ஆகவே இந்த ஆட்சி மாற வேண்டும்



தமிழக மக்கள் தங்கள் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பதற்கான தருணம் இது. இந்தியாவுக்கே ரோல்மாடலாகத் திகழ்ந்த காலம் மாறி, பின்தங்கிய மாநிலங்களின் மக்களும் பரிகசிக்கும் அவலநிலைக்கு தமிழகம் மாறியிருப்பதை வருத்தத்தோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

நத்தையாகக்கூட நகர மறுக்கும் அளவுக்கு செயலிழந்து போன ஒரு அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வி கண்டதே மிச்சம். இதுபற்றிய கவலையை நம்மிடம் பகிர்ந்துகொண்ட அக்கறை மனிதர்கள் அனைவரும் முத்தாய்ப்பாகச் சொன்ன முக்கியமான விஷயம், ‘ஆகவே இந்த ஆட்சி மாற வேண்டும்!’

கல்வியில் தோல்வி

பிரின்ஸ் கஜேந்திரபாபு
பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

கடந்த ஐந்து ஆண்டுகள், துளியளவும் ஜனநாயகத்தன்மை இல்லாத ஒரு அரசையே மக்கள் சுமந்துகொண்டிருந்தார்கள். ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து ஒரே மாதிரியான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்துகின்றன. ஐந்தாண்டு காலத்தில் ஒருமுறை கூட முதல்வரோ, அமைச்சரோ, பள்ளிக்கல்வித்துறை செயலாளரோ அழைத்துப் பேசவில்லை.

முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாத இயக்குனர்கள்தான் பேசுகிறார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில் கல்வித்துறை சுயமாக இயங்கவேயில்லை. நீதிமன்றத் தீர்ப்புகள்தான் இயக்கின. பிடிவாதத் தன்மை, தற்பெருமை, மாணவர்கள் - ஆசிரியர்கள் மீது துளியளவும் அக்கறையின்மை, ஈகோ என இயல்பை மீறிய ஒரு அரசாகத்தான் அதிமுக அரசு செயல்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் தனி ராஜ்ஜியங்களையே கட்டமைத்துக் கொண்டு விட்டன.

சமச்சீர் கல்வித் திட்டத்தின் மீதான காழ்ப்புணர்வால் 2011-12 கல்வியாண்டில் 3 மாத காலம் பாடத்திட்டமே இல்லாமல் பள்ளிகள் இயங்கின. சுதந்திர இந்தியாவில் இதுமாதிரியான ஒரு அவலம் இதற்கு முன்பு நடந்ததே இல்லை. +1, +2 பாடத்திட்டங்கள் 15 ஆண்டுகளாக மாற்றப்படவே இல்லை. இதற்கென ஒரு குழு அமைத்து பாடங்கள் எழுதப்பட்டு விட்டன.

ஆனால், அவற்றை அச்சிட்டு மாணவர்களுக்கு வழங்க இந்த அரசுக்கு நேரமில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறையைக் கொண்டு வந்து குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். பட்டியல் இன மாணவர்களுக்கு மதிப்பெண் தளர்வு தராமல் இழுத்தடித்து தேசிய ஆதி திராவிடர் நல ஆணையம் கண்டித்தபிறகு 5% மதிப்பெண் தளர்வு தந்தார்கள்.

அது தொடர்பான வழக்கை சரிவரக் கையாளாததால் ஆசிரியர் தகுதித் தேர்வையே கடந்த சில ஆண்டுகளாக நடத்த முடியவில்லை. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் முதல் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் வரை எல்லாவற்றிலும் ஊழல்... முறைகேடு! இப்படிச் சொல்ல நிறைய இருக்கின்றன.மக்களின் மீது, குறிப்பாக மாணவர்களின் மீது துளியளவும் அக்கறையில்லாத இந்த ஆட்சி கண்டிப்பாக மாற வேண்டும்.

