கடக லக்னத்துக்கு சந்திரனும் சுக்கிரனும் தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் 32
சுக்கிரனும் சந்திரனும் பொதுவாகவே புவி ஈர்ப்பு சக்திமிக்க கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையை ‘அழகான ஆபத்து’ என்று சொல்லிவிடலாம். இந்த சேர்க்கை அமையப் பெற்றவர்கள், ‘சொல்வாக்கு’ மிகுந்தவர்கள்.
 கருத்தரங்கம், கவியரங்கம், மேடைப் பேச்சு என்று எல்லா விதங்களிலும் தங்களை வெளிப்படுத்துவார்கள். ரத்தினச் சுருக்கமாகப் பேசுவார்கள். ‘சுத்தம் சோறு போடும்’ என்பதற்கு இவர்களே உதாரண புருஷர்கள். தங்களுடைய கார் டிரைவர் கூட சென்ட் அடித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள்.
இந்த இணைப்பில் பிறந்தவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணைவர் அமைவார். ஆனாலும் இருவருக்கும் இடையே, ‘நீயா... நானா...’ என்கிற ஈகோ பிரச்னை இருந்தபடி இருக்கும். இயற்கையை நேசிப்பார்கள். தோப்புகள், ஆறுகள், காடுகள் என்று பயணித்துக்கொண்டே இருப்பது பிடிக்கும்.
 கொஞ்சம் செலவாளியாக இருப்பார்கள். எந்த விஷயத்தை எடுத்தாலும் அழகாகவும் ஆழமாகவும் ஆராய்ச்சி செய்வார்கள். வாகனப் பிரியர்களாக இருப்பார்கள். தீவிரமாக யோசனை செய்தபடியே இருப்பார்கள்.
இனி கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரனும் சுக்கிரனும் எந்தெந்த இடத்தில் இணைந்து இருந்தால் என்ன மாதிரியான யோகங்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்...லக்னத்திலேயே சுக்கிரனோடு சந்திரன் அமைவது இனிமைதான். என்றாலும், பாதகாதிபதியான சுக்கிரன் சந்திரனோடு அமர்வதால் காது வலி பிரச்னை இருக்கும்.
சரியான சூழலில் வளர முடியாமல் போகும். தந்தைமீது அளவு கடந்த பாசம் இருக்கும். பலருக்கு தாயார் சிறுவயதிலேயே நோய்வாய்ப்படுவார்கள். சிறுசிறு வாகன விபத்துகளும் இருக்கும். எனினும் இங்கு சந்திரன் கொஞ்சம் பலமாக இருப்பதால், கெடுபலன்கள் மறைந்து நற்பலன்களே கிட்டும். இவர்களுக்கு கற்பனை வளம் மிகுதியாக இருக்கும். படுக்கை அறையையும், குளியல் அறையையும் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். எல்லோருடனும் சகஜமாகப் பழகுவார்கள்.
சிம்மத்தில் சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்திருந்தால் வாதாடும் திறமை அதிகமாக இருக்கும். பேச்சில் தேன் தடவி பேசுவார்கள். பேச்சாலேயே எல்லோரையும் வசப்படுத்தி வைத்துக் கொள்வார்கள். கொஞ்சம் பார்வைக் கோளாறு இருக்கும். நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களுடைய நட்பெல்லாம் கிடைக்கும். பிறருக்கு உதவிகள் செய்வதில் மிகுந்த விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களைத் தூண்டிவிட்டால் மிகுந்த கோபம் கொள்வார்கள். கன்னி ராசியில் லக்னாதிபதி சந்திரன் பலமடைகிறார். ஆனால், சுக்கிரன் நீசமடைகிறார்.
இப்படி சேர்க்கை இருந்தால், உல்லாசமான வாழ்க்கையை வாழ்வார்கள். இளைய சகோதர, சகோதரிகள் மிகுந்த ஆதரவாக இருப்பார்கள். ஒரு காரியத்தை எப்படியாவது முடித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். காதில் ஏதாவது அணிகலனை அணிந்து கொள்வார்கள். சமூகத்தில் மறக்கப்பட்ட மரபான விஷயங்களை தோண்டியெடுத்து ஆராய்வார்கள். உடல்நிலையை மிகுந்த கவனமாக போஷிப்பார்கள். நல்ல ஆசிரியர்களை வழிகாட்டிகளாக வைத்துக் கொண்டு முன்னேறுவார்கள். சிலசமயம் வைராக்கியம் குறைவதால் சிற்றின்ப விஷயங்களில் எல்லை கடந்து போவார்கள். எச்சரிக்கை தேவை.
