சாண்டில்யன் பேரன்... இசையின் காதலன்!



தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன்‌. இவர் பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் பேரன். ‘தல கோதும்...’, ‘நான் காலி...’ உட்பட பல ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களால் அதிகம் அறியப்படும் இவர் இப்போது ‘லவ்வர்’ படம் செய்திருக்கிறார். அதில் இடம்பெற்ற ‘தேன் சுடரே...’ பாடல் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது.

ராகவேந்திரா ராவ் எப்படி ஷான் ரோல்டனாக மாறினார்?

அப்பா, அம்மா இருவரும் இசைக்கலைஞர்கள். அதுமட்டுமல்ல, எங்கள் குடும்பமே  இசைக் குடும்பம்னு சொல்லலாம். என்னுடைய பேக்ரவுண்டை வெச்சு ‘உனக்கென்னப்பா... எல்லாமே கிடைச்சிருக்கு’னு சொன்னவங்க இருக்காங்க.அந்த வட்டத்துக்குள் என்னை அடக்கிக் கொள்ள விருப்பமில்லை. 
பல மணி நேரம் உயிரைக் கொடுத்து சாதகம் பண்ணி இசை கத்துக்கிட்டேன்.
‘சங்கீதக் கலாநிதி’ சஞ்சய் சுப்பிரமணியம் என்னுடைய குருநாதர். ஆறு வயதிலேயே என்னுடைய முதல் கச்சேரி நடந்திருக்கு. ஒரே இடத்தில் நின்று விடாமல் தேடல்களோடு இருந்ததால் இந்த இடத்துக்கு வர முடிஞ்சது.

ஒரு ஜாலிக்காக என்னுடைய பேரை சான் ரோல்டன்னு மாத்திக்கிட்டேன். அதுவே இப்போது எல்லோராலும் அறியப்படுகிறது. ரஜினி சார், தனுஷ் சார் என அனைவரும் என்னை ஒரு பையன் மாதிரி ட்ரீட் பண்ணாம இசைக்கலைஞனாக ட்ரீட் பண்றாங்க. இசைத்துறையில் நான் இன்னும் சாதிக்கவில்லை, சாதிக்க வேண்டியது ஏராளமா இருக்கிறது. அதேசமயம் சான் ரோல்டனாக அறியப்படுவதை அங்கீகாரமாகவே பார்க்கிறேன்.

அது எப்படி நீங்கள் பாடும் பாடல் ஹிட் ஆகிறது?

அப்படியொரு எண்ணத்தில் பாடுவதில்லை‌. சில சமயம் டிராக் பாடும்போது அந்தக் குரல் இயக்குநர்களுக்கு பிடித்துப் போகிறது. அதுவே இருக்கட்டுமேனு சொல்லிவிடுகிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு கம்போஸர் பாடும்போது ஆத்மார்த்தமா இருக்கும். நடிகர்கள் சொந்தக் குரலில் பேசும்போது எப்படி ஒரு ஈர்ப்பு உள்ளதோ அதுபோலத்தான். 

‘லவ்வர்’ படத்தில் சந்தோஷ் நாராயணன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் பட வெளியீட்டுக்குப் பிறகும் பெரிய அளவில் ரீச் ஆகும்.மற்றபடி பின்னணிப் பாடகர்களை பயன்படுத்தக் கூடாதுனு எந்த நோக்கமும் இல்லை. என்னுடைய இசையில் சத்ய பிரகாஷ், பிரதீப், சக்திஸ்ரீ கோபாலன், கல்யாணி நாயர் என பலர்பாடுகிறார்கள்.

‘லவ்வர்’ பட அனுபவம் எப்படி?

‘லவ்வர்’ படத்துக்காக முதன்முதலாக இயக்குநர் பிரபு ராம் சந்திக்க வந்தார். கதை சொல்ல ஆரம்பிச்சவரிடம், கையில இருந்த பவுண்ட் ஸ்கிரிப்ட்டை வாங்கி, படிச்சுட்டு கூப்பிடுகிறேன்னு அனுப்பிவிட்டேன்.‘லவ்வர்’ படத்தின் கதை சமகால இளைஞர்களின் வாழ்க்கையை யதார்த்தமா சொல்வதுபோல் இருக்கும். அந்த வாழ்க்கையின் பிரதிநிதியாக மணிகண்டன் நடிச்சதும் படத்தோட பலம். மோகன் ராஜா அருமையான பாடல்களை கொடுத்தார். படத்தில் எட்டு பாடல்கள். எல்லாமே பேசப்படும்.

