டோனி என்பது இனி வெறும் பெயர் அல்ல... அது ஓர் அடையாளம்!தலைமை ஏற்கும் ஒருவரை பாஸ், தலைவர், லீடர், கேப்டன் என்றெல்லாம் அழைப்பது போல இனி டோனி என்றும் அழைக்கலாம். இல்லை... ‘இனி டோனி என்று மட்டும்தான் அழைக்க வேண்டும்’ எனச் சொல்லலாம். அந்த அளவுக்கு இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறார் மகேந்திர சிங் டோனி. சச்சின் டெண்டுல்கரே, ‘நான் விளையாடிய கேப்டன்களில் டோனிதான் மிகச் சிறந்தவர்’ என்று சான்று கொடுத்திருக்கிறார்.
ட்வென்ட்டி 20 உலகக் கோப்பை, டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகத் தரவரிசையில் முதல் இடம், ஒருநாள் போட்டிகளில் இப்போது உலகக் கோப்பை, ஐபிஎல் போட்டியில் முதல் இடம், சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்ற அணி என்று, எந்த அணி முதல் இடத்தில் இருக்கிறதோ அதன் தலைவராக இருக்கிறார் டோனி.
மைதானத்தில் டோனியின் நடவடிக்கைகள் எல்லாமே நிர்வாகவியல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுபோல இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு அசைவிலும் ஒரு மேனேஜ்மென்ட் தியரி இருக்கிறது. டாஸ் வென்றால் ஒரு அணுகுமுறை... தோற்றால் ஒரு அணுகுமுறை என்று எதற்கும் தயார் நிலையில் தன் அணியை வைத்திருப்பதில் தொடங்குகிறது அவருடைய தலைமைப் பண்பு!
துறை எதுவாக இருந்தாலும் தலைவருக்கான பாடத்தை டோனியிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். தேர்வுக்குழுவுடன் பேசி தனக்குச் சாதகமான அணி வீரர்களைப் பெறுவது, தன்னுடைய அணி வீரர்களைச் சமாளித்து சிக்கலில்லாமல் கொண்டு செல்வது, பரபரப்பு கிளப்பும் மீடியாவுக்கு பதில் சொல்வது, எதிர் அணியின் பலம்&பலவீனங்களுக்கு ஏற்ற வகையில் வியூகம் வகுப்பது என்று எல்லா திசைகளிலும் அம்பு விடவேண்டிய வித்தைக்காரனாக இருக்கிறார் டோனி. எல்லா துறைகளிலுமே இந்த சவால்கள் இருக்கத்தான் செய்யும். சமாளிக்கும் விதம் வேறாக இருந்தாலும் பிரச்னையின் வேர் ஒன்றுதான்! ஆக, எந்தச் சிக்கலை எப்படி சமாளிப்பது..? நம் கையில் இருக்கும் சக்சஸ் மாடல் டோனியை வைத்துக் கொண்டு அவர் எந்த வழியில் செல்கிறார் என்று பார்த்து நாமும் வெற்றிப் பாதையைப் பிடிக்கலாமா..?
தைரியமாக முடிவு எடுங்கள்!இந்த பாயின்ட்டுக்கு டோனியிடம் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. இந்த உலகக் கோப்பையில் வெற்றியை முத்தமிட்ட பிறகு, கோப்பையை முத்தமிடுவதற்கு முன்பாக ரவி சாஸ்திரி டோனியை அழைக்கிறார். மைக்கை நீட்டியதும் டோனி சொன்ன விஷயம்... ‘ஏன் ஸ்ரீசாந்த்... அஸ்வினை எடுத்திருக்கலாமே..? ஏன் யுவராஜ் சிங் இறங்குவதற்கு பதிலாக நீங்கள்..? என்றெல்லாம் கேள்விகள் வரிசை கட்டி வந்திருக்கும். ஆனால், வெற்றி எல்லோருடைய வாயையும் அடைத்துவிட்டது...’ என்பதுதான். அதுதான் பாயின்ட். ‘எத்தனை புயல்களைச் சந்தித்தாய் என்பதல்ல முக்கியம், கப்பலைக் கரை சேர்த்தாயா, சொல்!’ என்பதுதான் கேள்வி. கப்பலைக் கரை சேர்த்த பிறகு ஸ்ரீசாந்த் வாரி வாரி வள்ளலாக ரன்களை வழங்கியது யாருக்கும் முக்கியமாகப் படவில்லை.