துலாம் ராசியில் மாதுர்காரகனான சந்திரன், மாதுர் ஸ்தானமான நான்காம் இடத்தில் அமர்கிறார். கூடவே சுக்கிரனும் சேர்கிறார். இது அவ்வளவு நல்ல அமைப்பு இல்லை. தாய்க்கும் மகனுக்கும் ஒரு பனிப்போர் இருந்து கொண்டே இருக்கும். பல வருடங்கள் தாயாரை விட்டுப் பிரிந்து வளர்வோரும் உண்டு. சொந்த பந்தங்கள் யாரும் உதவிக்கு இல்லாமல் இருப்பார்கள். எந்த வேலையில் இருந்தாலும் சரிதான், தனிப்பட்ட விதத்தில் ஏதேனும் வித்தையைக் கற்றுக்கொண்டு முன்னேறுவார்கள்.
விருச்சிக ராசியில் நீச சந்திரனோடு சுக்கிரன் சேர்கிறது. ஆனாலும், நேர்மறையான பலன்களையே இது கொடுக்கும். இவர்களின் வாரிசுகள் நல்ல சிந்தனையோடும் தெளிவோடும் விளங்குவார்கள். டிசைனிங் துறையில் இவர்கள் பெரும் அளவில் சாதிப்பார்கள். இந்த அமைப்பில் நகைக்கடை அதிபர்கள் நிறைய பேர் உண்டு. வாசனைத் திரவியங்களை அதிகமாக உபயோகிப்பார்கள். புராணங்களை மீள் ஆய்வு செய்து ஆராய்ச்சிக்கு உட்படுத்துவார்கள். இவர்கள் வீடு, மனை, நிலம் வாங்கும்போது மிகவும் கவனமாக தாய்ப்பத்திரம் சரியாக உள்ளதா என்று பார்த்துத்தான் வாங்க வேண்டும்
தனுசு ராசிக்குள் சுக்கிரனும், சந்திரனும் அமர்கிறார்கள். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு, உடன்பிறந்தவர்களால் அலைச்சல் அதிகரிக்கும். எதிலுமே துணிந்து இறங்க மாட்டார்கள். பல நேரங்களில் தாயார் அல்லது சகோதரியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். பந்தாவாக வளைய வரவே விரும்புவார்கள். வீடு, வழக்கு என்று சொத்துத் தகராறு ஏற்பட்டபடியே இருக்கும். தாயா, தாரமா என்கிற போராட்டம் இருக்கும். இவர்களுக்கு மர்ம ஸ்தானத்தில் நோய் வரும் அபாயம் உண்டு.
கர்ப்பப்பை சம்மந்தமான பிரச்னை வரும்போது மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மகர ராசியில் ஒன்பதாம் இடமாக இவ்விரு கிரகங்களும் அமர்வது, பொதுவாக மனைவி வழியில் பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு இரு திருமணங்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது. பல வருடங்களாகக் காதலித்து, திருமண நேரத்தில் பிரச்னைகள் வந்து பிரிந்து விடுவார்கள். இவர்கள் வாழ்க்கைத்துணையை கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும்போது பணம், சொத்து என்று பார்க்காமல் குணத்தை மட்டும் பார்த்துத் தேர்ந்தெடுப்பது நல்லது.
கும்பத்தில் பாதகாதிபதியான சுக்கிரன் மறைவது பெரும் யோகத்தைத் தரும். அடிப்படை வசதி வாய்ப்புகளான சொந்த வீடு, வாகனம் என்பதெல்லாம் எளிதாக அமைந்து விடும். தந்தை வழியில் பெருஞ்சொத்து வந்து சேரும். ஜவுளி வியாபாரத்தில் பெரும் பொருளீட்டுவார்கள். தர்ம காரியங்களில் ஈடுபட்டு எல்லோருக்கும் உதவிகள் செய்வார்கள். எதைச் செய்தாலும் அதில் தனது முத்திரையைப் பதிப்பார்கள். சித்திரம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். இந்த அமைப்பில் உள்ள பெரும்பாலானவர்கள் ஓவியர்களாக வருவார்கள். பூர்வத்தில் செய்த புண்ணியத்தின் பலன், முழுவதுமாக இவர்களுக்கு வந்து சேரும்.
மீனத்தில் சுக்கிரனும் சந்திரனும் சேர்வது யோகமாகும். தந்தையை விஞ்சிய மகனாக வருவார். ஆடை, அணிகலன்களாக வாங்கிக் குவிப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெள்ளித் தட்டில் உணவு உண்பார்கள். மாபெரும் செல்வந்தர்களுக்கு உரிய வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். இவர்கள் எந்த விஷயத்தைப் பேசினாலும் கறாராக இருப்பார்கள்.
பாசாங்காகவும், பாவனையாகவும் எதையும் பேச முடியாது. சிறிய வயதிலிருந்து ஏதேனும் தேவதையின் உபாசனத்தில் இருப்பார்கள். தன்னைச் சார்ந்தவர்கள் கஷ்டப்படும்போது தூக்கி விடுவார்கள். நன்றி மறவாதவர்களாக இருப்பார்கள். தான் எப்போதோ வேலை செய்த பழைய கம்பெனி உரிமையாளரையெல்லாம் சென்று பார்த்துவிட்டு வருவார்கள். ஆரம்பகால ஆசிரியர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்து உதவுவார்கள்.
