யூ டியூபில் ரிலீஸான முதல் தமிழ் சினிமா!
கமல்ஹாசன் சொன்ன டி.டி.ஹெச், சேரன் சொன்ன சி.டு.ஹெச் எல்லாம் ஒரு பக்கம் கிடக்கட்டும்... அதற்கெல்லாம் முன் நம்ம யூ டியூபில் ஒரு முழு நீள தமிழ் சினிமாவை வெளியிட்டு அதிர வைத்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.
 ‘ஐநூறும் ஐந்தும்’ - இதுதான் படத்தின் பெயர். அமெரிக்க ரிட்டர்ன் நண்பர்கள் நாலு பேர் சேர்ந்து எடுத்த படம். இதில் சங்கடம் என்னவென்றால், இந்த யூ டியூப் வெளியீடு புரட்சிக்காகவோ புதுமைக்காகவோ செய்ததில்லை. தமிழ்த் திரையுலகில் தங்கள் படத்தை வெளியிட யாருமே முன்வராததால் எடுத்த விரக்தி முடிவு இது!
‘‘எல்லாரும் ‘திருட்டு டி.வி.டியை ஒழிக்கணும்... படம் டவுன்லோடு பண்ற தளங்களை முடக்கணும்’னு பேசுவாங்க. ஆனா, நாங்க அந்த திருட்டு டி.வி.டி தளங்கள்ல நாங்களே எங்க படத்தை ஏத்தி மக்களைப் பார்க்க வைக்கலாம்னு இருக்கோம்!’’ என்கிறார் இந்தப் படத்தின் இயக்குநர் ஸ்டேன்சின் ரகு.
 பாண்டிச்சேரிக்காரரான இவர், அமெரிக்கத் தொலைக்காட்சி ஒன்றில் வேலை பார்த்தவர். இவரோடு தாஸ், கௌசல்யா, ரமேஷ் என நண்பர்கள் மூவர் சேர்ந்து ‘அக்ஸசிபிள் ஹாரிசன் ஃபிலிம்ஸ்’ எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்!
‘‘எங்க எல்லாருக்குமே அமெரிக்காவில்தான் வேலை. அங்கேயே நாங்க சின்னச் சின்ன டாகுமென்டரிகள், ஷார்ட் ஃபிலிம்கள்னு தயாரிச்சிக்கிட்டு இருந்தோம். ஆர்வம்தான் காரணம். ஒரு கட்டத்தில் அமெரிக்க வேலை போதும்னு நினைச்ச நாங்க நாலு பேரும் தமிழ்நாட்டுக்கே வந்துட்டோம். எங்க சம்பாத்தியம் எல்லாத்தையும் கொட்டி எடுத்த படம்தான் ‘ஐநூறும் ஐந்தும்’.
ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு அஞ்சு பேர் கைக்கு மாறி மாறிப் போகுது. அவங்க வாழ்வில் அது என்னென்ன பாதிப்பை ஏற்படுத்துது என்பதுதான் கதை. வித்தியாசமான ப்ளாட்தான். ஆனா, ஒரு தமிழ்ப் படத்தை மக்கள்கிட்ட கொண்டு போக அதெல்லாம் முக்கியமில்ல. இங்க பணமோ அல்லது பெரிய அளவுல செல்வாக்கோ இருந்தால்தான் படத்தை ரிலீஸ் பண்ண முடியும்னு இந்த மூணு வருஷமா தெரிஞ்சிக்கிட்டோம்!’’ என வருத்தப்படுகிறார் தாஸ். இந்தப் படத்தை ஏராளமான வினியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டியிருக்கிறார்கள் இவர்கள்.
‘‘படம் பார்த்த யாருமே நல்லா இல்லைனு சொல்லலைங்க. ‘இந்த இடத்தில் இது இருக்கலாமே’... ‘இந்த இடத்தில் இது இல்லாமல் இருக்கலா மே’னு ஆளாளுக்கு ஒரு கருத்தைச் சொன்னாங்க. அவங்க எல்லாருமே ஒரு ஃபார்முலா சினிமாவுக்குள்ள அடைபட்டிருந்தது நல்லா தெரிஞ்சுது.
இத்தனைக்கும் இந்தப் படத்துல ஒரு தமிழ் சினிமாவுக்குத் தேவையான பாட்டு, ஃபைட், த்ரில் எல்லாம் இருந்துச்சு. ஆனா, அதெல்லாம் அவங்க எதிர்பார்க்குற வரிசையில இல்லை. எங்க திரைக்கதையில அதையெல்லாம் வேற மாதிரி புதுவிதமா அடுக்கியிருந்தோம். ‘அதை எல்லாம் நார்மல் சினிமாவில் உள்ள ஃபார்முலாவுக்கு மாத்தித் தாங்க’னு சில விநியோகஸ்தர்கள் கேட்டாங்க. இப்படிக் கேட்க அவங்க யார்?
ஒரு படத்தோட வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது ரசிகர்கள்தான். அவங்களுக்கு இதைத்தான் தரணும்னு இடை யில் புகுந்து தடுக்க இவங்க யாரு? இன்றைய தமிழ் சினிமாவும் அதன் ரசிகர்களும் நிறைய மாறிட்டாங்க. இப்ப புதுவிதமான படங்களுக்குத்தான் நிறைய வெற்றி வாய்ப்பு இருக்கு. சுதந்திரமா எடுக்கப்படும் சினிமாவுக்குத்தான் எதிர்காலம் இருக்கு.
ஆனா, சுதந்திரமான சிந்தனைகளை தமிழ் சினிமாவின் சூழல் வளர விடுதா? இதையெல்லாம் பார்த்துப் பார்த்து சலிச்சு, முட்டி மோதி டயர்டாகித்தான் எங்க படத்தை யூ டியூப்ல ஏத்திட்டோம். இப்ப அது நேரடியா மக்கள்கிட்ட போயிடுச்சு. அதுவும் இலவசமா போயிடுச்சு. மக்கள் எங்கள் படத்தை ரசிக்கிற விதத்தை வச்சு நாங்க அடுத்தடுத்த முயற்சிகள்லயும் இறங்குவோம்!’’ - நம்பிக்கை தெறிக்கிறது இவர்களின் பேச்சில்!
- டி.ரஞ்சித்
|