சிலுவைப பயணம்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் வருகிறது ‘புனித வெள்ளி’. இது மனிதனுக்கு ‘அன்பே இறைவன்’ என்பதை உணர்த்தும் விடிவெள்ளி!

ஜெருசலேம் - யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என மும்மதத்தினருக்குமே புனித பூமி. உலகெங்கிலும் இருக்கும் கிறிஸ்தவர்கள் இங்கே புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். ‘சர்ச் ஆப் ஹோலி செபல்ச்சர்’ என்ற பெரிய தேவாலயத்துக்குள் இயேசுவை சிலுவையில் அறைந்த இடம், அவரது உடலைக் கிடத்திய கல், அவரை அடக்கம் செய்த கல்லறை இருப்பதுதான் காரணம். இந்த புனித தேவாலயத்தைப் பார்க்கும் வாழ்நாளில் மறக்கமுடியாத அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது!

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine‘‘இயேசுவை யூதாஸ் காட்டிக் கொடுத்த இடத்துக்குச் செல்லப் போகிறோம்’’ என்றார் வழிகாட்டி. என் மனதை சொல்லொண்ணா துயரம் அப்பிக் கொண்டது. கேவலம் 30 வெள்ளிக் காசுகளுக்காக நல்லவரைக் காட்டி கொடுத்த துரோகி... குமுறியது உள்ளம்.

‘கெத்செமனே’ தோட்டத்துக்குள் நுழைந்தோம். ‘கெத்’ என்றால் ஆலிவ் காய்களை நசுக்கும் இடம் என்று அர்த்தமாம். பெயருக்கு ஏற்றாற்போல ஆலிவ் மரங்கள் நிறைந்து காணப்பட்டன. இங்குதான் இயேசு அடிக்கடி சீடர்களோடு வருவாராம். ‘லாஸ்ட் சப்ப’ருக்குப் பிறகு இங்கே வந்து பிரார்த்தித்து இருக்கிறார். ‘இறைவனே... இனி வரப்போகும் கஷ்டங்களை எல்லாம் நான் அனுபவிக்க வேண்டுமா? சரி... அதுதான் உன் இஷ்டம் என்றால் அப்படியே நடக்கட்டும்’ என்று பிரார்த்தனையை முடித்துவிட்டு எழுந்து வெளியே வரும்போது யூதாஸினால் காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்த இடத்தில் ‘சர்ச் ஆப் ஆல் நேஷன்ஸ்’ என்ற அழகிய தேவாலயம் எல்லா நாட்டு மக்களின் நன்கொடையோடு கட்டப்பட்டிருக்கிறது. இயேசு பிரார்த்தனை செய்த இடத்தை பெரிய சலவைக்கல் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் முள் போன்ற தோற்றத்தைத் தந்த இரும்பு வேலி. இயேசுவின் தலையில் பதிக்கப்பட்ட முள்கிரீடத்தை சிம்பாலிக்காக குறிக்கிறதோ?

தேவாலயத்தை விட்டு கனத்த மனதோடு வெளியே வந்தோம்.

சூழ்ந்திருந்த ஆலிவ் மரங்களுக்கு எல்லாம் ஆயிரம், இரண்டாயிரம் வருடம் வயது இருக்கும் என்றார்கள். பிரமித்துப் போனேன். இன்றும் காய்த்து குலுங்கிக் கொண்டிருந்தன. போதகரின் கால்பட்ட இடம் ஆயிற்றே! ஜீவநதியாக ஆயுசு வளர்வதில் ஆச்சரியம் என்ன?

அடுத்து, இயேசு சிலுவையை சுமந்து சென்ற வழியாக செபல்ச்சர் தேவாலயத்துக்குச் செல்ல இருந்தோம். இந்த வழியை ‘வயா டோலரோசா’ என்று அழைக்கிறார்கள். ‘சோகத்தின் வழி’ என்று அர்த்தம். இந்த வழியை 14 நிலையங்களாக பிரித்திருக்கிறார்கள். 8 நிலையங்கள் வழிகளாக நீண்டு செல்ல, மீதி 6&ம் செபல்ச்சர் தேவாலயத்தில் இருக்கின்றன.

முதல் நிலையம் என்பது ‘இயேசு சிலுவையில் அறையப்பட வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்ட இடம். இங்கே இருந்த தேவாலயத்தின் ஜன்னல்களை பெரிய கண்ணாடிச் சித்திரங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. பிலாத்து கைகளைக் கழுவி இயேசுவை சிலுவையில் அறையும்படி உத்தரவிட்ட பாவத்தில் இருந்து விடுபடுவது, சவுக்கு கொண்டு இயேசுவை அடித்து பிறகு முள் கிரீடத்தை அவர் தலையில் வைப்பது, கேடி ப்ராபஸ்ஸை விடுவிக்க... அவன் குதூகலிப்பது, அவனுக்குப் பதிலாக இயேசுவை தண்டிப்பது எல்லாம் சித்திரங்களாக!
இரண்டாவது நிலையத்தை நோக்கி நடந்தோம். இங்குதான் சிலுவை, இயேசுவின் தோள்மீது வைக்கப்பட்டது. பாரம் தாங்காமல், முதல்முதலாக கீழே விழுகிறார் இயேசு. இந்த இடத்தை ஒரு கல் மீது குறியிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

நான்காவது நிலையத்தில், தாய் மேரியை சந்தித்தது, ஐந்தாவதில் சைமன் என்பவர் இயேசுவுக்கு உதவியாக சிறிது தூரம் சிலுவையை சுமந்தது, ஆறாவதில் கதறி அழுதுகொண்டு வெரோனிகா என்ற பக்தை இயேசுவின் முகத்தை துண்டினால் துடைத்தது, ஏழாவதில் மீண்டும் சிலுவையின் பாரத்தினால் இயேசு விழுவது, எட்டாவதில் அவருக்காகக் கதறி அழும் ஜெருசலேம் பெண்களுக்கு ஆறுதல் சொல்வது... இப்படி, அவர் சிலுவை சுமந்து சென்ற வழியாகவே நாங்களும் சென்றோம்.

அதோ, மூன்றாவது முறையாக இயேசு தடுக்கி விழுந்த இடம். அந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் ஓங்கி உயர்ந்து தெரிகிறது செபல்ச்சர் தேவாலயம். இயேசுவை சிலுவையில் அறைந்த இடம்.

இயேசு சிலுவையைச் சுமந்து சென்ற பாதை, வியாபாரிகளின் கூடாரமாக கூச்சலும் நெரிசலுமாகக் காட்சி அளிக்கிறது. அன்று தேவாலயத்தின் முன்னால் கடை விரித்தோரை கோபத்தோடு விரட்டினார் இயேசு. இன்று இவர்களை விரட்ட மீண்டும் வருவாரா? கோபப்பட்டது என் மனது.

அடுத்த வாரம் செபல்ச்சர் தேவாலயத்துக்குள் நுழைவோம்!
சாந்தகுமாரி சிவகடாட்சம்