குக் கிடைக்கிறது. 

ஆனால், அவளுக்கு எக்கானமிக் வகுப்பில்தான் டிக்கெட் போடப்படுகிறது. அந்த டிக்கெட் முதல் வகுப்பிற்கு அப்கிரேட் ஆக, அனாவின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை நகைச்சுவையும், காதலும் கலந்து சொல்லியிருக்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் கார்ல்சன் யங்.

தொகுப்பு: த.சக்திவேல்