ஊழலே பிரதானம்

சிவ.இளங்கோ தலைவர்,
சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

கடந்த 5 ஆண்டு கால அரசு முற்றிலும் எதேச்சதிகார அரசு. எல்லாவற்றிலும் ஊழல்... எங்கு பார்த்தாலும் முறைகேடு. அரசுப் பணிகளில் 40 முதல் 45% கமிஷன் பெறப்படுவதாக சொல்கிறார்கள். நேர்மையான அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். முத்துக்குமாரசுவாமி தற்கொலை வழக்கில் அரசியல் அழுத்தத்தால், அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார். இப்போது விடுதலை ஆகிவிட்டார். ‘முதல்வர் அறியாமல் அமைச்சர்கள் தவறு செய்து விட்டார்கள்’ என்று காட்டுவதற்காக சோதனைகள் நடத்தினார்கள். இப்போது அந்த அமைச்சர்கள் எல்லாம் வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்.

2014-15ல், மிக்‌சி, கிரைண்டர், ஃபேன், பள்ளிகளுக்கான இலவசங்களை ஏற்றி, இறக்க மட்டும் ரூ.10,400 கோடி செலவு செய்துள்ளதாக கணக்கு காட்டுகிறார்கள். ஸ்கூலுக்குப் போகும் இலவசங்களை சி.இ.ஓ. அலுவலகத்தில் இருந்து தலைமை ஆசிரியரே வாகனம் கொண்டுவந்து எடுத்துச் சென்று விடுவார். மிக்‌ஸி, கிரைண்டர்கள் யூனியன் அலுவலகத்துக்குப் போய்விடும். பஞ்சாயத்துத் தலைவர் வாகனத்தைக் கொண்டு வந்து எடுத்துச் செல்வார். அதற்காக பயனாளிகளிடம் ரூ.100 வசூலிப்பது தனிக்கதை. பிறகு இந்த 10,400 கோடி யாருடைய பைக்குச் சென்றது...?

சில்லறை விற்பனையிலேயே முட்டை ரூ.3.50க்குக் கிடைக்கிறது. ஆனால், இவர்கள் பள்ளிக்கு ரூ.4.51க்கு வாங்குகிறார்கள். பசுமை வீடு திட்டத்திற்கு மாவட்ட கலெக்டர்கள்தான் இரும்பு கொள்முதல் செய்கிறார்கள். அரியலூர் மாவட்டத்தில் 1 டன் ரூ.47,500க்கு சரியாக கொள்முதல் செய்திருக்கிறார் அங்குள்ள கலெக்டர்.

ஆனால் பிற அத்தனை மாவட்டங்களிலும் ரூ.5 ஆயிரம் அதிகமாகக் கொடுத்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். இதில் மட்டும் 1000 கோடி ஊழல் நடந்திருக்கும் என்கிறார்கள். எல்லா மட்டங்களிலும் லஞ்சத்திலும், ஊழலிலும் திளைத்து நாறிப் போய் விட்டது இந்த ஆட்சி. கண்டிப்பாக இதை அகற்றியே ஆகவேண்டும்!

விஷமாக ஏறும் விைலவாசி

ஜெ.மோகன்ராஜ்
 பொதுச்செயலாளர், ஜெபமணி ஜனதா கட்சி

என் அனுபவத்தில் எத்தனையோ அரசுகளைப் பார்த்திருக்கிறேன். அடித்தட்டு, நடுத்தர மக்கள் மீது துளியளவும் அக்கறையில்லாத, செயல்படாத ஒரு அரசென்றால் கடந்த 5 ஆண்டுகால அதிமுக அரசுதான். ஒரு நல்லரசானது, தம் மக்கள் சிரமப்படாமல் இயல்பாக வாழ்வதற்குரிய திட்டங்களைத் தீட்டும். ஆனால் இந்த அரசு, அடித்தட்டு மக்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பால் விலையை உயர்த்தினார்கள்.

பஸ் கட்டணத்தை உயர்த்தினார்கள். மின்சாரக் கட்டணத்தை ஏற்றினார்கள். அத்தியாவசியப் பொருட்களின் பதுக்கலைத் தடுக்காததால் வணிகமே சூதாடிகளின் கையில் சிக்கியது. வெங்காயம் திடீரென 100 ரூபாய்க்கு ஏறுகிறது. சரேலென 10 ரூபாய்க்கு இறங்குகிறது. பருப்பு, மல்லி, மிளகாய் என அனைத்துப் பொருட்களும் விலை ஏறி விட்டன.

ஒரு பொருள் உற்பத்தி அதிகரிக்கும் காலத்தில் விலை குறைவதும், உற்பத்தி குறையும் காலத்தில் விலை ஏறுவதும் இயல்பு. ஆனால், உற்பத்திக்கும் விலை உயர்வுக்கும் தொடர்பே இல்லை என்கிற நிலையை இந்த அரசு உருவாக்கி விட்டது.