‘டோனிக்கு தெரியுமப்பா... அஸ்வினை எடுத்து ஒருவேளை வொர்க் அவுட் ஆகாமப் போயிருந்தா..? அதோடு, நாம ட்வென்ட்டி 20 ஜெயிச்சப்போ அணியில் ஸ்ரீசாந்த் இருந்தாரு... அந்த ராசிக்காகத்தான் அவரைச் சேர்த்திருக்காரு’ என்று ஆளாளுக்கு தாங்களாகவே காரணங்களைக் கற்பித்துக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் டோனி இதேபோன்றதொரு முடிவை இன்னொரு தருணத்தில் எடுத்தார். இங்காவது ஸ்ரீசாந்த் வாரி வழங்குவதைப் பார்த்து எட்டு ஓவர்களோடு நிறுத்திக் கொண்டு வேறு பவுலர்களை வைத்து சமாளித்துவிட்டார். ஆனால், ட்வென்ட்டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரை வீசுவதற்கு ஜோகிந்தர் சர்மாவை அழைத்தார் டோனி. சகலருக்கும் அதிர்ச்சி. ஹர்பஜன் சிங் மூன்று ஓவர்கள்தான் வீசியிருந்தார். இன்னமும் ஒரு ஓவர் அவருக்கு மீதம் இருக்கிறது. பாகிஸ்தானுக்கோ வெற்றி கூப்பிடும் தூரத்தில் இருந்தது. ஆனால், ஜோகிந்தர் அந்தக் கடைசி ஓவரை அபாரமாக வீசி இந்தியாவை வெற்றி பெறச் செய்தார்.
அப்போதும் கோப்பையை வாங்கும்போது டோனியிடம் கேட்டார்கள்... ஒருவேளை ஜோகிந்தர் சர்மா க்ளிக் ஆகாமல் போய் கோப்பை கைநழுவியிருந்தால்..? ‘ஒரு புதிய முயற்சியைச் செய்துபார்த்தேன் என்ற திருப்தி கிடைத்திருக்கும். தவறான முடிவு எடுத்ததாக வருந்தமாட்டேன்...’ என்றார். அந்த முடிவை எடுப்பதற்கு முன் டோனிக்குள் ஆயிரம் கேள்விகள் ஓடியிருக்கும். பல சாய்ஸ்களை யோசித்திருப்பார். அத்தனையையும் மீறி தனக்கு சரியென்று தோன்றும் முடிவை தைரியமாக எடுத்தார் பாருங்கள்... அங்கேதான் டோனி தலைவராக நிற்கிறார்.
உங்கள் திட்டத்தின் வெற்றிக்கு என்ன வழி என்பதை யோசியுங்கள். அதற்கு யார் சரியாக இருப்பார்கள் என்பதைத் தீர்மானியுங்கள்... மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கம் இல்லாமல் அந்த நபரிடம் பொறுப்பைக் கொடுங்கள். ஆனால், அதற்கு முன் உங்களுக்குள் ஆயிரம் முறை கேட்டுக் கொள்ளுங்கள், அந்த நபர் சரியான சாய்ஸாக இருப்பாரா என்று. உங்கள் மனம் ‘ஆம்’ என்று சொல்லிவிட்டால் யாருக்காகவும் பின்வாங்காதீர்கள்... வெற்றி உங்களுக்குத்தான்!
(தொடரும்)
சி.முருகேஷ்பாபு