மேஷத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருந்தால் நிலையான வேலையில் இருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வேலையை மாற்றியபடி இருப்பார்கள். சொந்தத் தொழிலில் இறங்கி சூடு போட்டுக் கொள்வார்கள். எனவே, இவர்கள் அமைதியாக நீண்ட நாட்கள் எங்கேயாவது வேலை செய்து, பிறகு தனது தகுதியை அறிந்து கொண்டு சொந்தத் தொழிலில் இறங்க வேண்டும்.
ரியல் எஸ்டேட், ஜவுளி வியாபாரம், ஃபேன்சி ஸ்டோர், பெண்கள் ஆடைகள், குளிர்பானக் கடைகள், கலைத்துறையில் நடிப்பு, நடனம், கவியரங்கம் என்றெல்லாம் ஈடுபட்டால் மிகச் சிறப்பாக வருவார்கள். நெருக்கடி நேரத்தில் பணத்தின் அருமையை உணர்ந்து, பின்னரே மாறுவார்கள். ‘வீடு என்பது வேறு... அலுவலகம் என்பது வேறு’ என்பதை இவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கூட்டுத் தொழில் செய்வதை இவர்கள் தவிர்த்தல் நல்லது. ரிஷபத்தில் பாதகாதிபதியே பாதக ஸ்தானத்தில் அமர்கிறார். இது அவ்வளவு நல்ல அமைப்பு அல்ல. மூத்த சகோதரரோடு ஏதேனும் பிரச்னைகள் இருந்தபடி இருக்கும்.
சேர்த்த செல்வத்தை வீணாகச் செலவழிப்பார்கள். காதுகளில் பிரச்னை வந்து நீங்கும். நிறைய வாய்ப்புகள் வந்து, அதையெல்லாம் வீணடித்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் ஷேர் மார்க்கெட்டில் ஈடுபட்டால் நிச்சயம் கவனத்தோடு இருக்க வேண்டும். ஆன்மிகம் மற்றும் லௌகீகம் என்று இரு தளங்களிலும் சிறப்பான இடத்தைப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
மிதுனத்தில் சுக்கிரனும் சந்திரனும் மறைவதும் வீண் செலவுகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ‘பாத்திரமறிந்து பிச்சை கொடு’ என்பதை இவர்கள் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். இவர்களால் சமுதாயத்தோடு ஒத்துப்போக முடியாமல் அவஸ்தைப்படுவார்கள். இவர்கள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் மருந்தும் கையுமாக இருக்க வேண்டியிருக்கும்.
சந்திரனும் சுக்கிரனும் அழகான ஆபத்து என்பதை முதலிலேயே சொன்னோம். இரண்டுமே ஈர்ப்பு சக்தி மிகுந்த கிரகங்கள் ஆதலால், எதெல்லாம் பிடிக்கிறதோ அதிலெல்லாம் இவர்கள் இறங்குவார்கள். தங்களுடைய திறமை, நிர்வாகத் திறன், தகுதி எதைக் குறித்தும் கவலைப்பட மாட்டார்கள். எனவே, இதில் ஒரு சரியான நிலைமைக்கு வருவதற்கும், தெளிவோடும் திறமையோடும் காரியமாற்றுவதற்கும் புதுக்கோட்டையிலுள்ள புவனேஸ்வரி அம்மனை அவ்வப்போது சென்று தரிசித்துவிட்டு வருவது நல்லது.
இந்தக் கோயிலில் புவனேஸ்வரி தேவி பூரண மகாமேருவுடன் மூலக் கருவறையில் வீற்றிருந்து அருள்கிறாள். இத்தலம் ‘நவசாலபுரி’ என்றும் போற்றப்படுகிறது. ஞானவடிவான சரஸ்வதியும் கிரியா வடிவான மகாலட்சுமியும் இச்சா வடிவான மகாகாளியும் இத்தலத்தில் ‘சாமுண்டீஸ்வரி புவனேஸ்வரி’யாக அருள்வதாக ஐதீகம். ஹ்ரீம் பீஜத்தில் உறைபவள் இத்தேவி.
‘ஹ்ரீம் ஹ்ரீம்’ என்று யார் ஜபம் செய்கிறார்களோ அவர்களுக்கு மகாலட்சுமி மாலை போட்டு தன வரவைப் பொழிவாள் என புவனேஸ்வரி கல்பத்தில் கூறப்பட்டுள்ளது. ‘புவனேஸ்வரி’ எனில் ‘புவனங்கள் அனைத்திற்கும் ஈஸ்வரி’ என்று பொருள். எப்படி ஈசனுக்கு கைலாசமோ, திருமாலுக்கு வைகுண்டமோ, அதே போல் புவனேஸ்வரி தேவி மணித்வீபம் எனும் அகில உலகங்களுக்கும் மேலான ஸ்தலத்தில் அமர்ந்து உலகை பரிபாலிக்கிறாள் என்பது வித்யா சம்பிரதாயத்தின் நம்பிக்கை.
(கிரகங்கள் சுழலும்...)
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
ஓவியம்: மணியம் செல்வன்
|