எங்கோ சில இடங்களில் அம்மா உணவகம், கண் காணாத இடத்தில் அமுதம் அங்காடி என பெயருக்குத் திட்டங்களை உருவாக்கி ஓட்டை அறுவடை செய்ய முயல்வதைத் தவிர, மக்களின் துயரத்தைப் போக்க ஒன்றுமே செய்யவில்லை. அதற்காகவே இந்த ஆட்சி மாற வேண்டும்!

மறக்கப்பட்ட மீனவர்கள்

என்.ஜே.போஸ்
மாநிலப் பொதுச்செயலாளர், தமிழக கடலோர விசைப்படகு மீனவர் நல சங்கம்

கடந்த 5 ஆண்டுகளில் 1924 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 400க்கும் மேற்பட்ட படகுகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. 50 படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு, படகுகளை இலங்கை கடற்படை பிடிப்பதில்லை. சேதப்படுத்துவதும் இல்லை. தமிழக அரசு தொடக்கத்திலேயே தட்டிக் கேட்காமல் விட்டதால் இப்போது துணிந்து தாக்கி அழிக்கிறது.

கடந்த 5 ஆண்டுகளில் மீனவ சமூகமே ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து நிற்கிறது. அதிமுக அரசு அவர்களை நிராதரவாகக் கை விட்டுவிட்டது. இப்போது மீனவர்களுக்கு கடலைக் கண்டு பயமில்லை. இலங்கை கடற்படையைக் கண்டே பயம். திரும்பவும் கரைக்கு வந்தால்தான் வாழ்வு நிச்சயம்.

ஜெயிலோ, மரணமோ... கடலில் எதுவும் நேரலாம். 37 எம்.பிக்களை வைத்துள்ள அதிமுக, எங்கள் வாழ்க்கையை மாற்ற சிறு குரல் கூட கொடுக்கவில்லை. தமிழகத்தின் 12 மீன்பிடி மாவட்டங்களும் ஸ்தம்பித்து நிற்கின்றன.

‘மீனவர் பாதுகாப்புப் படை அமைப்போம்’, ‘மீன் பூங்கா அமைப்போம்’ என்றெல்லாம் வண்ண வண்ண வாக்குறுதிகள் கொடுத்து மீனவர்களின் ஓட்டைப் பெற்ற அதிமுக, மீனவர்கள் தவித்து நின்றபோது ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதற்காகவே இந்த ஆட்சி  மாற வேண்டும்!

பெருகும் குற்றங்கள்

த.கணேசன்
மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

முன்பு ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினால், அந்தத் துறை சார்ந்த அதிகாரிகள் வந்து பேச்சு நடத்துவார்கள். போராட்டம் கைவிடப்படும். கடந்த 5 ஆண்டுகளில் எந்தக் கோரிக்கைக்காக போராடினாலும் கையில் தடியோடு போலீஸ்தான் வருகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வருவதில்லை.

ஆட்சியில் அமரும்போதே, ‘எனக்குப் பயந்து, ரவுடிகள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்கள்’ என்று சூளுரைத்தார் முதல்வர். ஆனால், பெண்கள் தெருக்களில் நடக்கமுடியவில்லை. செயின் பறிப்பு, கொலை, கொள்ளை என பெருகி விட்டன குற்றங்கள். மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை, எந்தப் புகாரையும் வாங்குவதில்லை. காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து ஆலமரங்களாகி விட்டன. காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவலாளாக செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அச்சமில்லாமல் மக்கள் வாழ இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்!

குடிநோய் தரும் அரசு

வெற்றிவேல் செழியன்
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

அதிமுக அரசின் ஐந்தாண்டு கால சாதனை, கோடிக்கணக்கான இளைஞர்களை குடிநோயாளிகளாக மாற்றியதுதான். பல பகுதிகளில் குடும்பமே குடிநோயில் தள்ளப்பட்டு விட்டது. நாங்கள் களப்பணியில் ஒரு 16 வயது சிறுவனை சந்தித்தோம். அவன், 13 வயது முதலே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறான். அவனுடைய அம்மா, மாமா என எல்லோரும் குடிக்கிறார்கள்.

மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள், மது அருந்தி சாலையில் தள்ளாடிய மாணவி என செய்திகளைப் படிக்கும்போது குலை நடுங்குகிறது. ‘ஏதோ ஒரு வேலை’ என்ற எண்ணத்தில் மதுக்கடைக்கு வேலைக்குப் போன பட்டதாரி இளைஞர்களும் குடிநோயாளிகளாக மாறிவிட்டது பெரும் சோகம்.

இதுவரை இந்தியா சந்திக்காத பேரவலம் இது. ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் என்கிறார்கள். எங்கிருந்து வருகிறது இந்த வருமானம்..? அன்றாடம் காய்ச்சிகள், அடித்தட்டு, விளிம்பு நிலை மனிதர்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் விளைந்த தினக்கூலியில் இருந்துதான் வருகிறது.
உற்பத்தித் துறையில் காட்ட வேண்டிய முனைப்பையும் திட்டமிடலையும் மது விற்பனையில் காட்டுகிறது இந்த அரசு.

மாவட்ட ஆட்சியர்கள், கீழுள்ள அதிகாரிகளை எல்லாம் அழைத்து, “இந்த மாதம் 100 கோடியா... அடுத்த மாதம் 110 கோடி விற்பனையாக வேண்டும்...” என்று இலக்கு நிர்ணயிக்கும் அளவுக்கு தமிழகம் கீழ்நிலைக்குப் போய் விட்டது. மக்களின் நல்வாழ்வுக்காக செயல்பட வேண்டிய அரசு சாராய ஆலை முதலாளிகளுக்காக வேலை செய்கிறது.

கலால் துறைக்கும், காவல்துறைக்கும் மதுக்கடைகள் அமுதசுரபிகளாக இருக்கின்றன. அதனால்தான், ‘மதுக்கடைகளை மூடுங்கள்’ என்று போராடுபவர்களைக் கண்டால் காவல்துறைக்குக் கோபம் வருகிறது. அந்த கேவலமான இயலாமையும் கோபமும்தான் என் கால், கைகளை முறித்துப் போட்டிருக்கிறது. மதுக்கடைகள் மூலம் இளைஞர்களைச் சிந்திக்க விடாமல் மூளையைச் சிதைக்கும் திட்டத்தோடு இயங்கும் இந்த அரசு நிச்சயம் அகற்றப்பட வேண்டும்.

கட்டற்ற கனிமக் கொள்ளை!

ஆர்.ஆர்.சீனிவாசன் சூழலியலாளர்

இயற்கையைப் பற்றி சிறிதும் புரிதல் இல்லாத அரசு இது. மணல், கிரானைட், தாது மணல் உள்பட 30க்கும் மேற்பட்ட கனிமங்கள் அளவில்லாமல் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இங்கு கனிமக்கொள்ளை நடந்திருக்கிறது. தாதுமணல் கொள்ளையால் ஒரு பக்கம் நாட்டுக்கு பொருளாதார இழப்பு; இயற்கை சீரழிவு. இன்னொரு பக்கம் அப்பகுதி வாழும் மக்கள் சிறுநீரகக் கோளாறு, புற்றுநோய் என்று கொடூர நோய்களில் தள்ளப்படுகிறார்கள். 

அதிகாரிகளையும் அமைச்சர்களையும் கவனித்துவிட்டால் இங்கே எதையும் கொள்ளையடிக்க முடியும். நீதிமன்றத் தீர்ப்புகளும், விதிமுறைகளும் காற்றில் பறக்கின்றன. எவ்விதக் கேள்வியும் இல்லாமல் இயற்கை வளங்களைச் சிதைத்து தங்களை வளமாக்கிக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள். அதிகாரிகள் அதற்குத் துணை போகிறார்கள். கேள்வி கேட்கும் அதிகாரிகள் மாற்றப்படுகிறார்கள். கொள்ளையைத் தடுக்க முனையும் அதிகாரிகள் கொல்லப்படுகிறார்கள்.

ஏற்கனவே பாலாறு, தாமிரபரணி எல்லாம் பாதிக்கு மேல் அழிந்து விட்டன. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 20 ஆண்டுகளில் நதிகளே மிஞ்சாது. ஆகவே இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்! 

