திருடமுடியாது... ஆனால், கையாடல் செய்யலாம்!



மின்னணு வாக்கு இயந்திர சர்ச்சையில் புதிய பிரச்னை

ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரம் பற்றிய சர்ச்சைக்கு இந்தியாவில் குறைவில்லை. ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போதும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை பூதாகரமாக எழுப்பும். 
ஆனால், சிறிது காலத்தில் எல்லாம் நார்மல் மோடுக்கு வந்துவிடும். பழைய தேர்தல் முறையான தாள் வாக்கில் (பேப்பர் ஓட்டிங்) ஆள்மாறாட்டம், பெட்டியை அபேஸ் செய்தல் போன்றவை அதிகம் பேசப்பட்டாலும் ஈவிஎம்மில் நம்பப்படும் ஆபத்து, வாக்குகளை தூர தேசத்தில் இருந்துகொண்டே திருடமுடியும் (ஹேக்) என்பது.

‘திருட எல்லாம் முடியாது... வேண்டுமென்றால் அதில் சில நகாசு வேலைகளை செய்வதன்மூலம் வாக்குளை கையாடல் செய்யலாம்...’ என்று அண்மையில் சில ஆதாரங்களுடன் பேசியதன் மூலம் மாதவ் தேஷ்பாண்டே எனும் கம்ப்யூட்டர் வல்லுனர் மீண்டும் இந்தப் பிரச்னையை பேசுபொருளாக மாற்றியிருக்கிறார். 
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக இருந்தவர், அங்கேயே பல கம்பெனிகளின் தொழில்நுட்ப மேலாளராக 40 வருட அனுபவம் பெற்றவர்... இப்படிப்பட்ட மாதவ் அண்மையில் ‘வயர்’ என்ற இணைய இதழுக்காகக் கொடுத்த பேட்டிதான் இந்திய வாக்காளர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.

மாதவ் என்ன சொல்கிறார்?

‘‘பொதுவாக மேற்குலக நாடுகளில்தான் ஈவிஎம் இயந்திரங்கள் ப்ளூ டூத், வைஃபை மற்றும் இண்டர்நெட்களுடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும். அங்கே ஒரு வாக்காளரின் கைரேகை, கருவிழி படல அடையாளத்தை எல்லாம் கண்டுபிடித்து ஒரு தேர்தல் நியாயமாக நடப்பதற்காக அவர்கள் இந்த வெளிப்புற தொடர்புசாதனங்களுடன் வாக்கு இயந்திரத்தை இணைத்திருக்கிறார்கள்.

ஆனால், இந்தியாவில் பயன்படுத்தும் மின்னணு வாக்கு இயந்திரம் எந்தவித வெளிப்புற தொடர்பு சாதனங்களுடனும் இணைக்கப்பட்டிருக்காது.

இதனால் இந்திய வாக்கு இயந்திரத்தை வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் ஒரு சாதாரண ரிமோட்டில் திருடமுடியும் என்று சொல்வது எல்லாம் 100 சதவீதம் சாத்தியமே இல்லாதது...’’ என்று அடித்துச் சொல்லும் மாதவ், ஆனாலும் இந்திய ஈவிஎம் இயந்திரங்கள் குறைகள் அற்றது என்றும் சொல்லிவிட முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.

‘‘பொதுவாக இந்திய மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒரே இயந்திரமாக இந்திய தேர்தல் கமிஷன் சொல்வதே முதலில் தவறானது. உண்மையில் இந்திய வாக்கு இயந்திரம் மூன்று இயந்திரங்களைக் கொண்டது.

முதலாவதாக பேலட் யூனிட் (Ballot Unit - BU) எனப்படும் நாம் வாக்கைச் செலுத்தும் இயந்திரம், இரண்டாவது விவிபேட் (VVPAT) எனப்படும் நாம் வாக்கு போட்டதற்கான தாள் ரசீதை தரும் இயந்திரம், மூன்றாவதாக கண்ட்ரோல் யூனிட் (Control Unit- CU) எனப்படும் மெமரியுடன் கூடிய சேமிப்பு பகுதி. 

இதில் விவிபேட்டில்தான் பிரச்னை என்று சொல்லும் மாதவ் அந்தப் பிரச்னைகளையும் பட்டியலிடுகிறார்.‘‘நாம் போடும் வாக்கு சரியானதா என்று காட்ட பேலட் யூனிட்டில் லைட் எரியும். பிறகு நாம் ஓட்டு போட்ட வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது கட்சி முத்திரை அடங்கிய ஒரு தாள் ஆதாரம் விவிபேட் வழியாக நம் கையில் வரும்.

