இணையத்தில் எழுத்தாளர்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

வலைப்பூக்களில் பலர் எழுதுகிறார்களே... நானும் அதுபோல இணையத்தில் எழுத விரும்புகிறேன். அதற்குச் செலவாகுமா? என்ன வழி?
 ஆர்.ராதிகா, ராஜபாளையம்.

பதில் சொல்கிறார் வலைப்பதிவர் - எழுத்தாளர் தேனம்மை லெக்ஷ்மணன்

இணைய இணைப்பும் மின் அஞ்சல் கணக்கும் இருந்தாலே போதும்... வேறெந்த செலவும் இல்லாமல் வலைப்பூ தொடங்கலாம். blogger.com,Wordpress.com,typepad.com  போன்ற சேவைத்தளங்களில் இரண்டே நிமிடங்களில் பதிவுசெய்து, உடனே எழுதத் தொடங்கிவிடலாம். விரும்பினால் சுய விவரம், புகைப்படத்தோடு, பிடித்த திரைப்படங்கள், இசை, புத்தகங்கள் போன்ற ஆர்வங்களையும் பதிவு செய்யலாம்.

உங்கள் வலைத்தளத்துக்கு பெயர் சூட்ட வேண்டும். அதன்பிறகு டாஷ்போர்ட் பலகைக்குச் சென்று ‘புதிய இடுகை’ என்பதை க்ளிக் செய்து கதை, கவிதை, கட்டுரை என விரும்புவதை எழுதி வெளியிட வேண்டியதுதான்! படங்கள், வீடியோ, ஆடியோ க்ளிப்பிங்ஸ் இணைக்கும் வசதியும் உண்டு.

கணினியில் தமிழ் எழுத யூனிகோட் எழுத்துரு தேவை. ‘பொங்கு தமிழ் யூனிகோட் எழுதி’ பயன்படுத்தலாம். அல்லது NHM Writer என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழையே எஸ்எம்எஸ்ஸில் ஆங்கிலத்தில் அடிப்பதுபோலவே, இதிலும் அடித்து, தமிழாகப் பெறும் கீபோர்டு வசதியும் உள்ளது.

வலைப்பூவில் எழுத ஆரம்பித்ததும் உறவினர்கள், நண்பர்களுக்குச் சொல்லலாம். பின்பற்றுபவர்கள் என்ற கேட்ஜெட்டை நம் வலைப்பூவில் சேர்க்கலாம். நாமும் பிற வலைப்பூக்களில் பின்பற்றுபவராகச் சேர்ந்து, படித்து, பின்னூட்டமிட்டால், நம் வலைப்பதிவை படிக்கும் வாசகர்கள் அதிகமாவார்கள்.

வலைப்பூவை பிரபலமாக்க திரட்டிகளில் இணைக்கலாம். தமிழ்மணம், தமிழிஷ், உலவு என பல திரட்டிகள் உள்ளன. திரட்டிகள் ஒவ்வொரு இடுகையையும் அறிவிப்பாக வெளியிடும். ஃபேஸ்புக், ட்விட்டரிலும் இடுகைகளைப் பகிரலாம். நெட்வொர்க் ப்ளாக்ஸ் போன்றவற்றிலும் இணைக்கலாம். வாரம் ஓரிரு பதிவாவது எழுதுதல் நல்லது. சிறப்பான பதிவுகள் வாசகர் வட்டத்தை உருவாக்கும்.

ஆங்கில வலைப்பூவாக இருந்தால் ‘கூகுள் ஆட்சென்ஸ்’ விளம்பரத்தை நம் வலைப்பூவில் வெளியிட அனுமதி கொடுத்து, வருகையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறிய தொகை ஒன்றையும் சம்பாதிக்க முடியும். வாழ்த்துகள் வலைப்பதிவரே!

கல்யாண வீடுகளில் சாப்பாட்டுக்கு ஊற்றுகிற சாம்பாரின் ருசியே தனி. அப்படி என்னதான் அதன் ரகசியம்? வீடுகளில் செய்ய முடியாதா?
 எஸ்.பவித்ரா, நாமக்கல்.

பதில் சொல்கிறார் சமையல்கலை நிபுணர் ரேவதி சண்முகம்

கல்யாண சாம்பாரும் ஓட்டல் சாம்பாரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். ஓட்டல்களில் மசாலா பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொள்வார்கள். கல்யாணங்களில் அப்போதே அரைத்து, அப்போதே செய்வதுதான் ஸ்பெஷல்!

துவரம் பருப்பை தனியே வேக வைக்கவும். மேலே படிகிற கசடை எடுத்துவிட்டு, நன்கு வேக விடவும். புளியைக் கரைத்துத் தனியே கொதிக்க விடவும். கொதித்ததும், அதில் காய்கறிகள் (பூசணிக்காய், அவரைக்காய் என விருப்பமான காய் அல்லது எல்லாம் கலந்தது), பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, தக்காளி சேர்த்துக் கொதிக்க விடவும். காய் வெந்ததும் அதில் தனியா, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, வெந்தயம், பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சிறிது எண்ணெயில் சிவக்க வறுத்து அரைத்துச் சேர்க்கவும்.

கொதிக்கும்போது வெந்த பருப்பையும் சேர்த்து, கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டவும். விருப்பப்பட்டால் துளி வெல்லம் சேர்க்கலாம்.

கடைசியாக கொஞ்சம் சின்ன வெங்காயத்தை நன்கு வதக்கி, கொதிக்கிற சாம்பாரில் கொட்டினால், கல்யாண சாம்பார் மணக்கும்!