தவிக்க வைத்த தண்ணீர்

பொறியாளர் சுந்தர்ராஜன் பூவுலகின் நண்பர்கள்

சென்னையில் ஏற்பட்ட பேரழிவு ஒன்றே, இந்த அரசின் கையாலாகாத செயல்பட்டுக்கு உதாரணம். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, நீர்நிலைகள், நீர்வடிகால்கள், வாய்க்கால்களைத் தூர்வாரி பராமரிப்பது வழக்கமான நடைமுறை. இந்த ஆட்சியில் ஒரு நீர்நிலையைக் கூட நல்ல முறையில் தூர்வாரி சீர்படுத்தவில்லை. ஏகப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள். 

சென்னையில் பெய்த பெருமழையை கணித்து, முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டிருந்தால் பாதிப்புகளை குறைத்திருக்கலாம். முகத்துவாரங்களை தூர்வாரி சரி செய்திருந்தால் கூட பாதிப்பு குறைந்திருக்கும். இரவு நேரங்களில் ஓதம் காரணமாக, கடல்நீர் முகத்துவாரம் வழியாக வெளியேறும். அப்போது தண்ணீர் கடலுக்குச் செல்லாது. இந்த அடிப்படை விஷயம் கூட அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெரியவில்லை என்பது சோகம். 

இதுவரை இல்லாத அளவுக்கு பெருமழை பெய்து ஆறு மாதம் ஆகவில்லை. அதற்குள் குடிநீருக்கு மக்கள் அல்லாடுகிறார்கள். தொலைநோக்குத் திட்டமற்ற, சமூக அக்கறையற்ற இந்த அரசு அகற்றப்பட வேண்டும்!

திவாலாகும் மின் வாரியம்

சி.செல்வராஜ்
தலைவர், இந்திய ஊழல் ஒழிப்புக் கூட்டமைப்பு

இந்திய மாநிலங்களின் மொத்த மின் வாரியங்களுக்கும் உள்ள மொத்த கடனில் நான்கில் ஒரு பங்கு தமிழக மின் வாரியத்தினுடையது. அந்த அளவிற்கு கடந்த ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சி மின் வாரியத்தை நிர்வகித்திருக்கிறது. 5 ஆண்டு காலத்தில் மின் உற்பத்திக்காக ஒரு புதிய திட்டத்தைக்கூட இவர்கள் தொடங்கவில்லை. 4000 மெகா வாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து வாங்கப்படுகிறது.

பிற மாநிலங்கள் அனல் மின்சாரத்தை ரூ.2.50 முதல் 4 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்குகின்றன. தமிழக அரசு ரூ.5.50 முதல், ரூ.6 வரை கொடுக்கிறது. அதானி, பிற மாநிலங்களில் சோலார் மின்சாரத்தை ரூ.5.00க்கு விற்கிறார். தமிழகம் மட்டும் அவருக்கு 7.01 பைசா கொடுக்கிறது.  2001 முதல் தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டதாகக் கூறுவது ஏமாற்று வேலை. ஏற்கனவே பல நிறுவனங்கள் தமிழகத்தை காலி செய்துகொண்டு சென்று விட்டன. அண்மையில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. அதனால், பயன்பாடு குறைந்திருக்கிறது. மின் வாரியத்தை திவாலாகும் அளவுக்குக் கொண்டு சென்ற இந்த ஆட்சி மாற வேண்டும்!

செயலிழந்த  சர்க்கார்

நக்கீரன்
பொருளாளர், அறப்போர் இயக்கம்

கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி என்பது செயல்பாடே இல்லாத ஒரு ஆட்சியாகத்தான் கழிந்திருக்கிறது. முதல்வருக்கு மட்டுமே சூப்பர் பவர். அமைச்சர்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது. பெரும்பாலான மக்களுக்கு எந்தத் துறைக்கு எந்த அமைச்சர் என்றே தெரியாது. அதிகாரப் பகிர்வே இல்லாத, இவ்வளவு நெருக்கடியான நிலை, இந்தியாவில் வேறெங்கும் இல்லை. இதற்கு இன்னொரு பெயர் சர்வாதிகாரம்.

