‘வட்டி கட்டி முடியல’ என்பதுதான் கடன் வாங்கித் தவிப்போரின் ஒருமித்த புலம்பல். வீட்டுவசதிக்கடன் விஷயத்தில் வட்டிக்கு வருமானவரிச் சலுகை உள்பட சில நன்மைகள் இருந்தாலும், வட்டி என்பது வட்டிதானே? அதைக் குறைக்க வேறு ஏதேனும் வழிகள் உள்ளனவா?
வீடு வாங்கும்போது நம்மில் பலர் ‘பரவச பதற்ற’ மனநிலையிலேயே இருக்கிறோம். எந்த வங்கியில் வீட்டுவசதிக்கடனுக்கான வட்டி மிகக்குறைவு என்றெல்லாம் அலைந்து திரிந்து அறிவதில்லை. பில்டர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருக்கிற அல்லது அவர் கூறுகிற வங்கியிலேயே கடன் வாங்கி விடுவோம். எல்லாம் எளிதாக முடிந்த திருப்தியும் கிடைக்கும். ஆனால், சிலபல மாதங்களுக்குப் பிறகு ஈ.எம்.ஐ. சுமையாக அழுத்தும்போதுதான் வட்டி அதிகமோ எனத் தோன்றும். தெரிந்த வேறு சிலர் குறைந்த வட்டிக்கு வீட்டுக்கடன் வாங்கியிருப்பதும் தெரிய வரும்.
கவலையே வேண்டாம்... நிச்சயமாக வட்டியைக் குறைக்க முடியும். இப்போது நாம் செலுத்துவதைவிட, வேறு ஒரு வங்கியில் வட்டி குறைவாக உள்ளதா? அந்த வட்டிவிகிதம் வெகுசமீபத்தில் உயராமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளதா? அப்படியானால் அந்த வங்கிக்கு நமது கடனை மாற்றிக்கொள்ளலாம். இதுதான் ‘பேலன்ஸ் டிரான்ஸ்பர்’.
வீட்டுவசதிக்கடன் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட அத்தனை ஆவணங்களும் இதற்கும் தேவை. ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, கடன்தொகைக்கான காசோலை பழைய வங்கிக்கு வழங்கப்பட்டுவிடும். அங்கிருந்து ஒரிஜினல் ஆவணங்களைப் பெற்று புதிய வங்கியில் கொடுத்துவிட வேண்டும். முதல் வங்கியில் செய்யப்பட்ட அத்தனை நடைமுறைகளும் இங்கும் பின்பற்றப்படும்; பதிவாளர் அலுவலகத்தில் கடன் கொடுத்த வங்கியின் பெயரைப் பதிவது உள்பட!
பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்யும்போது பழைய வங்கியில் ஃபோர்குளோஷர் கட்டணம் என்ற அபராதக் கட்டணம் வசூலிக்கப்படலாம். இது வங்கியைப் பொறுத்து 1&2 சதவீதமாக இருக்கும். இதோடு, புதிய வங்கியில் பிராசசிங் கட்டணமாக கடன்தொகையில் 1&2 சதவீதம் வசூலிப்பார்கள்.
இந்தச் செலவுகளையும் கூட்டிக்கழித்துப் பார்த்து, நீண்டகால பலன் இருந்தால் மட்டுமே பேலன்ஸ் டிரான்ஸ்பர் செய்ய வேண்டும்.
சில குடும்பங்களில் கணவன்&மனைவி இருவருமோ, குடும்ப உறுப்பினர் பலரோ இணைந்து வீடு வாங்கியிருப்பார்கள். அல்லது ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பார்கள். அப்படியிருந்தால் வட்டியையும் கடன் கட்டும் காலத்தையும் குறைக்கும் வகையில், ‘ஹைபிரைட் ஹோம் லோன்’ வாங்கலாம்.
‘ஹோம் சேவர்’, ‘ஸ்மார்ட் ஹோம்’, ‘ஹோம் கிரெடிட்’. ‘ஹோம் லோன் ஓவர் டிராஃப்ட்’ போன்ற பெயர்களில் ஹெச்எஸ்பிசி, சிட்டி பாங்க், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் உள்பட சில வங்கிகளில் இந்த வசதி உள்ளது.
சேமிப்புக்கணக்கில் பல நாட்கள் ‘சும்மா’ கிடக்கும் பணம், உங்கள் ஹோம் லோன் கணக்கில் இருந்தால் என்ன ஆகும்? அத்தனை நாட்களுக்கான வட்டி குறையும் இல்லையா? அதேதான்...
ஆனால்... பயப்பட வேண்டாம்! சேமிப்புக்கணக்கிலிருந்து நீங்கள் விரும்பும்போது எடுத்துக்கொள்வது போலவே, இதிலும் ஏடிஎம் அல்லது காசோலை அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்க முடியும்!
ஹோம் லோன் கணக்கோடு, உங்களுக்கு ஒரு கரன்ட் அக்கவுன்ட்டும் தொடங்கப்பட்டு, இரண்டும் இணைக்கப்படும். கரன்ட் அக்கவுன்ட்டில் போடுகிற பணம் வீட்டுக்கடன் கணக்கில் ஆட்டோமேடிக்காக வரவு வைக்கப்பட்டு விடும். இதனால் வீட்டுக்கடன் அசலும் குறையும். அதற்கேற்ப வட்டியும் குறையும். தேவைப்படும்போது, ஹோம் லோன் ஈ.எம்.ஐ. போக மீதித்தொகையை நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இருவர், மூவர் என பலர் சம்பாதிக்கும் ஒருமித்த குடும்பத்தில் இந்தக் கணக்கு நல்ல பலன் தரும். சராசரியாக மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் அந்தக் கணக்கில் பராமரிக்க முடிந்தால் மொத்த வட்டித்தொகையில் 10 சதவீதம் வரை லாபம் பெற முடியும். 20 ஆண்டுக்கடனை 19 ஆண்டுகளுக்குக் குறைவாக முடிக்கவும் வாய்ப்பு உண்டு. சாதாரண வீட்டுக்கடனை விட ஹைபிரைட் கடனில் அசல் சற்று அதிகமாகக் கழியும். நடப்புக்கணக்கில் அதிக தொகையை சராசரியாகப் பராமரிக்கும்போது இது சாத்தியம்.
சம்பள தினம் அன்றே மொத்தப் பணத்தையும் எடுத்துச் செலவழிக்கும் அன்பர்களுக்கு ஹைபிரைட் ஹோம் லோன் திட்டம் பைசாவுக்குக்கூட பலன் தராது. இந்த லோனுக்கு சாதாரண வீட்டுக்கடனைவிட அரை சதவீதம் கூடுதல் வட்டி என்பதையும் மனதில் கொள்க.
மாதம் முதல் தேதியில் மொத்த பணத்தையும் போட்டுவிட்டு, மாதக் கடைசியிலோ, இன்னும் தாமதமாகவோ செலவழிப்பவர்களுக்கு இது லாபம்!
சரி... ஏற்கனவே வீட்டுக்கடன் வாங்கியிருக்கிற அல்லது அடமானத்தில் இருக்கிற வீட்டை விற்க முடியுமா? அதைக்கொண்டு வேறு வீடு வாங்க முடியுமா? அது அடுத்த வாரம்...
(கட்டுவோம்!)