சர்வதேச அறிவியல் பரிசு வென்ற பெங்களூரு மாணவி!



சர்வதேச அறிவியல் வீடியோ போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசான 3 கோடியே 32 லட்ச ரூபாய் பரிசுத் தொகையைத் தட்டி வந்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த சியா கோடிகா என்ற 17 வயது பள்ளி மாணவி. 
இந்தப் போட்டி கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரின் மனைவி பிரிசில்லா சான், ரஷ்ய தொழில்நுட்ப நிறுவனர் யூரி மில்னர், அவரின் மனைவி ஜூலியா மற்றும் அமெரிக்கத் தொழிலதிபர் ஆனி வோஜ்சிக்கி ஆகியோரால் தொடங்கப்பட்டது.

லைஃப் சயின்ஸ், பிசிக்ஸ், மேத்ஸ் ஆகியவற்றில் உள்ள அடிப்படைக் கருத்துகளைப் பற்றிய ஆக்கபூர்வமான சிந்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தப் போட்டி உருவாக்கப்பட்டது.
Breakthrough prize foundation என்ற பெயரில் நடத்தப்படும் இது அறிவியல் ஆஸ்கர் என்றும் அழைக்கப்படுகிறது. 

இதில், ப்ரேக்த்ரூ ஜூனியர் சேலஞ்சில் கலந்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியான சியா கோடிகா ‘யமனகா காரணிகள்’ என்ற தலைப்பில் வீடியோ பண்ணினார். இதில் நோபல் பரிசு வென்ற பேராசிரியரும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியாளருமான ஜப்பானைச் சேர்ந்த ஷின்யா யமனகாவின், ‘காலத்தைத் திரும்பப் பெறக்கூடிய’ ப்ளூரிபோடன்ட் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் குறித்து வெளியிட்டார்.

இதில் சியா கோடிகா முதுமையிலிருந்து இளமையான தோற்றம் வரை சிறப்பாக பேசி நடித்து, அனைவருக்கும் இந்தத் தொழில்நுட்பம் புரியும்படி செய்தார். இந்த வீடியோ பலரையும் கவர்ந்திழுக்க முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 

இதன்மூலம் சியா கோடிகாவுக்கு கல்லூரி ஸ்காலர்ஷிப்பாக 2 கோடியே 7 லட்சம் ரூபாயும், சியாவின் அறிவியல் ஆசிரியரான ஆர்கா மௌலிக்கிற்கு ரூ.41 லட்சமும், சியா படிக்கும் நீவ் அகடமி பள்ளிக்கு ரூ.83 லட்சம் மதிப்பிலான கோல்டு ஸ்பிரிங் ஹார்பர் லெபாரட்டரி வடிவமைத்த ஆய்வகமும் வழங்கப்படுவதாக ப்ரேக்த்ரூ ப்ரேஸ் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

பி.கே