வாழ்வியல் சார்ந்த கதைகளில் அதிக பாடல்கள் இடம் பெறுவதைக் குறித்து..?

பாடல் வைக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் இல்லாமல் பாடலை கதைக்கேற்றவாறு பயன்படுத்த வேண்டும். பாரதிராஜா சார், பாக்கியராஜ் சார் படங்களில் பாடல்களே கதை சொல்வதுபோல் இருக்கும்.அந்த வகையில் வாழ்வியல் சார்ந்த கதைகளில் பாடல்கள் வைப்பது எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தாது. அரை மணி நேரத்தில் சொல்ல வேண்டிய கதையை சில நிமிட பாடலில் சொல்லிவிட முடியும்.

இன்னொரு பக்கம் நடனத்துக்கு முக்கியத்துவம் உள்ள பாடல்கள் இடம் பெறுகிறது.அதை தவறு என்று சொல்ல முடியாது. அப்படியொரு  கதை அமையும்போது நானும் அப்படி இசையமைக்க வேண்டும்.‘தல  கோதும்...’ பாடல் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இசை நிகழ்ச்சிக்காக வெளிநாடுகளுக்குச் சென்றால் அங்கேயும் அந்தப் பாடலைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனா, ‘முண்டாசுப்பட்டி’, ‘வாய்மூடி பேசவும்’ உட்பட பல படங்களில் பல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறேன். ஆனால், ‘தல கோதும்...’ பாடல் பேசப்படுவதற்கு காரணம் அது வாழ்க்கையை பற்றி பேசக்கூடிய பாடலாக இருந்ததால்தான்.

உங்கள் இசையில் இளையராஜாவின் பாதிப்பு அதிகம் இருப்பதாக வரும் விமர்சனங்களைக் குறித்து..?

சாருடைய தூசி கூட நான் இல்லை. இளையராஜா சார் மீது மக்களுக்கு அன்பும், மரியாதையும் உண்டு. ஆனா, அதையெல்லாம் தாண்டி அவர் மாபெரும் இசைக் கலைஞர். அவருடைய இசை நேர்த்தி, அர்ப்பணிப்பு அளவிட முடியாதது. அவருடைய ஸ்கோரிங் அனைத்துமே வியப்பளிக்கக் கூடியதா இருக்கும்.

வயலின் வாசிக்கும்போது ஏற்ற, இறக்கங்கள் எப்போது, எங்கே வரவேண்டும் என்பது அவருடைய ஆளுமையை வெளிப்படுத்துகிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்காக விஞ்ஞானிகளை எப்படி போற்றுகிறோமோ அதுபோல ராஜா சார்  எப்போதுமே போற்றுதலுக்குரியவர்.சமீபத்தில் அவர் இசையில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பு கிடைச்சது. இளம் வயதில் என் அப்பாவுடன் ராஜா சாரை சந்திச்சிருக்கிறேன். ஓர் இசைக் கலைஞனாக என் ஹீரோவை சந்தித்த அந்த தருணம் மறக்க முடியாதது.

‘ரகுதாத்தா’வில் என்ன மாதிரியான இசையை எதிர்பார்க்கலாம்?

ரொம்ப புதுமையான இசையை பார்க்கலாம். ‘முண்டாசுப்பட்டி’ படத்துல என்ன அனுபவம் கிடைத்ததோ அதுபோன்ற புது அனுபவமா இருக்கும். ரசனையாகவும், வியப்பாகவும் இருக்கும். என்ன என்று புரிவதற்குள் அது பிடித்து விடும். பீரியட் படமா இருந்தாலும் அதன் இசை ரொம்ப ஜாலியா இருக்கும். ‘லப்பர் பந்து’, ‘பாட்டில் ராதா’ ஆகிய படங்களிலும் வித்தியாசமான இசையை ரசிக்கலாம்.

கர்நாடக சங்கீதம், சுயாதீனப் பாடல்கள், சினிமா இசை - எதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது?