இது நாம் பேலட்டில் போட்ட வேட்பாளருக்குத்தான் சீட் கிடைத்திருக்கிறது என்ற ஒரு நம்பிக்கையை வாக்காளருக்குக் கொடுக்கும். அடுத்து விவிபேட்டில் என்ன சீட் வருகிறதோ அந்த சீட்டுக்கான வேட்பாளரின் கணக்கில் ஒரு ஓட்டு கண்ட்ரோல் யூனிட் எனும் சேமிப்பு கிடங்கில் போய் சேகரமாகும். இந்த ரசீது, சேமிப்புக் கிடங்கு எனும் கண்ட்ரோல் யூனிட்டில் சேமிக்கப்படுகிறதா என்பதே பெரிய கேள்வி...’’ என்று சொல்லும் மாதவ் அதையும் விளக்கினார்.

‘‘மூன்று இயந்திரங்களில் பேலட் யூனிட்டும், கண்ட்ரோல் யூனிட்டும் ஒன்றிய அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிப்படுகின்றன. இந்த இரண்டுமே ஒரு மாநிலத்தில் எந்த வாக்குச் சாவடிக்கு போகிறது... அந்த வாக்குச் சாவடியில் யார் எல்லாம் போட்டி போடுகிறார்கள்... என்பதைப் பற்றிய கவலை ஒன்றிய அரசுக்கு இல்லை. 

பேலட் யூனிட் பொத்தானை அழுத்தினால் லைட் எரியப் போகிறது... இதில் குறை இருந்தால் வாக்காளருக்கு சந்தேகம் வந்துவிடும்... அதேமாதிரி கண்ட்ரோல் யூனிட்டிலும் கையாடல் செய்யமுடியாது. ஏனெனில் கண்ட்ரோல் யூனிட் வெறும் சேமிப்புக் கிடங்குதான். அதற்கு என்ன சேமிக்கவேண்டும் என்று சொல்லத்தான் ஒரு கருவி வேண்டும்.

நாம் பேலட் யூனிட்டில் பொத்தானை அழுத்தினால் அது சேமிக்கப்படவேண்டும் என்று புரோகிராம் செய்திருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், நாம் பொத்தானை அழுத்திய பிறகு அது விவிபேட்டில் ரசீதாக வந்தபிறகே சேமிக்கப்படுவதாக இருப்பதால்தான் பிரச்னை. 

இப்படி இருக்கும்போது இந்த மூன்று யூனிட்டில் நந்தியாக நடுவில் இருக்கும் விவிபேட்டில்தான் கையாடல் செய்வதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன...’’ என்று சொல்லும் மாதவ், அந்த விஷயத்தையும் போட்டுடைத்தார்.

‘‘பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் மாதிரி ரெடிமேடாக  விவிபேட் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இதனால் இந்த இயந்திரத்தில் கோளாறு செய்வதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.

உதாரணமாக,  மற்ற யூனிட்டுகள் தேர்தல் நடக்கும் நாளுக்கு பல நாட்கள் முன்பே மாநிலங்களுக்கு சென்றாலும் இந்த விவிபேட் இயந்திரம் தேர்தல் நடக்கும் 10 அல்லது 15 நாட்களுக்கு முன்தான் வினியோகிக்கப்படும். காரணம், ஒரு வேட்பாளரை தேர்தல் கமிஷன் நிர்ணயித்து அந்த வேட்பாளரின் பெயரைப் பதிவதற்கு முன்னால் பலமுறை சரிபார்ப்பை செய்யும். கடைசியில் ஏற்றுக்கொள்ளவோ அல்லது நிராகரிக்கவோ செய்யும்.

ஏற்கப்பட்ட வேட்பாளரின் பெயர், கட்சி மற்றும் சின்னங்களைச் சரிபார்த்து அதை ஒரு வெளிப்புற தொடர்பு சாதனத்தில் பதிவேற்றியிருக்கும். இந்த வெளிப்புற சாதனம் ஒரு கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பாக இருக்கலாம். 

இந்த கம்ப்யூட்டர் அல்லது லேப் டாப்பிலிருந்துதான் விவிபேட்டுக்கு பதிவேற்றும்...’’ என்று சொல்லும் மாதவ் இந்த பதிவேற்றத்தில்தான் தேர்தல் தில்லுமுல்லுகள் நடக்க வாய்ப்புள்ளதாகக் கருதுகிறார்.‘‘பேலட் யூனிட்டில் போடும் ஓட்டுக்கு சரியாக லைட் எரிகிறது... லைட் எரிந்த வேட்பாளரின் பெயர் விவிபேட்டிலிருந்து ரசீதாக வருகிறது... எல்லாம் சரி.

ஆனால், விவிபேட் அந்த வேட்பாளரின் கணக்கில்தான் அந்த வாக்கை கண்ட்ரோல் யூனிட்டில் சேமிக்கிறது என்று யாருக்குத் தெரியும்?

சந்தேகம் இங்குதான் எழுகிறது. ஏனெனில் விவிபேட்டுக்கு பதிவேற்றிய வேட்பாளர் டேட்டாவையும் தாண்டி சில விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது ஒரு வேட்பாளரின் ஒவ்வொரு 5 அல்லது 6 வாக்குக்குப் பின்பு பதியப்படும் வாக்கை எதில் சேமிக்க வேண்டும் என்று பதிவேற்றும் ஆட்கள் முடிவு கட்டலாம். 

