கோபி மஞ்சூரியனுக்குத் தடை!
சமீபமாக இந்தியாவின் அநேக நகரங்களில் ஸ்ட்ரீட் ஃபுட் எனப்படும் தெரு உணவகங்கள் பிரபலமாகிவிட்டன. அதில் செய்யப்படும் ஃபாஸ்ட் ஃபுட்களுக்கு, குறிப்பாக சைனீஸ், கொரியன், இந்தியன் உணவுகளை சுவைத்து மகிழவே அத்தனை கூட்டம் இருக்கிறது.  இதிலும் மஞ்சூரியன், ஃப்ரைடு வகைகள், பானிபூரி சாட் ஐட்டங்களுக்கு பெரிய க்யூவே உள்ளன. மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை தொடரும் இந்த உணவுகள் சுகாதாரமானதா என்கிற கேள்வி எழுகிறது. இதில் நிறத்திற்காகவும் மணத்திற்காகவும் சேர்க்கப்படும் சுவையூட்டிகள், மசாலாப் பொருட்கள் எல்லாம் உடல்நலத்திற்குத் தீங்கானது எனத் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர் மருத்துவர்கள்.

இந்நிலையில்தான் கோவாவில் கோபி மஞ்சூரியனுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்தலமான கோவாவில் சில ஆண்டுகளாக கோபி மஞ்சூரியன் கடைகள் புகழ்பெற்றன. நிறைய ஸ்டால்கள் போடப்பட்டு காலிஃப்ளவர் மற்றும் முட்டைக்கோஸில் செய்யப்படும் மஞ்சூரியன்கள் விற்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் கோவா தலைநகர் பனாஜியிலிருந்து 13 கிமீ தொலைவில் உள்ள மபுசா நகர் கவுன்சிலர் தாரக் அரோல்கர், தெருக்கடைகள் செயற்கையான நிறமூட்டிகளாலும், தரமில்லாமலும் இந்த உணவுகளை விற்கின்றன. இதனால், இதற்கு தடை விதிக்க வேண்டுமென நகர்மன்ற கூட்டத்தில் குரல் எழுப்பினார். இது உடனடியாக தெரு உணவகங்களின் சுகாதாரம் குறித்தும், அதை முறைப்படுத்துவது குறித்தும் விவாதங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் மபுசா நகரில் இந்த உணவிற்குத் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2022ல் கவுன்சிலர் தாரக் அரோல்கர் முட்டைக்கோஸில் செய்யப்படும் மஞ்சூரியனுக்கு தடைவிதிக்க பரிந்துரைத்தார். பின்னர் அதற்கான தடையும் போடப்பட்டது. அப்போது, ‘செயற்கை நிறம், சுகாதாரமின்மையே இதற்குக் காரணம்.
அத்துடன் இதற்குத் தொட்டுக்கொள்ள தரப்படும் சட்னி உடலுக்கு மிகவும் தீங்கானது’ எனக் குறிப்பிட்டார் தாரக். இதே ஃபார்முலா கோபி மஞ்சூரியனுக்கும் பின்பற்றப்படுவதால் இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல தெருக்கடைக்காரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி உணவுக்கான தடைகள் கோவாவில் மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் உள்ளன.
பாப்புலரான எனர்ஜி பானமான ‘ரெட்புல்’ைல டென்மார்க், நார்வே, பிரான்ஸ், லித்துவேனியா உள்ளிட்ட நாடுகள் தடைசெய்துள்ளன. காரணம், இந்த ரெட்புல் பானத்தில் காஃபின் கன்டென்ட் அதிகமாக உள்ளதால் இதயப் பிரச்னை, மனச்சோர்வு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை உண்டாக்கும். எனவே இதைத் தடை செய்துள்ளதாக அந்நாடுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் இது அதிகம் நுகரப்படுகிறது.
கிண்டர் ஜாய் இந்தியாவில் அதிகம் நுகரப்படும் ஒரு சாக்லெட். குறிப்பாக, குழந்தைகள் அதிகம் விரும்பி உண்பவை. இது குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என அமெரிக்கா தடைசெய்துள்ளது. இதேபோல மேக் அண்ட் சீஸ் உணவுக்கு நார்வேயும், ஆஸ்திரேலியாவும் தடைசெய்துள்ளன.
பி.கே
|