எல்லாவற்றையும் விட நமக்கு என்ன சந்தர்ப்பம் அமைகிறதோ அதை வைத்து சமுதாயத்துக்கு  இசை மூலம் என்ன சொல்ல முடியுமோ அதுவே எனக்கு ஆத்ம திருப்தி.  

மெலோடி இசைக்கு வரவேற்பு எப்படி உள்ளது?

அதிக வரவேற்பு இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. ஃபாஸ்ட் பீட் பாடல்களுக்கும் வரவேற்பு இருக்கிறதை பார்க்க முடிகிறது. எது வேண்டும் என தேர்வு செய்யும் முடிவு ரசிகர்கள் கையில் இருக்கிறது. இளைஞர்கள் புது களத்தில் இசையை உருவாக்குகிறார்கள் என்றால் அது அவர்கள் சுதந்திரம்‌. அதற்காக அவர்கள் உழைக்கிறார்கள். அதில் வெற்றி பெறுவது அவர்களுடைய பிரச்னை. அந்த இசைக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் காலம் முழுவதும் இசை நீடித்திருக்க முடியும்னு நம்புகிறேன்.

யூ டியூப் வருமானம் எவ்வளவு?

நல்ல வருமானம். ‘நான் காலி...’ பாடல் மொத்தமும் லைவ் மியூசிக்ல பண்ணினோம். முதலீடு செய்தால்தான் ரிட்டர்ன் கிடைக்கும். அதற்காக செலவு செய்தோம். மணிகண்டன் சிறந்த நடிகர். அவருக்காகவே அந்தப் பாடல்கள் உருவானதாக நினைக்கிறேன். அவரை யாருடனும் ஒப்பிட்டுப் பேச முடியாது. மணிகண்டன் தனி பிராண்டாக பார்க்கக் கூடிய வெகு தொலைவில் இல்லை.

யுவன்ஷங்கர் ராஜா, இமான், சந்தோஷ் நாராயணன், அனிரூத்... என சக இசைக் கலைஞர்களுடன் உங்கள் நட்பு எப்படி உள்ளது?

எல்லோரும் நண்பர்கள். ஒவ்வொருவரின் நோக்கம் வெவ்வேறாக இருந்தாலும் எல்லோரும் தங்கள் உழைப்புக்கு நியாயமாக இருக்கிறார்கள். மியூசிக்கை நான் எப்படி பயன்படுத்துகிறேன் என்பதற்கும், அனிரூத் ஒரு இசையை எப்படி பயன்படுத்துகிறார், சந்தோஷ் ஒரு இசையை எப்படி பயன்படுத்துகிறார் என்பதற்கும் வேறுபாடு இருக்கும். ஒவ்வொருவருக்கும் படைப்பு சுதந்திரம் இருக்கு. அதன்படி இயங்கும்போது அதை தவறு என்று சொல்ல முடியாது.

அதே சமயம் அக்காலத்து இசையமைப்பாளர்கள் கஷ்டப்பட்டுத்தான் தங்கள் இடத்தை அடைந்ததாகவும், இக்காலத்து இசையமைப்பாளர்கள் அப்படி இல்லை, அவர்கள் டிஜிட்டல் உதவியால் எளிதாக பேர் வாங்கிவிடுகிறார்கள் என்று சொல்கிறவர்களும் உண்டு. இளைஞர்களும் கடின உழைப்பு தருகிறார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

தனுஷ் படங்களுக்கு இசையமைத்த அனுபவம்?

அவருக்கு இசையும், இசையமைப்பாளர்களும் பிடிக்கும். நல்ல மியூசிஷனுக்கு சொத்தையே எழுதித் தந்துவிடுவார். எனக்கு அப்படி எழுதித் தரவில்லை. பாடணும்னு ரொம்ப ஆசைப்படுவார். அவர் பாடிய பாடல்கள் ஹிட்டாகியிருக்கு. அந்தப் பாடலுக்கு கிடைத்த வரவேற்பு அவருக்கு  கில்டி ஃபீல் கொடுத்ததால் மியூசிக் கிளாஸ் போக ஆரம்பிச்சார்.
எதைச் செய்தாலும் அதற்குரிய தரத்தைக் கொடுக்கணும்னு நினைப்பார். அதனால் தான் இவ்வளவு உயரத்துக்கு வந்துள்ளார்.   

எஸ்.ராஜா