அதற்கு ஏற்ப அந்த விவிபேட்டில் புரோக்ராம் செய்யலாம்.இந்த சாத்தியங்கள் இருப்பதால் ஒரு வாக்காளர் போடும் ஓட்டு, சம்பந்தப்பட்ட அந்த வேட்பாளருக்குத்தான் செல்கிறது என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது...’’ என்று சொல்லும் மாதவ், இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய சில விஷயங்களைச் சொல்கிறார்.

‘‘பேலட் யூனிட்டில் அழுத்தப்படும் பொத்தானின் மதிப்புக்கு ஏற்ப நேரடியாக கண்ட்ரோல் யூனிட் சேமிக்கவேண்டும். விவிபேட்டுக்கும் கண்ட்ரோல் யூனிட்டுக்குமான தொடர்பைத் துண்டிக்க வேண்டும். 1977களில் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திர மாடல்களையே இந்தியா இன்றும் பின்பற்றுகிறது. 

இதனால்தான் கண்ட்ரோல் யூனிட்டான சேமிப்பு இயந்திரத்தையும் மாற்றி விடுவதாக புகார்கள் வருகின்றன. இதைத் தீர்க்க பேலட் யூனிட்டையும் கண்ட்ரோல் யூனிட்டையும் இணைக்கும் முறையைக் கொண்டு வரவேண்டும். இந்த பேலட் யூனிட் இந்த கண்ட்ரோல் யூனிட்டுடன் மட்டும்தான் தொடர்புடையது என்றால் போலி கண்ட்ரோல் யூனிட்களை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்.

அதேமாதிரி கண்ட்ரோல் யூனிட்டுகளின் இடத்தை சரிபார்க்க அந்த யூனிட்டில் ஜிபிஎஸ் முறையைக் கொண்டு வரலாம். ஒருகாலத்தில் இந்தியாவில் ஃபியட் கார்கள் பிரபலம். ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால் இப்போது இந்தியாவில் பல வகையான கார்கள் வந்துவிட்டன. ஆனால், தேர்தல் விஷயத்தில் பழைய காரையே இந்தியா ஓட்டிக் கொண்டிருப்பது பல விபத்துகளுக்குக் காரணமாகி விடுகிறது.

அதைத்தான் தேர்தல் பற்றிய பல புகார்களில் பார்க்கிறோம்...’’ என்று மாதவ் சொல்ல, இந்தியாவின் மின்னணு வாக்கு இயந்திரம் பற்றி அண்மையில் புத்தகம் எழுதிய அய்யநாதன் வேறு பல விஷயங்களைப் பட்டியலிடுகிறார்.‘‘2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் விவிபேட்டை முழுமையாக இந்தியாவில் பயன்படுத்துவோம்... விவிபேட்டின் எண்ணிக்கையையும், கண்ட்ரோல் யூனிட் எண்ணிக்கையையும் சரிபார்த்து முடிவை அறிவிப்போம்... என்று இந்திய தேர்தல் ஆணையம் வீறாப்பாக அறிவித்தது.

ஆனாலும் மிகக் குறைந்தளவில்தான் 2019 தேர்தலிலும் விவிபேட் பயன்படுத்தப்பட்டன. விவிபேட் முறையை முழுமையாகப் பயன்படுத்தவும், அந்த எண்ணிக்கையில் பாதி சதவீதத்துடனாவது கண்ட்ரோல் யூனிட் எண்ணிக்கையை சரிபார்க்கவும் எதிர்க்கட்சிகள் கேட்டன. ஆனால், எல்லா விவிபேட்டையும் எண்ண பல மாத காலம் பிடிக்கும் என்று ஆணையம் தேர்தலுக்குப் பின்வாங்கியது. முன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷி, இன்னும் சில ஆட்களைப் போட்டால் சில மணிநேரத்துக்குள் எண்ணிவிடலாம் என்று சவால் கூட விட்டார்.

அத்தோடு விவிபேட்டையும் தாண்டி கண்ட்ரோல் யூனிட்டிலும் கையாடல் செய்யலாம் என்று பலபேர் டெமோ வேறு செய்தனர். அதில் முக்கியமானவர் ஹரி கே பிரசாத்.
ஒரு ரேடியோ டிரான்ஸ்மிட்டரை கண்ட்ரோல் யூனிட்டில் பொருத்துவதன் மூலம் கண்ட்ரோல் யூனிட்டின் மெமரியைக் கூட களவாடி விடலாம் என்று ஆதாரத்துடன்
நிரூபித்தார். ஆகவே, பழைய தாள் முறை அல்லது மின்னணு இயந்திரத்திலேயே விவிபேட்டை முழுமையாக எண்ணுவதுதான் இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வாக முடியும்...’’ என்கிறார் அய்யநாதன்.

டி.ரஞ்சித்