ஒரு ஏரியைத் திறந்துவிடும் முடிவைக் கூட அமைச்சர்கள் அல்லது களத்தில் இருக்கிற அதிகாரிகள் எடுக்க முடியவில்லை. பிறகென்ன நலத்திட்டங்களை இவர்கள் செயல்படுத்தி விட முடியும்?  இயற்கைப் பேரிடர் காலங்களில் நிலை கட்டுக்கடுங்காமல் போனால், மத்திய அரசிடம் மீட்புப்படைகளை அனுப்பும்படி கோர வேண்டும். தமிழக அரசு எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது அதிர்ச்சி தரும் செய்தி. நிலையின் தீவிரமறிந்து மத்திய மீட்புப்படைகள் தாமாகவே களத்துக்கு வந்தன. அவர்களை வழிநடத்தக்கூட யாருமில்லை.

வெள்ளத்தால் சான்றிதழ்களை இழந்த மக்களுக்கு உடனடியாக சான்றிதழ் தருவோம் என்று முகாமெல்லாம் நடத்தினார்கள். பல நூறு பேருக்கு இன்னும் எந்த சான்றிதழும் கிடைக்கவில்லை. அவர்கள் தேர்தலில் தங்கள் வாக்கால் பதில் சொல்வார்கள்.

கடனில் மூழ்கும் தமிழகம்

க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்

மின்வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்பட பொதுத்துறை நிறுவனங்களின் கடன்களையும் சேர்த்தால், தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் 4.50 லட்சம் கோடி. கடன் வாங்கலாம்... ஆனால், எதற்காக வாங்குகிறோம்... எவ்வளவு வாங்குகிறோம் என்பது முக்கியம். கண்மூடித்தனமான திட்டமிடல்கள்... ஒரு திட்டத்தை தொடங்கி, அப்படியே போட்டுவிடுவது... ஆடம்பர செலவுகள் என்பதே இங்கு நிர்வாகமாக இருக்கிறது.

நிர்வாகத் திறனற்ற இந்த அரசு, வரவே இல்லாமல் கவர்ச்சித் திட்டங்களை உருவாக்கி செலவு செய்து மக்கள் தலையில் கடனைச் சுமத்துகிறது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனால் வரியாக வர வேண்டிய வருமானம் பறி போகிறது. கிரானைட், ஆற்றுமணல், தாது மணல் என மதிப்புமிக்க கனிம வளங்கள் எல்லாம் வெளிப்படையாக சுரண்டப்படுகின்றன.

அதில் கிடைக்கும் பல்லாயிரம் கோடி தனி நபர்களின் பாக்கெட்டுக்குச் செல்கிறது. நிர்வாகக் குளறுபடி, புதிய வருவாய்க்கான வாய்ப்பின்மை, உரிய காலத்தில் திட்டங்களைச் செயல்படுத்தாமை, திட்டங்களை கண்காணிக்காமை என திறனற்ற ஒரு அரசால் தமிழகம் கடனில் தத்தளிக்கிறது. இந்நிலைக்கு தமிழகத்தைத் தள்ளிய இந்த அரசு அகற்றப்பட வேண்டும்!

சீரழிந்த தொழில்துறை

பேராசிரியர் அருணன் இடதுசாரி சிந்தனையாளர்

‘உலக முதலீட்டாளர் மாநாடு’ என்ற பெயரில் நடந்த கூத்தை இந்தியாவே பார்த்துச் சிரித்தது. ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு வந்ததாகப் பெருமையாகச் சொன்னார்கள். என்னவாயிற்று அந்த முதலீடு? எத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைத்தது? கிலுகிலுப்பை விளையாட்டைப் போலிருக்கிறது அரசின் செயல்பாடு.

புதிதாக ஒரு தொழிற்சாலையும் வரவில்லை என்பது ஒருபுறம்; ஏற்கனவே இருக்கும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களைப் பாதுகாக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நிறுவனங்கள் நொடித்துப் போய் விட்டன. 

எங்கிருந்தேனும் தொழில் தொடங்க வந்தார்கள் என்றால், வார்டு கவுன்சிலரில் இருந்து அமைச்சர்கள் வரை பலரையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. தொந்தரவுக்குப் பயந்தே பலர் ஓடி விடுகிறார்கள். தொழில்துறையை முற்றிலும் சீரழித்து, வளர்ச்சியைத் தடுத்து மாநிலத்தை பின்னோக்கித் தள்ளியிருக்கிற இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்!

தொகுப்பு: வெ.நீலகண்டன்