1 ரூபாயின் மதிப்பு 150 ரூபாய்!
ஒரே ஒரு 1 ரூபாய் நோட்டை அச்சிட1 ரூபாய் 14 பைசா செலவாகிறது. ஆனாலும் அரசு அதை அச்சிட்டது. அந்த ரூபாய் நோட்டு 150 ரூபாய்க்கு கடைகளில் விற்கப்படுவதுதான் அநியாயம். இன்னொரு பக்கம் தவறாக அச்சிடப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்து, ‘எது கள்ள நோட்டு’ எனப் புரியாத அளவுக்கு மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
 * ரூபாய் நோட்டுகளை அச்சிடும் செலவு அதிகரித்ததால், கடந்த 94ம் ஆண்டில் 1 ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தப்பட்டது. அதையடுத்து 2 ரூபாய், 5 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதும் நிறுத்தப்பட்டன. இதற்கு பதிலாக இந்த மதிப்பில் நாணயங்கள் மட்டுமே இருந்தால் போதும் என முடிவெடுத்தார்கள்.
* ஆனால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2014ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம் திடீரென 1 ரூபாய் நோட்டு அச்சிட முடிவெடுத்தது. 2015 மார்ச் 6ம் தேதி இந்த நோட்டுகள் வெளியிடப்பட்டன. மற்ற ரூபாய் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இருந்தாலும், 1 ரூபாய் நோட்டில் மட்டும் நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இருக்கும். ஒரு குறிப்பிட்ட அதிகாரியின் கையெழுத்து ரூபாய் நோட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி 1 ரூபாய் நோட்டு ரீ-என்ட்ரி கொடுத்ததாக சர்ச்சைகள் எழுந்தன.
* இந்த 1 ரூபாய் நோட்டு அதிகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஒரு நினைவுப்பொருள் போல பலரும் இதைச் சேகரிக்க ஆரம்பித்தனர். ஆன்லைனில் இதை 99 ரூபாய்க்கு பலர் விற்கிறார்கள். டெல்லியின் சாந்தினி சௌக் போன்ற சில பகுதிகளில் 100 நோட்டுகள் கொண்ட இந்த 1 ரூபாய்க் கட்டு 1500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
* a1 ரூபாய்க்கு வந்த சிக்கல் இது என்றால், 1000 ரூபாய் நோட்டும் சர்ச்சையில் தப்பவில்லை. கடந்த டிசம்பரில் நாசிக் பாதுகாப்பு அச்சகத்தில் அச்சிடப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் பலவற்றில் பாதுகாப்பு இழை அச்சாகவே இல்லை. இப்படி அச்சிடப்பட்ட 30 கோடி நோட்டுகளில் 10 கோடி நோட்டுகள் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு வந்துவிட்டன.
வங்கிகளின் ஏ.டி.எம்.கள் வழியாகவே இவற்றில் பெருமளவும் மக்கள் கைக்கு வந்தன. சட்டபூர்வமாக இவற்றைக் ‘கள்ள நோட்டு’ எனச் சொல்ல முடியாது என்றாலும், மக்கள் சந்தேகப்பட்டுக் கொண்டுவந்து கொடுத்தால், வேறு நோட்டு மாற்றித் தருமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறது ரிசர்வ் வங்கி.
- அகஸ்டஸ்
|